Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஜூலை 2009
ஈழம் இனி..

நான்காம் ஈழப்போர் ஒரு கசப்பான முடிவை அடைந்து விட்டதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். படையியல் நோக்கில் இதனை மிகப் பெரும் தோல்வியாகத் தான் கருத முடியும். ஈழ விடுதலைப் போரின் வருங்காலம் பற்றிய பல வினாக்களை இந்தத் தோல்வி எழுப்பியுள்ளது: மரபுவழிப் போர்முனையிலிருந்து கரந்தடிப் போர்முறைக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்குமா? இப்போதைய நிலையில் அவ்வாறு திரும்பிச் செல்ல முடியுமா? தமிழீழ மக்களின் ஒரு பகுதியினர் சிறை முகாம்களில் அடைபட்டிருக்க, மற்றொரு பகுதியினர் கடும் அடக்குமுறைக்கு நடுவில் திறந்தவெளிச் சிறைச்சாலைகள் போன்ற சூழலில் உரிமையற்றுக் கிடக்க, மற்றுமொரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்று அயல்நாடுகளில் பிழைப்புத் தேடித் தங்கள் தாயக உறவுகளுக்காக போராடிப் போராடி களைத்துப் போயிருக்க... விடுதலைப் போராட்டம் எவ்வழியிலேனும் தொடர வழியுண்டா? எப்படியாவது தொடருமென்றாலும் வெற்றிக்கு வாய்ப்பு உண்டா?

இந்த வினாக்களோடு தலைமை பற்றிய மைய வினாவும் ஓங்கி நிற்கிறது. இந்த வினாக்களுக்கெல்லாம் உரிய விடைகளை யும் விளக்கங்களையும் வெட்டிக் கட்டிக் கையில் வைத்துக் கொண்டு நிற்கவில்லை நாம். நாமாக என்ன முயன்றாலும் உடனடியாக விடைகள் கிடைக்கப் போவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவை உறுதியான விடைகளாக இருக்கப் போவதில்லை.


சிறப்பாசிரியர்

தியாகு

வெளியீட்டாளர் - ஆசிரியர்:

சிவ.காளிதாசன்

தொடர்புக்கு:

சிவ.காளிதாசன்
ப.எண் 31, பு.எண் 87,
மஞ்சுராஜ் அடுக்ககம்,
காமராஜ் நகர் 3ஆம் தெரு, சூளைமேடு, சென்னை - 600 094

பேசி: 9283222988
மின்னஞ்சல்: [email protected]


குழப்பங்கள் தெளிந்து ஒளிவிளக்கம் கிடைக்கும்வரை கைகட்டி இருக்க வேண்டும் என்பதன்று நம் கருத்து. அப்படி நாம் இருந்து விடுவோமானால் அதுவே நம் பகைவர்களுக்குச் செய்யும் பெருந் தொண்டாகி விடும்.

நாம் இப்போதும் செயல்பட வேண்டும். இப்போதே செயல்பட வேண்டும். செயல்படுவதற்கான தேவை மறைந்து விடவோ குறைந்துவிடவோ இல்லை. கொள்கை சாராத குருட்டுச் செயல்பாட்டில் நாம் எந்நிலையிலும் நம்பிக்கை வைக்கக் கூடாது. தமிழீழ மக்களைப் பொறுத்த அளவில் நம் அடிப்படைக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருந்தால்கூட தயங்காமல் மாற்றிக் கொள்ளலாம். அப்படியொரு தேவை எழுந்துள்ளதா? என்று கேட்டால் இல்லை என்பதே நம் விடை.

வெற்றி பெறவாய்ப்புள்ளதா? என்று விசாரித்தறிந்து எவரும் விடுதலைப் போர் தொடுப்பதில்லை. விடுதலை தேவை என்றால், அதற்காகப் போரிடுவதும் தேவை என்றால், விடுதலைப் போர் தொடங்குவதற்கு இந்தக் காரணங்களே போதும். களத் தோல்விகள் எவ்வளவு பெரியவை என்றாலும் விடுதலைக் குறிக்கோளை தேவையற்றதாக்கி விடுவதில்லை.

தமிழீழ விடுதலை - சிங்கள அரசிடமிருந்து விடுபட்ட தமிழீழத் தனியரசு - ஒரு வரலாற்றுத் தேவை என்ற அடிப்படைக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா? தமிழர்கள் உரிமையோடு வாழத்தான் தனியரசு கேட்டார்கள் முதலில். அவர்கள் உயிரோடு வாழ்வதற்கே தனியரசு தேவை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்போது தமிழீழத் திற்கான தேவை வளர்ந்துதான் உள்ளது.

