Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஜூலை 2009
காசுமீரத்தை நசுக்கும் இந்துத்துவமும் இந்தியத்துவமும் : பகுதி 3

இனச் சிக்கலா? எல்லைப் பூசலா?
தியாகு

ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டுமானால், முதலில் அது எவ்வகைச் சிக்கல் என்பதை இனங்காண வேண்டும். அச் சிக்கலுக்குத் தீர்வு என்ன என்பதை அறிவியல் நோக்கில் முடிவு செய்ய வேண்டும். பிறகு தான் பற்பல காரணிகளையும் உள்ளடக்கிய சூழலைப் பொறுத்துத் தீர்வுக்கான வழி யைத் தெரிந்தெடுக்க முடியும்.

அரசியல் தீர்வும் இராணுவத் தீர்வும்

இப்போதெல்லாம் அரசியல் தீர்வு, இராணுவத் தீர்வு என்று பலரும் பேசக் கேட்கிறோம். இராணுவத் தீர்வு தீர்வாகாது என்றும் அரசியல் தீர்வே தீர்வா கும் என்றும் மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி வகையறாக்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக் கிறார்கள்.

பொதுவாக, ஒரு கணக்கிற்கு ஒரு விடை தான் என்பதுபோல் ஒவ்வொரு சிக்கலுக்கும் ஒரு தீர்வுதான் இருக்க முடியும். தீர்வு காண்பதற்கான வழிமுறை கள் வேறுபடலாம். ஆனால் தீர்வு ஒன்றுதான்.

தேசிய ஒடுக்குமுறைக்கு தேசிய விடுதலைதான் தீர்வு என்றால், அது அரசியல் வழியில் அடையப் பெற்றால் அரசியல் தீர்வாகவும், இராணுவ வழியில் அடையப் பெற்றால் இராணுவத் தீர்வாகவும் இருக்கும். வழிமுறை என்பது அரசியல் வழியும் இராணுவ வழியும் கலந்த ஒன்றாகவும் இருக்கலாம்.

காசுமீரச் சிக்கல் என்பது, ஒரு தேசிய இனச் சிக்கலாகும். காசு மீரத் தேசிய இனம் இந்திய அரசா லும், பாகிஸ்தான் அரசாலும் ஒடுக்கப்படுவதும் காசுமீர மக்களின் தாயகத்தை இந்த இரு அரசுகளும் இரு கூறுகளாகப் பிரித்து வன்பறிப்புச் செய் திருப்பதுமே இச்சிக்கலின் அடிப் படைக் காரணிகள். காசுமீரத் தேசம் இந்திய, பாகிஸ்தான் அரசுகளிடமிருந்து விடுதலை பெற்று ஒன்றாவதுதான் இச் சிக்கலுக்குரிய இறுதித் தீர்வு. இத்தீர்வு அரசியல் வழியில் காணப்பட்டால் அரசியல் தீர்வாகவும், இராணுவ வழியில் காணப்பட்டால் இராணுவத் தீர்வாகவும் இரண்டும் கலந்த வழியில் காணப்பட்டால் அரசியல் - இராணும் தீர்வாகவும் அறியப்படும்.

மூன்று அடிப்படைக் கொள்கைகள்

காசுமீரச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று இந்திய ஆட்சியாளர்களும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் தொடக்கத்திலிருந்தே பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையிலேயே அரசியல் தீர்வு காண்பதில், அல்லது அரசியல் தீர்வை நோக்கி முன்னேறிச் செல்வதில் அவர்களுக்கு அக்கறை இருக்குமானால், முதலாவதாக அவர்கள் காசுமீர மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, காசுமீரத் தேசத்தின் தன் தீர்வுரிமையை (சுயநிர்ணய உரிமையை) ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, இச் சிக்கலின் முக்கோணத் தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது காசுமீரம், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று முனைகள் இருப்பதையும் இவற்றில் ஏதேனும் ஒரு முனையை விலக்கி விட்டுத் தீர்வு காண முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்றும் அரசியல் தீர்வுக்கு இன்றியமையா அடிப் படைக் கொள்கை களாகும். காசுமீரச் சிக்க லுக்கு உண்மையிலேயே அரசியல் தீர்வு காண எவர் முயன்றாலும் இந்த மூன்று கொள்கைகளை யும் முழுமையாக ஏற்றுக் கடைப் பிடிக்கிறாரா என்று உரைத்துப் பார்க்கலாம்.

