Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஜனவரி 2009
ஈழப் போராட்டத்தால் வெளிச்சமாகும் உண்மைகள்
இந்தியாவிற்குப் பங்காளி யார்? பகையாளி யார்?
கலைவேலு

"கேட்டினும் உண்டு ஓர் உறுதி' என்பார் வள்ளுவர். தீமையும் நன்மை பயக்கும் என்பது அதன் பொருள். நட்பை அளக் கும் அளவுகோலாக அத்தீமை பயன்படும் என அடுத்து அதற்கு அவர் விளக்கம் கூறுவார்- “இளைஞரை நீட்டி அளப்பது ஒர் கோல்'' தனிமாந்தனுக்கும் இக் குறள் வழிகாட்டுகிற தெனினும் இது முற்றிலும் அரசியலுக்கான குறள். பொருட்பாலில் அரசியலுக்கு அடுத்து வரும் அங்க இயலில் "நட்பு ஆராய்தல்' அதிகாரத்தின் கீழ் இக்குறள் வருகிறது. “அரசியல் நடாத்துதற்கண் ஒன்றற்கு ஒன்று துணையாய அங்கங்கள்'' என அங்க இயலுக்கு விளக்கம் கூறுவார் பரிமேலழகர்.

இக்குறள் முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது தமிழர் களுக்கு மிகவும் பொருத்தமான தாய் அமைந்து பல உண்மைகளைப் புரிய வைக் கிறது. கையெட்டும் தொலை வில் நாளும் செத்து மடியும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றத் தமிழகமே ஒன்று திரண்டு குரல் கொடுத்தது. பட்டி தொட்டி களிலெல்லாம் ஆர்ப்பாட்டம், மறியல், ஊர்வலம், உண்ணாநிலைப் போராட்டங் கள் எனப் பலவும் நடைபெற்றன. இராமேசுவரத்தில் தமிழ்த் திரையுலகமே திரண்டு நின்று பரணி பாடியது. கொட்டும் மழையிலும் சென்னையில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கெடுத்த மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. சட்டமன்றத்தில் ஒருமனதாய்த் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வர் தலைமையில் கட்சிகள் அணிவகுத்துச் சென்று தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடுவண் அமைச்சர்களும் தலைமை அமைச்சரைக் கூட்டாகவும், தனித்தனியாகவும் சந்தித்தனர்.

தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்தும், அவை அனைத் திந்திய அளவில் இயங்கு கின்றவையே ஆனாலும், தமிழ்நாட்டிற்குள் மட்டுமே செயல்படுகின்ற கட்சிக ளானாலும், அவற்றுக்குள் ஈழத் தமிழரா, விடுதலைப் புலிகளா என்பதிலோ அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வா, தனி ஈழமா, என்பதிலோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் போர்க் கொடுமைகளிலிருந்து ஈழத் தமிழரைக் காப்பாற்ற வேண்டு மென்பதில் எந்த வேறுபாடும் இல்லை. விடுதலைப் புலிகளை எதிர்க்கும், ஆதரிக்கும் கட்சிகள் அனைத்தும் ஈழத் தமிழர் துயர் துடைப்பதில் ஓரணியில் நிற் கின்றன. அவற்றிற்குப் பின்னால் தமிழர்களும் ஒன்றுபட்டு நிற் கிறார்கள். ஆனால் தமிழ் நாட் டின் எல்லைகளைத் தாண்டி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய்க் குரல் கொடுப்பவர் யார்? கட்சிகள் யாவை? ஊடகங்கள் யாவை? தமிழ் மக்களின் துயரைப் பகிர்ந்துகொண்ட தமிழர் அல்லாத பிற இனத்தவர் / மாநிலத்தவர் யார்?

தமிழ் மக்களைப் பொறுத்த வரை எங்கு துயரங்கள் சூழ்ந்தாலும் அங்கெல்லாம் ஓடோடிச் சென்று உதவும் மனம் படைத்த வர்கள். குசராத் நிலநடுக்கம், ஒரிசா புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் என்றாலும், வங்காளப் போர், கார்கில் போர் போன்ற போர்த் துயரங்கள் என்றாலும், தமிழர்கள் கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழன் தன் சொந்தங்களுக்காய் அழுது அரட்டி, கண்ணீர் விட்டுக் கதறியபொழுது தமிழ்நாட்டிற்கு அப்பாலிருந்து கண்ணீர் துடைக்க எந்தக் கைகளும் நீண்டு வர வில்லையே! ஈழத் தமிழர் களாவது அவர்கள் கணக்கில் எந்தத் தொடர்புமற்ற வேற்று நாட்டு அந்நியர்களாய் இருக்க லாம். ஆனால் அவர்கள் கணக்கில் சொந்த இந்தியர்களாய்க் கருதப்படும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற் படையால் சுட்டு வீழ்த்தப்படுகிறார்களே! இக்கொடுமையைக் கண்டித்து வடக்கிருந்தும் வேறெங்கிருந்தும் எந்தக் குரலும் எழவில்லையே!

