Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஜனவரி 2009
கிளிநொச்சி: இரு மடல்கள்
ஒரு கடிதம்: போர்முனை

‘தமிழ்நாதம்' இணைய இதழில் தி.வழுதி மடல் வடிவில் எழுதிய இரு கட்டுரைகளை இங்கு வெளியிடுகிறோம். புலம் பெயர் ஈழத் தமிழருக்காக எழுதப்பட்டிருப்பினும், இவற்றில் அடங்கிய செய்திகள் தமிழகத் தமிழர்களான நமக்கும் பொருத்தப்பாடுள்ளவையே. நம் தமிழுக்கும் அவர்கள் தமிழுக் கும் உள்ள சில வேறுபாடுகளை (நாங்கள் = நாம் என்பது போன்றவை) மனத்திற்கொண்டு படிக்கவும்.

அன்புக்குரியவர்களே,

முப்பது வருடங்களுக்கு முன்பு, பாலா அண்ணைக்கு அந்த அக்கறையும் சிந்தனையும் வந்தது. தான் தனது நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வியை தன்னைப் பார்த்தே கேட்கும் ஓர் அக்கறையும், அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் சிந்தனையும் அப்போது அவரிடம் வந்தது. அவருக்கு முன்னால் பல வழிகள் இருந்தன. அதற்குள் சிறந்தது என்று அவருக்குப்பட்டதை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த வழியில் அவர் ஒரு கையில் அன்ரியையும் பிடித்துக்கொண்டு நடந்து கொண்டே இருந்தார், எந்தச் சலசலப்பும் இல்லாமல்.

பாலா அண்ணை எம்மை விட்டுப் போய் இன்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படியெல்லாம் நடக்கும் என்று வாழும் காலத்தில் அவர் சொல்லியபடியே, பல விடயங்கள், இப்போது அவர் இல்லாத காலத்தில் நடக்கின்றன. நடப்பவற்றைப் பார்த்து ஒரு புறம் கவலையும், நடக்கும் என்று சொன்ன அந்த மனிதரின் தொலைநோக்குப் பார்வையை நினைத்து மறுபுறம் வியப்பும் அடைகின்றேன். 2001ஆம் ஆண்டு, நத்தார் நாள் அன்று, லண்டனில் அவரது வீட்டில் அவரோடு கதைத்துக் கொண்டிருந்தேன் - இந்தக் காலகட்டம்தான் முக்கியமானது. அதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

"ஜெயசிக்குறு' படையினரைத் திருப்பித் துரத்தி, பரந்தனோடு ஆனையிறவை வீழ்த்தி முகமாலை வரை முன்னேறி நிலை கொண்டிருந்தது புலிகள் படை. ஆனையிறவைத் திரும்பவும் பிடிக்க "தீச்சுவாலை' என்ற மாபெரும் படையெடுத்தவர் களையும் புலிகள் முறியடித்திருந்தனர். கிழக்கில் மிகப் பெரும் நிலப்பரப்பும் புலிகளின் ஆளுகையில் இருந்தது. தமிழீழப் போர் அரங்கில் நிகழ்ந்திருந்த இந்த மாபெரும் இராணுவச் சாதனைகளின் மகுடமாகக் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தையும், விமான நிலையத்தையும் தாக்கி, சிறிலங்காவின் பொருளாதாரத்தையும் புலிகள் அதள பாதாளத்தில் தள்ளியிருந்தனர். வாலைச் சுருட்டிக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வரத் தயாரானது சிறிலங்கா அரசு.

தமிழீழ விடுதலைப் போராட்டம் அப்போது சர்வதேச மயப்பட்டிருக்கவில்லை. முதற்தடவை யாக, அப்போதுதான், தென்னாசியாவுக்கு வெளியி லிருக்கும் நாடொன்று இலங்கை இனப்பிரச்சனை யில் தொடர்புபட்டது. புலிகளுடன் சமரசம் செய்ய நோர்வேயை அழைத்திருந்தார் சந்திரிகா அம்மையார். நோர்வே அரசின் இராஜதந்திரி திரு. எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் வன்னிக்கு விஜயம் செய்து தலைவர் பிரபாகரனைச் சந்தித்து விட்டுச் சென்றிருந்தார்.

