Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
நவம்பர் 2008
உலகின் வருங்காலம் மாணவராகவே இருங்கள் ஆண்டையாக இருக்காதீர்கள்!
பாலா

சுற்றுச்சூழலியலர்கள் மக்களுக்கு ஏதிரானவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இங்கு மாந்த உயிர்களே இடர்ப்பாட்டில் இருக்க, புலிகளையும் ஒங்கல்களையும் (டால்ஃபின்கள்) பாதுகாக்கப் போராடிக் கொண்டிருப்பவர்கள்தானே இவர்கள்?

சுற்றுச்சூழலியலர்கள் முன்னேற்றத்துக்கு எதிரானவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். உழவர்களுக்கு நீர் கொண்டு வந்து சேர்க்கும் பேரணைகளுக்கு எதிராய்ப் போராடுபவர்கள்தானே இவர்கள்? எழை எளியோருக்கான வீடுகளைக் கட்டமைக்கும் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுப்பவர்கள்தானே இவர்கள்?

சுற்றுச்சூழலியலர்கள் தொழில்நுட்பத்துக்கு எதிரானவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். ஆரவார எந்திரங்களின் இடத்தில் தூய இயற்கை அமைதியை விரும்பித் தேர்ந்தெடுக்கும் கற்பனைவாதிகள்தானே இவர்கள்?

ஆமாம், உண்மைதான். சுற்றுச்சூழலியலர்களுக்குப் பேரணைகள் கட்டுவதில் மகிழ்ச்சி இல்லைதான். அணைகள் முன்னேற்றத்துக்குரியவை என்பதால் அல்ல, முன்னேற்றத்துக்குப் போதுமானவை அல்ல என்பதால்தான். பலருக்கும் நீர் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதற்காக உயிர் வாழ்விடங்களை அழிப்பதும் லட்சக்கணக்கான மக்களை விரட்டுவதும் உவப்பான தீர்வாகாது. நிதி, சுற்றுச்சூழல் மற்றும் மாந்தச் செலவீட்டைப் பெரிதும் குறைக்கக் கூடிய, இன்னுஞ் சிறந்த நீர் அறுவடை அமைப்புகளைச் சுற்றுச்சூழலியலர்கள் வளர்த்தெடுத்துள்ளனர்.

உண்மைதான், சுற்றுச்சூழலியலர்களுக்குக் காட்டழிப்பில் விருப்பமில்லைதான். அவர்கள் எழைகளின் தேவைகளைப் புறக்கணிப்பதால் அல்ல, அவர்கள்பால் பரிவு கொண்டிருப்பதால்தான். காட்டாக, விஸ்கான்சினில் பல்லாண்டுகளாக மர அறுவடை செய்து வருபவர்களாகிய மினோமினிப் பழங்குடியினர் தாங்களும் பிழைத்து மரங்களையும் வாழ்விக்கும் வகை யில் மரம் வெட்டும் வழிமுறை ஒன்றைப் பயன்படுத்து கின்றனர்.


அவர்களுக்கு எரணக் கவலையில்லை. பொதுவாக அவர்கள் நலிந்த மரங்களை மட்டும் அறுவடை செய்கின்றனர். வலுவான மரங்களை அணில்களும் மற்ற விலங்குகளும் வசிப்பதற்கென விட்டு வைக்கின்றனர். 1870ஆல் அவர்கள் வெட்டு மரத்தின் நிலைப் பலகை அடி 130 கோடி ஊனக் கணக்கிட்டனர். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அவர்கள் 225 கோடி அடியை அறுவடை செய்துள்ளனர். இருந்தும் இன்று அவர்களிடம் இருப்பது 170 கோடி நிலைப் பலகை அடி, மர அளவு சற்றே உயர்ந்துள்ளதைக் காணலாம்.

தொழில்நுட்பத்திலும் இதே போலத்தான். இன்றைய தீவிரச் சுற்றுச்சூழலியலர்கள் தொழில்நுட்பத்தையே எதிர்க்கவில்லை. இன்றைய தொழில்நுட்பம் நாம் என்றென்றும் நீடித்து வாழ்வதற்கு உதவக்கூடிய தொழில்நுட்பமாய் இல்லை என்பதுதான் அவர்கள் வருத்தமே. இயற்கை நோக்கி அவர்கள் இழுக்கப் படுவதற்குக் காரணம் ஒவ்வொன்றையும் இயற்கை உண்டுசெய்யும் வழிகள் நம் வழிகளைக் காட்டிலும் மேம்பட்டவை என்பதால்தான்.

