Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஜூலை 2009
அரசும் இறைமையும்

பாலத்தீனர்கள் எங்கள் அண்ணன்மார்கள்

தெற்காசியாவிலும் மேற்காசியாவிலும் அரசு, இறைமை ஆகியவற்றின் வருங்காலம் (Future of state and sovereignty in south and west Aisa) என்ற தலைப்பில் தோழர் தியாகு ஆற்றிய உரையின் சுருக்கம்)

1) State என்ற ஆங்கிலச் சொல் அரசு எனப் பொருள் தரும். அனைவரும் அறிந்ததுதான் இதுவென்றாலும் State என்றால் என்ன என்பதில் பெரிய குழப்பம் உள்ளது. ஆதிக்க ஆற்றல்கள் இக்குழப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன, அல்லது அவையே இக்குழப்பத்தைத் தோற்றுவித்து வளர்த்து வருகின்றன எனலாம். இந்தக் குழப்பத்தைப் போக்கி விட்டாலே சிக்கலைத் தீர்க்க வழி திறக்கும்.

2) State Government என்றால் மாநில அரசு எனப்படுகிறது. நாமும்கூட வழக்கமாக இப்படித் தான் சொல்கிறோம். State Of Tamilnadu தமிழ்நாடு மாநிலம், State Of Karnataka கர்நாடக மாநிலம். ஆனால், மய்ண்ற்ங்க் States Of America என்பதை அமெரிக்க அயக்கிய மாநிலங்கள் என்று சொல்வதில்லை. அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்றுதான் சொல்கிறோம். இங்கே மாநிலம் அங்கே எப்படி நாடாயிற்று? Separate State என்றால் வசதிக்கேற்ப தனிநாடு என்றோ தனி மாநிலம் என்றோ இருவிதமாகவும் சொல்லிக் கொள்கின்றனர். Separate State Of Tamil Eelam என்பதைத் தமிழீழத் தனியரசு என்று சொல்லாமல் தமிழீழத் தனிமாநிலம் என்று சொன்னால் என்னாகும்?

3) அரசு என்ற தலைப்பில் லெனின் ஆற்றிய உரையைப் படித்திருப்பீர்கள். அரசும் புரட்சியும் என்று நூலும் வந்துள்ளது. அரசுக்குத் திருவள்ளுவரும் இலக்கணம் வகுத்துள்ளார். State என்பதை வடமொழியில் ராஜ்யம் என்பர். ராஜ்யம் என்றால் அரசுதான். ராஜ்யத்தைத் தமிழ்ப் படுத்துவதாகச் சொல்லி மாநிலம் என்று மாற்றி விட்டார்கள். அரசு என்றே தமிழ்ப்படுத்தியிருக்க லாம். இங்கே இந்தியாவில் அது மாநிலமாகவும் (அதாவது நாட்டின் ஒரு பகுதியாகவும்) உள்ளது என்றால் ‘அரச மாநிலம்’ என்றாவது சொல்லலாம். அண்மைக் காலமாக இப்படித்தான் எழுதி வருகிறேன்.

