Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஜனவரி 2009
தமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா
முனைவர் த. செயராமன்

மறந்து போன அண்ணா என்ற படிமம்

1909 செப்டம்பர் 15ஆம் நாள் அண்ணா பிறந்தார். இப்போது நூறு ஆண்டுகள் ஆகின்றன. 2008 செப்டம்பர் 15 முதல் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா என்ற சடங்கு நடைபெற்று வருகிறது. அறிஞர் அண்ணாவின் சாதனைகளையும் சறுக்கல்களையும் ஏற்றியும் விமர்சித்தும் இலக்கிய இதழ்களும் அரசியல் இதழ்களும் சித்திரங்கள் தீட்டிக் கொண்டிருக்கின்றன. அண்ணா யார்? என்ற கேள்விக்கு தமிழக இளைஞர்களிடம் பதில் இல்லை. பலருக்கு அது திகைப்பை உண்டாக்கி விடுகிறது.

அ.இ.அ.தி.மு.க. கொடியில் உள்ள வெள்ளைக் கோடுகளுக்கு அண்ணா என்று பெயர் என்பது பல இளைஞர்களின் புரிதல். முச்சந்திகளிலும், நாற்சந்திகளிலும் ஒரு விரலை உயர்த்திக் காட்டியபடி நின்று கொண்டிருக்கும் கருநிறச் சிலைக்கு அண்ணா என்று பெயர் என்பது பலரின் அறிதல். திராவிடத் தேர்தல் கட்சிகளில் பங்கேற்கும் இளைஞர்களில் சிலர் அண்ணா... தி.மு.க.வை உருவாக்கினார்; முதலமைச்சராக இருந்தார்; என்று கூறும் அளவுக்குப் பொது அறிவு படைத்தவர்களாக இருக்கிறார்கள். அண்ணா இப்போது உண்மையிலேயே இறந்து போனார். அண்ணாவையே அறிமுகம் செய்யாமல் தொண்டர்களைத் திரட்டி, நாற்காலி அரசியலில் வெற்றிக் கொடி கட்டும் திராவிடத் தேர்தல் கட்சிகளின் திறன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அண்ணா - பன்முகப்பட்ட சிறப்புகளையும் கடுமையான விமர் சனத்துக்குட்பட்ட செயல்பாடுகளையும் கொண்டவர்தாம். ஆனால், பன்முகத் தன்மை கொண்ட அண்ணாவின் பங்களிப்பு பேசப்பட வேண்டிய ஒன்று. அண்ணாவின் சிறந்த கூறுகளையெல் லாம் மறுத்துவிட்ட திராவிடத் தேர்தல் கட்சிகள் அண்ணாவின் நூற்றாண்டைக் கொண்டாடுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் படைத்தவர் என்ற முறையிலும், ஏனைய திராவிடத் தேர்தல் கட்சிகள் அதிலிருந்து உடைந்தும் பிரிந்தும் உருவானவை என்ற வகையிலும், அறிஞர் அண்ணாவே அக்கட்சி களின் மூதாதை. இன் றைய ஆதாய அரசியலில் அள்ளிச் சுருட்டிக் கொண்டிருக்கும் தமிழக அரசியல் தலைவர்கள், தங்களுக்கு இப்படி ஒரு வளமான வாழ்வை அளித்துச் சென்றமைக் காக, அண்ணாவை நன்றி யோடு நினைவுகூர் கிறார்கள். ‘ஆண்டு அனுபவித்துக் கொள்ளுங்கள்’ என்று பெரிய சொத்தைப் பாடுபட்டுச் சேர்த்து வைத்துவிட்டுச் செத்துப்போன அப்பனுக்கு நூறாவது ஆண்டு ‘திதி’ கொடுக்கும் உல்லாச வாழ்வு வாழும் மகனுடைய உணர்வுகளிலிருந்து இவர்களுடைய உணர்வுகள் வேறுபட்டவை அல்ல.