ஜேனி எம் பென்யஸ் என்னும் பெண்மணி உயிர்ப் போலி என்றதமது அருமையான நூ-ல் வாதிடுகிறார்:

"(சிலந்தி) பட்டுக்கு மிக நெருக்கமானதாய் நம்மிடம் இருப்பது ஒன்றே ஒன்றுதான். . . அது பாலிஅராமிட் கெவ்லர், குண்டுகளைத் தடுத்து நிறுத்தும் அளவுக்குக் கடினமான இழையிது. அனால் கெவ்லரை உண்டு செய்வதற்குப் பெட்ரோலியத்திலிருந்து வருவிக்கப்பட்ட மூலக்கூறுகளை அடர் கந்தக அமிலம் நிறைந்த அழுத்தமிகுக் கொப்பறையில் கொட்டி, அதனைப் பல நூறு ஃபாரன்ஹீட் டிகிரி கொதிக்க வைத்துத் திரவப் படிக வடிவத்துக்கு மாற்றி, அதனை உயர் அழுத்தத்துக்கு ஆட்படுத்தி இழைகளை வெளியெடுத்து, அவற்றை ஒழுங்குக்குக் கொண்டு வருகிறோம். ஆற்றல் உள்ளீடு மிக மிக அதிகம். இதில் விளையும் நச்சுப் பொருள்கள் அருவருப்பானவை.

இதேயளவுக்கு வலுவானதும் இன்னுங்கூட கெட்டியானதுமான இழையைச் சிலந்திகள் உயரழுத்தங்களோ வெப்பமோ அரிப்பு அமிலங்களோ இன்றி உடல் வெப்பநிலையிலேயே தயாரித்து விடுகின்றன. . . சிலந்தி செய்வதை நாமும் செய்யக் கற்றுக் கொள்வோமானால், வரம்பிலாது புதுப்பித்துக் கொள்ளத் தக்க கரையும் மூலப்பொருளைப் பயன்படுத்தியும், புறக்கணித்தக்க அற்றலைச் செலுத்தியும் நச்சுச் கழிவேதுமின்றி நீரில் கரையாத மீவலு இழையை நாம் உண்டுசெய்யக் கூடும்."

அவர் கேட்டுப் பார்க்கிறார், இயற்கை பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் ஒவ்வொன்றையும் படைக்கிறதே, அதே வகையில் நாம் அவற்றைப் படைப்பது எப்படி? காட்டாகத் தும்பிகள் உலங்கு வானூர்திகளை விட கைதேர்ந்தவையாக இருப்பது எப்படி? ஊங்காரக் குருவிகள் ஒர் அவுன்சில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான எரிபொருளில் மெக்சிகோ வளைகுடாவைக் கடப்பது எப்படி? எறும்புகள் காட்டு வழியே நூற்றுக்கணக்கான இராத்தல்களுக்குச் சமமான சுமையைத் தூக்கிக் கொண்டு ஒடுவது எப்படி?

இந்தக் கலை மசனோபு ஃபுகுவோகா அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

வேளாண்மை செய்யாக் கலை

மசனோபு ஃபுகுவோகா வேளாண்மைத் தொழில்நுட்ப மாணவராக இருந்தவர். அவர் தாம் கற்றதனைத்தையும் கைவிட்டு இயற்கை வேளாண்மை அல்லது வேளாண்மை செய்யாமை என்று அவர் குறிப்பிடும் ஒன்றை நடைமுறைப்படுத்தினார். அவர்தம் அடிப்படை மெய்யியல் எப்படி உணவு தயாரிக்க வேண்டுமென இயற்கைக்குத் தெரியும் என்பதே. நாம் கற்றுக் கொள்ள வேண்டியதெல்லாம் நாம் அதிகம் மூக்கை நுழைக்கத் தேவையில்லை என்பதே. அவர் நிலத்தை உழுவதில்லை. உரங்களையோ தொழுவுரங்களையோ பூச்சிக்கொல்லிகளையோ களைக்கொல்லிகளையோ பயன்படுத்துவதில்லை. இயற்கை எப்படி உணவு தயாரிக்கிறது என்பதைக் கண்ணுங்கருத்துமாய்க் கவனிக்கிறார். இதன் மூலம் அவரால் உயர் செறிவு வேதி வேளாண்மையுடன் ஒப்புநோக்கின் ஒவ்வோர் ஏக்கருக்கும் அதே அளவிலான அல்லது இன்னுங் கூடுதலான அரிசியை அறுவடை செய்ய முடிந்தது.

