Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
டிசம்பர் 2008
டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மோதல்கள் சில சிந்தனைகள்
க.வே. அருள்

தமிழகத்தில் நாள்தோறும் எத்தனையோ சாதியக் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. வெண்மணி, மேலவளவு, கொடியங்குளம், தாமிரபரணி, உத்தபுரம் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இரட்டைக் குவளை முறை, மலத்தைக் கையால் அள்ளுதல் போன்ற அவலங்கள் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்கின்றன. தாழ்த்தப்பட்டோன் வாயில் மலம் திணித்த (திண்ணியம்) பெருங்கொடுமையும், சிறுநீர் கழித்த பேரழிவும் இந்நூற்றாண்டில்தான் அரங்கேறியுள்ளன. இன்றும் நமது சிற்றூர்களில் சாதி ஆதிக்கமே கோலோச்சுகிறது. சென்ற நவம்பர் 12இல் தமிழகத்தையே அதிரச் செய்த சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி வன்முறையும் ஒரு சாதிய மோதலே. ஆனால் தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள சாதிய மோதல்களில் இது வேறுபட்டது. இது மாணவர்களுக்கிடையே, அதுவும் சட்டம் படிக்கின்ற - அதாவது நாளை மக்களுக்கு நீதி வழங்கப் போகின்ற மாணவர்களுக்கிடையே நடந்த மோதல். மேலும் இது காட்சிப்படுத்தப்பட்ட மோதல்; தொலைக்காட்சி வழி மக்களை அதிரச் செய்த மோதல். இதில் இன்னொரு சிறப்பும் உண்டு. இங்கு அடித்தவன் தலித்; அடி வாங்கியவன் தேவர்.

மாணவர்களுக்கிடையிலான இந்தச் சாதிய மோதல் மிகவும் கொடூரமானது, மனிதநேயமற்றது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த மோதலைத் தொடர்ந்து ஊடகங்கள் கட்டமைத்த செய்திகளும், அதைத் தொடர்ந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும் இக்கொடிய நிகழ்ச்சிக்கான காரணங்களைப் பின்தள்ளி மூடி மறைத்து, அதன் கொடுமையை மட்டுமே மக்கள் மனத்தில் உருவேற்றியுள்ளன. இந்த மோதல் ஏற்படுவதற்கான காரணங்கள் முகாமையானவை; ஆராயப்பட வேண்டியவை.

law_college சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே முன்பெல்லாம் அரசியல் சார்ந்த அமைப்புகள் மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக ‘முக்குலத்தோர் மாணவர் சங்கம்' என்ற சாதிச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. கல்லூரிக்கு வெளியிலிருந்து தேவர் பேரவை முதலான சாதி அமைப்புகள் இச்சங்கத்தை அமைப்பதில் பெரும் பங்கு வகித்தன. இச்சங்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்தே சங்கம் சார்பாகத் தேவர் ஜெயந்தி விழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வந்தது. அவ்விழாவுக்கான சுவரொட்டியிலும் அழைப்பிதழிலும் திட்டமிட்டு அம்பேத்கர் பெயர் மறைக்கப்படும். அம்பேத்கரைத் தீண்டகாதவராகக் கருதிய இந்தச் சாதி வெறியர்கள் சட்டக் கல்லூரியின் பெயரில்கூட அம்பேத்கன் பெயர் இருப்பதை வெறுத்தவர்கள், அம்பேத்கர் வரைந்த அரசமைப்புச் சட்டத்தையும் படிக்க மறுப்பார்களா? கல்லூரியில் எந்த விழா கொண்டாடப்பட்டாலும் கல்லூரி வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிடுவது மரபு. தேவர் ஜெயந்தி விழாவின் போது அம்பேத்கர் சிலையை முக்குலத்தோர் மாணவர் சங்கத்தினர் கண்டுகொள்வதே இல்லை. இச்செயல்கள் தலித் மாணவர்களிடையே கடுஞ்சினத்தை உருவாக்கியுள்ளன. இந்த ஆண்டும் இந்நடைமுறையையே பின்பற்றியது முக்குலத்தோர் மாணவர் சங்கம். இது தலித் மாணவர்களை உசுப்பி விட்டது; ஆத்திரமடையச் செய்தது.