அண்ணாவுக்கு வரலாறு உண்டு; அவர் வரலாற்றுப் பங்களித்தவர். பெரியார் என்ற தொடர்வண்டியில் அண்ணாவே முதன்மைப் பெட்டி. பெரியார் சென்ற திசையெல்லாம் அதுவும் சென்றது, 1949 வரை. 1935இல் நீதிக்கட்சியில் சேர்ந்து, 1936இல் நீதிக்கட்சியின் சார்பில் சென்னை நகர மன்றத் தேர்தலில் வேட்பாளராக நின்று, தோற்றுத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியிருந்தாலும், அவருடைய அரசியல் அடையாளம் பெரியாருடன் ஐக்கியமானதிலிருந்து தொடங்குகிறது. 1937இல் சென்னை மாகாணத்தின் பிரதமராக இராஜகோபாலாச்சாரியார் பொறுப்பேற்ற பத்தாவது நாளிலேயே, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயன்ற போது, தமிழ்த் தேசியம் தன் எதிர்ப்பு முழக்கத்தை வெளிப்படுத்தித் தன் இருப்பை (1938) அறிவித்துக் கொண்டது. தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கிய போது அண்ணா அவருடன் இருந்தார். முதல் மொழிப் போரில் (1938) பரப்புரை செய்தமைக்காக நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, இந்தி எதிர்ப்புப் போராளியாகத் தம் இனவுரிமை அரசியலைத் தொடங்கினார் அண்ணா.

பெரியாரின் இனவுரிமை அரசியலின் ஒவ்வொரு படிநிலையிலும் அண்ணா உடனிருந்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் சென்னை மாகாணச் சூழலுக்கு ஏற்பத் திராவிட நாடு என்று மாற்றம் பெற்றது. 1940இல் திருவாரூர் நீதிக் கட்சி மாநாட்டில் திராவிட நாடு தீர்மானத்தை ‘சண்டே அப்சர்வர்’ பி. பாலசுப்பிரமணியம் முன்மொழிய, அதை வழிமொழிந்தவர் அண்ணா. தென்னிந்திய நலவுரிமை என்ற நீதிக் கட்சியை ‘திராவிடர் கழகம்’ (1944) என இன அடிப்படை இயக்கமாக மாற்றியது அண்ணா தீர்மானம். அறிஞர் அண்ணா திராவிட நாடு கருத்தாக்கத்தையும், திராவிட நாடு ஏன் பிரிய வேண்டும் என்பதற்கான காரணங்களையும் மக்களிடம் கொண்டு சென்றவர்; பெரியார் - மணியம்மை திருமணத்தைக் காரணம் காட்டி (1949) திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் புதிய அமைப்பை உருவாக்கியவர். கட்சி உருவாகி பதினெட்டு ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியவர்; இன்றைய திராவிடத் தேர்தல் அரசியலை வடிவமைத்தவர்; தமிழ் இலக்கிய உலகிலும் அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்; சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், கவிதை என்று பல்வேறு இலக்கிய வடிவங் களைப் படைத்தவர்; கைதேர்ந்த அரசியல்வாதி, கவர்ந்து இழுக்கும் சொற்பொழிவாளர், எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், நூலாசிரியர், மாந்த நேயர், ‘வாழ்க வசவாளர்’ என்று வைதாரை யும் வாழ்த்தும் பண்பாளர் எனப் பன்முகப் படிவங் கொண்டவர்.

அண்ணாவை நினைவுகொள்ள ஒவ்வொரு வருக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அண்ணா அறிஞர் என்பதிலும், தமிழக அரசியலில் சாதனை நிகழ்த்தியவர் என்பதிலும் எவருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அண்ணா நடத்திய அரசியலின் உள்ளீடு என்ன? அது தமிழின ஏற்றத்துக்குப் பங்களித்ததா? அல்லது பாதிப்பு களை ஏற்படுத்தியதா? என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு (1789), ஐரோப்பா முழுவதுமே தேசியஇன அடிப்படையில் தேசங்கள் நிறுவப்பட்டதைப் போன்று, இந்தியத் துணைக் கண்டத்திலும் தவிர்க்கவியலாதவாறு தேசிய இனங்கள் தங்கள் விடுதலையை நோக்கி நகர்ந்து வரும் இக்காலக் கட்டத்தில், தமிழ்த் தேசியக் கருத்தாக்கத்திற்குப் பங்களித்த சிந்தனையாளர்களையும் போராட்டக் களத்தில் பங்களித்த போராளிகளையும் அடையாளங் காண வேண்டிய தேவை இருக்கிறது. இன்று எழுச்சி பெற்று வரும் தமிழ்த் தேசிய உணர்வு திடீரென்று மாயமாய் உருவாகிவிட்ட ஒன்றல்ல. கடந்த காலத்துக்குள் பொதிந்திருக்கும் கருத்தாக்க வேர்கள், களப்பணிகளால் விளைந்த வளர்ச்சியின் பரிணாமப் படிநிலைகள் என்று தமிழ்த் தேசியத்துக்கும் பரிமாணங்கள் உண்டு. இந்தப் படிநிலைகளில் அண்ணா எங்காவது பொருந்துகிறாரா, அவ்வாறு பொருந்தினால் அவரது பங்களிப்பின் தகுநிலை என்ன என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

அண்ணா - தமிழ்த் தேசியவாதியா?

