Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
பிப்ரவரி 2009
தமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா
த. செயராமன்

தட்டியெழுப்பப்பட்ட தமிழின உணர்வு

Annadurai 1937ஆம் ஆண்டுத் தேர்தலில் நீதிக்கட்சி பெரும் சரிவைச் சந்தித்திருந்தது. 1938 நவம்பர் மாதம் பொப்பிலி ராஜா நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். டிசம்பர் மாதம் (1938) சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், முதலாவது இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்று தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் கிடந்த தந்தை பெரியாரின் படத்தை ஒரு நாற்காலியில் வைத்து, அவரை நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பெரியாரின் உரை ஏ.டி. பன்னீர் செல்வத்தால் படிக்கப்பட்டது. அவ்வுரையில் தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்று முழங்கியிருந்தார். 1938 அக்டோபரிலேயே ‘குடியரசு’ இதழில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று ஆரவாரம் செய்யுங்கள்! உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள் என்று பெரியார் எழுதியிருந்தார்.

1939 டிசம்பர் 10 அன்று தமிழ்நாடு தமிழருக்கே விளக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் முக்கிய உரையாளர் அண்ணா. தமிழ்நாடு விடுதலை உணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் வரலாற்றுப் பணியை அண்ணா செய்யத் தொடங்கினார். ‘தி.மு.க. வரலாறு’ எழுதிய டி.எம். பார்த்தசாரதி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இவ்விழாவின் முக்கியப் பேச்சாளரான அறிஞர் அண்ணா அவர்களின் உருக்கமான உரை தமிழ் மக்களைத் தட்டி எழுப்பிற்று. நாடு முழுமையும் காங்கிரசு மீது வெறுப்புக் கொண்டது மட்டுமல்ல, தமிழ்ப் பற்று எங்கும் பரவலாயிற்று. தமிழனுக்குத் தனியாக ஒரு மொழியுண்டு என்ற பெருமை எங்கும் எல்லாராலும் பேசப்பட்டது. ஐம்பெருங்காப்பியம் பற்றிய பேச்சு பொதுமேடைக்கு வந்து விட்டது. மக்களுக்குத் தமிழ் மீது ஆர்வம் அதிகமாயிற்று. தமிழன், தமிழ்நாடு, தமிழ்மொழி, அவனது பண்பு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைஆராயத் தொடங்கினர். அந்த ஆராய்ச்சி தமிழர் ஒன்றுபட ஏதுவாயிற்று. இத்தகைய எழுச்சிக்குக் காரணம் அறிஞர் அண்ணாவின் பேச்சும் இடைவிடாத உழைப்புமே யாகும்.” டி.எம். பார்த்த சாரதி , தி.மு.க. வரலாறு, பாரதி பதிப்பகம், சென்னை 1961, 1998 பக்.35)

அண்ணாவின் மொழி, இன உணர்வூட்டும் உரைகளும், எழுத்தும் தமிழர்களைக் களத்திற்கு இழுத்து வந்தன. தமிழ்த் தேசிய அரசியல் உணர்வு முகிழ்த்துப் போராட்டங்களாக விரிவடையத் தொடங்கியது. அண்ணாவின் பங்களிப்பிற்குத் துணை செய்யும் வகையில் கட்சிப் பொறுப்பும் வந்து சேர்ந்தது. 1940இல் நீதிக்கட்சியின் 15வது மாநாடு திருவாரூரில் (24.8,1940) நடைபெற்றது. அம்மாநாடு நடைபெறும் காலத்தில், அதுவரை நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதத்திற்கும் தந்தை பெரியாரிக்குமிடையே முரண்பாடுகள் எழுந்தன. கி.ஆ.பெ விசுவநாதம், தனது 14 குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு அறிக்கையாக வெளியிட்டு விட்டு, பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். புதிய பொதுச் செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது நீதிக்கட்சியின் தலைவர் தந்தை பெரியார்; பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா. தமிழ்த் தேசிய அரசியல் மெல்ல களமாடத் தொடங்கியது.