இந்திய அரசானாலும் சரி, பாகிஸ்தான் அரசானாலும் சரி, காசுமீர மக்களை ஒரு தேசிய இனமாக அறிந்தேற்க மறுப்பதும், அம்மக்களின் தன் தீர்வுரிமையை மொத்தத்தில் மறுதலிப்பதுமே அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட அணுகுமுறையாக இருந்துள்ளது.

இடதுசாரிகளின் இந்தியத்துவம்

காசுமீர மக்களின் தேசிய ஓர்மையை மறுப்பதில் இந்தியத் துவத்துக்கும் இந்துத்துவத்துக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இந்தியத்துவத்தின் கையடக்க மான சட்டவாத இடதுசாரிகளும் (இந்தியப் பொதுவுடைமைக் கட்சி-சி.பி.ஐ., மார்க்சியப் பொது வுடைமைக் கட்சி - சி.பி.எம். “காசுமீரம் இந்தியாவின் பிரிக்க வியலாப் பகுதி” என்று கிளிப் பிள்ளை போல் ஒப்பிப்பதன் அடிப்படையும் இதுவேதான்.

ஒன்றாயிருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 1940 களில் (பாகிஸ்தான் கோரிக்கை எழுந்த பின்னணியில்) இந்தியா வின் தேசிய இனச் சிக்கல் தொடர்பாகத் தோழர் அதிகாரி தலைமையில் மைய ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் இந்தியாவில் 17 தேசங்கள் இருப்பதாக அறிக்கை யளித்தது. இவற்றில் ஒன்று காசுமீரம். அனைத்துத் தேசிய இனங்களின் தன் தீர்வுரிமையை யும் ஏற்று தேசங்களின் ஒன்றிய மாக இந்தியாவை அமைப்பதே கட்சியின் குறிக்கோளாக இருந்தது. அது அந்தக் காலம்.

இன்றும்கூட காசுமீர மக்களைக் கோட்பாட்டளவில் ஒரு தேசிய இனமாக சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஏற்றுக் கொள்ளக் கூடும். ஆனால் அத் தேசிய இனத்தின் தன் தீர்வுரிமையை மட்டும் அவை ஏற்றுக் கொள்ள மாட்டா. இந்தியாவில் இல்லையென்றா லும் உலகின் வேறு சில பகுதி களில் தேசியத் தன் தீர்வுரிமையை சி.பி.ஐ. ஏற்றுக் கொள்ளக் கூடும். ஆனால் உலகில் எங்குமே தேசியத் தன்தீர்வுரிமை கூடாது என்பதில் ‘தெளிவான உறுதி’ கொண்டது சி.பி.எம்.

இருதரப்பா, முத்தரப்பா?

காசுமீரச் சிக்கலைத் தீர்ப்பதற்கென்று சொல்லிப் பல சமரச முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தைகள், உரையாடல்கள், மாநாடு கள், தீர்மானங்கள், கூட்டறிக்கைகள்... எத்தனை எத்தனையோ! இவை யாவும் உண்மையிலேயே முத்தரப்பு முயற்சிகளா? என்பது தான் அடிப்படைக் கேள்வி. குறிப்பாகக் கேட்டால் இந்தியா வும் பாகிஸ்தானும் தங்களுக்குள் இரு தரப்பாகத் தீர்வு காண முயன்றனவா? அல்லது காசு மீரத்தையும் சேர்த்து முத்தரப் பாகத் தீர்வுகாண முயன்றனவா? அதாவது இந்திய, பாகிஸ்தான் அரசுகளின் அரசியல் தீர்வு முயற்சிகளின் அடிப்படை இருதரப்புக் கொள்கையா (Bilateralism) முத்தரப்புக் கொள்கையா? (Trilateralism).