அண்ணா ஒரு தமிழ்த் தேசியவாதி அல்லர். அவர் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசவில்லை. தமிழர்களை ஒரு தேசியஇனமாக அவர் கடைசி வரை அடையாளப்படுத்தவே இல்லை. தமிழக எல்லை தாண்டிக் கட்சியை வளர்த்தெடுக்காத அண்ணா திராவிடம் பேசினார். தமிழ் இன மேன்மை, தமிழர் வரலாறு, தமிழ் மொழி உணர்வு இவற்றைப் பயன்படுத்தி திராவிடத் தேசியக் கருத்தாக்கத்தை விதைக்க முற்பட்டார். அவர் திராவிட தேசியம் பேசினார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் அரசியலை அவர்கள் செயல்பட்ட களமும் காலமும் வடிவமைத்தன. அண்ணா நீதிக் கட்சியிலிருந்து பெரியாரை வந்தடைந்தவர். நீதிக் கட்சியைத் திராவிடர் கழகமாக (1944) மாற்றியதில் அண்ணா முக்கியப் பங்கு வகித்தார். நீதிக் கட்சி யானாலும் திராவிடர் கழகமானாலும் அண்ணாவின் அரசியல் தளம் பார்ப்பன, ஆரிய இன எதிர்ப்பு ஆகும். அவர் செயல்பட்ட அரசியல் களம் அன்றைய சென்னை மாகாணமாகும். தமிழர், ஆந்திரர், கன்னடர், மலையாளிகள் வாழும் சென்னை மாகாணத்திற்கேற்ப வடிவமைக்கப் பட்ட முழக்கமே திராவிட நாடு. பெரியாரும் அண்ணாவும் பிற திராவிட மொழிகளைத் திரிந்து போன தமிழாகவே கருதினர். மேலும், அன்று திராவிட மரபினத்தவரிடையே மொழியடிப்படை யிலான முரண்பாடுகள் கூர்மை அடையாதிருந்தன. மொழிஇனத் தாயகங்கள் மொழிவழி மாநிலங்களாக உருவாக்கப்படாத நிலை இருந்தது.

தொடக்கக் காலத்தில் அண்ணாவின் அரசியல் நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக இருந்தது. பார்ப்பனர் அல்லாதாரை திராவிடர் என்று அழைக் கும் நிலையும், அந்தச் சொல்லையும் தமிழர்கள் மட்டுமே ஏற்கும் நிலையும் இருந்து வந்தன. இந்தியாவில் மொழிவழித் தேசிய இன உணர்வு 1920களிலிருந்தே கூர்மையடைந்து வந்தது. இதன் விளைவாகத் தனித்தனி மொழி அடையாளங் களுடன் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து கொண்டிருந்த காலத்திலும், வரலாற்றை நன்கு படித்தவரான அண்ணா திராவிட நாடு கோரினார். திராவிடர்கள் என்பது தனித்துக் காண முடியாத மரபினம்; அது தேசிய இனங்களாக உருமாறி விட்டது. ஆனாலும் அண்ணா திராவிடம்தான் பேசினார். அண்ணா கோரிய திராவிடம் உண்மை யில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என்ற நான்கு தேசிய இனங்களின் தாயகம், அதாவது ஒட்டுமொத்த தென்னிந்தியா. ஆனால் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளில் தம் கட்சியை வளர்க்கவோ, கொள்கையைப் பரப்பவோ எவ்வித முயற்சியும் செய்யாமல் திராவிட நாடு கோரினார். அண்ணா கோரிய திராவிட நாடு குறித்து பிற திராவிட மொழியினர் அறியக்கூட மாட்டார்கள்.