4) இந்தியாவில் State என்ற சொல் முதலில் எதற்குப் பயன்பட்டது என்று பார்க்க வேண்டும். பிரித்தானிய ஆட்சிக் கால இந்தியாவில் மன்னராட்சிக்குட்பட்ட பகுதிகள் States எனப்பட்டன. State என்பது சமஸ்தானம் என்று சொல்லப்பட்டது. சமஸ்தானம் என்றால் மன்னராட்சிக்குட்பட்ட குறுநிலம். இந்தக் குறுநிலம்தான் இப்போது மாநிலமாக விரிந்துள்ளது எனலாம். மன்னராட்சிக்குட்படாத பகுதிகள் பிரித்தானிய இந்தியாவில் முதலில் Presidencies ஆகவும், பிறகு Provinces ஆகவும் பிரிக்கப்பட்டன. Presidency - தலை மாநிலம் இப்போதும்கூட Presidency College மாநிலக் கல்லூரி எனப்படுகிறது. Provinces - மாகாணங்கள் எனப்பட்டன. Madras Provinces - சென்னை மாகாணம். சென்னை மாநிலம் என்றாலும், சென்னை மாகாணம் என்றாலும், யாரும் அப்போது அதை State Of Madras என்று சொல்லவில்லை. ஏன்? அப்படிச் சொன் னால் அது சென்னை சமஸ்தானம் ஆகியிருக்கும். புதுக்கோட்டை சமஸ்தானம் உண்டே தவிர, சென்னை சமஸ்தானம் கிடையாது. டழ்ர்ஸ்ண்ய்ஸ்ரீங்-மாகாணம் என்பதற்கும் State-சமஸ்தானம் என்பதற்கும் என்ன வேறுபாடு? இதற்கு வரலாற்றைக் கொஞ்சம் திருப்பிப் பார்க்க வேண்டும்.

5) 1857 முதல் இந்திய விடுதலைப் போர் முடிவுற்றபின் 1858ல் விக்டோரியா மகாராணியின் பிரகடனம் வந்தது. இந்தப் பிரகடனத்தின்படி இந்தியாவைக் கிழக்கிந்தியக் கும்பெனியிடமிருந்து பிரித்தானிய அரசு தன் நேரடிப் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. மிச்சமிருந்த மன்னராட்சிப் பகுதிகள் சுயேச்சையாக நீடிக்கலாம், அவற்றின் ஆட்சியில் பிரிட்டன் குறுக்கிடாது என்று உறுதி யளிக்கப்பட்டது. பிரிட்டனின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளைப் போலில்லாமல் மன்ன ராட்சிப் பகுதிகள் States எனப்பட்டன. இவை இறைமை கொண்ட ஆட்சிப் புலங்கள் (Soverign Territories) என்று பொருள். மாகாணங்கள் (Provinces) தமக்கென இறைமையற்றவை; பிரிட்டானிய மேலாதிக்கத்தின் இறைமைக்கு உட்பட்டவை. இதுதான் வேறுபாடு.

6) 1947 விடுதலை என்ற பெயரில் அதிகாரக் கைமாற்றம் நிகழ்ந்தது. 1950இல் இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு இந்தியக் குடியரசு அமைக்கப்பட்ட போது, சமஸ்தானங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டன. அவை எத்தனையோ வழிகளில் மாகாணங்களில் இணைக்கப்பட்டன. ‘ஒன்றுபட்ட இந்தியா’ உருவாக்கப்பட்டது. இதுவரை Provinces ஆக அறியப்பட்டவற்றுக்கு இப்போது States என்று பெயர் சூட்டப்பட்டது. மாகாணங்கள் அரசுகளாகி விட்டன என்று புரிந்து கொள்ள வேண்டும். Provinces இறைமையற்றவை. States இறைமை கொண்டவை. இது அடிப்படையான வேறுபாடு.

7) இந்தியா என்பது என்ன? இந்தியா, அதாவது பாரதம் அரசுகளின் ஒன்றியம் ஆகும். (India, That is Bharath shall be a Union Of States) என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் உறுப்பு சொல்கிறது. அரசுகளின் ஒன்றியம் என்று அல்லது அரச மாநிலங்களின் ஒன்றியம் என்றாவது சொல்ல வேண்டும். வெறும் மாநிலங்களின் ஒன்றியம் என்பது பொருளற்றது. Stateள் தவிர Union Territories உள்ளது. ஒன்றிய ஆட்சிப் புலங்கள் என்போம். எடுத்துக்காட்டாக, புதுவை Union Territoryஆனால் தமிழில் புதுவை மாநிலம் என்றே சொல்கிறார்கள். தமிழ்நாடும் மாநிலம், புதுவையும்மாநிலம் என்றால், ஒன்றை State என்றும், மற்றதை Union பங்ழ்ழ்ண்ற்ர்ழ்ஹ் என்றும் சொல்வதேன்? பெயரளவில் பார்த்தால் தமிழ்நாடு என்பது ஒன்றியத்தை அமைத்துள்ள அரசுகளில் ஒன்று. புதுவை என்பது ஒன்றியத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆட்சிப் பகுதிகளில் ஒன்று.