வரலாற்று நிகழ்வுகள்

இந்த வினாவிற்கு விடைகாண இம்முயற்சிகளின் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். பாகிஸ்தானும் இந்தியாவும் 1947 ஆகஸ்டு 14-15இல்தான் ‘சுதந்திரம்’ (அதிகாரக் கைமாற்றம்) பெற்றன என்பது தெரிந்த செய்தி. ஆனால் அதற்கு இருபது நாள் முன்னதாகவே 1947 சூலை 25ஆம் நாள் பிரித்தானிய அரசினர் இந்திய மன்னர்கள் அனைவரையும் அழைத்து “இன்று முதல் உங்களுக்கு விடுதலை” என்று அறிவித்தனர். பிரித்தானியக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு மன்னராட்சிப் பகுதிகள் (சமத் தானங்கள்) சுதந்திர நாடுகளாகி விட்டன என்று பொருள். மன்னர்களுடன் பிரித் தானிய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை யின்படி, சமத்தானங்கள் ஒவ்வொன்றும் வருங்காலத் தில் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம் அல்லது தொடர்ந்து தனியரசாகவே இருந்தும் வரலாம்.

சுருங்கச் சொல்லின் சட்டப்படி பிரித்தானியரிட மிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை பெறுவதற்கு முன்பே காசுமீரம் விடுதலை பெற்று விட்டது. காசுமீரத்தை விழுங்குவதற்கான இந்திய - பாகிஸ்தான் போட்டியும் அப்போதே தொடங்கி விட்டது.

பிரித்தானிய வல்லாதிக்கம், முடியாட்சி, பிரபுத்துவம், இந்து வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவே காசுமீரத் தேசியம் முகிழ்த்து வளர்ந்தது என்பதை யும், இந்தத் தேசியத்தின் தலையாய அரசியல் இயக்கம் சேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாராட்டுக் கட்சியே என்பதையும் முன்பே பார்த் தோம்.

பாகிஸ்தான் ஆதரவுடன் வடமேற்குப் பழங்குடிகள் நடத்திய படையெடுப்பு, இந்தியப் படையின் காசுமீர நுழைவு, இந்தியாவுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் மன்னர் அரிசிங் ஒப்பம், சேக் அப்துல்லா தலைமையில் இடைக்கால அரசு அமைப்பு, பொதுசன வாக் கெடுப்பு நடத்தி காசுமீர மக்களின் விருப்பமறிந்து இறுதி முடிவு எடுக்க இந்திய அரசு வாக்குறுதி, போர் நிறுத்தத்துக் கும் படை விலக்கத்துக்கும் வாக்கெடுப்புக்குமான ஐ.நா. பாதுகாப்பு மன்றத் தீர்மானம், சம்மு - காசுமீரத்தை இந்தியா வின் அரச மாநிலங்களில் ஒன்றாக்கிக் கொள்ளும் இந்திய முயற்சி, நேருவின் வஞ்சக வலை யில் சிக்க மறுத்த, சேக் அப்துல்லா பதவி நீக்கமும் சிறையடைப்பும் (அதிரடி 1953) இந்த வரலாற்று நிகழ்வுகளையும் இவற்றில் இந்தியத்துவமும் இந்துத்துவமும் ஒன்றுக்கொன்று உடந்தையாகச் செயல்பட்டதை யும் பார்த்தோம்.

பொதுசன வாக்கெடுப்பும் நேருவின் நாடகமும்

பொதுசன வாக்கெடுப்பு என்பது சம்மு - காசுமீரத்தை இந்தியாவுடன் இணைப்பதா? பாகிஸ்தானுடன் இணைப்பதா? என்பதை முடிவு செய்யத்தானே தவிர, தனிநாடாவது என்ற மூன்றாவது வாய்ப்புக்கு அதில் இடமே இல்லை. காசுமீர மக்களின் தன் தீர்வுரிமையின் பெயரால் இந்த வாக்கெடுப்புக்கு நியாயம் சொல்லப்பட்ட போதிலும், தனிநாடாக - சுதந்திர காசுமீரமாக - வாழும் உரிமையை ஏற்றுக் கொள்வதாக இந்த வாக்கெடுப்புத் திட்டம் அமையவில்லை. இப்படி அமைய வேண்டும் என்று இந்தியாவோ பாகிஸ் தானோ விரும்பவும் இல்லை.