தமிழீழத்தில் இப்படியான நிகழ்வுகள் அரங் கேறிக் கொண்டிருந்த அதே நேரத்தில் துரதிர்ஷ்ட வசமாக உலகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்தது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைப் பயங்கரவாதிகள் தகர்த்தார்கள். உலகில், அரசு அல்லாத ஆயுதச் செயற்பாட்டாளர்கள் எல்லோரையும் பயங்கரவாதிகள் என்று முத்திரையிடும் கொள்கையை வரித்துக்கொண்டது அமெரிக்க அரசு. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அது ஆரம்பித்து, முழு உலகையும் அந்தப் போரின் களம் ஆக்கியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடாத்துவதாகச் சொல்லிக்கொண்டே அரசுகள் எல்லாவற்றுக்கும் தனது தார்மீக ஆதரவையும் அது வழங்கியது.

இது ஒரு மிக முக்கியமான திருப்பம். இந்த நேரத்தில்தான் நான் பாலா அண்ணையுடன் கதைத்துக் கொண்டிருந் தேன். இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில் அப்போது இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப் பட்டிருக்கவில்லை. ஆனால், எழுதுவதற்கான ஏற்பாடுகளில் பாலா அண்ணை ஈடுபட்டிருந்தார்.
அன்ரி கொடுத்த தேநீரை அருந்தியபடி பாலா அண்ணை நிதானமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். நான் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்:

“இது ஒரு முக்கியமான விடயம், ஐசே. இதை நாங்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேணும். இராணுவ ரீதியில் நாங்கள் உச்ச நிலையில் இருக்கிறம். இதில இருந்து நல்ல அரசியல் விளைவுகளை எடுக்க வேணும். இந்தப் போர் நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தையையும் நாங்கள் சரியாகக் கையாள வேணும். இந்தியாவும் இதில ஒரு முக்கியமான ஃபேக்டர். அடுத்த பக்கத்தில, அவனொருத்தன் அமெரிக்காவில அடிச்சுப்போட்டு ஓடிப்போய் குகைக்குள்ள ஒழிஞ்சுகொண்டிருக் கிறான். இப்ப அமெரிக்காவுக்குப் பின்னால மேற்குலகம் திரண்டு நிற்குது. இதுக்குள்ள நிறைய சூட்சுமங்கள் இருக்கு. அதுகளைச் சரியாக விளங்கிக்கொண்டு நாங்கள் பொறுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் காய்களை நகர்த்த வேணும். எங்கட போராட்டம் சர்வதேசமயப் படுவது ஒரு நல்ல விசயம். ஆனால், அதிலதான் ஆபத்துக்களும் இருக்குது.

போராட்டம் சர்வதேசமயப்பட்டால் அதில் தங்களுக்கு என்ன நன்மை, என்ன தீமை என்றுதான் எல்லா நாடுகளும் பார்ப்பாங்களே இல்லாமல், தமிழ்ச் சனங்களுக்கு எது நன்மை என்று ஒருத்தனுக்கும் அக்கறையில்லை. அதனால, போராட்டத்தை அழித்து விடத்தான் எல்லாரும் பார்ப்பாங்கள். பாலஸ்த்தீனத்துச் சனங்களைப் பாரடாப்பா. அதுகளிண்ட போராட் டத்திற்கு இதுதான் நடந்தது. பேச்சு வார்த்தை, சமாதானம் அது இது என்று இழுத்தடிச்சு, அதுகளைப் பிரிச்சு சலிப்பு வரப்பண்ணி இண்டைக்கு அழிச்சுப் போட்டாங்கள். அந்த நிலைமை எங்களுக்கு வராமல் நாங்கள் கவனமாக இருக்க வேணும்''

- இன்று ஏழு வருடங்களின் பின்னர் - கிளிநொச்சியினதும் முல்லைத்தீவினதும் வீழ்ச்சிக்காக இந்த உலகம் பொறுமை யிழந்து காத்துக் கொண்டிருக்கின்றது. பாலா அண்ணை எம்மோடு இல்லை. கடந்த சில காலங்களாகவே என்னுடைய மனச்சாட்சிக்கும் எனது ஆன்மாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் ஓர் உரையாடலில் உங்களையும் இணைத்து, உங்களுடனும் அதைப் பகிர்ந்து கொள்வதற்காகவே நான் இங்கே எழுதுகின்றேன்.

தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி சற்று நேரம் அமைதியாக, தனிமையில் இருந்து யோசிக்க வேண்டும். எங்களில் எவ்வளவு பேர் இன்றைய காலத்தின் முக்கியத்துவத்தைச் சரிவரப் புரிந்துகொண்டிருக் கின்றோம் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், எங்களது வாழ்வுக் காலத்தின் அதிமுக்கியமான ஒரு காலகட்டத்திலே நாம் எல்லோரும் இப்போது இருக்கின்றோம்.

இன்று இந்த முழு உலகமும் ஒன்றாகத் திரண்டு நிகழ்த்தும் ஒரு யுத்தத்திற்கு எதிராகத் தமிழினம் போராடிக் கொண்டிருக்கின்றது. இப்போது வன்னியில் நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தை நாங்கள் மிகச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்குப் பின்னால் இருக்கும் சூட்சுமங்கள், நோக்கங்கள் என்பவற்றை நாங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அதில் நாங்களே அக்கறை காட்டவில்லையென்றால், தமிழர்கள் அல்லாத அடுத்தவர்கள் யாரும் அதில் அக்கறை காட்ட மாட்டார்கள். அந்தப் போரை நாங்களே சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்றால், தமிழர்கள் அல்லாத ஏனையவர்களுக்கு நாம் அதனை விளங்க வைக்க முடியாது.

ஏதோ, சிங்களப் படைகள் தாமாகப் போராடிப் புலிகளைத் தோற்கடித்து முன்னேறி வருகின்றன என்று இந்த விடயத்தை நாம் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுப் போய்விடக் கூடாது. இது மிகுந்த ஆழமான ஒரு விடயம். தமிழர்களாகிய நாங்கள் இந்த விடயத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அங்கே இரண்டு படைகளுக்கு இடையில் போர் நிகழ்கின்றது.

தமிழர்களின் பலத்தில், தமிழர்களின் ஆதரவில், தமிழர்களின் உதவியில், தமிழர்களின் உறுதியில், தமிழர்களுக்காக, தமிழர்களே போராடும் தமிழர் படை ஒரு பக்கத்திலும், மறுபுறத்தில் - சைனாவிடம் ஆயுதங்கள் வாங்கி, பாகிஸ்தானிடம் பீரங்கிகள் வாங்கி, ரஷ்யாவிடம் விமானங்களை வாங்கி, ஈரானிடம் பணம் வாங்கி, அமெரிக்காவிடம் ஆலோசனைகள் வாங்கி, இந்தியாவிடம் உளவுத் தகவல்கள் வாங்கி, சிறிலங்காவிடம் ஆட்களை வாங்கிப் போராடும் ஓர் உலகப் படை அடுத்த பக்கத்திலுமாக இந்தப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த மாபெரும் உலகப் படைக்கு முன்னால், சில ஆயிரம் போராளிகளை மட்டுமே கொண்ட தமிழர் படையை வைத்துக்கொண்டு பிரபாகரன் போராடிக் கொண்டு இருக்கின்றார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

தமிழர்களைப் பொறுத்த வரை இது ஏதோ ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் செய்தியைப் பார்த்துவிட்டு, அல்லது காண்கிற இடங்களில் தெரிந்தவர்களுடன் அரசியல் கதைத்து, புதினம் கேட்டுவிட்டுப் போகிற ஒரு சாதாரண விடயம் அல்ல. இது ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் எதிராக இந்த முழு உலகம் திரண்டு நிகழ்த்துகின்ற போர். தமிழ்நாடு, மலேசியா, மொறீசியஸ், சிங்கப்பூர், தமிழீழம் என்று உலகத் தமிழினம் ஒன்றாகத் திரண்டு ஒரு புறத்திலும், உலக வல்லரசுச் சக்திகள் எல்லாம் சிறிலங்காவைச் சேர்த்து வைத்துக்கொண்டு மறுபுறத்திலும் இந்தப் போரில் நிற்கின்றன. வன்னிப் போர்க்களத்தில் மட்டும் இந்தப் போர் நடந்துகொண்டிருக்கவில்லை. இந்த உலகத்தின் அரசியல் இராஜதந்திரக் களத்திலும் இந்தப் போர் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழர்கள் ஒவ்வொருவரும் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் இந்த உலகில் எங்கு வாழ்ந்தாலும் இந்தப் போரின் பங்காளிகள். ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு வகையான போராளி. அதில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். இந்தப் போர், வெற்றிக்கும் தோல்விக் கும் அப்பாற்பட்ட விடயம். போர்முனையிலே விடுதலைப் புலிகள் இயக்கம் நிலப்பகுதிகளை இழந்திருப்பது உண்மைதான். ஆனால், இடங் களைப் பிடிப்பதற்கும் இழப்பதற்கும் அப்பால் நாங்கள் போராட வேண்டும் என்பதே இன்று எல்லாவற்றை யும் விட முக்கியமானதாகும்.

