Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
பிப்ரவரி 2009
சகோதரப் பகையை மூட்டி வளர்த்த இந்திய உளவுத்துறை
அர்கிரத் சிங்

1983 இல் ஈழப் போராளிகளை அடக்கி ஒடுக்குவதற்கு சிறிலங்கா குடியரசுத் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா சிறிலங்காப் படைக்குக் கூடுதலான சிறப்பு அதிகாரங்களை வழங்கினார். சிறிலங்கா படை யாழ்ப்பாணத்தில் கோரத் தாண்டவம் ஆடியது. சாவு எண்ணிக்கை கூடிக் கொண்டே போனதால் அப்போது இந்தியத் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி இலங்கைச் சிக்கலில் தலையிட முன்வந்தார்; சிறிலங்கா அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்தார். ஆனால் சிறிலங்கா அரசு இந்திய அரசின் கண்டனத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. இந்நிலையில் போராளிக் குழுக்களுக்கு அனைத்து வகை உதவிகளையும் அளிக்க இந்திரா காந்தி முடிவெடுத்தார். இலங்கைத் தமிழ் போராளிக் குழுக்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதின் மூலமாகவும், படைக் கருவிகள் வழங்குவதின் வழியாகவும் இலங்கை இனச் சிக்கலைக் கட்டுக்குள் வைத்திருக்க முனைந்தார். இவ்வாறு போராளிகளுக்குப் பயிற்சி அளிப்பதை தமிழ்நாடு மாநில அரசாங்கத்திடமிருந்து தன் கையில் எடுத்துக் கொண்டு இலங்கைச் சிக்கலுக்குள் இந்தியா நுழைந்தது.

போராளிகளுக்குப் பயிற்சி அளிப்பது, ஆயுதம் வழங்குவது ஆகிய பொறுப்பை இந்தியாவின் அயல் உறவுக்குப் பொறுப்பான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுப் பிரிவிடம் (Research and Analysis wing) இந்திரா காந்தி ஒப்பளித்தார். சுவாமி, இரவி மேனன் ஆகிய இரு மூத்த "ரா' அதிகாரிகள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டார்கள். அவர்கள் இருவரும் 1983 செப்டெம்பரில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த எஸ்.சி. சந்திரகாசனிடம் தொடர்பு கொண்டு தமிழ் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டங்கள் பற்றி விவாதித்தனர். பயிற்சிக்கான குழுக்களை அடையாளம் கண்டு பரிந்துரைக்கும் பொறுப்பு சந்திரகாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் ஒரு சிறு குழுவாக இருந்த தமிழீழ விடுதலை அமைப்பை அவர் தேர்ந்தெடுத்தார். "டெலோ' ஒழுங்கமைப்பைக் கொண்டதாகவோ, கருத்தியல் தலைமை கொண்டதாகவோ இருக்கவில்லை. எனவேதான் தன்னுடைய திட்டங்களுக்கேற்ப அதை வளைத்துக் கொள்ள முடியும் எனக் கருதி இக்குழுவை "ரா' ஏற்றுக் கொண்டது.

அப்பொழுது தமிழ்நாட்டிற்கு "ரா'வின் பொறுப்பு அதிகாரியாக இருந்தவர் உன்னிகிருஷ்ணன் என்பவர் ஆவார். அவர் சென்னையில் தங்கியிருந்தார். தமிழ்ப் போராளிகளின் செயல்பாடுகளை ஒன்றிணைக்கும் பொறுப்பையும் அவர் ஏற்றிருந்தார். அவர் இரு பக்க உளவாளி என்று பிறகுதான் தெரிய வந்தது. அவர் சிறீலங்கா புலனாய்வு அமைப்பிற்கு போராளிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியின் தன்மை, வழங்கப்படும் ஆயுதங்கள் மற்றும் கருவிகள், பயிற்சி பெறும் குழுக்களின் வலிமை, அவர்களின் போர்த்திட்டங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிவித்துக்கொண்டிருந்தார். பிற்காலத்தில் இவ்வதிகாரி அமெரிக்க சி.அய்.ஏ.வின் கையாள் எனக் கண்டறியப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்.