அண்ணாவின் திராவிட அரசியல் தமிழ்த்தேசிய அரசியல் முகிழ்ப்பில் குளறுபடிகள் செய்தது என்பது வரலாறு. இயல்பாக வளர்ந்து கூர்மையடைந்து இனவுரிமை கோரிக் கிளர்ந்தெழ வேண்டிய தமிழ்த்தேசிய உணர்வுக்கு அண்ணா வின் திராவிட அரசியல் ஒரு தடுமாற்றத்தை, ஒரு தடையை உருவாக்கியது. அண்ணாவின் பேச்சாற்றலுக்கும், எழுத்தாற்றலுக்கும், ஒரு கருத்தை மக்கள் மயமாக்கும் மாயவித்தைத் திறனுக்கும், அண்ணா தமிழ்த் தேசியஇன அடை யாளத்தை அங்கீகரித்து, தேசியஇன அரசியலாக முன்னெடுத்திருந்தால் தமிழக அரசியலின் வடிவம் மட்டுமின்றி, இந்தியத் துணைக்கண்ட அரசியலின் வடிவமுமே மாற்றம் கண்டிருக்கக் கூடும்.

திராவிட நாடு கோரிக்கையின் பின்புலம்

‘திராவிட நாடு கோரினார். தமிழ்நாடு கோர மறுத்தார்’ என்று கூறும்போது, அண்ணாவின் கோரிக்கையையும் அவரது அரசியலையும் அந்த வரலாற்றுச் சூழலோடு புரிந்து கொள்ள வேண்டும். திராவிட நாடு கோரிக்கை அண்ணாவின் கோரிக்கை அன்று. அவருக்கு முன்பே அது எழுப்பப்பட்டு விட்டது. அண்ணா தொடர்ந்தார். அரசியல் அறிவியல் உணர்வோடு அதை மாற்றி யமைக்காமல் அப்படியே தொடர்ந்தார். ஏனெனில் சென்னை மாகாணம் என்ற திராவிட மொழிப் பிரிவினர் கூடி வாழும் செயற்கை நிர்வாகப் பகுதியை அப்படியே தனியாகப் பிரிக்கக் கோருவதற்கும், பின்னர் தேர்தல் அரசியலில் அனைத்து மொழியினத்தவரின் வாக்குகளையும் சென்னை மாநிலத்தில் பெறுவதற்கும், அதாவது தேர்தல் அரசியலின் வெற்றியை ஈட்டிக் கொள்வதற்கும், அண்ணாவுக்கு அது தேவைப்பட்டது.

இந்தியா ஒரு தேசமல்ல என்ற புரிதல் 1930இலயே தந்தை பெரியாருக்கு ஏற்பட்டு விட்டது. ஆரியத்தையும் பார்ப்பனியத்தையும் வெல்ல இந்தியா என்ற கருத்தாக்கம் மறுக்கப்பட வேண்டும் என்ற புரிதலோடு தனிநாடு கோரிக்கை எழுப்பியவர் பெரியார். அண்ணாவும் பெரியாரின் படையணியில் நின்று இக்கருத்தை மக்களிடம் கொண்டு சென்றார். ஆனால் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் முன்னமே தமிழர்கள் ஒரு மாகாணமாகப் பிரிக்கப்பட்டு முழுமையான தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு மலையாளி எழுப்பினார்.

சென்னை மாகாணத்தில் ஆட்சிப் பொறுப் பேற்ற நீதிக்கட்சியினர் 1920களில் மாகாணங் களுக்கு மேலும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிக் கொண் டிருந்தனர். மாநில சுயாட்சி என்பது அந்நிய ஆட்சிக்குள் இயன்றவரை நலன் பெறும் உத்தியாக நீதிக்கட்சியால் 1927இல் முன்வைக்கப்பட்டது. சென்னைப் பெருமாகாணம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மொழியின மக்களையும் அவர்களது தாயகப் பகுதிகளையும் கொண்டிருந்தது. சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களால் முன்னமே நிர்வாக வசதிக்கேற்ப தங்கள் வாளின் வலிமையால் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை சேராதவரான சி. சங்கரன் நாயர் தமிழர்களுக்கு ஒரு தனித்தேசம் உருவாக்கப் பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். சென்னையிலிருந்து வந்த நியமன உறுப்பினராகிய அவர் டெல்லியில் அரச மன்ற அவையில் 1926ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் ஒரு கருத்தை முன்வைத்தார்.

“... the Government of India advise his majesty’s Government to take such steps as may be required to constitute the ten districts inhabited by the ‘Tamil - speaking race’ into a province with complete self-government”

“The Tamil nation was as intellectual as any other in India.”