ஏனெனில், இன்று நடக்கின்ற இந்தப் போர்தான் நாங்கள் இந்த உலகத்திற்குக் கொடுக்கின்ற அதியுச்சத் தகவல். இந்தப் போர்தான் தமிழர்கள் தொடர் பான தங்கள் வெளிநாட்டுக் கொள்கைகளை வகுப்பவர் களுக்கு ஒரு அதி முக்கியத் தரவு. இந்தப் போரில் நாங்கள் ஒன்றாக நின்று, ஒரே குரலில் பேசி, ஒரே செய்தியைச் சம்மந்தப்பட்டவர் கள் எல்லோருக்கும் சொல்ல வேண்டும். எங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்கும் வரை நாங்கள் போராடியே தீருவோம் என்ற விடயத்தை நாம் இந்த உலகிற்கு உணர்த்த வேண்டும்.

ஒரு புறத்தில் சிறிலங்கா அரசோடு சேர்ந்து புலிகளுக்கு எதிரான போரை நடாத்திக் கொண்டு மறுபுறத்தில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் செயற் பாட்டாளர்களை சிறைகளில் அடைத்துக் கொண்டு, ஏனைய தமிழர்களைப் பயமுறுத்தி வைத்துக்கொண்டு, இந்த உலகம் எம்மைப் பணிய வைக்கப் பார்க்கின்றது. போரும் போராட்டமும் நீண்டு செல்லச் செல்ல நாங்கள் களைத்துப் போய் விடுவோம் என்று இந்த உலகம் நினைக்கின்றது. சலிப்பும் விரக்தியும் ஏமாற்றமும் சேர்ந்துகொள்ள எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு தமிழர்கள் அடங்கிப் போய்விடுவார்கள் என்று இந்த உலகம் எதிர்பார்க்கின்றது.

ஆனால், யார் எதைச் செய்தாலும் நாங்கள் போராடியே தீர வேண்டும். போராடுவதைத் தவிர இந்த உலகம் வேறு வழிகள் எதனையும் எமக்கு விட்டு வைக்கவில்லை. எங்களது அரசியல் உரிமைகளைப் பெற்று, எங்களை நாங்களே ஆளுகின்ற ஒரு சூழல் பிறக்கும் வரை நாங்கள் போராடியே தீருவோம் என்பதை இந்த உலகிற்கு நாம் உணர்த்த வேண்டும். இவை மட்டுமல்ல, எல்லா வற்றையும் விட முக்கியமான இன்னொரு விடயத்தையும் நாங்கள் இந்த உலகத்திற்குச் சொல்ல வேண்டும். இந்த உலகம் எமக்கு இன்று இழைக் கின்ற இந்த அநீதியை தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்பதுதான் அது. எங்களது ஆன்மாக்களில் இந்தக் காயம் என்றும் ஆறாமல் அப்படியே இருக்கும் என்பதை நாம் இந்த உலகத்திற்குச் சொல்ல வேண் டும். எங்களது வேதனையும், எங்களது கோபமும் அப்படியே எம் மனதில் இருக்கும் என்பதை நாம் இந்த உலகத்திற்குச் சொல்ல வேண்டும். எங்களது குழந்தைகளுக்கும் குழந்தைகளின் குழந்தைகளுக்கும் நாம் இந்த வரலாற்றைச் சொல்லுவோம். இந்த உலகம் எங்களை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டு நாங்கள் அழியும் நாளுக்காகக் காத்திருந்தது என்பதை எமது பரம்பரைக்கே சொல்லுவோம் என்பதை நாம் இந்த உலகத்திற்கு உணர்த்த வேண்டும்.