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை மீண்டும் கிளர்ந்திடச் செய்ததில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு. ஈழத் தமிழர்கள் அக்கட்சிக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்கள். ஆனால் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளைதான் பெரு மளவில் குரல் கொடுக்கிறது. பெருமளவில் போராடுகிறது.

இதற்கு ஈடாக அதன் அனைத்திந்தியத் தலைமையிட மிருந்து எந்தப் பெரிய வெளிப்பாடும் இல்லையே! பாண்டிய னும் நல்லக்கண்ணுவும் தாமே பேசுகிறார்கள். நாடாளுமன்றத் திற்குள்ளும் வெளியேயும் இராசாதாமே போர் முழக்கம் செய்கிறார்! பாலசுத்தீனத்தின் மீதான இசுரேல் தாக்குதலைக் கண்டிக் காத இந்தியக் கட்சிகள் எதுவும் இல்லை எனலாம். ஏதுமறியா அப்பாவிப் பாலசுதீனியர்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்டு) கடுமையாகக் கண்டித்துள்ளது. “இசுரேலின் கொடூர அட்டூழியத்தை எதிர்த்தும் இசுரேல் உடனான இராணுவ / பாதுகாப்பு உறவு களை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் கட்சியின் அனைத்துக் கிளை களும் கண்டனம் முழங்க வேண் டும்'' என கட்சியின் தலைமைக் குழு (பொலிட் பீரோ) கேட்டுக் கொண்டுள்ளது. கண்டித்து முழங்க வேண்டியதுதான். நாமும் அவர்களோடு சேர்ந்து முழங்குகிறோம்.

ஆனால் வங்காளத்துக்கு நேர் தெற்கே இந்தியாவை ஒட்டிய தீவொன்றில் ஒவ்வொரு நாளும் மனித உயிர்கள் செத்து வீழ்கின்றனவே; அந்தப் பாவப்பட்ட மனிதப் பிறவிகளுக்காக, பாலசுத்தீன மக்களுக்காக வீறிட்டுக் கிளம்புகின்ற அதே உணர்வலையில் ஆதரவுக் குரல் காரத்தின் தொண்டையிலிருந்தோ அவரது "காம்ரேடு'களின் தொண்டைகளிலிருந்தோ கிளம்பியது உண்டா? சிங்களவன் வீசிய வான் குண்டில் செஞ்சோலைச் சிறார்கள் கால் வேறு கை வேறாய்ச் சிதறித் செத்தார்களே, அந்தக் கோரப்படு கொலையைக் கூட காரத் தும் காம் ரேட்களும் திட்டவட்டமாகக் கண்டிக்க வில்லையே! இலங்கையில் கடந்த கால் நூற்றாண்டாக நடைபெற்று வரும் இனப்படுகொலையைக் கண்டித்தும் சிங்களப் பேரின வாதத்தைக் கடிந்தும் மார்க்சிசுட் தலைமைக்குழு எப்பொழுதாவது தீர்மானம் நிறைவேற்றியது உண்டா?

அடிமைப்பட்டு அல்லலுறும் மக்கள் உலக உருண்டையில் எக்கோடியில் இருந்தாலும் அவர்களுக்காய் ஓங்கிக் குரல் கொடுத்துப் போராட வேண்டிய பொதுவுடைமைக் கட்சிகளின் நிலையே இப்படியென்றால் பிற கட்சிகளின் நிலையைக் கூற வேண்டியதில்லை. அத்வானி யின் பாசக தொடங்கி அம்மா மாயாவதியின் பகுசன் சமாசுக் கட்சி ஈறாக எந்தக் கட்சியும் தமிழ் மக்களுக்காகச் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை என்பதே உண்மை. மும்பைத் தாக்குதலில் மாண்டுபோனவர் களுக்காய் வீறுகொண்டு எழுந்து பாகிசுத்தானை வீழ்த்தி "சம்ஹாரம்' செய்ய வேண்டும் என முழங்குகின்ற இக்கட்சிகள் சிங்களவன் குண்டில் வங்கக் கடலில் மூழ்கி மாண்டுபோன தமிழ் மீனவர்களுக்காய் ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட சிந்தியதில்லையே! சிங்கள இனவெறி அரசைச் சிறிதேனும் கண்டித்ததில்லையே!

