Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
ஆகஸ்டு 2008
உலகின் வருங்காலம் - நம் மறுவினையை வடிவமைப்பது எது? : பாலா


நாம் இத்தொடரின் இந்தக் கட்டுரையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய வினையூக்கிகளைக் காண்போம். ஒரு சிறு கதையைச் சொல்லத் தொடங்குவோம். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் மென் குடிப்புகளைக் குடுவைகளில் பருகுகின்றனர். இங்கிலாந்தில் நுகர்வோரின் கைகளை எட்டுமுன் நடந்தேறுகிற குடுவையின் கதையைக் கேட்போம் (படம் 1).

பருகைத் திரவம் தயாரிப்பதைக் காட்டிலும் குடுவை தயாரிப்பதில் செலவும் சிக்கலும் மிகுதி. ஆஸ்திரேயாவில் பாக்சைட்டை வெட்டியெடுத்து வேதிக் குறைப்பு ஆலைக்கு எடுத்துச் செல்கின்றனர். அங்கு அரை மணி நேரச் செயல்வழியில் ஒவ்வொரு டன் பாக்சைட்டையும் தூய்மைப்படுத்தி அரை டன் அலுமினியம் ஆக்சைடு ஆக்குகின்றனர். அதனைப் போதிய அளவு சேகரித்த பிறகு பேருருத் தாது ஏந்தியில் ஏற்றி சுவீடன் அல்லது நார்வேக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு நீர்மின் அணைகள் மலிவான மின்சாரம் வழங்குகின்றன. அது ஒரு மாதக் காலம் இரு மாக்கடல்களில் நீண்ட பயணம் செய்த பின் வழக்கமாக இரு மாதக் காலத்துக்கு உருக்காலையில் கிடக்கிறது.

உருக்காலை ஒவ்வோர் அரை டன் அலுமினியம் ஆக்சைடையும் பத்து மீட்டர் நீள வார்ப்புகளில் கால் டன் அலுமினிய உலோகமாக மாற்றுவதற்கு இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இவ்வார்ப்புகளை இரு வாரம் பதப்படுத்தி சுவீடன் அல்லது ஜெர்மனியில் உள்ள உருளையாலைகளுக்குக் கப்பலேற்றுகின்றனர். அங்கு வார்ப்பு ஒவ்வொன்றையும் கிட்டத்த 900 டிகிரி பாரன்ஹீட் சூடாக்கி ஒர் அங்குலத்தில் எட்டில் ஒரு பங்குத் தடிமனுக்கு உருட்டித் தேய்க்கின்றனர். இதில் விளையும் தகடுகளைப் பத்து பத்து டன் சுருள்களாகச் சுருட்டிப் பண்டகச்சாலைக்கும், அதே நாட்டில் அல்லது வேறொரு நாட்டிலுள்ள குளிர் உருளையாலைக்கும் அனுப்பி வைக்கின்றனர். அங்கு அவற்றை மேலும் பத்து மடங்கு மெலிதாக உருட்டிக் கட்டுருவாக்கத்துக்கு அணியப்படுத்துகின்றனர்.

அலுமினியத்தை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்து, அங்கு தகடுகளைத் துளையிட்டுக் குடுவைகளாக்குகின்றனர். அவற்றைக் கழுவி உலர்த்தி, அடிப்பூச்சிட்டுப் பின்னர் அவற்றில் குறிப்பிட்ட பண்டத் தகவலை அச்சிடுகின்றனர். அடுத்துக் குடுவைகளுக்கு மெருகிட்டு, விளிம்பு தட்டி (இந்நிலையிலும் அவற்றுக்கு மூடியில்லை), குடுவையைக் கோலா கரம்பாது தடுக்க அதன் உட்புறம் காப்புப் பூச்சிட்டு, ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