இனப்படுகொலை செய்யும் அரசிடம் இரந்து கேட்டுச் சில சலுகைகளைப் பெறலாம் எனக் கருதுவோர் தமிழீழ விடுதலைக் கொள்கையைக் கைகழுவப் பார்ப்பார்கள், அதற்கு இப்போதைய நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இது தமிழர்களுக்கு எவ்வித விடிவும் தராது. தமிழீழ மக்களும், அவர்களின் நலனில் அக்கறைகொண்ட அனைவரும் தமிழீழ விடுதலைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும்.

அதேபோல் உடனடிக் கடமைகளையும் மறந்து விடக் கூடாது. தமிழீழ மக்கள் மீது பாரிய இன அழிப்பை நிகழ்த்தியுள்ள மகிந்த இராசபட்சே, கோத்தபய இராசபட்சே, சரத் பொன்கோ கும்பல் அதன் குற்றங்களை மறைக்க அனைத்து வகை மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரம் அப்பாவிப் பொது மக்களை சிங்கள இராணுவத்தினர் இரக்கமின்றிப் படுகொலை செய்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. ஆயுதங்களில் வெள்ளைக் கொடி யோடு சரணடைய வந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட தலைவர்களையும் மற்றவர்களையும் படுகொலை செய்த போர்க் குற்றமும் அம்பலமாகி விட்டது. இனக்கொலை, போர்க் குற்றங் கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகப் பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களைப் பாதுகாக் கும் கேடயமாக இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத் தில் சீனத்துடனும், பாகிஸ்தானு டனும் சேர்ந்து இந்தியா தான் சிங்கள அரசின் மீது துரும்பும் விழாமல் பார்த்துக் கொண்டது. அது மட்டுமல்ல, தன்னைத் தானே மெச்சிக் கொள்ளும் வகை யில் சிங்கள அரசு கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியாவும் சேர்ந்து நிறைவேற்றி கொடுத்துள்ளது.

போரை நடத்துவதற்கு மட்டுமல்லாமல், போரின் விளைவுகளை மறைப்பதற் கும், இனக் கொலை குற்ற வாளிகளைக் காப்பதற்கும் இந்திய அரசுதான் சிங்கள அரசுக்கு உதவி வருகிறது. இல்லை இல்லை, வழிகாட்டி வருகிறது. இந்தியா வின் போரை நாங்கள் நடத்தினோம் என்று இராச பட்சே வெளிப்படையாக அறிவித்திருப்பதும், சிங்களத் தரப்பின் ஒரு குழுவும், இந்தியா தரப்பின் எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் உள்ளிட்ட ஒரு குழுவும் தொடர்ச்சியாக ஒருங் கிணைந்து செயல்பட்ட விதத்தை கோத்தபய இராசபட்சே எடுத்துக்காட்டியிருப்பதும் இந்தியா வின் பங்கைத் தெளிவாகக் காட்டுகின்றன.

போரின் இறுதிக் கட்டத்தில் 20,000 தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவும் உடந்தையாக இருந்தது என்று அமைதிப்படைத் தளபதி அசோக் மேத்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய அரசு சார்பில் யாரும் இதை மறுக்க வில்லை.

தமிழீழ மக்களுக்கு எதிரான இனக்கொலைப் போரில் இந்தியாவின் முனைப்பான பங்கை இனி யும் மறைக்க முடியாது. ஆகவே தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான குற்றங்களுக்காக மகிந்த இராசபட்சே வகை யறாவைக் கூண்டிலேற்றினால் போதாது, மன் மோகன்சிங் வகையறாவையும் கூண்டிலேற்ற வேண்டும்.

தமிழர்களின் அவலநிலையைப் பயன்படுத்தி இலங்கைத் தீவை முழுச் சிங்கள நாடாக மாற்றும் முயற்சியில் மகிந்த அரசு ஈடுபட்டுள்ளது. அகதிகள் மறுவாழ்வுக்கென்று உலகெங்கும் பணம் திரட்டித் தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடி யேற்றங்களை ஏற்படுத்துவதுதான் அதன் நோக் கம். இதனை சிங்களப் பேரினவாதிகள் அவ்வள வாக மறைக்கவும் இல்லை. தமிழர்களைத் தமிழ்ப் பகுதிகளில் மீளக் குடியேற்றவா இவ்வளவு பெரிய போரை நடத்தி இவ்வளவு பெரும் இழப்புகளைச் சந்தித்தோம்? என்று அவர்கள் கேட்கிறார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு உதவுவதன் பேரால் சிங்கள அரசுக்கு நிதி கொடுப்பதும் மற்றவர் களைக் கொடுக்கச் சொல்வதும் சிங்களப் பேரின வாதத்தை வலுப்படுத்தப் பயன்படுமே தவிர தமிழர்களுக்கு உதவாது. தமிழர் மறுவாழ்வுக் காக யார் உதவ நினைத்தாலும் மகிந்த அரசின் வழியாக உதவ முடியாது.