தமிழ்த்தேசிய முதற் கட்ட வளர்ச்சியில் அண்ணா

1940 முதல் 1945 வரையிலான காலக் கட்டம் தமிழ்த் தேசிய வரலாற்றில் மிக முக்கியமான தாகும். இக்காலக் கட்டத்தில்தான் தமிழ்த் தேசியம் ஒரு படிநிலை வளர்ச்சியை அடைந்தது. நீதிக்கட்சியின் தலைவராகப் பெரியாரும், பொதுச் செயலாளராக அண்ணாவும் வந்த பிறகு நீதிக்கட்சியின் உரு மாறியது; கட்சியின் திட்டம் மாறியது; இலக்கு மாறியது; மக்கள் இயக்கமாக மாற்றங் கண்டது.

விடுதலை பெறவேண்டிய ஓரினம் தன்னை உணர்வதும், தன் இலக்கை நிர்ணயிப்பதும், அதற்கான ஓர் அமைப்பைக் கட்டுவதும் - ஆகிய இவை அந்த இனம் விடுதலை பெறுவதற்கான முன் நிபந்தனைகள் ஆகும். தமிழரைத் தமிழராகவோ அல்லது ஆரியர் அல்லாத திராவிடராகவோ உணரச் செய்வதிலும், இனவிடுதலை என்ற இலக்கை நிர்ணயிப்பதிலும், அதை அடைவதற்கான அமைப்பாக திராவிடர் கழகத்தை உருவாக்கியதிலும் அண்ணா முக்கியப் பங்களித்தார்.

மாற்றத்துக்குள்ளான நீதிக்கட்சி:

1920 முதல் சென்னை மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த நீதிக்கட்சி, 1927இல் கோவையில் மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சிமுறை நீக்கப்பட வேண்டுமென்றும் முழுமையான மாகாணத் தன்னாட்சி உரிமை (பூரண மாகாண சுயாட்சி) வழங்கப்பட வேண்டும் என்றும் பிரிட்டனை வலியுறுத்தி தீர்மானம் இயற்றியது. இவ்வாறு சமூகத் தளத்தில் பார்ப்பன எதிர்ப்பு, சமூக நீதி மற்றும் அரசியல் தளத்தில் அதிகபட்சமாக ‘மாகாண சுயாட்சி’ என்று தன் இலக்கை நீதிக்கட்சி வரையறை செய்திருந்தது. ஆனால், அக்கட்சி 1940இல் தன் இலக்கை மாற்றிக் கொண்டது. 1944இல் தன் பெயரையும் மாற்றிக் கொண்டது. தேர்தல் அரசியலுக்கான அக்கட்சி தேர்தலை மறுத்து இன விடுதலை கோரும் இயக்கமாக மாறியது. மாற்றத்தைக் கொண்டுவந்த மாயாவியாகத் தந்தை பெரியாரும், மாயாவியின் கைமந்திரக் கோலாக அறிஞர் அண்ணாவும் செயல்பட்டார்கள்.

1940 - 1945க்கு இடையிலான இம் மாற்றம் மூன்று நிலைகளில் நிகழ்த்தப்பட்டது. 1940 நீதிக்கட்சியின் திருவாரூர் மாநாடு, 1944 சேலம் மாநாடு, 1945 திருச்சி மாநாடு ஆகியவற்றில் இப்படி நிலை மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. நீதிக் கட்சி பண்பு மாற்றம் பெற்று, திராவிடர் கழகம் ஆனது. 1940ஆம் ஆண்டு, திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 15வது மாநாட்டில்தான், அரசியல் தீர்மானமான திராவிட நாட்டுப் பிரிவினைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவாரூர் மாநாட்டின் 28வது தீர்மானம் இப்படிப் பேசியது:

“திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பாவதற்குத் திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேர்ப் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.”

இத்தீர்மானத்தை முன்மொழிந்தவர் ‘சண்டே அப்சர்வர்’ பி. பாலசுப்பிரமணியம், வழிமொழிந்தவர் அறிஞர் அண்ணா. இத்தீர்மானம் தேசிய இனக் கோரிக்கையின் மூன்று கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது. திராவிடர்களின் தாயக உரிமை; கலை, நாகரிகம், பொருளாதாரம் பாது காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு; தனிநாடாக இந்தியப் பெருநிலப் பேரரசுப் பரப்பிலிருந்து பிரிய வேண்டும் என்ற கோரிக்கை - ஆகியவையே அக்கூறுகள். தீர்மானம் நிறைவேறிய பிறகு அண்ணா ஆற்றிய நீண்ட உரை தமிழின விடுதலை இலக்கைப் பறைசாற்றியது.