8) நடைமுறையில் தமிழ்நாட்டுக்கும் புதுவைக்கும் ஆட்சியுரிமைக் கண்ணோட்டத்தில் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டும் இறைமை இல்லாத வெற்று மாநிலங்களே. ஆகவே தமிழ்நாட்டை State என்று சொல்வது வெறும் சட்ட அலங்காரமே தவிர வேறல்ல. தமிழ்நாடு உண்மை யிலேயே State என்றால், அது உண்மையிலேயே நாடுதான் என்றால், அதன் இறைமை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இந்திய அரசோ, இந்திய அரசமைப்போ தமிழ்நாட்டின் இறைமையை ஏற்றுக் கொள்வதில்லை என்பதை நாம் அறிவோம். இங்கே இந்தியாவுக்குத்தான் இறைமை என்றால், இந்தியாதான் State, அரசு என்று பொருள். தமிழ்நாடு என்பது அதன் எல்லைக்குட்பட்ட ஒரு மாநிலம், மாகாணம், மாவட்டம் அல்லது வட்டம், அவ்வளவுதான்.

9) சட்டம் இருக்கட்டும், சமூக அறிவியல் நோக்கில் பார்த்தால், தமிழ் ஒரு தேசிய மொழி, தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ்நாடு ஒரு தேசம். இக்காலத்துக்குரிய பொருளில் நாம் ஒரு தேசமாக வளருமுன்பே ஒரு மொழிவழிச் சமுதாய மாகத் திகழ்ந்தமைக்கு இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்கிறது தொல் காப்பியம். ‘வழாஅல் ஓம்பல்’ (பிழையின்றிப் பேசுதல்) என்பதற்கு விளக்கமளித்த இளம்பூரணார் ‘நும் நாடு எதுவென்றால், தமிழ்நாடு என்க’ என்று வரையறுத்தார். அரசியல் வழியில் பிரிந்து கிடந்த போதே தமிழ்நாடு என்ற கருத்தாக்கம் பிறந்து விட் டது. "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கினை' என்று சேரன் செங்குட்டுவனை இளங்கோவடிகள் போற்றினர். "தமிழ்நாடுதான் நாடு, தமிழர்கள்தாம் தேசிய இனம்' என்பதுபோல், "இந்தியா' எனும் நாட்டையோ "இந்தியர்கள்' எனும் தேசிய இனத்தையோ சுட்டும்படியான இலக்கிய - வரலாற்றுச் சான்று ஏதுமில்லை. இந்தியா என்பது ஓர் அரசு. அரசின் கீழ்ப்பட்டவர்கள் "அரச சமு தாயம்' (State Community) என்கிறோம். "இந்தியர் கள்' என்பது ஓர் அரச சமுதாயம், அவ்வளவுதான். தமிழர்கள் தேசிய சமுதாயம் (National Community), இந்தியர்கள் அரச சமுதாயம் (State Community) இந்தியா என்றொரு தேசம் இல்லை, இந்தியர் என்றொரு தேசிய இனமும் இல்லை.

10) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகப்புரை தவிர வேறு எங்கும் தேசம் என்ற சொல்லே இல்லை. நெருக்கடி நிலைக் காலத்தில் இந்திரா ஆட்சி நுழைத்த 42ஆவது திருத்தம்தான் தேசம் என்ற சொல்லைக் கொண்டு வந்து நுழைத்தது. அப்படியும்கூட இந்தியா ஒரு தேசம் என்ற நேர்வகைப்பட்ட வரையறை ஏதும் இல்லை. இந்தியா இப்போதும் ‘அரசுகளின் ஒன்றியம்’ (Union Of States) மட்டுமே.