எவ்வளவு நெருக்கடிகள், எவ்வளவு அழிவுகள், போர்முனைப் பின்னடைவுகள் வந்தாலும் அத்தனைக்குள்ளும் நாங்கள் போராடுவோம். எமது போராட்டம் இன்று மூன்று முனைகளில் நடைபெறுகின்றது. விடுதலைப் புலிகள் போர் முனையில் நடாத்தும் ஆயுதப் போர் ஒரு முனை. எவ்வளவு அழிவுகள் வந்தாலும் எம் மண்ணின் ஆன்ம சக்தியாக நாங்கள் வாழ்ந்தே தீருவோம் என வாழும் வன்னி மக்கள் நிகழ்த்தும் போர் அடுத்த முனை. அனைத்துலக ரீதியாகத் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் போர் மூன்றாவது முனை. இந்த மூன்று முனைப் போராட்டங்களும் சம நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகள் மட்டுமே தனியாக ஆயுதப் போரை நடாத்தி தமிழர்கள் எமது போராட்டத்தை வெல்லவும் முடியாது. வெளிநாடுகளில் தமிழர்கள் மட்டுமே அரசியல் வேலைகளைச் செய்து நாம் எமது உரிமைகளைப் பெற்றுவிடவும் முடியாது. இந்த இரண்டும் ஒரேயடியாக நிகழ வேண்டும். தலைவர் பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிப் போராளிகளும் அவர்களது போராட்டத்தை, அவர்களது சக்திக்கும் மீறிச் செய்கின்றனர். அங்கே வாழுகின்ற மக்கள், எமது தேசிய இனத்தின் உயிர்நாடியாக, அவர்களிடம் இருக்கின்ற அனைத்தையும் கொடுத்துப் போராடுகின்றார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாங்கள் எங்களால் ஆன எதனைச் செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால், எம் ஒவ்வொருவருக்கும் இன்று தேவையானது அந்த அக்கறையும் சிந்தனையும் மட்டும்தான்.

“நான் என் நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்?'' என்ற கேள்வியை எம்மைப் பார்த்தே நாம் கேட்கும் ஓர் அக்கறையும், அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் சிந்தனையும் மட்டும்தான் இப்போது தேவையானது. அது இரண்டும் எம் ஒவ்வொருவரிடமும் இப்போது இருந்து விட்டால் நாம் கேட்பதை இந்த உலகம் தந்தேதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

இன்னொரு கடிதம் : கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்...

கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது. விரைவில், முல்லைத் தீவும் வீழலாம். ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது முகமாலையில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் "பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு முடிந்துவிட்டது. அவர்களால் இனி மீள எழுந்து வர முடியாது. புலிகளால் தமிழர்களுக்கு இனி ஆகப் போவதும் எதுவும் இல்லை' எனும் விதமாக ஏளனக் கதை கள் பேச ஆரம்பித்து விட்டனர். இப்படியானவர் கள் மீது எமக்கு எந்தக் கோபமும் இல்லை, அவர்களுக்காக எதையும் எழுத நான் இங்கே வரவும் இல்லை.

ஆனால், வெளிநாட்டுத் தமிழர்களில் அடுத்த பகுதியினர் மிகப்பெரும் பகுதியினர் - ஒரு பக்கம் - திகைப்பிலும், கவலையிலும், மறுபக்கம் - புலிகள் ஏதாவது செய்தே ஆவார்கள் என்ற நம்பிக்கையிலும் இருக்கின்றோம். அப்படியான எமக்காகவே நான் இங்கே எழுதுகின்றேன். ஊர் ஊராகச் சிங்களப் படைகள் பிடித்துச் செல்வதைப் பார்த்து வரும் தோல்விக் கவலைகளும் - அவ்வப்போது - இறந்து கிடக்கும் சிங்களப் படையினரின் படங்களை இணையத்தில் பார்த்து வரும் வெற்றிக் கனவுகளும் - கலைந்து நாங்கள் எழ வேண்டும். உண்மையை உணர வேண்டும். அப்போதுதான் சரியாகச் சிந்திக்கவும், முறையாகச் செயற்படவும் முடியும். கடந்த காலங்களில் வன்னியில் இருப்போர் நிறையக் கதைத்தார்கள் என்பது உண்மைதான். மேடைப் பேச்சுக்களிலும், ஊடகப் பேட்டிகளிலும் மட்டுமன்றி, தனிப்பட்ட சந்திப்புக்களிலும் கூட அதீத நம்பிக்கைகளைக் கொடுக்கும் வீரக் கதைகள் சொன்னார்கள் என்பதும் உண்மைதான்.