இவ்வகைபட்ட புரட்சிகரச் சிந்தனை தேவைமீறிய பயன்பாட்டு வழிமுறைகளுக்கு அதரவான வாதுரை களுக்கு மரண அடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் இப்படிக் கேட்கலாம், 'நிலக்கரியைத் தேவைக்கு மீறிப் பயன்படுத்திக் கொண்டிருப்பது உண்மைதான். வேறெப்படி இல்லங்களில் விளக்கேற்றுவீர்களாம்? பூச்சிக் கொல்லிகளும் மரபணுச் சீராக்க உணவுகளும் நலவாழ்வுக்குக் கேடானவையே. வேறெப்படிப் பசி தீர்ப்பீர்களாம்? புதைபடிவ எரிபொருள்கள் உலக வெப்ப மாதலுக்குக் காரணமாக இருப்பது உண்மைதான். வேறெப்படிப் பயணம் செய்வீர்களாம்?' இதற்கு விடை சொல்ல ஆட்கள் வந்து விட்டார்கள். அவர்கள் வலுவாகவே விடை சொல்கின்றனர். இயற்கையே இப்படித் தான் விடையளிக்கும்.

ஒவ்வொரு காருக்கும்

உயர்தனிக்கார் ஒன்று உள்ளது


கார் மாற்றீடு செய்ய முடியாத ஒன்றாய்த் தோன்றுவ தால் அதிலிருந்தே தொடங்குவது நல்லது. இயற்கை எப்படிக் கார் தயாரிக்கும்?

ஒட்டுநரை ஒட்டுவதற்கு 1% ஆற்றலை மட்டும் பயன்படுத்தி விட்டு மீதி 99% ஆற்றலையும் காரை ஒட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒரு காரை இயற்கை தயாரிக்கப் போவதில்லை. மூன்றில் இரு பங்கு எடையைக் குறைக்கக் கூடிய கார்பன் இழைகள் போன்ற பண்டங்கள் உள்ளன.

கார் தயாரிக்கும் செயல்வழியை இயற்கை எளிமை யாக்கும், வளத்தைத் திறமான வகையில் பயன்படுத்திக் கொள்வதாய் அமைத்துக் கொள்ளும். எஃகுசார் கார்களுக்குத் தேவைப்படும் உடற்பாகங்கள் 200 முதல் 400 என்ற நிலையில், கார்பன் இழை கொண்டு உண்டாக்கப்படும் காருக்குத் தேவைப்படுவது 5 முதல் 20 மட்டுமே. உடற்பாகங்கள் பற்ற வைக்கப்படாமல் பசை கொண்டு இணைக்கப்படுகின்றன. எடையில் இலேசானவை. எனவே தயாரிப்பின் போது கையாள்வது எளிது.



மிக முக்கியமாக, இயற்கை கார்களைப் புதுப்பிக்க வியலாத ஆற்றல் கொண்டு ஒட்டாது. கிடைக்கும் அற்றலில் பெரும் பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒர் அமைப்பையே இயற்கை வடிவமைக்கும். மின் முன்னுந்தல் இதைத்தான் செய்கிறது. இது 90% ஆற்றலை மாற்றித் தருகிறது. ஊர்தி ஒய் இயக்கத்தில் இருக்கும் போதோ, மலையிறங்கும் போதோ, என், குறை வேகங்களில் செல்லும் போது கூட அற்றல் எதையும் பயன்படுத்துவதில்லை. அதனால் உயர் திருப்பு விசையைத் தர முடியும். மின்சாரத்தைப் பயன்படுத்திக் காரை முடுக்கும் மின்னோடி வேகத்தணிப்பில் மின்னீட்டுகிற மின்னியற்றி போல செயல்படுகிறது. உயர் தனிக்கார் மின் முன்னுந்தலின் நற்பண்புகள் யாவற்றை யும் பயன்படுத்திக் கொள்கிறது. இன்னும் ஒரு படி போய் எரிபொருள் மின்கலத்தைப் பயன்படுத்துகிறது.