இந்த மட்டில் இந்தியாவைச் சட்டப்படியும் கூட தேசம் என்று சொல்ல முடியாது. சமூக அறிவியலின்படியோ சட்டப்படியோ தேசமல்லாத இந்தியாவைத் தேசம் என்று காட்டவே இந்தியத் தேசியம் அரும்பாடுபடுகிறது. இந்தியாவைத் தேசம் என்று நம் மனத்தில் பதிய வைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இந்தியைத் தேசிய மொழி என்று சொல்வதும் இதே போன்றதுதான். அரசமைப்புச் சட்டத்தில் அப்படி ஒன்றும் இல்லை.

11. சுருங்கச் சொல்லின், தமிழ்நாடு ஒரு தேசம், இந்தியா ஓர் அரசு (அல்லது அரசு மாநிலம்) இந்தியா என்பது a State Of Nations (தேசங்களைக் கொண்ட அரசு) இதை Nation Of States (அரசுகளைக் கொண்ட தேசம்) என்று படங்காட்ட முயல் கிறார்கள். இந்தியாவை ஒப்பளவில் பெரிய நிலப்பரப்பு கொண்டது என்ற முறையில் மாநிலம் என்றே சொல்லலாம். ""மாநிலத் தாயை வணங்குதும்'' என்போம் என்று பாரதியார் பாடியது நினைவிருக்கட்டும். மாநிலமாகிய இந்தியாவைத் தேசம் என்றும், தேசமாகிய தமிழ்நாட்டை மாநிலம் என்றும் அழைப்பது எவ்வளவு பெரிய முரண்பாடு?

12) தமிழ்நாட்டை State என்று சொன்னாலும் அதன் இறைமையை மறுப்பதாக இந்திய அரசமைப்பு உள்ளது. அதாவது தமிழ்நாட்டின் ஆட்சி என்பது வெறும் அரசாங்கம் அல்லது நிர்வாகமே தவிர அரசு ஆகாது. தமிழ்நாடு ஒரு சேதம். ஒவ்வொரு தேசத்துக்கும் அரசு வேண்டும் என்பதுதான் தேச - அரசுக் கொள்கை (டழ்ண்ய்ஸ்ரீண்ல்ப்ங் Of Nation - State) அய்ரோப்பிய வரலாற்றில் தேச அரசுகளின் உருவாக்கம் எப்படி சனநாயகப் புரட்சிகளின் காரணமும் காரியமுமாக அமைந்தது என்பதை வரலாற்று மாணவர்கள் அறிவார்கள். தெற்காசியாவிலும் சனநாயகப் புரட்சியின் வெற்றிக்கு தேச - அரசுகளின் உருவாக்கம் இன்றி யமையாதது. இந்த உருவாக்கத்திற்கு இப்போது உள்ள முதன்மையான தெற்காசிய அரசுகள் (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை) தடையாக இருப்பதைக் காண்கிறோம். இந்த மூன்று அரசு களும் தெற்காசியாவில் தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கு எதிராக இணைந்து நிற்பதற் கும் இலங்கைத் தீவில் தமிழினப் படுகொலை செய்வதில் இந்த மூன்று அரசுகளும் கூட்டாகச் செயல்பட்டு வருவதற்கும் இதுவே விளக்கம்.

13) தேசம், அரசு என்னும் கருத்தாக்கங்களைப் போலவே, இறைமை என்ற கருத்தாக்கமும் இங்கே குழம்பிக் கிடக்கிறது. இந்தியாவின் இறைமையை எதிர்த்துப் பேசியதாக அண்மைக் காலத்தில் மூவர் (சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத்) தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறை யிலடைக்கப்பட்டனர். இந்தியாவின் இறைமை மட்டுமல்ல, இலங்கையின் இறைமையும்கூட இங்கே புனிதமாகக் கருதப்படுகிறது. இலங்கை யின் இறைமைக்கு உட்பட்டு இனச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அடிக்கடி பேசப்படு கிறது. உண்மையில் இறைமை என்றால் என்ன? அது யாருக்குரியது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