காசுமீரம் யாருக்கு? என்பதில்தான் இந்தியாவுக் கும் பாகிஸ்தானுக்கும் போட்டியே தவிர, காசுமீரம் காசுமீரிகளுக்கே என்பதை மறுதலிப்பதில் இரு நாடு களும் ஒன்றுபட்டே இருந்தன, இருக்கின்றன. பொதுசன வாக்கெடுப்பை ஒப்புக்கு ஏற்றுக் கொண்டா லும் அதைத் தவிர்ப்பதி லேயே சவகர்லால் நேரு குறியாக இருந்தார். வாக்கெடுப்பு நடை பெறத்தான் செய்யும் என்றால், அதில் வெற்றி பெற அவர் சேக்கைத்தான் நம்பியிருந்தார். அதிரடி 1953க்குப் பின் அந்த வாயிலும் அடைபட்டு விட்டது. ஆனால் வாக்கெடுப்பை ஆதரிப்பது போல் நேரு நடத்திக் கொண்டிருந்த நாடகத்தில் இன்னமும் திரை விழவில்லை.

நேரு - முகமது அலி கூட்டறிக்கை

சேக் அப்துல்லாவைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்தி யிருப்பது இந்தியாவின் உள் நாட்டுப் பொருட்பாடே என் றும், “பொதுவான சிக்கல்களில் எமது கொள்கை மாறவில்லை, நாங்கள் கொடுத்த வாக்குறுதி களைக் காப்பாற்றுவோம்” என்றும் இந்தியா பாகிஸ் தானுக்கு உறுதியளித்தது. அது மட்டுமல்ல, புது தில்லியில் சந்தித்துப் பேசிய இந்தியத் தலைமையமைச்சர் நேருவும் பாகிஸ்தான் தலைமையமைச்சர் முகமது அலியும் பொதுசன வாக் கெடுப்பு நடப்பது உறுதியெனக் கூட்டறிக்கையும் வெளியிட்ட னர்.

“காசுமீர மக்களின் நல் வாழ்வை மேம்படுத்தும் நோக்கி லும், அவர்களுக்குச் சிறிதும் தொல்லை ஏற்படாத வகை யிலும், காசுமீரப் பூசலுக்கு அம் மாநில மக்களின் விருப்பத்துக் கிணங்கத் தீர்வு காண வேண்டும் என்பது தலைமையமைச்சர்களும் கொண்டுள்ள உறுதியான கருத்து. மக்களின் விருப்பத்தை அறிந்து கொள்ள மிக எளிய வழிமுறை நியாயமான, நடுநிலையான வாக்கெடுப்புதான். இத்தகைய வாக்கெடுப்பு நடத்தச் சில ஆண்டுகள் முன்பே முன் மொழியப்பட்டு, ஏற்றுக்கொள்ள வும் பட்டது. ஆனால், குறிப் பிட்ட சில முன்னேற்பாட்டுச் சிக்கல்களில் முன்னேற்றம் காண முடியாமற் போனது. இவை குறித்து உடன்பாடுகள் காண வேண்டுமானால் இவற்றை நேரடியாகத் தாங்களே கருதிப் பார்க்க வேண்டும் என்பதை இரு நாட்டுத் தலைமையமைச்சர் களும் ஒப்புக்கொண்டனர். இந்த உடன்பாடுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். அடுத்து செய்ய வேண்டியது வாக்கெடுப்பு ஆட்சியர் (Plebiscite Administrator) ஒருவரை அமர்த்துவதே.

1954 ஏப்ரல் இறுதிக்குள் வாக் கெடுப்பு ஆட்சியரை அமர்த்தம் செய்ய தலைமையமைச்சர்கள் நேருவும் முகமது அலியும் உடன்பட்டனர். சம்மு - காசுமீர மாநில அரசு வாக்கெடுப்பு ஆட்சியரை முறைப்படி பதவியிலமர்த்திய பின் அவர் முழு மாநிலத்திலும் நியாயமான நடுநிலையான வாக்கெடுப்பு நடத்த ஆவன செய்திடல் வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர்.

சேக் அப்துல்லாவை நீக்கம் செய்து சிறைப்படுத்திய பின் அவரது இடத்தில் பொறுப் பேற்றவரான பக்சி குலாம் முகமது, இந்த நேரு - முகமது அலி கூட்டறிக்கைக்கு உறுதி யான ஆதரவு தெரிவித்தார்.