நம்மில் பெரும்பாலார் பள்ளிகளில் 'மின்னாற்பகுப்புச்' சோதனையைச் செய்து பார்த்திருப்போம். நீங்கள் சோதனைக் குழாயில் நீர் வழியாக மின்சாரத்தைச் செலுத்தும் போது அது நீரை ஹைட்ரஜன், அக்சிஜன் குமிழ்களாகப் பிரிக்கிறது. எரிபொருள் மின்கலம் இதையே பின்னோக்கிச் செய்கிறது. அது மெல்லிய, பிளாட்டினந்தூவிய நெகிழ்மப் படலத்தைப் பயன்படுத்தி, (முழுக்கக் காற்றாகவே வழங்கப்படும்) ஆக்சிஜனையும் ஹைட்ரஜனையும் ஒன்றுசேர்த்து மின்சாரத்தையும் நீரை யும் உண்டாக்குகிறது. இந்த மின்சாரந்தான் உயர்தனிக் காரில் ஆற்றலாகப் பயன்படுகிறது.


இறுதியாக, காரை விட்டு வெளியேறும் எக்கழிவும் வேறொன்றுக்கு உணவாகும்படி இயற்கை பார்த்துக் கொள்ளும். உயர்தனிக்காரின் உமிழ்வு நீர் அல்லது நீராவி வடிவத்தில் உள்ளது. இதனைக் குடிநீராகப் பயன்படுத்தலாம். நீர்மூழ்கிக்கப்பற் பணியாளர்களும் வானோடிகளும் எரிபொருள் மின்கலத்தின் துணை விளைபொருளான நீரைக் குடிக்கின்றனர்.

உயர்தனிக்கார்க் கருத்தாக்கத்தை அமோரி லோவின்ஸ் அவர்களும் அவர்தம் குழுவினரும் ராக்கி மவுண்டைன் பயிலகத்தில் வளர்த்தெடுத்தனர். அவர்கள் அதனை உலகுக்குப் பரிசாக அளித்தனர். தானியங்கி உற்பத்தியாளர் எவரும் இந்தத் தொழில்நுட்பத்தை இலவயமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். டொயட்டோ, வோல்க்ஸ்வேகன் போன்ற சில குழுமங்கள் பயன்படுத்தவும் தொடங்கி விட்டன. உயர்தனிக்கார் ஒர் எடுத்துக் காட்டு மட்டுமே.

தொழில்நுட்பத் தீர்வு எனப்படும் ஒவ்வொன்றுக்கும் மாற்றுத் தொழில்நுட்பங்கள் உள்ளன. நிலக்கரிசார் மின்சார இயற்றலுக்கு காற்று ஆற்றலும் சூரிய ஆற்றலும் உள்ளன. வேதிச் செறிவு வேளாண்மைக்கு இயற்கை வேளாண்மை உள்ளது. ஒவ்வொரு கற்காரைக் கட்டடத்துக்கும் குறைந்த வளத் தேவைகளுடனும் மேம்பட்ட அகக் காற்றுத் தரத்துடனும் புதுப்பிக்கத்தக்க வளங்களைப் பயன்படுத்திக் கட்டப்படும் மாற்றுக் கட்டடங்கள் உள்ளன. பட்டியலுக்கு முடிவில்லை.

தொழில்நுட்பம் என்றால் என்ன?

வரும் ஆண்டுகளில், 'தொழில்நுட்பம்' குறித்த நம் புரிதலே புரட்சிக்கு உட்பட வேண்டியிருக்கும். காட்டாகத் 'தொழில்நுட்பம்' என்ற சொல்லை நீங்கள் கேட்கும் போது உங்கள் உள்ளத்தில் தோன்றுவது என்ன?

நீங்கள் எந்திரங்களையோ ஆய்வகங்களையோ கோட்டணிந்த அறிவியலர்களையோ கற்பனை செய்திருப்பீர்கள். இந்த நூற்றாண்டில் தொழில்நுட்பம் இயற்கையை அடக்கியாள்வதற்கு அல்லாது பார்த் தொழுகுவதற்குப் பயன்படுத்தப்படுவதால் தொழில் நுட்பம் குறித்த நமது படிமம் மாறக் கூடும். தொழில் நுட்பத்துக்கு நடுவில் இருப்பது இயற்கைக்கு நடுவில் இருக்கும் அனுபவத்துக்கு ஒப்பாகக் கூடும்.