குடுவைகளை இயங்குமேடையில் ஏற்றிச் சுமையுந்தில் பண்டகச்சாலைக்குக் கொண்டு சென்று தேவைப்படும் வரை அங்கு வைக்கின்றனர். அவற்றைப் பின்னர் புட்டிலரிடம் அனுப்பி வைக்கின்றனர். அங்கு அவற்றை மீண்டும் கழுவித் தூய்மையாக்கி, நறுமணத் தேங்கூழ், பாஸ்பரஸ், கஃபைன், கார்பன் டை ஆக்சைடு வாயு அகியவை கலந்த நீரால் நிரப்புகின்றனர். பிரான்சில் சர்க்கரையை அக்காரக்கிழங்கு வயல்களிருந்து அறுவடை செய்து சரக்குந்தில் ஏற்றிச் சென்று அலையிட்டு, சுத்திகரித்துக் கப்பலேற்றுகின்றனர். பாஸ்பரஸ் இடாகோவிலிருந்து வருகிறது. அங்கு அதனைத் திறந்த குழிச் சுரங்கங்களிலிருந்து எடுக்கின்றனர். இதே செயல்வழிதான் காட்மியம், கதிரியக்கத் தோரியம் ஆகியவற்றைத் தோண்டி எடுக்கவும் பயன்படுகிறது. சுரங்கக் குழுமம் ஒரு லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரம் பயன்படுத்தும் அளவுக்கான மின்சாரத்தை 24 மணி நேரமும் பயன்படுத்தி பாஸ்பேட்டை உணவுப் படித்தரத்துக்கு மாற்றுகிறது. கஃபைனை வேதிப்பொருள் உற்பத்தியாளரிடமிருந்து இங்கிலாந்தில் உள்ள தேங்கூழ் தயாரிப்பாளருக்குக் கப்பலேற்றுகின்றனர்.

குடுவைகளை நிரப்பி ஒரு நிமிடத்துக்கு 1,500 என்ற கணக்கில் அலுமினியக் கொக்கி மூடியால் அடைக்கின்றனர். பிறகு அவற்றைப் பொருத்தமான வண்ணமும் விளம்பரத் திட்டங்களும் அச்சிட்ட அட்டைப் பெட்டிகளில் வைக்கின்றனர். இப்பெட்டிகள் காட்டு மரக்கூழால் செய்யப்படுகின்றன. இதற்கான மரங்கள் சுவீடன் அல்லது சைபீரியா தொடங்கி பிரித்தானியக் கொலம்பியாவில் முதிர்ந்து வளர்ந்த கன்னிக் காடுகள் வரை எங்கிருந்தும் கொண்டு வரப்படலாம். இம்மரங்களே பெருங்கரடிகள், தசையுண்ணிகள், நீர்நாய்கள், கழுகுகள் ஆகியவற்றுக்கான உறைவிடமாகத் திகழ்கின்றன.

குடுவைகளை மீண்டும் இயங்கு மேடையில் வைத்து, மண்டலப் பங்கீட்டுப் பண்டகச்சாலைக்கும், பின்னர் பல்பொருள் அங்காடிக்கும் ஏற்றி அனுப்புகின்றனர். நுகர்வோர் அங்காடியில் குடுவைகளை மூன்று நாளுக்குள் வாங்குகின்றனர். இங்கிலாந்தில் நுகர்வோர் மொத்தக் குடுவைகளில் 84 விழுக்காட்டை மறு பயன்பாட்டுக்கு வழியின்றி விட்டெறிகின்றனர்.

கோலாக் குடுவையின் கதை நடுநடுங்கச் செய்தாலும் அது ஒற்றைத் தனிக்கதையன்று. நாம் நுகர்கிற உற்பத்திப் பண்டம் ஒவ்வொன்றுக்கும் எழுதப்படாத வரலாறு ஒன்று உண்டு. அது நீண்ட நெடுங்காலத்துக்கு உலகைப் பாதிக்கும் வரலாறு ஆகும். ஒர் அரைக்கடத்திச் சில்லைத் தயாரிப்பதில் உண்டாகும் கழிவு அளவு அதன் எடையைப் போல் ஒரு லட்சம் மடங்குக்கு மேல் ஆகும், மடிக் கணினிக்கு அதன் எடையைப் போல் கிட்டத்தட்ட நான்காயிரம் மடங்கு ஆகும். ஒரு டன் தாள் தயாரிப்பதற்கு அதன் எடையைப் போல் 98 மடங்கு இயற்கை வளம் தேவைப்படுகிறது.