நேருவின் தந்திரங்கள்

சவகர்லால் நேரு பொதுசன வாக்கெடுப்புக்குச் சொல்லளவில் உடன்பட்டதன் உள்நோக்கம் ஐ.நா. அமைப்பின் மேற்பார்வையிலிருந்து காசுமீரச் சிக்கலை வெளியிலெடுக்க வேண்டும் என்பதே. ஐ.நா. பாதுகாப்பு மன்றம் ஏற்கெனவே அட்மிரல் நிமிட்ஸ் என்னும் அமெரிக்கக் கடற்படை அதி காரியை வாக்கெடுப்பு ஆட்சிய ராக அமர்த்தியிருந்த போதிலும், புதிதாக ஒருவரை வல்லரசு அல்லாத மெல்லரசு - ஒன்றைச் சேர்ந்தவரை - சம்மு காசுமீர மாநில அரசே அப்பதவிக்கு அமர்த்துவது என்ற திட்டத்துக்கு பாகிஸ்தானை உடன்படச் செய்தார் நேரு. இச்சிக்கலை ஐ.நா.வுக்கு வெளியே கொண்டு வருவது அவரது நோக்கம். எப்படியோ வாக்கெடுப்பு நடந்தால் சரி என்பது பாகிஸ் தானின் கவலை. எப்படியாவது வாக்கெடுப்பைத் தவிர்ப்பதே இந்தியாவின் திட்டம்.

அய்.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளிலிருந்து கழன்று கொள்ள நேரு கையாண்ட தந்திரங்களை பாகிஸ்தானிய ஏடுகள் கடுமையாகச் சாடின. இதையே சாக்கிட்டு சமரச உடன்பாட்டிலிருந்து விலக முயன்றார் நேரு. முகமது அலிக்கு அவர் எழுதினார் :

“இந்தச் சூழலில், எவ்வித அடிப்படையும் இல்லாமல் தொடர்ந்து இப்படிக் கண்டனங்களும் சாடல்களும் நீடித்து வரும் நிலையில், நம்மால் எவ்வித இணக்கக் கொள்கையை யும் கடைபிடிக்க முடியுமா?”

பதிலுக்கு முகமது அலி இந்திய ஏடுகளைத் தாக்கினார். தமக்கும் நேருவுக்குமான உடன்பாடு என்ன என்பது குறித்து செப்டம் பர் 5ஆம் நாள் வானொலியில் உரையாற்றினார். வாக்கெடுப்பு ஆட்சியரை அமர்த்துவதற்கான காலக்கெடு, அவரைப் பதவியில் அமர்த்துவதற்கான நடைமுறை... இவை தவிர வேறு எதற்கும் தாம் உடன்படவில்லை என்று திட்ட வட்டமாக அறிவித்தார் : “காசுமீரச் சிக்கலை அய்.நா.வுக்கு வெளியே எடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு

இந்தப் பின்னணியில் காசுமீர வாக்கெடுப்புக்குச் செய்ய வேண் டிய ஏற்பாடுகள் தொடர்பான இந்தியா - பாகிஸ்தான் பேச்சு வார்த்தை முறிவுற்றது.

1954 பிப்ரவரி 25ஆம் நாள் அமெரிக்க அதிபர் ஜெனரல் அய்சநோவர் பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி வழங்கப்படும் என அறிவித்தார். அமெரிக்க - பாகிஸ்தான் இராணுவ ஒப்பந்தத்துக்கான முதற்படியாக இது கருதப்பட்டது. இந்தப் புதிய சூழல் குறித்து நேரு கவலை கொண்டது நியாயமே. ஆனால் இதைச் சாக்கிட்டு காசுமீரம் தொடர்பான வாக்குறுதிகளி லிருந்து அவர் பின்வாங்க முயன்றதில் நியாயமில்லை.

இந்தியாவும் சரி, பாகிஸ் தானும் சரி, தங்களுக்கிடையிலும் வல்லரசுகளோடும் ஆடிக் கொண் டிருந்த ஆதிக்கச் சதுரங்கத்தில் காசுமீரத்தைப் பகடையாக்கவே துடித்தன. காசுமீர மக்களின் உரிமை களை மதிக்கும் எண் ணம் இரு அரசு களுக்கும் இல்லவே இல்லை.