வடிவத்தைச் செயற்பாட்டுக்குத் தகவமைக்கும் இடமிது. இங்கு எதுவும் அருவருப்பாகத் தெரிவதில்லை; ஒவ்வொன்றும் செந்தூய்மையை உணர்கிறது. இங்கு ஒன்றின் கழிவு வேறொன்றின் உணவு. அமைதியும் தூய காற்றும் பாடும் பறவைகளும் உலாவும் இடமிது. நமக்கு நாம் அறுபட்டவர்களாய் அல்லாது இணைந்தவர்களாய் உணரக்கூடிய இடமிது.



இத்தகைய எதிர்காலத்துக்கான கட்டியங்கள் இதோ தெரிகின்றன. ஒன்றுடன் ஒன்று மிக அழகாக இணைக்கப்பட்ட தொழில்துறைச் சமூகங்கள் உண்டு, ஒருவரின் வெளியேற்றம் மற்றவரின் உள்ளிறக்கம் அகிறது. தாம் உட்கொள்வதை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும் கட்டடங்கள் உள்ளன. இயற்கையை அழித்திடாது இயற்கை பன்வகைமையைக் கொண்டாடும் வேளாண் வழிமுறைகள் உள்ளன. தரிசு நிலங்களில் காடுகளை உண்டுசெய்ய உதவும் நீர் அறுவடை வழிமுறைகள் உள்ளன. அறிவியலர்கள் இயற்கையை ஒர் அண்டையாக அல்லாது ஒரு மாணவராக அணுகிய போது இத்தகைய தொழில்நுட்பங்கள் யாவும் முகிழ்த்துள்ளன. இத்தகைய ஒரு போக்கு தொடரவே வாய்ப்புண்டு.

86 ஃபாரன்ஹீட்டிலும் உறுதியாக நிற்கும் கரையான் புற்றிடமிருந்து குளிரூட்டல், மையச் சூடேற்றி அமைப்புகள் ஆகியவை பற்றிக் கொஞ்சம் நாம் கற்கலாம். வவ்வால்களின் பல்லதிர்வெண் அமைப்புகளைக் கொண்டு தொலைநிலைமானிகளை (ரேடார்கள்) புரிந்து கொள்ளலாம். பச்சோந்திகளிடமிருந்தும், கணவாய் மீன்களிடமிருந்தும் நிறங்களைப் பயிலலாம். திண்மமாக உறைந்து, பின் துள்ளிக் குதிக்கும் அர்டிக் மீன்கள், தவளைகளிடம் இருந்து தாழ் வெப்பநிலைகளில் எப்படி வாழ்வதென அறியலாம்.



இத்தகைய புரிதலிலிருந்து ஊற்றெடுக்கும் தொழில் நுட்பம் சிக்கலைக் குறைத்தாலும் குறைக்குமே தவிர கூடுதலாக்கி விடப் போவதில்லை, இது முதலாளிகளுக்கும் சுற்றுச்சூழலியலர்களுக்கும் நடுவில் ஒரு நல்வழியைக் காட்டி, ஆதாயங்களை இயற்றுகிற தேவைக்கும் இயற்கையை அழியாது காக்கிற தேவைக்கும் இடையிலான பூசலைப் பெருமளவுக்குத் தீர்த்து வைக்கக் கூடும். இந்தத் தொடரின் கடைசிக் கட்டுரையில் இந்த மாற்றத்தின் ஆற்றல்மிகு வினையூக்கிகளைப் பார்ப்போம், வேறு யார், மக்களே!

மாற்றம் வரக் கண்டவர்கள் அவர்களே.

சான்றுகள்: ஜேனி ஊம் பென்யஸ் எழுதிய உயிர்ப்போலி [Biomimicry], வில்லியம் மெக்டொனா, மைக்கேல் பிரான்கர்ட் அகியோர் எழுதிய தொட்டிலிலிருந்து தொட்டிலுக்கு [Cradle to Cradle], மசனோபு ஃபுகுவோகா எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி [One-Strraw Revolution], பால் ஆக்கன், ஆர்மரித லோவின்ஸ், எல். ஹன்டர் லோவின்ஸ் எழுதிய இயற்கை முதலாளியம் [Natural Capitalism].

தமிழாக்கம்: நலங்கிள்ளி



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com