‘டெலோ' உறுப்பினர்களுக்கு தொடக்கத்தில் வேவு பார்ப்பதிலும் நாசவேலை புரிவதிலும் ‘ரா' பயிற்சி அளித்தது. ஆனால் ‘டெலோ' குழுவில் பலர் குற்றவாளிகளாகவும், சமூக விரோதிகளாகவும் இருந்தனர். அவர்களுக்கு அரசியல் குறிக்கோள்களோ கருத்தியலோ, ஈழ இலட்சியத்தில் பற்றுதலோ கிடையாது. இதற்கிடையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு ஆகியனவும் பயிற்சிக்காக ‘ரா'வை அணுகின. தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற கொள்கை அடிப்படையிலான பிற பெரிய அமைப்புகளும் தமிழ்நாட்டில் ஆங்காங்கிருந்த முகாம்களில் ஏற்கெனவே பயிற்சி பெற்று வந்தன. பயிற்சியின் தரம் மிகவும் உயர்வானதாக இருந்தது. இந்தியப் படையின் உதவியால் இக்குழுக்கள் வெடி பொருள்களைக் கையாள்வதிலும், வெடிவைத்துத் தகர்ப்பதிலும் தேர்ச்சி பெற்றனர்.

ஆனால் புலிகள் புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும் எம்.ஜி. இராமச்சந்திரனிடமிருந்தும் நிதி திரட்டுவதில் டெலோவையும், பிளாட்டையும் விரைவில் விஞ்சினர். புலிகள் மிகவும் வலுவான குழுவாக உருவாகினர். யாழ்க் குடா நாட்டின் முழு நிர்வாக இராணுவக் கட்டுப்பாடு அவர்களின் கைக்கு வந்தது. விடுதலைப் புலிகள் 1986 இறுதிக்குள் பிளாட், டெலோ ஆகிய அமைப்புகளிடமிருந்து ஆயுதங்களைக் களைந்து, அவற்றை நொறுக்கிச் சிதைத்தனர். "ரா' அதிகாரி ஒருவர்தான் குழுக்களுக்குள் போட்டிகளை வளர்த்து டெலோ அழிவதற்கு வழிவகுத்தார் என்பது பிறகு தெரியவந்தது.

இந்தக் காலப் பகுதி முழுவதிலும் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு வாரி வழங்கிய ஆயுதங்களுக்கு "ரா' கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. சண்டையில் ஏற்படும் இழப்புகள் என்ற போர்வையில் போராளிக் குழுக்கள் ஏராளமான ஆயுதங்களையும் படைத் தளவாடங்களையும் வெடிபொருள்களையும் இந்தியாவிடமிருந்து பெற்றுக் குவித்தன.

இந்திய வெளியுறவுத் துறையின் முழு நம்பிக்கையையும் புரிதலையும் பெற்று "ரா'தான் தமிழர் கலகத்தைத் தூண்டிவிட்டு, இந்தியா இலங்கை ஒப்பந்தத்திற்கு வழிகோலியது என சிறீலங்காவின் தேசிய உளவு அமைப்பு குற்றம் சாட்டியது. ‘டெலோ'வை புலிகள் அழித்துவிட்டதால் "ரா'வும் வெளியுறவு அமைச்சகமுமே ஈபிஆர்எல்எப்பை ஆயுதபாணியாக்கின. 1990ஆம் ஆண்டில் மும்பையில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் "ரா'வில் பணியாற்றியவர். ஈபிஆர்எல்எப்பை மீண்டும் ஆயுதபாணியாக்கியது "ரா'வும் வெளியுறவு அமைச்சகமுமே என அவர் உறுதிப்படுத்தினார். இந்திய அமைதிப் படைக்காகத் தருவிக்கப்பட்ட ஏகே 47 துமுக்கிகளை ஈபிஆர்எல்எப்பிற்கு வழங்கும்படி கட்டளையிட்டவர் 1988 பிப்ரவரியிலிருந்து அனைத்துப் படைத் தளபதியாகப் பணியாற்றிய லெப்டினெண்ட் ஜெனரல் ஏ.எஸ். கல்கத் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறீலங்காவில் "ஆபரேஷன் பவான்' நடவடிக்கையின்போது பலாலியில் அமைந்திருந்த அமைதிப்படைத் தலைமையகத்தில் இரு "ரா' அலுவலர்கள் பணியாற்றினர். இவ்விருவரும் காவல்துறை சீருடை அணிந்திருந்தனர். பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திலேயே எப்பொழுதும் தங்கியிருந்தனர். அமைதிப்படைத் தலைமையகத்திற்கு வந்த ஊடகத்துறையினருடனும் மற்றவர்களுடனும் அவர்கள் உறவாடிய விதம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிக்கு உகந்ததாக இல்லை. நான் அமைதிப்படையின் கட்டளைத் தளபதி என்ற முறையில் புலிகளின் ஆயுதக்கிடங்கு குறித்தும், பிரபாகரனின் நடமாட்டங்கள் பற்றியும் யாழ்ப்பாணத்திற்குள் சென்று திடமான உளவறிந்து வர இவர்களைப் பணிக்குமாறு என் உளவுப் பிரிவுப் பணியாளர்களுக்குக் கட்டளை இட்டேன். ஆனால் அவர்களோ தாங்கள் அடையாளங் காணப்பட்டு புலிகளால் கொல்லப்படக் கூடும் என அஞ்சி, தங்களை இப்பணியிலிருந்து விட்டு விடுமாறு கெஞ்சினர். சென்னைக்குத் திருப்பி அனுப்பி விடுமாறு கேட்டனர். இவர்கள்தாம் இந்தியாவில் புலிகளின் பயிற்சிக்குப் பொறுப்பாயிருந்தவர்கள்.