“முழுமையான தன்னாட்சியுடன் கூடிய ஒரு மாகாணமாகத் தமிழ் பேசும் இனம் வாழும் பத்து மாவட்டங்களையும் பிரித்து உருவாக்குமாறு மேன்மை தாங்கிய மன்னரின் அரசுக்கு (இங்கிலாந்து) இந்திய அரசு ஆலோசனை கூற வேண்டும்.”

“தமிழர்கள் என்ற தேசம், இந்தியாவில் வேறு எந்த இனத்தையும் போலவே அறிவுபூர்வமானது.”

தமிழர்கள் ஒரு தனித்தேசம் என்ற கருத்தை சி. சங்கரன் நாயர் முதன்முதல் அதிகாரமிக்க அவையில் பதிவு செய்தார். தமிழ் மாகாணத்துக் கான அவரது திட்டம் இன்னும் விரிவானது. அது இரு அவைகள் கொண்ட சட்ட மன்றத்தையும் தனக்கென கப்பற்படை, விமானப்படை, தரைப் படை ஆகியவற்றையும் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். சென்னைப் பெரு மாகாணத்திலிருந்து டெல்லி ‘கவுன்சில் ஆப் ஸ்டேட்’க்கு வந்த மற்றொரு உறுப்பினரான பொப்பிலி மன்னர் இத்திட்டம் பிஞ்சில் பழுத்தது போன்றது என்று விமர்சித்தார். வங்காளத்திலிருந்து வந்த கே.சி. ராய் என்ற மற்றொரு உறுப்பினரும் தமிழ் மாவட்டங்களைத் தனியே பிரித்தெடுப்பது நல்லதல்ல என்று எச்சரிக்கை செய்தார். ஆனாலும் சென்னை மாகாணம் முழுமையான தன்னாட்சி பெறத் தகுதி யுள்ளது என்று கருத்து தெரிவித்தார். இறுதியில், தமிழ்ப் பேசும் மக்களிடமிருந்து தெளிவாக அப்படி ஒரு கோரிக்கை வரவில்லை என்று கூறி சங்கரன் நாயரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தென்னிந்தியாவைப் பொறுத்த வரை, தமிழர் அல்லாத பிற மொழியினர் - தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் - தங்களுக்கான தனி மாகாணக் கோரிக்கைகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். தமிழ் பேசும் தனி மாநிலம் தேவை என்ற பார்வை தமிழர்களிடையே 1938இல்தான் தோன்றியது. 1937இல் இது தெளிவாக வலியுறுத்தப்பட்டது. சென்னை மாகாணத்தில் இராஜ கோபாலாச்சாரியார் பிரதமராக 1937இல் பொறுப் பேற்றவுடன் பள்ளிகளில் கட்டாய இந்தியைப் புகுத்தினர். அதன் முதற்கட்டமாக 125 பள்ளி களில் இந்தி கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப் பட்டது. இதனால் 1937 ஆகஸ்டு முதல் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களும் போராட்டங்களும் தொடங்கின.

கட்டாய இந்திக்கான அரசாணை 1938 ஏப்ரல் 21 அன்று வெளியானது. இதைத் தொடர்ந்து, சென்னை மாகாணத்தில் திராவிட உணர்வும் தமிழ்இன உணர்வும் மேலெழுந்தன. பார்ப்பன மேலாண்மையை எதிர்த்த பிறமொழியாளர்களும் தமிழகத் தலைவர்களைப் போலவே குரல் கொடுத் தாலும், இந்தி எதிர்ப்பு தமிழ் மாவட்டங்களிலேயே முழு வீச்சுப் பெற்றது.

‘திராவிட’ உணர்வு இந்தி எதிர்ப்பின் ஊடே வெளிப்பட்டது. அதுவே தமிழ்நாடு கோரிக்கை திராவிட நாடு கோரிக்கையாக மாற்றப்பட்ட போது பெரிய மன உறுத்தல் எதையும் விளைவிக் காமைக்கான காரணம் எனக் கருதலாம். 1938 ஆகஸ்டில் காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமையேற்ற கே.வி. ரெட்டி நாயுடு தமது திராவிட அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டார் :

“To us Dravidians, Hindi is as much a foreign language as English which cannot claim any antiquity or any great development; the earliest Hindi literature is dated 13th century whereas in Tamil Tolkapiam was written twenty centuries before”. (Madras Mail, 29th April 1938)

(“திராவிடர்களாகிய நமக்கு இந்தி என்பது ஆங்கிலம் எவ்வளவு அந்நிய மொழியோ அவ்வளவு அந்நிய மொழி ஆகும். இந்தி மொழி ஏதேனும் தொன்மைக்கோ அல்லது பெரும் வளர்ச்சி பெற்றுவிட்ட நிலைக்கோ உரிமை கோர முடியாது. பழமையான இந்தி இலக்கியம் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது; அதே நேரம் தமிழிலுள்ள தொல்காப்பியம் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது.”)