நாம் இத்தொடரின் முதல் கட்டுரையை நினைவுகூர்வோம். அதில் இந்த எழுதப்படாத வரலாற்றைத் திணைமவியல் சுவட்டின் அளவீட்டு அலகுகளில் படம்பிடித்துக் காட்டினோம். நுகர்வு, மக்கள்தொகை உயர்வுடன் திணைமவியல் சுவட்டுச் செறிவு வரம்புமீறலுக்கு வித்திட்டதையும் கண்டோம் (படம் 2). இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒர் அமெரிக்கர் அல்லது கனடியரைப் போல் வாழவும் நுகரவும் வேண்டுமானால் இன்னும் இரு புவிகள் தேவைப்படும்.

அடுத்த நாற்பதாண்டில் மக்கள் தொகையும் வாழ்க்கைத் தரங்களும் இரட்டிப்பாகுமானால் நாம் வாழ்வதற்கு இன்னும் 12 புவிகள் தேவைப்படும். இது முடியவே முடியாத ஒன்று. மக்கள்தொகையும் நுகர்வும் குறைந்தாக வேண்டும், வளங்கள் சுண்டி வரும் நிலையில் அவை குறையத்தான் செய்யும். ஆனால் புவிக்கு ஆதரவாகத் தராசைச் சாய்க்கும் ஒரு முக்கியக் காரணி 'திணைமவியல் சுவட்டுச் செறிவு' ஆகும். ஆயின் திணைமவியல் சுவட்டுச் செறிவைக் குறைக்க முடியுமா? ஒரு கோலாக் குடுவையை உற்பத்தி செய்வதற்கு, சொல்லப் போனால் எப்பண்டத்தை உற்பத்தி செய்வதற்கும், இன்னுங்கூட சுற்றுச்சூழலுக்கு ஏற்பான வழிகள் உண்டா?

குழுமங்கள் ஏன் மாற வேண்டும்? மாறுவதற்கான வினையூக்கிகள் என்னவாக இருக்கும்?

வினையூக்கி 1: இயற்கை வரம்புள்ளதே தவிர வரம்பற்றதன்று

அண்டக் கோணத்திலிருந்து நோக்கின் நாம் வாழும் அண்டம் வரம்பற்றதாகத் தோன்றலாம். ஆனால் எல்லா நடைமுறை நோக்கங்களுக்கும் நாம் பெரிதும் வரம்புள்ள வளங்கள் கொண்ட ஒற்றைக் கோளில் வாழ்கிறோம். நாம் தொடர்ந்து புவி ஓட்டிலிருந்து பொருள்களை வெட்டி எடுத்துக் கொண்டும் அவற்றைத் திருப்பித் தராது பயன்படுத்திக் கொண்டும் இருப்போமானால் ஒரு சமயத்தில் இத்தகைய பொருள்கள் ஏதுமற்ற நிலையை அடைவோம் என்பதே இயல்பறிவு. காட்டாக, உரத்தின் முகாமைக் கூறாகிய பாறை பாஸ்பேட்டை நாம் வெட்டியெடுத்துப் புவி எங்கும் பங்கீடு செய்வோமானால் இறுதியில் அப்பொருளே இல்லாத நிலை ஏற்படலாம். தொழில்துறைகள் எங்கும் நடக்கத் தொடங்கியிருப்பது இதுதான்.

எண்ணெய் அல்லது பாஸ்பேட் முதலிய பொருள்களின் இருப்பு குறைந்து கொண்டு வருவதால், அவற்றுக்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், நெடுக்குச் செயல்வழிகளை நம்பியுள்ள குழுமங்கள் அதே பொருளை உற்பத்தி செய்வதற்கு மென்மேலும் அதிகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். உயர் திறத்துடன் இயற்கை வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் குழுமமே மென்மேலும் குறைந்த செலவைச் செய்யும் நிலையில் இருக்கும். எனவே போட்டியிடுவதில் பெரிதும் வல்லமை பெறும்.