- ஆனால் - இப்போது - அவர்கள் சொல்லியபடி இன்னும் எதுவும் நடக்கவில்லை என்பதும் உண்மைதான். வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் ஒவ்வொரு நாளும் "தமிழ்நெற்'றையும் "புதின'த் தையும் தட்டிப் பார்த்துக் கொண்டு எதிர் பார்ப்புக்களோடு காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கின்றோம். நாங்கள் எதிர்பார்த்திருந்தபடி இன்னும் எதுவும் நடந்து விடவில்லை என்பதற்காக, இப்போது - புலிகள் தமது அதிசிறப்புப் படையணிகளை இன்னும் சண்டைகளில் ஈடுபடுத்தவில்லை என்றும், ஏதோ தந்திரோபாயமாகப் பின்வாங்குகின்றார்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆட்கள் கொண்ட பெரும் படைகளை வைத்திருக் கின்றார்கள் என்றும், எல்லாவற்றையும் திரட்டிக் கொண்டு நல்ல சகுணம் பார்த்துப் பாயப் போகின்றார்கள் என்றும் - என்னைச் சாந்தப்படுத்துவதற்காக நினைத்துக் கொள்ளவும், உங்களைச் சாந்தப்படுத்துவதற்காக எழுதிவிடவும் நான் விரும்பவில்லை.
போதாக் குறைக்கு - பத்திரிகைளிலும், இணையத் தளங்களிலும் எழுதும் நமது ஆய்வாளர்கள் வேறு - தம் பங்குக்கு - புலிகள் அங்கே அப்படித் தாக்கப் போகின்றார்கள், இங்கே இப்படிப் பாயப் போகின்றார்கள் என்று ஏதேதோ எழுதித் தள்ளுகிறார்கள்.

புலிகள் எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுகின்றார்களோ, அப்படி யாகவே புலிகள் செய்யப் போகின் றார்கள் என்றவாறாக எழுதுகின்றார்கள். அவர்களில் சிலர் - ஏதோ கள முனைத் தளபதிகளே இவர்களுக்கு அருகில் உட்கார்ந்து தங்களுடைய திட்டங்களை விளங்கப்படுத்தியது போல, கிளிநொச்சி விடுபட்டுப் போனதற்கு வியாக்கியானங்களும், புலிகளின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய விவரணங்களும் எழுதுகின்றார்கள். இன்னொரு பக்கத்தில் - ஒரு புறம் - கோசம் எழுப்பும் வீரக் கவிதைகளையும், மறுபுறம் - எம் அவலங்களைச் சொல்லும் ஒப்பாரிப் பாடல்களையும் எம் கவிகள் இன்னும் வரைந்து தள்ளுகின்றார்கள். உண்மை என்னவெனில் - இவை எதுவுமே எமக்கு உதவாது.

இந்த மாதிரியான - கனவில் மிதக்க வைக்கும் போரியல் ஆய்வுகளும், வீராவேசக் கவிதை ஜாலங்களும் - வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் ஒரு மாயைக்குள் இருக்க உதவுமே அல்லாமல் - எங்களுக்கு உண்மையை உணர்த்தாது; போராட்டத்திற்கு நன்மைகள் எதனையும் செய்யாது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கத்தான் வேண்டும். அது எங்களிடம் உண்டு. ஆனால், அந்த நம்பிக்கையே அதீத நம்பிக்கையாகி, அதுவே பின்னர் ஒரு மாயை போல எங்கள் எல்லோரையும் மூழ்கடித்து விடும் அளவுக்குப் போக விடக்கூடாது. இப்போது எமக்குத் தேவையானது - நிதான மான பதற்றப்படாத - அறிவியல்பூர்வமான, ஒரு விஞ்ஞானச் சிந்தனை.

உண்மை இதுதான்: ஒரு மிகப் பெரிய சர்வதேசச் சதி ஆட்டத்திற்குள் நாம் சிக்குண்டிருக்கின்றோம். சில வருடங்களுக்கு முன்னால் - மேற்குலகம் தலைமை தாங்கிய இந்த ஆட்டத்தில் இந்தியா முக்கியப் பங்காளியாக இருந்தது. இப்போது - இந்தியாவே தலைமை தாங்கும் இந்த ஆட்டத்திற்கு உலகமே ஒத்தாசைகள் செய்கின்றது. வன்னியில் நடக்கும் போர் - இந்த ஒட்டு மொத்தமான பெரும் ஆட்டத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே. மிகுதிப் பெரும் பகுதி உண்மையில் எங்களைச் சுற்றியும், எங்கள் மனங்களுக்கு உள்ளேயும் நிகழ்த்தப்படுகின்றது. இந்த ஆட்டத்தின் நோக்கப் பரிமாணங்கள் நாம் உணர்ந்து வைத்திருப்பதை விட ஆழமானவை;. நாம் தெரிந்து வைத்திருப்பதை விட விரி வானவை. அந்த நோக்கங்களின் ஆழத்தையும், விரிவையும் விளங்கிக் கொள்ள நாம் முயல வேண்டும்.