இந்தி எதிர்ப்புக்குப் பின் தமிழர்கள் பெற்ற உணர்வு எழுச்சியையும் அதற்கு அண்ணாவின் பங்களிப்பையும் டி.எம். பார்த்தசாரதி இவ்வாறு பதிவு செய்கிறார்: “நாம் தமிழர், நமது மொழி தமிழ் என்ற இன உணர்ச்சியால் தமிழர் உந்தப்பட்டனர். அதன் பின்பே, நாடு விடுதலை பெற்றேயாக வேண்டு மென்று மக்கள் உறுதி கொண்டனர். நாட்டு விடுதலையே தனது இலட்சியம், இடையில் வீசப்படும் சில்லறையைக் கண்டு திருப்திபட முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கவும், திராவிட நாடு பிரிவினை நாள் கொண்டாடவும் தமிழர் முன்வந்தனர். ஜøலை முதல் நாள் ‘திராவிட நாடு பிரிவினை நாள்’ என்று கண்டனர்...

"மொழிக்கு மட்டும்தானா இவ்வாபத்து? கலைக்கு, நெறிக்கு, பண்புக்கு, இனத்துக்கு, நாட்டுக்கு, தன் வாழ்வுக்கும் ஆபத்து வந்திருப் பதை அறிந்தனர்; தெரிந்து கொண்டனர். தமிழ்நாடு தமிழனிடம் இல்லை என்பதை, பிற நாட்டான் எண்ணுவதெல்லாம் இங்குச் சட்டமாக்கப்படுவதைப் பார்த்தனர். இந்நிலை மாற வேண்டுமானால் மொழிப் போராட்டம் மட்டும் போதாது, தமிழ்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் தீய சக்திகள் யாவும் அழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். இனி அதுவே தமிழனது போர், இலட்சியம், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என முழக்கமிட வேண்டுமென நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டனர். இம்முழக்கம் மக்கள் மன்றத்தில் புதியதொரு சக்தியை உண்டாக்கியது. பாய்மரமற்ற படகாயிருந்த மக்களுக்கு, அறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரை ஒரு வழிகாட்டியாக அமைந்தது.''
(மேலது)

இன விடுதலை அரசியலுக்கான அமைப்பை உருவாக்கிய சேலம் மாநாடு 1944:

தமிழின விடுதலைக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதை வென்றெடுக்க ஓர் அமைப்பு இல்லை. நீதிக்கட்சி அதற்குதவாது. ஆகவே, அதற்கடுத்த நடவடிக்கையாக தேர்தல் கட்சியான நீதிக்கட்சி இன விடுதலை கோரும் விடுதலை இயக்கமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. தேசிய இன அரசியலுக்கான இந்த இரண்டாம் நிலை முன்னெடுப்பிலும் அண்ணா முக்கியப் பங்களித்தார்.

1944ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சியின் சேலம் மாநாடு இரண்டு தேவைகளை நிறைவு செய்தது. தமிழ் இன விடுதலையை முன்னிறுத்திய தந்தை பெரியாரின் கட்டுப்பாட்டுக்குள் நீதிக்கட்சியை முழுமையாகக் கொண்டுவந்தது. இரண்டாவதாக நீதிக்கட்சி பெயர் மாற்றம் பெற்று ‘திராவிடர் கழகம்’ ஆனது. தேர்தல் அரசியல், பதவிகள், உயர் வேலைவாய்ப்புகள், பார்ப்பன மேலாண்மை அரசியலையும் அதிகார நிலையையும் மறுத்தல், அதிகபட்சமாக ‘மாகாண சுயாட்சி கோருதல்’ என்ற வேலைத் திட்டத்தை மட்டுமே கொண்டிருந்தது நீதிக்கட்சி. சேலம் மாநாட்டில், பெரியாரின் தலைமையை நிராகரிக்க முயன்ற ‘மிட்டா மிராசுகள்’, ‘சீமான்கள், கோமான்கள்’ ஆகியோர் ஓரங்கட்டப்பட்டனர். ‘அண்ணாதுரை தீர்மானங்கள்’ நீதிக்கட்சியை ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கட்சியைப் பெரியாரிடம் ஒப்படைத்தது.