14. இறைமை Sovereingty என்பது முடியாட்சி காலத்திய கருத்தாக்கம். ஒரு பவுன் தங்கக் காசுக்கு சவரன் (Soverign) என்று பெயர். அந்தக் காசில் மன்னரின் தலை பொறிக்கப்பட்டிருக்கும். இறுதி அதிகார உரிமை (Ultimate Authority) மன்னரைச் சாரும் என்பதே இறைமை என்பதன் பொருள். முடியாட்சியில் இறைமை மன்னருக்கு என்றால், குடியாட்சியில் இறைமை மக்களுக்கே! Sovereignty belongs to the people இறைமை மக்களுக்கே உரியது என்பது அடிப்படையானதொரு குடியரசுக் கொள்கை.

15) மக்கள் (People) என்றால் யார்?

மகன்கள், மகள்கள் சேர்ந்தால் மக்கள். தொடக் கக் காலத்தில் மனிதக் கூட்டம் ஒவ்வொன்றுக்கும் ஒருதாயே மூலமாகவும் அடையாளமாகவும் இருந் தாள். கணமாகவும் குலமாகவும் பழங்குடியாகவும் விரிவடைந்த மனிதக் கூட்டத்துக்குக் குருதியுறவு இணைக்கும் இழையாக இருந்தது. ஒரே மொழி பேசிய குலங்கள் அல்லது பழங்குடிகள் சேர்ந்து மொழிவழிச் சமுதாயங்களாகக் கலந்தன. இவற்றிலிருந்தே தேசிய இனங்களும் தேசங்களும் வளர்ந்தன. ஒரு தாய் மக்கள் என்பதன் பொருள் விரிவடைந்து ஒரு தாய்மொழியின் மக்கள் என்றாயிற்று. மக்கள் ஒருமை வடிவில் (மக்களினம்) பழங்குடிச் சமுதாயத்தையோ தேசிய இனத்தையோ குறிக்கும் சொல்லாகும். Tsartist Russia was a Prison house Of Peoples என்பது “ஜாரின் உருசியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருந்தது” என்று மொழிபெயர்க்கப்பட்டது இப்படித்தான். சுருங்கச் சொல்லின், இன்றைய சூழலில் people - மக்கள் - மக்களினம் என்றால் தேசிய இனம் என்றே பொருள்படும்.

16) இந்திய மக்கள் - People Of India, உலக மக்கள் (People Of the World) என்பன போன்ற சொல்லாடல் கள் அகமுரண்பாடுடையவை. இந்திய மக்களினங் கள் - Peoples Of India, உலக மக்களினங்கள் - Peoples Of the World என்று சொல்வதுதான் சரியானது. அறிவியல் துல்லியம் தேவைப்படும் நிலையில் மட்டுமாவது குழப்பமான சொல்லாடல்களை தவிர்ப்பது நன்று.

17) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் முதல் வாக்கியமே “We, the people Of India - இந்திய மக்களாகிய நாம்'' என்றுதான் தொடங்குகிறது. இது, இந்தியா பல மக்களினங்க ளைக் கொண்ட துணைக் கண்டம் என்ற உண்மையை மறைத்து தேசிய இன அடையாள மறுப்புக்குப் பீடிகை ஆகி விடுகிறது.

“We, the Peoples Of India - இந்திய மக்களினங்க ளாகிய நாம்” என்று தொடங்கியிருந்தால் சரி. ஆனால் அப்படிச் சொல்லியிருந்தாலும் பொய் யாகவே போயிருக்கும். ஏனென்றால் இந்தியாவின் தேசிய இனங்கள் அனைத்தும் விரும்பி சேர்ந்து இந்த அரசமைப்பை உருவாக்கவில்லை.