எங்களைச் சுற்றியும், எங்களுக்கு உள்ளேயும் நடக்கும் இந்தப் பெரும் ஆட்டத்தில் வெல்லுவதற்கு உருப்படியாக எதுவும் செய்யாமல் - வன்னிப் போரில் புலிகள் மொத்த மாக வாகை சூடும்போது, எல்லாம் தாமாகவே கைகூடி வரும் என்ற கனவில், சில்லறை வேலைகள் பார்த்துக் கொண்டு நாங்கள் காவல் இருக்கின்றோம். மாயையிலும், அதீத நம்பிக்கையிலும் மூழ்கிப் போய் இருக்காமல், உண்மையை உணர்ந்துகொண்டு - யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு - தலைவர் பிரபாகரனும் அவரது போராளி களும் இந்தப் போரிலே வெல்லு வதற்கும், இன்றைய நிலையி லிருந்து நாம் எல்லோருமே மீண்டு வெளியில் வருவதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
வன்னிப் போரின் உண்மை நிலை இதுதான்:

புலிகள் தம்மிடமுள்ள எல்லாவற்றையும் பாவித்துப் போரிடுகின்றார்கள். தமது சக்திக்கும் மீறி எல்லாவற்றையும் செய்து போரிடுகின்றார்கள். தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படை யணிகளையும், எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள். ஆனால் - எல்லாவற்றையும் கடந்து சிறிலங்கா வின் படைகளை முன்னேற வைக்கின்றது இந்த உலகம் என்பதுதான் உண்மை. கிளிநொச்சி வீழும் வரையிலும், முல்லைத் தீவும், ஆனையிறவும் முற்றுகைக்கு உள்ளாகும் வரையிலும், வன்னியின் வடகிழக்கு மூலைக் குள்ளே முடக்கப்படும் வரையிலும், தனது அதி சிறப்புப் படையணிகளைப் பின்னாலே வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார் தலைவர் பிரபாகரன் என்பதை நம்புவது எனக்குக் கடினமானது.

உலகமே பின்னாலே திரண்டு முன்னாலே தள்ள, முன்னேறி வருகின்ற சிறிலங்காவின் படைகளைத் தடுத்து நிறுத்த முடியாது போன பொறுப்பை புலிகளின் தலையில் கட்டிவிட்டு, நாம் சும்மா கவலைப்பட்டுக் கொண்டும், மீதி நேரத்திற்குத் துக்கம் விசாரித்துக் கொண்டும் இருக்க முடியாது. அங்கே முன்னேறிச் செல்கின்ற படைகளைத் தடுக்க, இங்கே உரியதைச் செய்யாமல் விட்டு விட்ட - அது நடப்பதற்கு இன்னொரு வகையில் அனுமதித்த - வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்களும்தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். அங்கே நடப்பதைத் தடுப்பதற்கு நாங்கள் செய்திருக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பில் கால் வாசியைத்தானும் நாம் செய்துவிடவில்லை.

நம்பிக்கை இருக்கத்தான் வேண் டும். ஆனால், அந்த நம்பிக்கை என்பது நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளை எடுக்க விடாமல் - நாம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்ய விடாமல் யதார்த்தத்தை நாம் உணர்ந்து கொள்ளவிடாமல், எம்மை ஒரு மாயைக்குள் கட்டி வைத்துவிடும் அளவுக்கு அதீத நம்பிக்கை ஆகிவிடக் கூடாது. எமது விடயத்தில் அதுதான் நடந்து விட்டது. ஒரே இரவில் பெரும் இராணுவ வெற்றியைச் சாதித்து, முழு உலகத்தையும் தமிழருக்குச் சார்பாக மாற்றி, தமிழீழத்தை வென்றெடுப்பார்கள் புலிகள் என்று விட்டுவிட்டு, வெறும் மனிதாபி மானப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு நாங்கள் காலத்தை ஓட்டிவிட்டோம். ஆனால் இன்னும் ஒன்றும் குடிமுழுகிப் போக வில்லை. தலைவர் பிரபாகரனும், விடுதலைப் புலிகளின் போர் வீரர்களும் தம்மையே திகைப்பில் ஆழ்த்தும் இராணுவக் கோலாகலங் களை நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவர்கள். ஆனால் - அதனை அவர்கள் எங்கே நிகழ்த்துவார்கள், எப்படி நிகழ்த்துவார்கள், நிகழ்த்தியே தீருவார்களா என்பதெல்லாம் எம் யாருக்கும் தெரியவே தெரியாத விடயங்கள். தங்களுக்கான கடமையை அவர்கள் தமது வல்லமைக்கு மேலாகவே செய்கின்றார்கள். எங்களுக்கான கடமையை நாம் எந்த அளவிற்குச் செய்கின்றோம்?