ஒட்டப்பட்ட தேவர் ஜெயந்தி விழா சுவரொட்டிகள் சிலவற்றை தலித் மாணவர்கள் கிழித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கும் தேவர் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்துள்ளது. நவம்பர் 3ஆம் நாள் தேர்வுகள் தொடங்கிய நிலையில், எந்த ஒரு தலித் மாணவனும் தேர்வு எழுதக் கூடாது என முக்குலத்தோர் மாணவர் சங்கம் அறிவித்தது. தேர்வு எழுத வந்த தலித் மாணவர்களைத் தேவர் மாணவர்கள் அடித்துத் தேர்வு எழுத விடாமல் திருப்பி அனுப்பி யுள்ளனர். தேர்வு நாள்களில் தேவர் மாணவர்கள் ஆயுதங்களுடனேயே கல்லூரி வளாகத்தில் சுற்றிக் கொண்டிருந் திருக்கின்றனர்.

நிகழ்வு நடந்த நவம்பர் 12 காலை தேர்வு எழுத வந்த தலித் மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட மற்ற தலித் மாணவர்கள் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்காக உருட்டுக் கட்டைகளுடன் கல்லூரி வளாகத்துக்கு வந்துள்ளனர். இவர்களைக் கலைந்து போகச் சொன்ன ஆசியர்களிடமும் தங்களுக்கு யாரையும் தாக்கும் நோக்கமில்லை எனத் தெவித்துள்ளனர். இந்நிலையில் பாரதிக்கண்ணன், ஆறுமுகம் ஆகிய முக்குலத்தோர் மாணவர் சங்க மாணவர்கள் தலித் மாணவர்களைத் தாக்க கத்தியுடன் ஓடி வந்துள்ளனர். (பாரதிக்கண்ணன் கத்தியுடன் ஓடிவரும் காட்சி தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானது). இதைக் கண்ட தலித் மாணவர்கள் பின்வாங்கி உள்ளனர்.

இந்நிலையில் கத்தியுடன் வந்த இருவரும் சித்திரைச் செல்வன் என்ற தலித் மாணவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த சித்திரைச் செல்வன் சந்து கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ணுற்ற தலித் மாணவர்கள் உருட்டுக் கட்டைகளால் பாரதிக் கண்ணனையும், ஆறுமுகத்தையும் நையப் புடைத்துள்ளனர். எல்லா மோதல்களையும் வேடிக்கை பார்ப்பது போல் இந்த மோதலையும் அருகில் இருந்து காவல்துறை வேடிக்கை பார்த்ததோடு நின்று கொண்டது; மோதலைத் தடுக்க எவ்வகை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த மோதலை நமது தமிழ்த் தொலைக்காட்சிகள் பின்னணி இசையுடன் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி அதன் தாக்கத்தைப் பன்மடங்காகப் பெருக்கி விட்டன. தமிழ் ஊடகங்கள் இதை மாணவர்களுக்கிடையேயான மோதலாக மட்டும் சித்தித்தனவே ஒழிய, இந்நிகழ்விற்குக் காரணமாயிருந்த சாதிப் பகைமையைக் கண்டுகொள்ளவும் இல்லை; அது குறித்துக் கவலை கொள்ளவும் இல்லை. அடிப்பவன் தலித்தாயில்லாமல், அடி வாங்குபவன் தேவராயில்லாமல் மாறியிருந்தால் இந்த ஊடகங்கள் எப்படி நடந்திருக்கும் என்ற கேள்வி எழவே செய்கிறது. ஊடகத் தர்மம் என்பதும் சாதித் தர்மம்தானோ?

இத்தாக்குதலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் துறையினர் சிலரை இடமாற்றமும், சிலரை இடை நீக்கமும் செய்துள்ளது தமிழக அரசு. சட்டக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டு நிலையான முதல்வர் அமர்த்தப்பட்டுள்ளார். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் தளைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர் மீது கொலை முயற்சி முதலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்விற்கு எந்தத் தொடர்பும் இல்லாத திருப்பதி சட்டக் கல்லூரி மாணவர் கோகுல்ராஸ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைப் போலவே பல தலித் மாணவர்கள் தலித் என்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை என்ற பெயல் தலித் மாணவர் வீட்டாரும் தொல்லைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.

முக்குலத்தோர் மாணவர் சங்க மாணவர்கள் யாரும் இதுவரை தளைப்படுத்தப்படவில்லை. சித்திரைச்செல்வன் அளித்த புகான் பேல் பாரதிக் கண்ணன், ஆறுமுகம் ஆகிய இருவர் மீது மட்டும் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நுழைவுத் தேர்வு வழி மாணவர் சேர்க்கை நடைபெற்றால் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாது எனக் கருத்தறிவிக்கிறது. இதன் பொருள் தலித் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைவது தடை செய்யப்பட்டு விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது தானே? (‘தகுதி திறமை' இல்லாத தலித் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியாது அல்லவா?)