ஆளும் காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தமட்டில் அது என்றைக்குமே தமிழர்களுக்கு ஆதரவாய் நின்றதில்லை. இதில் இராசீவ்காந்தி கொலைக்கு முன், பின் என்றெல்லாம் இல்லை. இராசீவுக்காக அவர்கள் வடிக்கும் கண்ணீர் வெற்று நீலிக்கண்ணீரே! தில்லியை ஆண்ட காங்கிரசுக் கட்சி நேரு காலம் தொடங்கி இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுதெல்லாம் வெறும் கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொண்டுள்ளது. வேண்டுமானால் கண்டனத் தோடு வருத்தத்தையும் சேர்த்துக்கொள்வார்கள். தமிழர் சிக்கலுக்குத் தீர்வுகாணப் பன்னாட்டளவில் உருப்படியான எந்த ஓர் அரசியல் நடவடிக்கையும் எடுத்ததில்லை. கொரியாப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும் சூயசுக் கால்வாய்ச் சிக்கலுக்குத் தீர்வுகண்டதிலும் நேருவின் வெளிநாட்டு உறவுக் கொள்கைக்குப் பெரும்பங்கு உண்டு என்று பெருமை பேசுவர். ஆனால் பெருமைக்குரிய இந்த இந்திய வெளியுறவுக் கொள்கை சிங்களவர் - ஈழத் தமிழர் சிக்கலை இது வரையும் தீர்க்கவில்லையே!

முன்பே சுட்டியதைப் போல, ஈழத் தமிழர்கள் இந்தியரோடு தொடர்பில்லாத அந்நிய நாட்டவராய் இருக்கலாம். ஆனால் வெள்ளையர் காலத்தில் இங்கிருந்து கொண்டு செல்லப் பட்டுத் தம் இரத்தத்தைச் சிந்தி கண்டி மலைக்காடுகளைப் பொன்கொழிக்கும் தேயிலைத் தோட்டங்களாய் உருமாற்றினார் களே, அந்த இந்தியத் தமிழர்களைப் பற்றியாவது பேராயக் கட்சி கண்டுகொண்டதுண்டா? வெள்ளையர் காலத்தில் கொண்டு செல்லப்பட்ட வழியில் நோய்த் தாக்குண்டும் மலைக் காடுகளில் அட்டைக்கடிபட்டும் செத்துப் போன தமிழர்கள் ஆயிரக்கணக்கில்! வெள்ளையன் சென்ற பின் இலங்கையில் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசு அந்த நாட்டின் பொருளாதார வளத்திற்கு அடித்தளமிட்ட இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கியது. இந்திய அரசு அந்தக் கொடுமையைக் கண்டு கொண்டதா? கட்சிகள் கண்டு கொண்டனவா? அன்றும் தமிழ் நாட்டுக் கட்சிகளும் தமிழர்களுமே குரல் கொடுத்தார்கள்.

ஆடு, மாடுகளைப் போல் அங்கிருந்து மூன்றிலக்கத்திற்கும் மேற்பட்டவர்களை இறக்குமதி செய்துகொள்ள மட்டுமே இலங்கையுடன் ஒப்பந்தம் போட்டது இந்திய அரசு. (சாசுத்திரி - பண்டார நாயக்கா ஒப்பந்தம்) நம்மில் சிலர், இந்திரா காந்தி ஆண்டபொழுது அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த தாக நம்புகிறார்கள். அப்போதைய வெளி யுறவுச் செயலாளர்களான பார்த்தசாரதி, வெங்கடேசுவரன் ஆகியோர் ஓரளவுக்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது என்னவோ உண்மை தான். ஈழப் போராளிகளுக்குப் போர்ப் பயிற்சி கொடுத்ததும் உண்மை தான். புலிப்படையினர் கொளத்தூர் மலைக் காட்டு முகாம்களில் பயிற்சி எடுத்துக் கொண்டதும் உண்மை தான். ஆனால் இவற்றிற்குப் பின்னால் இந்திய வல்லாதிக்கச் சூழ்ச்சி இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. தெற்காசியாவின் கேள்வி கேட்கவொண்ணாத வல்லரசாக இந்தியா திகழ வேண்டும் என்பதே அன்றும் இன்றும் இந்தியப் பேரரசின் விருப்ப மாகும். தங்கள் விரிவாக்கத் திட்டத்திற்கு ஈழப் போராளிகளை சதுரங்கக் காய்களாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க இயக்கங்களுக்கிடையே பகையும் பிளவும் மூட்டினார்கள்.