ஒரு புறத்தில் - அக்கறையும் நம்பிக்கையும் துணி வும் இருக்கும் வரை யாரும் தோற்றுப் போனவர் கள் அல்ல; பலவீனமானவர்களும் அல்ல. அவற்றை இழக்காதவரை யாரும் எதையும் இழந்தவர்களும் அல்ல. ஏனெனில் அவைதான் - நாம் இழந்தவற்றை யும், அதற்கு அதிகமாகவும் மீளப் பெறுவதற்கு எம்மிடமிருக்கும் ஆகக் கடைசி ஆயுதங்கள். மறு புறத்தில் - அக்கறையின்மையும், விரக்தியும் சலிப்பும் நேரரெதிரானவை. அவை வந்துவிட்டால் நாம் வென்றிருந்தாலும் தோற்றவர்கள், பலமாய் இருந்தாலும் பலவீனமானவர்கள். ஏனெனில், அவைதான் எம்மை வீழ்த்தும் முதல் ஆயுதங்கள். எம்மிடம் இருப்பவற்றையும் இழக்க வைத்துவிடுவன அவை. அதே நேரம் - அதீத நம்பிக்கையில் உயர் உற்சாகம் பெறுவதும், மிகுந்த மனவிரக்தியில் சலிப்புறுவதும், சில வேளைகளில் ஒரே விளைவினைக் கொடுக்கக் கூடியவையே. உயர் உற்சாகம் எம் கண்களை மறைப்பதற்கும், விரக்தி எம்மைச் சோர்வடைய வைப்பதற்கும் நடுவிலுள்ள மெல்லிய இடை வெளியில் நாங்கள் சிந்தனையை ஓட்ட வேண்டும். அப்போது தான் நிதானமாக யோசித்து நாம் செயலாற்ற முடியும்.

சும்மா செய்திகளைப் படித்து விட்டு - நடந்து முடிந்தவற்றை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கவோ, அல்லது நடக்கப் போகின்றவை பற்றிய கற்பனைகளில் மிதக்கவோ எமக்கு இப்போது நேரமேயில்லை. வெளிநாட்டுத் தமிழ் செயற்பாடுகளில் இதுவரை நாம் என்ன செய்தோம் என்பதை மீள நோக்கி, எங்கெல்லாம் தவறிழைத்தோம் என்பதைக் கண்டறிந்து, இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்த உலகம் என்னவிதமான ஒரு கபட ஆட்டத்தை எம்மைச் சுற்றி ஆடுகின்றது என்பதை அவதானித்து, எவ்வகையான பசப்பு வார்த்தைகள் பேசி எம்மை மயக்குகின்றது என்பதை உணர்ந்து, எவ்வாறு இந்த ஜால வலையில் நாம் சிக்கிக் கொண்டோம் என்பதை விளங்கிக்கொண்டு - இந்தப் பெரும் சர்வதேச ஆட்டத்தை முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். அதுதான் உருப்படியான வழிமுறை.

தமிழர்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக் கையை அனைத்துலக மட்டத்தில் முன்னெடுப்பதற்கான எல்லா வழிகளையும் கண்டறிவதும், அவற்றைக் கண்டறிந்து - அவற்றினூடாக அதனை எல்லா முறைகளிலும் முன்னெடுப்பதும், அதனை முன்னெடுத்து - தமிழீழ விடுதலைப் போராட்டத் திற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை எல்லா மட்டங்களிலும் பெறுவதும், அங்கீகாரத்தைப் பெற்று முடிவாகத் தமிழீழத் தனியரசை வென் றெடுப்பதும் வெளிநாட்டுத் தமிழர்களாகிய எம் கைகளிலேயே உண்டு. நாம் செயற்பட வேண்டும், உடனடியாக.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com