பாகப்பிரிவினைத் திட்டம்

காசுமீரத்தை இரண்டாகப் பிரித்து இந்தியாவும் பாகிஸ் தானும் ஆளுக் கொரு பாதியை எடுத்துக் கொள்வ தன் வாயிலாகச் சிக்கலைத் தீர்ப்பது என்ற திட்டமும் 1953இலயே பரிசீலிக்கப்பட்டது. காசுமீரச் சிக்க லையே இவ்வழியில் இறுதியாகத் தீர்த்திருக்க முடியும் என்று கருதக் கூடியவர்களும் உண்டு. அப்போது பாகிஸ்தான் தலைமை ஆளுநராக (கவர்னர் - ஜெனரல்) இருந்த குலாம் முகமது போர்நிறுத்தக் கோட்டை எல்லையாகக் கொண்டு காசு மீரத்தைப் பாகப் பிரிவினை செய்து கொள்ள அணியமாக இருந்தாராம். நேருவும் முதலில் இதற்கு ஆதரவாகவே இருந்தா ராம். ஆனால் உலக அரங்கில் பனிப்போர் (Cold War)உச்சத்தில் இருந்த அக்காலத்தில் அமெரிக்க - பாகிஸ்தான் இராணுவ ஒத்துழைப்பைக் கண்டு அஞ்சி அவர் பின்வாங்கி விட்டாராம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாகப் பேச்சு நடத்தி காசுமீரச் சிக்கலைத் தீர்க்கும் முயற்சி மீண்டும் 1955இல் மேற் கொள்ளப்பட்டது. மே 14ஆம் நாள் முகமது அலி தில்லி வந்தார். காசுமீரத்தை இரண்டாகப் பிரித்துத் தீர்வு காணப் போகிறார்கள் என்ற ஊகச் செய்தி பரவியது. பாகிஸ்தானிய ஏடுகளும், அரசியல் இயக்கங் களும் விழித்துக் கொண்டன. காசுமீரத்தைப் பாகப்பிரிவினை செய்யும் திட்டத்துக்கு அவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. பொதுசன வாக்கெடுப்புக்குக் குறைவான எதையும் பாகிஸ் தான் ஏற்காது என்ற பழைய நிலைபாட்டையே வலியுறுத்தின.

இரு நாட்டுத் தலைமை யமைச்சர்களும் அடுத்த முறை சந்தித்துப் பேசும்போது காசுமீரச் சிக்கலுக்குத் தீர்வு ஏற்படவில்லை என்றால், பேச்சை நிறுத்தி விட்டு அய்.நா. பாதுகாப்பு மன்றத் துக்கே திரும்பிச் செல்வோம் என்று 1955 சூன் 8ஆம் நாள் முகமது அலி அறிவித்தார்.

அமெரிக்கா தலைமையில் இராணுவக் கட்சிகள்

பாகிஸ்தானிய அரசுத் தலைமையில் நிகழ்ந்த ஆள் மாற்றங்களில் ஜெனரல் இஸ்கந்தர் மிர்சா தலைமை ஆளுநராகவும் சவுத்ரி முகமது அலி தலைமையமைச்சராகவும் பொறுப்பேற்ற னர்.

1954இல் அமெரிக்க - பாகிஸ் தான் ஒன்றுக்கொன் றான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஒப்ப மிட்ட பாகிஸ்தான் அரசு, 1955 பிப்ரவரி யில் தென்கிழக் காசிய ஒப்பந்த அமைப்பிலும் (SEATO) சூனில் மைய நாடுகள் ஒப்பந்த அமைப்பிலும் (CENTO) இதன் பழைய பெயர் பாக்தாத் ஒப்பந்தம்) சேர்ந்து கொண்டது. அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணியில் பாகிஸ்தான் இறுகப் பிணைந்து கொண்டிருந்த அதே போது கூட்டுச்சாரா இயக்கத்தின் தலைமை நாடுகளில் ஒன்றாக இந்தியா முனைப்புடன் செயல் பட்டது. அது சோவியத்து ஒன்றியத்துக்கும் செஞ்சீனத்துக் கும் நட்புநாடாக மதிக்கப் பெற் றது. இதனாலேயே நேருவின் அயலுறவுக் கொள்கையை முற்போக்கானதாக இந்திய இடதுசாரிகள் போற்றினார்கள்.

அமெரிக்க இராணுவக் கூட்டு ஒப்பந்தங்களில் சேர்வதைக் காட்டிலும் கூட்டுச் சாராமல் இருப்பது ஒப்பளவில் முற்போக்கானதே என்பதில் ஐயமில்லை. ஆனால், இதை வைத்து கூட்டுச் சாரா நாடு என்று தனக்குட்பட்ட ஒரு தேசிய இனத்தை ஒடுக்கி வைப்பதை எப்படி ஏற்க முடியும்? இந்திய அரசு உலக அரங்கில் பொதுவாக சோவியத்து ஆதரவு நிலை எடுத்துக் கொண்டிருந்த போதும், தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட தன் தீர்வுரிமையை மதிப்பதென்னும் சோவியத்துக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மறந்து விடக் கூடாது.