இந்தியாவிற்குத் தலையாட்டும் போராளிக் குழுக்களை உருவாக்கினார்கள். இந்தியச் சூழ்ச்சிக்கு இரையாகாத, பணிய மறுத்த விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதே அன்றிலிருந்து இன்று வரை இந்திய அரசின் திட்டமாய் இருக்கிறது. தில்லியை எந்தக் கட்சி ஆண்டாலும் மாற்ற வொண்ணா வெளியுறவுக் கொள்கை இதுவே. இராசீவ் கொலை இத்திட்டத்திற்கான ஒரு துருப்புச்சீட்டே! அரசியலாளர்கள், ஆளும் வர்க்கத்தினர் ஆகிய இவர்களின் நிலைதான் இப்படியென்றால் மாந்தநேயத்தோடும் நடுவுநிலை யோடும் செயல்பட வேண்டிய அறிவாளர்கள், இதழாளர்கள், ஊடகர்கள் முதலானோர் ஈழத் தமிழர் சிக்கலை எப்படி அணுகுகிறார்கள்? தமிழர்களும் இந்தியர்கள்தாம், அவர்க ளுடைய சிக்கல்களை, துயரங் களை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவற்றை வெளிப்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் செயல்படுகிறார்களா? தமிழர்களுக்கு ஆதரவாக வேண்டாம், ஊடகர்களுக்கான நடுவுநிலை அறத்தோடு இவர்களின் செயல்கள் அமைந்துள்ளனவா? இக்கேள்வி களுக்கு விடையைத் தேடினாலும் ஏமாற்றமே மிஞ்சும்.

மும்பைத் தாக்குதலை நேரடியாக நான்கைந்து நாள்கள் ஒளிபரப்பியதைப் பற்றி நாம் இங்கே கேள்வி கேட்கப் போவ தில்லை. ஆனால் இரசினிகாந் தின் சிவாசி படத்தைப் பற்றியும் குசேலர் படத்தைப் பற்றியும், நாள் கணக்கில் திரும்பத் திரும்பச் செய்திகளாக வெளியிட்ட சிஎன்என்அய்பிஎன், என்டிடிவி வகையறா தொலைக்காட்சிகள், குசுபு சிக்கலை (தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்த அவர் கருத்தும் அதற்கான எதிர்வினையும்) செய்திகளாக்கியதோடு மட்டும் நிற்காமல், தமிழ்நாட்டிற்கு ஓடோடி வந்து நேரலைக் கலந்துரையாடல்கள் ஒளிபரப்பிப் பெண்ணிய முழக்கமிட்ட தொலைக்காட்சிகள் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்கு ஆதரவாய் நடைபெற்ற போராட்டங்களை அறவே இருட்டடிப்புச் செய்தன. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உண்ணா நிலைப் போராட்டம் தொடங்கி, கொட்டும் மழையில் இடம் பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் முடிய எதையுமே அவை மதித்து ஒளிபரப்பவில்லை. ஏன், கண்டு கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை.

ஈழ ஆதரவுப் போராட்டங்கள் குறித்து அமைதி காத்துப் பேசா நோன்பு கடைப்பிடித்த இதே தொலைக்காட்சிகள் கிளிநொச்சிக்குள் சிங்களப் படை நுழைந்த அடுத்த நொடியே மகிழ்ச்சிப் பெருக்குடன் போட்டி போட்டுக்கொண்டு கிளிநொச்சி வெற்றிச் செய்தியை ஒளிபரப்பின. "புலித் தலைவர்களின் கதி என்ன?', "பிரபாகரன் காட்டிற்குள் தப்பி ஓட்டம்', "பிரபாகரனைத் தேடும் வேட்டையில் இலங்கைப்படை', "பிரபாகரன் உயிருடன் பிடிபடுவாரா?' இப்படி இன்னும் இன்னும் பல்வகைத் தலைப்புச் செய்திகள்.