ஆங்கிலேயர் அளித்த பெருமைப் பட்டங்களைத் துறத்தல்; உள்ளாட்சி மற்றும் நிர்வாகப் பதவிகளைத் துறத்தல்; சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவிதமான தேர்தலுக்கும் கட்சி அங்கத்தினர்கள் நிற்கக் கூடாது. சாதிப் பெயரைக் குறிக்கும் பெயரொட்டுகளைத் துறத்தல்; ‘தென்னிந்திய நலஉரிமைச் சங்கம்’ (ஜஸ்டிஸ் கட்சி) என்ற பெயரைக் கைவிட்டு ‘திராவிடர் கழகம்’ என்னும் பெயரை ஏற்றல் - ஆகியவையே அண்ணாவின் தீர்மானங்கள். இத்தீர்மானங்களின் சாரம்; ஆங்கிலேய ஆதரவு நிலையைக் கைவிடுதல், பதவிப் பற்றாளர்களைக் கட்சியிலிருந்து விரட்டுதல், சாதிவெறியர்களை அப்புறப்படுத்தி விட்டுத் தமிழின ஓர்மையை உருவாக்குதல், தமிழ் இனவிடுதலை அரசியலை முன்னெடுக்க ஓர் அமைப்பை (திராவிடர் கழகம்) உருவாக்குதல் - ஆகியவையே ஆகும்.

இனவிடுதலை அரசியலை முன்னெடுத்த பெரியார் மற்றும் அவருக்குத் துணைநின்ற அண்ணாவின் பங்களிப்பைப் பலர் மதிப்பீடு செய்துள்ளனர். திராவிட இனத்தைச் சார்ந்த மக்கள் இன்று தலைநிமிர்ந்து நடப்பதற்குக் காரணம் பெரியார் என்று குறிப்பிடும் அ. மறைமலையான், “அவருடைய (பெரியாருடைய) சிந்தனைப் பட்டறையினின்றும் தெறித்து விழுந்த ‘இன உணர்ச்சி’ - என்னும் சிறு பொறி, புழுதி மண்ணில் புதைந்து போகாமல், மழை நீரால் அணைந்து விடாமல், சருகுகளையும் விறகுகளையும் கொண்டு வந்து சேர்த்து அதனால் பெருந் தீயாய்க் கொழுந்து விட்டு ஓங்கச் செய்த பெருமையில் அண்ணா அவர்களுக்கு நிரம்பப் பங்கு உண்டு.”

"திராவிடர் கழகத்தைப் பெற்றுத் தந்த அன்னை அண்ணாவே'' (அ. மறைமலையான், பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு, வானதி பதிப்பகம், சென்னை (1967) 2001, பக்.152 - 153.)

இன விடுதலை அரசியலின் நியாயப்பாடுகள்: திருச்சி மாநாடு 1945:

இன விடுதலை அரசியலின் படிநிலை மாற்றத்தின் அடுத்த நிலையை 1945 மே மாதம் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் திருச்சி மாநாடு வெளிப்படுத்தியது. இன விடுதலைக்கான இலக்கு 1940இல் நிர்ணயிக்கப்பட்டு, அதை அடைவதற்கான அமைப்பாக திராவிடர் கழகம் 1944இல் உருவாக்கப்பட்ட பின் 1945இல் திராவிட நாடு விடுதலைக் கோட்பாடும், அதற்கான நியாயப்பாடுகளும் வரையறுக்கப்பட்டன.

ஒரு தேசிய இனம் தனது விடுதலையைக் கோர வேண்டுமானால், முதலில் தன் இருப்பை உணர வேண்டும். தன் அடையாளத்தைப் பேண வேண்டும்; தன் மீதான ஒடுக்குமுறையை உணர வேண்டும்; தனது எதிரிகளை அடையாளம் காண வேண்டும்; அந்த இனம் விடுதலை இலக்கு நோக்கிச் செல்லும்படி உணர்வூட்டப்பட வேண்டும்; விடுதலையை வென்றெடுப்பதற்கான கட்டமைப்பு வேண்டும்; வழிமுறைகளும், உத்திகளும் வகுக்கப்பட வேண்டும்.