சிறிலங்காவில் இந்தியாவின் இராணுவத் தலையீட்டிற்கு வழிசெய்த முதன்மை நோக்கங்களில் ஒன்று கிழக்கிலங்கையில் அமெரிக்கர்கள் கால் பதிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே. அவர்கள் காலூன்ற அனுமதிக்கப்பட்டால் திரிகோணமலை எண்ணெய்க் கிணறுகளை இயங்கச் செய்வர், இந்தியப் பெருங்கடலில் தளம் அமைத்தாலும் அமைப்பார்கள் என்று அஞ்சப்பட்டது. சிறிலங்கா அரசுத் தரப்பினர் விரும்பாத நிலையிலும் இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் அவசரமாகக் கையெழுத்து இடப்பட்டமைக்கு இவ்வச்சங்களே காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயம் சிறிலங்கா குடியரசு அரசமைப்பிற்கு வெளியே தனியரசு ஒன்று அமைவதை இந்தியா அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால் இந்தியாவிலுள்ள தமிழர்கள் தங்களுக்கும் இந்தியாவிற்குள் தனியரசு கோரவும், புலிகளுடன் கைகோக்கவும் ஊக்கம் பெறுவார்கள். மேலும் சிறிலங்கா இராணுவத்திற்குள் அயல்நாட்டுக் கூலிப் படையினர் இடம்பெற்றிருப்பதும், உலகின் மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றான திரிகோணமலையில் அமெரிக்காவின் தளம் அமைக்க முயலும் வாய்ப்பும் இந்தியப் பெருங்கடலில் இரண்டாவது தியாகோ கார்சியா அமைவதற்கு இட்டுச் செல்லக்கூடும் என்றும் கருதப்பட்டது.

1987 சூலையில் சிறீலங்கா ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி என்ற முறையில் குடியரசுத் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா இலங்கையில் அமைதி காக்க இந்தியா தன் படைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ள முடிவெடுத்தார். அந்த ஆண்டு மே மாதத்தில் இலங்கை வடவனப் பகுதிகளைச் சுத்திகரிக்கும் நோக்குடன் சிறிலங்கா படை "விடுதலைத் தாக்குதலை' தொடுத்திருந்தது. இது அவர்கள் 1983 முதல் யாழ்க் குடா நாட்டை இராணுவ முறையில் வழிக்குக் கொண்டுவரத் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியே ஆகும். புலிகளுக்கு எதிராக கடந்த நான்காண்டுகளாக நடைபெற்று வந்த போரில் இலங்கைப் படையால் வெற்றி பெற இயலாது என்பதை ஜெயவர்த்தனா அறிந்திருந்தார். படையாட்கள் நாள்தோறும் மாண்டு கொண்டிருந்தார்கள். அது ஒட்டுமொத்த இலங்கைப் படையினரின் மனஉறுதியைப் பாதித்தது. போரில் இலங்கை தோற்குமானால், அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெறுமானால் ஜேவிபி இலங்கையில் அதிகாரத்தைக் கைப்பற்ற, அதே சமயம் புலிகள் வட கிழக்குப் பகுதிகளை வயப்படுத்திக் கொள்வார்கள் என்பதை அரசியல் நிகழ்வுகள் சுட்டின.