இந்தியா - வல்லாதிக்க எதிர்ப்பு அரசா?

காசுமீரச் சிக்கலை இந்திய - பாகிஸ்தான் அரசுகளுக்கிடையி லான சிக்கலாக மட்டும் பார்த்து, இந்தியாவை வல்லாதிக்க எதிர்ப்பு அரசாகவும் பாகிஸ் தானை வல்லாதிக்க ஆதரவு அரசாகவும் கணித்து, இந்த அடிப்படையில் இந்தியாவின் காசுமீரக் கொள்கையை ஆதரிப்பவர்கள் காசுமீர மக்களை ஒரு காரணியாகவே கணக்கில் கொள்வதில்லை. அயலுறவுக் கொள்கையின் ஒரு சில அணுகுமுறைகளைக் காரணங் காட்டி இந்தியாவை அமெரிக்க வல்லாதிக்கத்துக்கு எதிரான அரசு என்று முத்திரையிடுவது வரலாற்று நோக்கில் தவறானது. இறுதியாகப் பார்த்தால், பாகிஸ் தானைப் போலவே இந்தியாவும் வல்லாதிக்கச் சார்புக் கொள்கை கொண்டதே. இதேபோல் இரு நாடுகளுக்குமே அமெரிக்க வல்லாதிக்கத்தோடு முரண்பாடு களும் உண்டு.

இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே தமக்குட்பட்ட தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து அவற்றை ஒடுக்கும் அரசு களே. இரு நாடுகளின் ஆளும் வர்க்க நலன்களுக்கும் தேசிய இன ஒடுக்குமுறை தேவைப்படு கிறது. இவ்வகையில் இவையும் வல்லாதிக்க அரசுகளே.

அமெரிக்க வல்லாதிக்க எதிர்ப் பின் பெயரால் காசுமீரத்தில் இந்திய அரசை ஆதரித்தல் என்பது, ஒரு வல்லாதிக்கத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு மற்றொரு வல்லாதிக் கத்தை ஆதரிப்பதே தவிர வேறன்று. உண்மையான வல்லா திக்க எதிர்ப்புக்கு வழி தேசிய இன உரிமைகளுக்காகப் போராடுவதுதானே தவிர, தேசிய இன ஒடுக்குமுறைக்கு சப்பைக் கட்டுவதன்று.

தோல்விக்குக் காரணம்

காசுமீரச் சிக்கலின் முதற் காரணியாகிய காசுமீர மக்களின் உரிமைப் போராட்டத்தை அதன் கடைக் காரணியாகக்கூட ஏற்க மறுத்ததுதான் இந்தியா - பாகிஸ் தான் இணக்க முன்னெடுப்புகள் தோற்றதற்கு அடிப்படைக் காரணம். அன்று மட்டுமல்ல, இன்றும் இதுவே மெய்.

காசுமீரச் சிக்கலை தேசிய இனச் சிக்கலாக இனங்கண்டு, சனநாயகத் தீர்வு காண முற்படுவதற்கு மாறாக, இரு நாடுகளுக்கிடையிலான பூசலாகக் கருதித் தீர்க்கும் முயற்சியில் சோவியத்து ஒன்றியமும் ஈடுபட்டது. அதனால் விளைந் ததே தாஷ்கண்டு சாற்றுரை. இது பற்றி அடுத்த பகுதியில் விரிவாகக் காண்போம்.

இப்போதே ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும் - இனச் சிக்கலை எல்லைப் பூசலாகக் கருதும் பார்வைக் குளறுபடி - சரியாகச் சொன்னால் ஆதிக்க நோக்கு - காங்கிரசுக்கு மட்டும் உரியதன்று; ஆர்.எஸ். எஸ். பரிவாரத்துக்கும் கூட இதே பார்வைதான்.

காசுமீரத்தை அடிமைப் படுத்திச் சொந்தம் கொண்டாடு வதில் இந்துத்துவமும் இந்தியத்துவமும் ஒன்றே.

-தொடரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com