அரசும், காவல்துறையும், நீதித்துறையும் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மோதலுக்கு தலித்துகள் மட்டுமே காரணம் என நினைப்பதாகத் தோன்றுகிறது. அதனால்தான் காவல்துறை கண்ணில்படும் தலித் மாணவனை எல்லாம் கைது செய்கிறது; நீதித்துறை நுழைவுத்தேர்வு நடத்தச் சொல்கிறது. மீண்டும் ஒரு முறை அரசும், காவல்துறையும், நீதித்துறையும் யார் பக்கம் என்பதை மெய்ப்பித்துள்ளன. அரசியல் கட்சிகளில் அதிமுக தேவர்களின் வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே போராட்டங்கள் நடத்துகிறது. ஆளும் திமுகவோ தலித் மாணவர்களை விரட்டி விரட்டிக் கைது செய்து தேவர்களைத் தன் பக்கம் மீட்டெடுக்கப் பெரும் பாடுபடுகிறது.

law_student தேச ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் ஈழ ஆதரவாளர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் காங்கிரஸ் கட்சி இந்திய அரசியல் அமைப்புத் தந்தையான அம்பேத்கரை இழிவுபடுத்திய தேவர் இன மாணவர்களைப் பற்றி மௌனம் சாதிப்பதின் மர்மம் என்னவோ? மற்றக் கட்சிகள் மாணவர் மோதல் என்ற அடிப்படையில் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தன. எந்தக் கட்சியும் சாதிச் சிக்கலைக் கண்டுகொள்ளவே இல்லை. களமிறங்கிப் போராட வேண்டிய தலித் விடுதலை இயக்கங்களும் காத்திரமான போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவில்லை. தலித் விடுதலை இயக்கங்கள் தேர்தல் அரசியல் நீரோடையில் கலந்து விட்டமை இதற்குக் காரணமாக இருக்கலாம். கூட்டணியைத் தக்க வைத்துக் கொள்ளவும், இடம் பெறவுமே படாதபாடு பட்டுப் போராட வேண்டி இருக்கையில் தாம் சார்ந்துள்ள மக்களைப் பற்றி நினைக்க நேரம் ஏது?

தமிழகத்தில் மாணவர்களுக்கு இடையேயான இந்தச் சாதிய மோதல் ஆழ்ந்த கவலைக்குரியது. தங்கள் உரிமைக்கு ஒன்றிணைந்து போராட வேண்டிய தலித் மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுமே ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்கின்றனர். இங்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் அல்லது அது அவர்களுக்குத் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கிறது. அவர்களும் உரிமை மறுக்கப்பட்டவர்கள் என்பதே அது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அவர்களுக்குய இடம் இன்னும் வழங்கப்படவில்லை. 27% இட ஒதுக்கீட்டைப் பெறவே பெரும் போராட்டங்களை நடத்த வேண்டி உள்ளது.

போராடிப் பெற்ற அவ்வொதுக்கீட்டிலும் சேரப் போதிய மாணவர்கள் இல்லை. பிற்படுத்தப்பட்டோன் உண்மைக் கல்வி நிலை இதுவே. 27%இல் நிரம்பாத 10% இடங்களை மீண்டும் பொதுப் பிவுக்கே, அதாவது பெரும்பாலும் உயர் சாதியினருக்கே வழங்கிவிட்டது நம் நீதித்துறை. பார்ப்பன, பனியா, வேளாளர் உயர்சாதி ஆதிக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நமக்குள் மோதிக்கொள்வது அவர்களின் திட்டமிட்ட சூழ்ச்சிக்குப் பலியாகும் செயலே. அவர்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கான வழியே.

தலித் மாணவர்கள் தங்கள் சமூக விடுதலைக்காகப் போராடுவது வரவேற்கத்தக்கது. அது சமூகத் தேவையும் கூட. சமூகத்தின் அடித்தளத்தில் அல்லலுறுகிறவர்கள் அவர்கள். அவர்களின் விடுதலையில்தான் பிற்படுத்தப்பட்டோன் விடுதலையும் அடங்கியுள்ளது. எனவே தலித் மாணவர்கள் போராட்டங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் தங்களை இணைத்துக் கொண்டு சாதி ஒழிப்புக்குப் போராட வேண்டும். சாதி ஒழிப்பை நோக்கிய போராட்டமே அனைவருக்கும் விடுதலையைப் பெற்றுத் தரும். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அம்பேத்கரையே புரிந்து கொள்ளாமல் தலித் மாணவர்களுடன் மோதிக்கொள்வது மிகவும் வேதனைக்குரியது.