உண்ணாநிலைப் போராட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம் ஆகியவற்றின் போது எந்தச் செய்தியாளருடனும் தொடர்புகொண்டு ஒளிபரப்பாத இத்தொலைக் காட்சிகள் சிங்களப் படையின் "வெற்றியை' சென்னை செய்தியாளர், மும்பைச் செய்தியாளர், தில்லிச் செய்தியாளர் எனப் பல்வேறு செய்தியாளர்களுடன் நேரலைத் தொடர்புகொண்டு ஒளிபரப்பின. "சிங்கள ரத்தினா' இந்து ராம், முன்னாள் "ரா' இயக்குநர் இராமன், முன்னாள் இந்திய அமைதிப் படைத் தளபதி அரிகரன் எனப் பல பார்ப்பன அறிவாளிகளோடும் போரியல் வல்லுநர்களோடும் தொடர்பு கொண்டு அவர்களது மேலான அறிவார்ந்த (?) கருத்துகளை ஒளிபரப்பி "புலித் தோல்வியை' உறுதிப்படுத்தின. சுருங்கச் சொல்லின் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களும் ஊடகங்களும் கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்ததைக் காட்டிலும் அதிகமாக இந்திய ஊடகங்கள் பேருவகையோடு கொண்டாடிக் களியாட்ட மிட்டன.

ஈழச் சிக்கலைப் பரிவோடு அணுகுகின்ற அறிவாளர்களை தமிழகத்திற்கு அப்பால் காண்பது அரிதிலும் அரிது. விரல் விட்டு எண்ணி விடலாம். இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களின் துயர்கண்டு இரங்கி அவர்களும் சமவுரிமை யோடு வாழ வேண்டும் என்ற அக்கறையோடு இயங்கும் அறிவாளர்கள் மிகவும் குறைவு. எளிய சிங்களப் பொதுமகன் தொடங்கி எல்லாம் கற்றுணர்ந்த சிங்கள அறிவாளி வரை ஈழத் தமிழரைப் பகை கொண்டே நோக்குவர். இங்கே இந்தியத் திருநாட்டிலும் அறிவாளி வர்க்கம், ஈழச் சிக்கலானாலும் காசுமீரச் சிக்க லானாலும் "இந்திய' நலன் கொண்டே நோக்குகிறது. அதில் "இந்து' நலனும் அடங்கியிருக்கும். இந்த "இந்து' நலன் என்பது இறுதி யாகப் பார்த்தால் பார்ப்பன - பனியா நலனே தவிர வேறல்ல.

இந்நலன்களுக்கு எதிரான எல்லாவற்றையும் இவர்களும் பகைக் கண் கொண்டே நோக்குவார்கள். அவர்கள் பார்வையில் ஈழத் தமிழர் ஆதரவும், ஈழ விடுதலை ஆதரவும் இந்திய இந்து நலன்களுக்கு எதிரானவை. சிங்கள அறிவாளி கள் சிங்களப் பவுத்தமயமானவர்கள். இந்திய அறிவாளிகள் இந்திய இந்துமயமானவர்கள். ஈழத் துயரம், வள்ளுவர் சொன்னாரே, "கேட்டினும் உண்டு ஓர் உறுதி' என்று, அது போல சில பல நன்மைகளையும் செய்திருக்கிறது; பல உண்மைகளை விளங்க வைத்திருக்கிறது; வெளிச்சமாக்கியிருக்கிறது. நாம் என்னதான் இந்தியர் இந்தியர் எனப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், "மற்றவர்கள்' நம்மை இந்தியராய் ஏற்றுக்கொள்வதே இல்லை. ஏற்றுக் கொண்டிருந்தால், தமிழக மீனவன் குண்டடிபட்டுக் கடலுக்குள் செத்து மூழ்க மாட்டான்; காப்பாற்றப்பட்டிருப்பான்.

ஈழ ஆதரவுப் போராட்டங்கள் தமிழ் நாட்டெல்லைக்குள் மட்டும் சுருங்கிப் போகாமல் இந்தியா முழுவதும் பரவிப் படர்ந்திருக்கும். இந்திய அரசும் சிங்களவனுக்குப் போர்க் கருவிகளைக் கொடுத்து உதவி இருக்காது. போர்த் திட்டங்களை வகுத்துத் தந்திருக்காது. என்றோ இலங்கை அரசோடு உறவுகள் துண்டித்துப் போயிருக்கும். தனி ஈழமும் மலர்ந்திருக்கும். ஆனால் நாம் இந்தியர்கள் அல்லவே! தமிழர்களாயிற்றே! இந்தி யருக்குப் பங்காளி சிங்களர் தாமே! அன்றும் இன்றும் அது தமிழ்நாட்டுத் தமிழராயினும், ஈழத்துத் தமிழராயினும் இந்தியனுக்கும் பார்ப்பன பனியாவுக்கும் பகையாளியே! அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நமக்குப் புரிந்தால் சரி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com