ஐ.நா. உதவி நிறுவனங்களும் பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளும் நேரடியாகப் பொறுப்பேற்று தமிழர் மறு வாழ்வுக்கு உதவ வேண்டும். இதற்கு ஒத்துக் கொள்ளும்படி சிங்கள அரசை நெருக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் செய்திடல் வேண்டும்.

போரில் பலியான, காயமுற்ற, வீடிழந்த, பல் வேறு வகையிலும் வாழ்விழந்த ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் சிங்கள அரசு கணக்குப் பொறுப்பு (அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) உடையதாகும். ஒவ்வோர் இழப்புக்கும் அது கணக்கு தருவதோடு உரிய இழப்பீடும் தந்தாக வேண்டும்.

நான்காம் ஈழப் போரில் நடந்தவை குறித்தெல் லாம் புலனாய்வு செய்து விசாரணை நடத்து வதற்குப் பன்னாட்டு அளவிலான ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நாம் ஐ.நா.விடமும் பன்னாட்டு சமுதாயத்திடமும் எழுப்புவோம். இந்தக் கோரிக்கைகளுக்காக தமிழ்த் தேசிய அமைப்புகளையும் தமிழ் உணர்வாளர்களையும் சனநாயக ஆற்றல்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் அணிதிரட்டிப் போராட வேண்டும். இதற்கான ஒரு தொடக்க முயற்சியை தமிழர் ஒருங்கிணைப்பு வாயிலாக பெரியார் திரா விடர் கழகம், தமிழ்த்தேசம் பொதுவுடைமைக் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பை மேலும் விரிவாக்கி, மேலும் செரிவாக்கி வளர்த்துச் செல்வோம்.

இறுதியாக ஒன்று. கடந்த ஆறேழு மாத காலத்தில் தமிழர்களாகிய நாம் இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி என்னென்னவோ செய் தோம். எப்படியெல்லாமோ போராடினோம். தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர் களும் போராடினார்கள். நம் முயற்சி தோற்று விட்டது. நம் போராட்டங்கள் வெற்றி பெற வில்லை. ஆம், இறுதி வரை நம்மால் போரை நிறுத்த முடியவில்லை. பகைவன் நினைத்ததை நிறைவேற்றி முடித்த பிறகுதான் ஓய்ந்தான். இந்தத் தோல்வி தமிழ் மனத்தில் ஏற்படுத்தியுள்ள காயம் ஆழமானது. நூறாண்டு ஆனாலும் ஆறாத வடு இது. ஆறுதலில்லாத இந்த வேதனை என்றாவது மாறுமா, தெரியாது.

நம் கையறு நிலையை எண்ணி வருந்தினால் போதாது. இறுதியாகப் பார்த்தால் இது நம் இனத்தின் கையறு நிலை என்று தெரியவரும். தமிழ்நாட்டுக்கென்று அயலுறவுத் துறைஅமைச்சர் இருந்திருந்தால் நாம் இந்தியாவின் பிரணாப் முகர்ஜியை ""அய்யா, தயவுசெய்து கொழும்பு செல்லுங்க'' என்று கேட்டிருப்போமா? நமக்கென்று செல்வ வளம் இருந்திருந்தால், ஈழத் தமிழர் துயர்தணிப்புக்கு உதவுங்கள் என்று தில்லியிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்குமா? தமிழ்நாட்டுக்கென்று ஐ.நா.வில் பேராளர் இருந் திருந்தால் நாமே உலக அரங்கில் சிங்களத்தைக் கூண்டில் நிறுத்தியிருக்க மாட்டோமா?

சுருங்கச் சொல்லின் தமிழ்த்தேசம் இறை யாண்மை அற்றிருப்பதால்தான் நம்மால் நாம் விரும்பியபடி தமிழீழ மக்களைக் காக்க முடியாது போயிற்று. நான்காம் ஈழப் போரும் அதன் முடிவும் தமிழர்களாகிய நாம் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் அடிமைகளாய் இருப்பதைப் புரிய வைத்து விட்டது.

அவர்கள் அடிமைகள் என்றாலும், விடுதலைக் காகப் போராடும் அடிமைகள், நாம்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com