இனப்பூசலினால் இலங்கையிலிருந்து ஏதிலிகள் இந்தியாவிற்கு குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பெருமளவில் இடம்பெயர்ந்தனர். அரசுறவு சார்ந்த இராசதந்திர முயற்சிகள் அனைத்தும் தோல்வி எனத் தோன்றிய நிலையில், யாழ் மக்களுக்கு வழங்குவதற்காக உணவுப் பொருள்களையும் மருந்துப் பொருள்களையும் சில படகுகளில் ஏற்றி இந்தியா அனுப்பியது. இப்படகுகளை சிறீலங்கா கடற்படை தடுத்து நிறுத்தியது. இதன் விளைவு 1987 சூன் 4இல் இந்தியா பூமாலை நடவடிக்கையின் மூலம் இன்னுங்கூட வன்மையான செய்தியை உணர்த்தியது. மிரேஜ் 2000 வான்படை ஊர்திகளின் வழிக் காவலோடு ஏ என் 32 போக்குவரத்து வானூர்தி யாழ்ப்பாணத்தில் உணவு மருந்துப் பொட்டலங்களைப் போட்டது.

இப்பின்னணியில்தான் இந்திய அரசாங்கத்துடன் மேலும் விவாதிக்க சிறீலங்கா அரசு விரும்பியது. இதன் விளைவாகத்தான் 1987 சூலை 29இல் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. இவ்வொப்பந்தத்தில் ஜெயவர்த்தனாவும் இராஜீவ் காந்தியும் கொழும்பில் கைச்சாத்திட்டனர். ஆனால் போராளிக் குழுக்களையோ புலித் தலைவர்களையோ உட்படுத்திக் கொள்ளாமலேயே ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. கொழும்பில் இந்தியத் தூதரகத்தின் முதற்செயலராக இருந்த எச்.எஸ். பூரி, பிரபாகரனுக்கு அனுப்பிய செய்தியில், ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்கு முன்னதாகக் குறிப்பிட்ட சில சிக்கல்கள் குறித்து விவாதிப்பதற்காக அவரைச் சந்திக்க இராஜீவ் காந்தி காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். பிரபாகரன் செய்தி கேட்டு மகிழ்ந்து போனார். தில்லிக்குப் புறப்படச் சம்மதித்தார். அவரும் பிற புலித் தலைவர்களும் யாழ் பல்கலைக் கழக விளையாட்டுத் திடலிலிருந்து புது தில்லிக்கு வான்வழி அழைத்துச் செல்லப்பட்டனர்.

புதுதில்லி வந்தடைந்ததும் 1987 சூலை 28இல் பிரபாகரன் தலைமை அமைச்சருடன் முன்னாயத்த விவாதங்கள் நடத்தினார். அவர் அசோகா விடுதியில் அறை எண் 518இல் தங்க வைக்கப்பட்டார். தலைமை அமைச்சர் ஏற்கெனவே கொழும்பில் ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதை அறியாமல் அவரோடு அடுத்த சந்திப்புக்காகக் காத்திருந்தார். இந்த ஒப்பந்தத்திற்கு அடித்தளமிட்டவர் சிறிலங்காவில் இந்தியத் தூதுவராயிருந்த ஜே.என். தீட்சித் ஆவார். இந்தியத் தலைமை அமைச்சரின் இலங்கைப் பயணம் தொலைக்காட்சியில் நேரலையில் காட்டப்பெற்றது. அதைக் கண்டு புலித் தலைவர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள்.

1987 சூலை 30இல் நான் யாழ்ப்பாணம் சென்றடைந்த பிறகு விடுதலைப் புலிகள் என்னிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்கள், "பூரிக்குத் தம் உயிர்மேல் ஆசை இருந்தால் யாழ்ப்பாணம் பக்கம் அவர் தென்படக் கூடாது' என்று. நான் தீட்சித்திடம் இதைத் தெரிவித்தேன்.

இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, கொழும்பிலிருந்து புறப்படும் முன் இராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட மரியாதை அணிவகுப்பில் கப்பற்படை வீரன் விஜயமுனி விஜிதுவா ரோகண டி சில்வா அவரைக் கொலை செய்ய முயன்றது இலங்கை மக்களின் மனநிலையைக் காட்டுவதாய் அமைந்திருந்தது. சிறீலங்கா கப்பற்படைத் தளபதி ஆனந்தா சில்வாதான் இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும்படி இராஜீவ் காந்தியை அழைத்திருந்தார்.

("ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும் இலங்கை சென்ற இந்திய அமைதிப் படைத் தளபதிகளில் ஒருவருமான மேஜர் ஜெனரல் அர்கிரத் சிங் எழுதிய "சிறிலங்காவில் தலையீடு' நூல், பக்கம் 22-26)

Maj.Gen.Harhirat Singh (Retd.)
Intervention in Srilanka - The IPKF Experience Retold, 2007
Ajaykumar Jain for Manohar publishers & Distributors,
4753/23, Ansari Road, Daryaganj, New Delhi,
Price: Rs.545


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com