இயற்கை வளங்களுடன் அணுக்கத் தொடர்புடைய வேளாண் தொழிலை நாம் எடுத்துக் கொண்டாலுங்கூட, அது அமெரிக்காவில் வேதி வேளாண்மை வாயிலாகப் பெருமளவுக்குத் தொழில் மயமாகியுள்ளது. இது நீண்ட காலக் கண்ணோட்டத்தில் பலனளிக்காது. 1995 தொடங்கி, பூச்சிக்கொல்லிப் பயன்பாடு அமெரிக்காவில் 3300% உயர்ந்துள்ளது. ஆனால் பூச்சிகள் எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொண்டதால் ஆண்டுப் பயிரிழப்பு 20% உயர்ந்துள்ளது. இயற்கை வளத்தை வெறும் 3 விழுக்காடே பயன்படுத்திக் கொள்ளும் திறனுடன் இயங்கும் எந்த வரம்புள்ள அமைப்பும் விரைவில் தானாகவே வற்றிப் போகும். தொழில்துறை நாகரிகம் என்பது இதுவே. தொழில்துறை ஒரு சராசரி நடுத்தரவர்க்க அமெரிக்கக் குடும்பத்தின் ஒராண்டுத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு இயங்கியும், வெட்டியெடுத்தும், பிரித்தெடுத்தும், வாரியெடுத்தும், இறைத்தெடுத்தும் நாற்பது லட்சம் பவுண்டு கழிவை வெளியேற்றுகிறது. வளங்களின் வரம்புத் தன்மை விரட்டிப் பிடிக்கப் பிடிக்க, அதனால் ஐந்தொகையில் வெட்டு விழத் தொடங்கும். எனவே குழுமங்கள் இயற்கை வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும்.

வினையூக்கி 2: பசுமைத் தொழில்நுட்பவியல்

தொழில்நுட்பவியலானது வழிவழியாகவே சுற்றுச்சூழல் என வந்து விட்டால் எதிர்மறையாகவே செயல்பட்டுள்ளது. அதாவது ஒரு சமுதாயம் எந்தளவுக்குத் தொழில் நுட்பவியலில் முன்னேறியுள்ளதோ அந்தளவுக்குச் சுற்றுச்சூழல் மீதான எதிர்மறைத் தாக்கம் அதிகமாகும். இதற்கொரு சான்று அமெரிக்கா. அது மாந்தத் திணைமவியல் சுவட்டுக்கு 25% காரணமாகிறது.

ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாகப் பெருக்கெடுத்துள்ள பசுமைத் தொழில்நுட்பவியல் வெள்ளம் நமது திணைமவியல் சுவட்டுச் செறிவைக் குறைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் கண்கூடான எடுத்துக் காட்டு சூரிய அல்லது காற்று ஆற்றல் ஆகும். இது (வெகு நீண்ட காலத்துக்கேனும் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய) சூரியன் அல்லது காற்று போன்ற புதுப்பித்துக் கொள்ளத்தக்க ஆற்றல் மூலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.

துறைதோறும் துறைதோறும் பசுமை மாற்றுவழிகள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. வேதி வேளாண்மைக்கு மாற்றாக இயற்கை வேளாண்மை வந்து கொண்டிருக்கிறது. சிமிட்டிக்கு மாற்றாக இயற்கைக் கட்டுமானப் பொருள்கள் வந்து கொண்டிருக்கின்றன. நெகிழ்மப் பைகளுக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யத்தக்க தாள் பைகள் வந்து கொண்டிருக்கின்றன. மழை நீர் அறுவடை, இயற்கழிவுக் கலப்புரம், தாள், இரும்புக் கழிவுகளின் மறுசுழற்சி எனப் பலவும் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு சுற்றுச்சூழல் சிக்கலுக்கும் ஒரு தீர்வு உள்ளது. இப்போதுள்ள அறைகூவலே மாற்றம் செய்வதற்கு நமக்கு வல்லமை உள்ளதா என்பதைக் காட்டிலும் விருப்பம் உள்ளதா என்பதுதான்.

வினையூக்கி 3: அறியாமையிலிருந்து விழிப்புணர்வு நோக்கி

முதலாளித்துவச் சமுதாயத்தின் தொடக்கக் கட்டங்களில், குழுமங்களுடன் மக்களுக்கிருந்த உறவு மிக மிக ஒற்றைப் பார்வை கொண்டதாக இருந்தது. வேலைவாய்ப்பு அளிப்பதும் பண்டங்களும் பணிகளும் வழங்குவதுமே குழுமங்களின் பொறுப்பென அவர்கள் பார்த்தனர். இத்தகையவற்றுக்கு அவர்கள் நன்றி பாராட்டினர். மேலும், குழுமங்களின் மோசமான நடைமுறைகளை மக்கள் பெரிதும் அறியாதிருந்தனர். இவற்றை ஊடகங்கள் கண்டு கொள்ளாது தங்கள் விளம்பர வருவாய்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுப் பாராமுகமாய் இருந்து வந்ததே காரணம்.