இதற்கான காரணங்களில் ஒன்று சாதி என்ற நஞ்சை மாணவர்களின் உள்ளத்திலிருந்து நமது கல்வி அகற்றத் தவறியிருப்பது. இன்றைய நமது கல்வியானது போட்டியை உருவாக்கித் தன்னல வெறியையே வளர்த்து வருகிறது. ஏற்றத் தாழ்வான கல்வி முறை மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வையே ஊக்குவிக்கிறது. ஆங்கிலவழிக் கல்வியானது மாணவர்களிடையே சமத்துவத்தை முற்ற முழுதாக அழித்து விட்டது. இரண்டாவதாக, சிற்றூர்களில் சாதி அமைப்பு முறை மாறாமல் அப்படியே நிலவுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் சமூகச் சூழல்களாலும் தேர்தல் அரசியலாலும் சாதிப் பிளவுகள் தூண்டி வளர்க்கப்படுகின்றன. இங்கிருந்து உயர் கல்விக்கு வரும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சாதி மமதையுடனேயே வருகின்றனர்.

அம்பேத்கரையே அவர்கள் புரிந்துகொள்ளத் தவறியுள்ளனர் என்பது எவ்வளவு கொடுமையானது! அவர்களின் சிந்தனையில் அம்பேத்கர் கீழ்சாதிக்கான குறியீடாகவே கட்டமைக்கப்பட்டுள்ளார். சாதியொழிப்பின் அடையாளத்தை சாதியடையாளம் ஆக்கிவிட்டனர். அம்பேத்கர் இந்தியத் துணைக்கண்ட சாதியச் சமூக அமைப்பை விளக்கியதோடு அதனை ஒழித்திடவும் வழிகாட்டிய மேதை என்பதும், தாழ்த்தப்பட்டோருக்காக மட்டுமின்றி பிற்படுத்தப்பட்டோருக்காகவும் மொத்தத்தில் ஒடுக்குண்ட அனைவர்க்காகவும் உழைத்த அண்ணல் என்பதும் அவர்களை எட்டாத செய்திகளாகவே இருக்கின்றன.

60களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சாதி மறந்து மாணவர்கள் தெருவுக்கு வந்து போராடினர். குண்டடிபட்டு உயிர் ஈகம் செய்தனர். அப்பொழுது அனைத்துச் சாதி இரத்தமும் ஒன்றுகலந்து தமிழுக்காய் தமிழ்த் தெருக்களை நனைத்தது. அதற்கு முன்பே பெயான் சுயமயாதை இயக்கமும், பின்னர் வந்த திராவிட இயக்கங்களும் மாணவர்களை ஒரே குடையின் கீழ்க் கொண்டு வந்தன. திராவிட முன்னேற்றக் கழகம் கட்டியெழுப்பிய தமிழ் எழுச்சி மாணவர்களைத் தமிழர்களாய் ஒன்றுபடுத்தியது. மாணவர்களைச் சாதிகடந்து திரட்டியதில் பொதுவுடைமை இயக்கங்களின் பங்கையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. 70களில் நக்சல் பாரி முழக்கமும் ஓரளவுக்கு மாணவர்களை ஈர்க்கவே செய்தது. இன்று மாணவர்களிடையே அத்தகைய இலட்சிய ஈர்ப்புகள் இல்லாமல் போயின.

மாணவர்கள் பொதுநோக்காக ஒன்றிணையும் பொழுதுதான் சாதி நஞ்சுகள் அவர்களிடமிருந்து விலகும். மாணவர்கள் ஒன்றிணைந்து போராட எத்தனையோ சிக்கல்கள் உள்ளன. கல்வி இன்று முழுக்க வணிகமாயுள்ளது. ஆங்கில வழிக் கல்வி அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளிப்பதில்லை. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என இருவருக்குமே இட ஒதுக்கீடு காணாமல் போய்க்கொண்டுள்ளது. எனவே வணிகக் கல்வி, இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி போன்ற சிக்கல்களில் ஒன்றிணைந்து போராடும்போது மாணவர்களிடையே சாதியச் சிக்கல்கள் மறைந்து போகும்.

தமிழ்த் தேசியப் பார்வை குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழுக்குய இடம் இல்லை. தமிழ்நாட்டின் ஆற்றுநீர் உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுகின்றன என்பன போன்ற செய்திகள் மாணவர்களை எட்ட வேண்டும். ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு மாணவர்களைச் சென்றடைய வேண்டும். தமிழ்த் தேசியத் தீ மாணவர்களைப் பற்றும்போது சாதியக் கொடியோன் மாய்ந்து போவான். மாணவர்கள் தமிழர்களாய் ஒன்றுபடுவர். இது சாதி ஒழிப்புக்குப் பாதை அமைக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com