18) எனவே, அரசு, இறைமை பற்றிய விவாதம் என்பது உண்மையில் தேசிய ஒடுக்குமுறை, தேசிய விடுதலை தொடர்பான விவாதமே ஆகும். இந்தியாவில் இறைமை கொண்ட மக்களினங்கள் தமக்கான தேசிய அரசுகளை அமைத்துக் கொள்ள வேண்டுமானால் இந்திய அமைப்பை உடைத் தெறிய வேண்டும்.

19) கார்ல் மார்க்ஸ் மூலதனம் நூலுக்கான முன்னுரையில் சொன்னார்: இந்த நூலைப் படிக்கிற செருமானியர்கள் “பிரிட்டனில்தான் நிலைமை மோசம், நம் நாட்டில் அவ்வளவு மோசமில்லை'' என்று நினைத்து ஆறுதல் அடைய வேண்டாம். உண்மையில் கதை உங்களைப் பற்றியதுதான். ஏனென்றால் தொழில் வளர்ச்சி மிகுந்த நாடு என்பது தொழில் வளர்ச்சி குன்றிய நாட்டினது வருங்காலத்தின் பிரதிபிம்பமே தவிர வேறல்ல. இதே போல தேச - அரசு - உருவாக்க நிகழ்முறையில் இன்றைய மேற்காசியா என்பது தெற்காசியாவினது வருங்காலத்தின் பிரதிபிம்பமே. மேற்காசியாவில் இருபதுக்கு மேற்பட்ட அரசுகள் உள்ளன. தெற்காசியாவிலும் ஒடுக்குமுறை அரசுகள் உடைந்து தேசிய இனங்கள் விடுதலை பெறும் போது முப்பதுக்குக் குறையாத அரசுகள் பிறக்கும்.

20) இலங்கைத் தீவில் தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம் என்பது தமிழினத்தை விடுதலை செய்வதன் வாயிலாக சிங்கள இனமும் தனக்கான தேசிய அரசை உருவாக்கிக் கொள்ள வழியமைக் கும். புதிய தேசங்கள் இரண்டும் தத்தமது இறைமையை விட்டுத் தராமலே தமக்குள் கூட்டாட்சியோ, பெருங்கூட்டாட்சி, பொதுநலக் கூட்டாட்சியோ அமைத்துக் கொள்ளலாம். அல்லது எந்தக் கூட்டாட்சியும் இல்லாமலே நல்லுறவு கொண்டு வாழலாம். ஆனால் எதுவாயினும் ஈழ விடுதலைக்குப் பிறகுதான்.

21) தெற்காசியாவுக்கும் மேற்காசியாவுக்கு மான பொதுத் தன்மைகளைப் பற்றிப் பேசும்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பாலத்தீன விடுதலைப் போராட்டத்தையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஈழ மக்களுக்கு முன்பே தாயகத்தை இழந்தவர்கள் பாலத்தீன மக்கள். உலகெங்கும் அகதிகளாகச் சிதறடிக்கப்பட்ட பாலத்தீன மக்களைக் குறிக்க Palestinian Diaspora ‘பாலத்தீனச் சிதறல்’ என்ற சொற்றொடர் பிறந்தது. இப்போது உலகெங்கும் சிதறடிக்கப்பட்டுள்ள தமிழர்கள் Tamil Diaspora தமிழ்ச் சிதறல் என்கின்றனர். ஒடுக்குமுறை பொது என்றால், அதற்கெதிரான விடுதலைப் போராட்டமும் பொதுவாகத்தானே இருக்க முடியும்? ஆம், பாலத்தீன விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி ஆகும். விடுதலைப் போரில் தமிழர்களாகிய எங்களுக்குப் பாலத்தீனர்களே அண்ணன்மார்கள்.

22) மேற்காசியாவில் பாலத்தீனப் போராட் டமே அரபுலக மக்கள் - விடுதலையின் மையப் புள்ளி என்றால், தெற்காசியாவில் தமிழீழ விடுதலைப் போராட்டமே அனைத்து மக்கள் - விடுதலைக்கும் சமூக மாற்றத்துக்கும் மையப்புள்ளி ஆகும்.
br>


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com