அண்ணா திராவிட விடுதலை பேசிய போது தமிழினம் தன்னை உணர்ந்தது. தன் மீதான ஒடுக்குமுறையைப் புரிந்து கொண்டது; தனது எதிரி களை அடையாளங் கண்டது. தமிழ்த் தேசியர்கள் இனங்காண வேண்டிய எதிரிகளையும் தகர்க்க வேண்டிய தாக்கு இலக்குகளையும், அண்ணா தமது திராவிட அரசியலில் அடையாளங் கண்டு கூறினார். அவை இன்றளவும் தமிழ்த் தேசியத்தின் மாறா பகை இலக்குகளாக இருக்கின்றன.

தனிநாட்டுக் கோரிக்கைக்கு அண்ணாவின் கருத்தியல் பங்களிப்பு - 1945

இந்தக் கோணத்தில், 1945ஆம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் மாநில மாநாட்டில் அளித்த பேருரை, இன்று களத்தில் நிற்கும் தமிழ்த் தேசியர்களுக்கான அடிப்படைப் பாடமாகும். தந்தை பெரியார் தலைமையேற்ற அரங்கில் அண்ணா திராவிட நாடு பிரிவினை பற்றிய நியாயப்பாட்டை விரித்துரைத்தார்:

“இந்தியா என்பது ஒரு கண்டம். எனவே, அது பல நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஐரோப்பா கண்டத்தில் 32 தனித்தனி நாடுகள் உள்ளன. ஐரோப்பா முழுமையும் ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டுமென யாரும் கூறவில்லை; இந்தியாவும் ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

மதம், மொழி, கலை, மனோநிலை, ஒரு குடி மக்கள் என்ற உணர்ச்சி, வரலாற்றுப் பந்தத்துவம் ஆகியவைதான் இன இயல்புகள். இந்த முறையில் பார்த்தால் இந்தியாவில் தனித்தனி இனங்கள் பல உண்டு. இவற்றை மூன்று பெரும் பிரிவுகளாகக் கொள்ளலாம் - திராவிடர், முஸ்லிம், ஆரியர் என்று. ஆரிய இன இயல்புகளுக்கும் மற்ற இரு இன இயல்புகளுக்கும் துளியும் பொருத்தம் கிடையாது. பகைமை பெரிதும் உண்டு. இந்தத் தனித்தனி இன இயல்புகள் இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட் டால்தான் அந்தந்த இனத்துக்கென இடமும் ஆட்சி யும் கிடைக்கும். இல்லையேல், எந்த இனம் தந்திரத்தாலும், சூது சூழ்ச்சியாலும் தன்னலத்துக்காகப் பிறரை நசுக்கும் சுபாவத்திலும் கைதேர்ந்து இருக்கிறதோ அந்த இனத்திற்கு மற்ற இனங்கள் அடிமைப்பட்டு வாழ வேண்டி நேரிடும்.

இந்தியா ஒரே நாடு என்று கூறி வருவதால் ஆரிய ஆதிக்கம் வளருகிறது. ஆரியக் கட்சியின் காரணமாக மற்ற இன நலன்கள் தவிடு பொடியாகின்றன.

இனவாரியாக நாடு பிரிக்கப்படுவது என்பது புதியதும் அல்ல; கேட்டறியாததும் அல்ல... முஸ்லிம் இந்தியா, ஆரிய இந்தியா, திராவிட இந்தியா என மூன்று தனித்தனி வட்டாரங்கள் தேவை எனக் கேட்பது தவறல்ல.

Periyar and Annadurai ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்ட துருக்கி, வல்லரசுகளில் தலை சிறந்ததாக ஆனது போல, இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு வட்டாரமும் தனிக் கீர்த்தியுடன் விளங்கும்.

அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர், சமுத்திர குப்தர், அக்பர் முதலிய மன்னாதி மன்னர்கள் காலத்திலும் இந்தியா ஒரே நாடாக இருந்ததில்லை. அப்போதும் திராவிட நாடு எனத் தகும் தனிநாடு இருந்தது.

அந்தந்த இனத்திற்கென தனித்தனி இடமும் ஆட்சியும் இருந்தால்தான் அந்தந்த இனமும் மற்றவற்றினிடம் சமவுரிமை, சம அந்தஸ்து பெற முடியும்

இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்று கூறித் தான் ஆரியர்கள், இமயம் முதல் குமரி வரையுள்ள இடத்தைத் தமது வேட்கைக் காடாக்கிக் கொண்டு, அரசியலில் அதிகாரிகளாய், கல்வியில் ஆசான் களாய், மதத்தில் குருமார்களாய், சமுதாயத்தில் பூதேவர்களாய், பொருளாதாரத்தில் பாடுபடாது உல்லாச வாழ்வு வாழக் கூடியவர்களாய் இருக்க வும், மற்ற இனத்தவர் தாசர்களாய், பாட்டாளி களாய் உழைத்து உருவின்றிச் சிதைபவர்களாய் வாடும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது... ஆரிய ஆதிக்கம் அடங்கவும், பொருளாதாரச் சுரண்டல் போகவும், அறிவை அடக்கும் அவதி நீங்கவும், இந்தியா இனவாரியாகப் பிரிய வேண்டும்.” (டி.எம். பார்த்தசாரதி, தி.மு.க. வரலாறு, பக். 41-42)

அண்ணாவின் குறைப்பார்வை :

அண்ணாவின் கருத்துரை தமிழ்த் தேசிய அரசியலுக்கான கருத்தியல் பங்களிப்பாகும். ஆனால் அண்ணாவின் தேசம் பற்றிய பார்வை, முஸ்லிம்களையும், ஆரியர்களையும், திராவிடர்களையும் இனங்களாகப் பார்ப்பது தேசிய இன வரையறைகளுக்கு ஏற்பில்லாத ஒன்று. மரபினங்களை நாட்டினமாகப் (தேசிய இனம்) பார்ப்பது, மற்றும் முஸ்லிம்களை ஓரினமாகப் பார்ப்பது அரசியல் அறிவியலுக்கு ஒவ்வாது. ஆனாலும், சென்னை மாகாணத்திற்குள் அவர் பேசிய திராவிட நாடு பிரிவினை தமிழ்த் தேசிய இனத்தை அணி திரட்டியது. டில்லி வல்லாதிக்கத்திலிருந்து விடுபட வேண்டிய தேவையை அறிவுறுத்தியது; தமிழர்களுக்கு உணர்வூட்டியது. தமிழ் மாவட்டங்களைத் தனிப் பிரித்து தமிழ்நாடு உருவாக்குவது பற்றிச் சிந்திக்காமல், அப்போது இருந்த சென்னை மாகாணத்தையே திராவிட நாடாகவும் அதில் வாழ்ந்த தென்னிந்திய திராவிட மொழிக் குடும்பத்தவர்களை ஒரே இனமாகவும் பார்த்த குறைபாடுடைய பார்வையை அண்ணா கொண்டிருந்தார். ஆனால், அதுவே அவரது போராட்டத்திற்கும் கோரிக்கைக்கும் வலு சேர்க்கும் எனக் கருதியிருந்தார்.

அண்ணா கோரிய திராவிட நாடும் திராவிடர் ஓர்மையும்:

சென்னை மாகாணம் முழுமைக்கும் விடுதலை கோருவது என்பது ஒரு குறிப்பிடத்தக்க அளவிற்கு பரந்து விரிந்த நிலப்பகுதிக்கு விடுதலை கோருவதால், அது ஒரு தனி நாட்டுக்குத் தகுதியுடையதாக இருக்கும் என்றும், ஒட்டுமொத்தத் திராவிடர்களையும் ஓரினமாகக் கருதுவது டெல்லிக்கு எதிரான தமது குரலை சென்னை மாகாணத்துக்குள் வலுப்படுத்தும் என்றும் அண்ணா கருதியிருக்கிறார்.