இப்படிப் பேசிய கே.வி. ரெட்டி நாயுடு என்கிற சர் குர்மா வெங்கட ரெட்டி நாயுடு 1937இல் இராஜாஜி சென்னை மாகாணப் பிரதமர் ஆவதற்கு முன் மூன்றரை மாத காலம் (1.4.1937 முதல் 14.7.1937 வரை) முதலமைச்சராக இருந்தவர். இவரது பேச்சிலிருந்து பிற மொழியாளர்களுள் முக்கியத் தலைவர்களாவது தங்களைத் திராவிடர்கள் என்று கருதிக் கொண்டதை உணர முடியும். ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் உரத்துக் குரலெழுப்பிய அயோத்திதாசப் பண்டிதர், 1891இல் ‘திராவிட ஜன சபையை’ நிறுவினார். ஒடுக்கப்பட்ட மக்களை, ‘பூர்வ தமிழர்கள்’ என்றும் பின்னர் ‘திராவிடர்’ என்றும் அடையாளப்படுத்தினார். அது போன்றே தமிழ்ச் சமூகத்தில் பிற சாதியினரும் தம்மை திராவிடர் என அடையாளப்படுத்தும் போக்கினை மேற்கொண்டனர். 1909இல் மெட்ராஸ் பார்ப்பனர் அல்லாத அமைப்பு தனது பெயரை ‘மெட்ராஸ் திராவிடர் அமைப்பு’ என்று மாற்றிக் கொண்டது. இவ்வாறு ‘திராவிடர்’ என்ற சொல்லுக்குப் பல்வேறு பிரிவினரிடம் ஓர் ஏற்பு இருந்தது.

முதலாவது மொழிப்போரின் போது, 101 பேர் கொண்ட போராட்டக் குழு திருச்சியிலிருந்து புறப்பட்டு 42 நாட்கள் கால்நடையாகப் பரப்புரை செய்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தது. அன்று (11.9.1938) சென்னைக் கடற்கரையில் 70,000 பேர் திரண்டிருந்த கூட்டத்தில் பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை எழுப்பினார். தமிழ்த்தேசியம் தன் இருப்பை அறிவித்துக் கொண்டது. "தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கம் 1939இல் "திராவிட நாடு திராவிடருக்கே' என்று மாற்றியமைக்கப்பட்டது.

நாடு பிரிய வேண்டும், இந்தியா ஒரு தேசமல்ல என்ற கருத்தை 1930இலிருந்தே முன்வைத்த பெரியாரின் தாக்கம் பலரையும் ஆட்கொண்டிருந் தது. அது 1937இல் வெளிப்பட்டது. 1937 அக்டோபரில் சென்னையில் சோமசுந்தர பாரதியார் தமிழ்த் தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். திருநெல்வேலி தமிழ்ப் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில், எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை தலைமை யில் அண்ணாவும், சோமசுந்தர பாரதியாரும் இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில் (12.10.1937) உரையாற்றினர். இந்தி எதிர்ப்புப் போரின் போது பரப்புரை மூலம் அண்ணா பெரும்பணி ஆற்றினார். தமிழ்த் தேசியம் தன் இருப்பை அறிவித்துக் கொண்ட காலக்கட்டத்தில்தான் அண்ணாவும் தம் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது ‘குற்றம் புரியும் படி தூண்டி விடுதல்’, ‘உடந்தையாக இருத்தல்’ ஆகிய குற்றங்களைச் செய்ததாகக் கூறி எழும்பூர் நீதிமன்றம் அண்ணாவுக்கு நான்குமாதச் சிறைத் தண்டனை வழங்கியது.

தமிழ்த் தேசியத்துக்கான பங்களிப்பை அண்ணா செய்தார். அத்துடன் திராவிட தேசியம் என்ற கோட்பாட்டை முன்வைத்துக் குளறுபடியும் செய்தார்.

(வரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com