ஆனால் காலப் போக்கில் குழுமங்களின் கொல்லைப் புறத்தில் நடப்பது என்ன என்பது குறித்து விழிப்புணர்வு வளர்கிறது. மக்கள் கூடுதல் சமூகப் பொறுப்புள்ள குழுமங்களை மதிக்கத் தொடங்குகின்றனர். குழுமங்கள் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். அண்மைக் காலத்தில் பெரும்பாலான குழுமங்கள் சமூகப் பொறுப்புள்ளவை போன்று காட்டிக் கொள்ளவேனும் தொடங்கியுள்ளன. குறிப்பிட்ட நேர்வுகளில், அடித் தட்டுக் குழுக்களின் செயற்பாட்டால் குழுமங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மான்சாண்டோ குழுமம் பாசுமதி அரிசிக்குக் காப்புரிமை பெற்ற போது உழவர்க் குழுக்கள் போராடி வென்றன.

வினையூக்கி 4: திட்டமிட்ட மாற்றம்

மேற்கண்ட காரணிகள் குழுமத் துறையின் படிமலர்ச்சியைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்க, நாம் உயிர் பிழைக்க வேண்டுமானால் முதலாளித்துவப் பொருளியலின் சில அடிப்படை அனுமானங்களை மறுவரையறை செய்தாக வேண்டும். இன்று, ஒரு குழுமத்தின் வெற்றி பெரிதும் நிதி அளவைகளைக் கொண்டே கணிக்கப்படுகிறது. ஆனால் இது சரியான பார்வைக் கோணமாகாது என்ற சிந்தனை வளர்ந்து வருகிறது. மாந்தர், புவிக் கோள், ஆதாயங்கள் என்னும் பொதுப்படையான மூன்று அளவைகளைக் கொண்டு குழுமங்களைக் கணிக்கும் மூவடி வரம்பு எனப்படும் புது வாய்பாடு பிறந்துள்ளது.

இஃதன்னியில், அரசாங்கம் எதற்கு வரி விதிப்பது? எதற்கு மானியம் வழங்குவது? என்பதை மாற்றியமைத்தும், கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வகுத்தும், கண்காணிப்புப் பணியாற்றியும் ஒட்டுமொத்த அமைப்பில் ஒர் உயிர்ப் பங்கு வகிக்கத் தொடங்கி வருகிறது. இந்த நெருக்கடியின் இதயத்தில் சமூக மானுடவியலர் ஒவ்வொருவரின் ஆர்வத்தையும் கிளற வேண்டிய ஒரு வினா உள்ளது. மாற்றம் எப்படி நடக்கிறது? அது கொடிகளைப் போல் நம் மீது படர்ந்து ஒரு காலைப் போதில் திடீரென மலர்களுடன் வெளிப்பட்டு நமக்கு வியப்பூட்டுமா? அல்லது குண்டுகள் போல் நிலத்தில் இறங்கி மறைவிடம் தேடி நம்மை ஒடச் செய்யுமா?

இந்த மாற்றத்துக்கு வடிவமளிக்கக் கூடிய ஒர் உளநோக்கே இக்கட்டுரையில் வரையப்பட்டுள்ளது. ஆனால் பலவற்றை ஊகித்தறிவது கடினம். ஒரு கார்ல் மார்க்ஸ் அல்லது காந்தி வந்து இந்த முழு இயக்கத்துக்கும் வினையூக்கியாக இருப்பாரா? நமக்குத் தெரியவே தெரியாது. ஆனால் மாற்றத்துக்கான இந்த வினையூக்கிகளை ஆழத் தேடுவதும், இந்தச் சிதறல் துண்டுகளிலிருந்து இணக்கமான ஒரு முழுமையைப் படிப்படியாக வருவிக்கப் பார்ப்பதுமே இனி நம் முயற்சியாக இருக்கும்.

சான்றுகள்: நெடுக்குச் சிந்தனை, ஜேம்ஸ் வொமக், டேனியல் ஜோன்ஸ்; இயற்கை முதலாளித்துவம், பால் ஆக்கன், அமோரி, ஹன்டர் லோவின்ஸ்; உயிர்ப்போலி, ஜென்னி பென்யஸ்.

தமிழில்: நலங்கிள்ளி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com