அண்ணா இவ்வாறு குறிப்பிட்டார்:

“சென்னை மாகாணத்தின் அளவையே நாம் இப்போது திராவிட நாடு என்று கொள்கிறோம். இந்த அளவு 1,42,000 சதுர மைல் ஆகிறது. இதனைக் கொண்டு மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ‘திராவிட நாடு’ என்று நாம் எல்லைக் கோடிடும் இடம் இங்கிலாந்தைப் போல ஏறக்குறைய இரு மடங்கு பரப்புள்ளது. 14 அல்பெனியாவுக்குச் சமம். 27 அல்ஸ்டர்களுக்குச் சமம். 4 ஆஸ்டிரியாக்களைக் கொண்ட பரப்பு, 10 பெல்ஜியம், 2 செக்கோஸ்லவேகியா, 3 கிரீஸ், 4 அயர்லாந்து, 10 ஹாலந்து, 4 போர்ச்சுகல், 14 பாலஸ்தீன் இவைகளுக்குச் சமம்.'' (அண்ணா, ‘விடுதலைப் போர்’ (9.12.1945), பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் ஐ, பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2001, பக்.424.)

திராவிட நாடு அளவில் சிறியது; தனித்து வாழ முடியாது என்று எவரும் கூறி விடக் கூடாது என்பதில் அண்ணா கவனமாக இருந்தார். திராவிட இனம் என்ற பெயரில் தமிழர், தெலுங்கர், கேரளர், கன்னடர் ஒன்றாக வாழ முடியும் என்பது அவர் பார்வை. “திராவிடர் இனம் மொழிவழி தமிழர், தெலுங்கர், கேரளர், கன்னடர் என்று வேறுபட்டவர் எனினும், இனமூலம், கலை, வாழ்க்கை முறை என்பவைகளிலே ஒன்றுபட்டவர்கள். இப் பிரிவினர்களுக்குள் உள்ள வேறுபாடுகள், முரண்பாடுகள் அல்ல” (மேலது, பக்.425) என்று 1945இல் அண்ணா எழுதினார்.

1920களிலிருந்தே மொழிவழி தேசிய உணர்வு கள் தென்னிந்தியாவில் கூர்மையடைந்து வருவதையும், பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒன்றில் மட்டுமே பார்ப்பனர் - அல்லாதார் ஒன்றுபட்டிருந்த நிலையையும் அண்ணா காணத் தவறினார். தென்னிந்தியாவில் பார்ப்பனர் - அல்லாதார்தான் திராவிடர்கள் என்று தம்மால் அடையாளப்படுத்தப்படுவதையும், அவர்களிடம் ஒற்றை திராவிடத் தேசிய உணர்வை ஒரு காலத்திலும் வளர்த்தெடுக்க முடியாதென்பதையும் அண்ணா கருத்தில் கொள்ளவில்லை. நான்கு திராவிட மொழியினங்கள் கூடியிருப்பது தம் பிரிவினைக் கோரிக்கைக்கு வலுவூட்டும் என்று கருதினார். (மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பின்னரும் திராவிடர் ‘திராவிட நாடு’ என்ற செல்லாடல்களை அண்ணா கைவிடாமல் இருந்தமைக்கு அரசியல் காரணங்களும் அதற்கான தேவையும் அவருக்கு இருந்தன.)

1940 முதல் 1963இல் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை அண்ணா கைவிடும் வரையிலும், அவர் தெரிவித்த கருத்துகள் தமிழ்த் தேசியர்களுக்கு எதிரிகளை அடையாளம் காட்ட வல்லவை. இந்தியா, இந்தியம், ஆரியர், வடவர், இந்திய அரசு எனப்படும் டெல்லி ஏகாதிபத்தியம், பார்ப்பன-பனியா வல்லாதிக்கம் ஆகியவற்றை அண்ணா தெளிவாகத் தோலுரித்தார். தமிழின உணர்வைத் தட்டி எழுப்பினார் அண்ணா. தமிழின உணர்வைத் தட்டியெழுப்புவதில் வெற்றி கண்ட அண்ணா, தமிழர்களின் விடுதலை அரசியல் தோல்வியடையவும் காரணமானார்!

- வரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com