Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஏப்ரல் 2009
நாம் இந்தியத் தேர்தல் முறைக்குள் நுழைகிறோமா?
தியாகு

சமூகநீதித் தமிழ்த்தேசம் மாசி இதழில் வெளிவந்த "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்...' என்ற ஆசிரியவுரை குறித்துத் தோழர் நலங்கிள்ளி ஒரு விரிவான திறனாய்வு மடல் விடுத்துள்ளார். தமிழகத்தில் தமிழீழ ஆதரவுப் பேரெழுச்சி காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வாக வெளிப்பட்டு வருவது - வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்தி காங்கிரசைத் தமிழகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும் என்ற தமிழ்இன உணர்வாளர்களின் எண்ணம் - காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்ற மக்கள் கருத்து - காங்கிரசைத் தனிமைப்படுத்தி ஒழித்துக் கட்டுவதற்குத் தேர்தல் களத்தை நாமும் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டம் - இந்த நம் பார்வை குறித்துத் தோழர் நலங்கிள்ளி பத்து வினாக்கள் தொடுத்துள்ளார். வினாக்களையும் அவற்றுக்கான நம் விடைகளையும் கீழே தருகிறோம் :

ஒரு பக்கம் தேர்தல் புறக்கணிப்பு நமது அடிப்படைக் கொள்கை எனக் கூறி விட்டு, மறுபக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்வோம் என்பது அப்பட்டமான தன் முரண்பாடு இல்லையா? தேர்தல் புறக்கணிப்பு நம் அடிப்படைக் கொள்கை என்பதன் பொருள் என்ன என்பதை முன்பே விளக்கினோம். இப்போது மீண்டும் சொல்கிறோம்: இந்திய வல்லாதிக்கத்தை முறியடித்துத் தமிழ்த்தேசிய சமூக நீதிக் குடியரசை நிறுவுவதற்கான நம் மூலவுத்திக் குறிக்கோளை அடைவதற்கு இந்திய அரசமைப்புக்கு உட்பட்டும் இப்போதைய தேர்தல் முறையின்படியும் நடைபெறும் தேர்தல்கள் பயன்பட மாட்டா.

தேர்தல் என்கிற ஓர் அரசியல் போராட்ட வடிவத்தையே அறுதியாக மறுதலிப்பதன்று நம் நோக்கம். தேர்தல் போராட்டமானது கோட்பாட்டளவிலாவது தமிழ்த் தேசியச் சமூக நீதி ஆற்றல்களின் அரசதிகாரத்திற்கு வழிசெய்வதாக அல்லது வழிவிடுவதாக இருக்குமானால் அந்த வடிவத்தைத் தந்திரவுத்தி வகையில் கைக்கொள்வது பற்றி நாம் கருதிப் பார்க்கலாம். அப்படி இல்லாத நிலையில் தேர்தல் பங்கேற்பு என்பது அரசியல் அதிகாரம் பற்றிய மாயைகளை வளர்க்கவே உதவும் என்பது இந்தியாவிலும் தமிழகத்திலும் பட்டறிவு தரும் பாடம்.

தேர்தல் போராட்டம் தொடர்பான லெனினியச் சிந்தனைகள், உலகெங்கும் புரட்சிகர தேசிய விடுதலை இயக்கங்கள் அடைந்துள்ள பட்டறிவு, நமக்கென்றுள்ள தனித்தன்மையான நிலைமைகள், அரசியல் வளர்ச்சிப் பாதையில் உடனுக்குடன் எழக்கூடிய தந்திரவுத்தித் தேவைகள்... இவை அனைத்தையும் கணக்கில் கொண்டுதான் தேர்தல் தொடர்பான நமது அணுகுமுறை வகுக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவதில்லை, போட்டி யிடும் எவரையும் ஆதரிப்பதில்லை, நாம் வாக்களிப்பதோ வாக்குக் கேட்பதோ இல்லை என்ற நிலைப்பாடுகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பொருந்தும் என்பதால்தான் நமது புறக்கணிப்பு நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்கிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்வோம் என்று யார் சொன்னது? காங்கிரசை எதிர்ப்போம், பா.ச.க.வை எதிர்ப்போம், மூன்றாவது அணி, நான்காவது அணி என்று முளைத்து வருவது எதுவானாலும் அதையும் எதிர்ப்போம். தமிழகத்தைப் பொறுத்த வரை தி.மு.கழகத்தை எதிர்ப்போம். அஇஅதிமுகவை எதிர்ப்போம், மதிமுக, பாமக, தேமுதிக, விசிக, அஇசமக எல்லாவற்றையும் எதிர்ப்போம். வலதுசாரிகளானாலும் இடதுசாரிகளானாலும் எல்லா இந்தியத் தேசியக் கட்சிகளையும் தீவிரமாக எதிர்ப்போம். திராவிடம் என்றோ, தலித்தியம் என்றோ பெயர் சொல்லிக்கொண்டு இந்தியப் பார்ப்பனிய ஆற்றல்களுக்கு வால் பிடிக்கும் அத்தனைப் பேரையும் எதிர்ப்போம். தமிழ்த் தேசியச் சமூகநீதி நிலைப்பாட்டிலிருந்து இந்தக் கட்சிகள், அனைத்தையும் கூர்மையாகவும் நேர்மையாகவும் குற்றாய்வு செய்வோம். மக்களுக்குத் தேவையான மாற்று வழியைத் தேர்தல் அரசியலில் தேடுவது கானல் நீர் வேட்டையே தவிர வேறல்ல என்பதை விளக்கிப் பரப்புரை செய்வோம். வாக்களிக்க மறுப்போம், வாழ்வுரிமைக்காகப் போராடுவோம் என்பதே இம் முறையும் நம் அடிப்படை முழக்கமாக இருக்கும்.

அதேபோது இந்த நாடாளுமன்றத் தேர்தல் எத்தகைய வரலாற்றுப் பகைப்புலத்தில் நடைபெறுகிறது என்பதை நாம் கணக்கில் கொண்டாக வேண்டும். தமிழீழ மக்களின் மீது சிங்களப் பேரினவாத அரசு ஓர் இனக்கொலைப் போரை ஏவியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் வரலாற்றில் என்றுமில்லாத நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்திய அரசின் அணுகுமுறையை மாற்றுவதற்கு நாமும் உலகத் தமிழர்களும் நடத்தியுள்ள போராட்டங் களால் பெரும் பயனேதும் விளையவில்லை.

சோனியா காந்தி தலைமையிலான காங்கிரசுக்குப் பாடம் புகட்ட வரும் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் பொதுவாகத் தமிழ் மக்களிடமும் குறிப்பாகத் தமிழ் உணர்வாளர்களிடமும் பரவியிருப்பது இயல்பானது. இந்த எண்ணத்திலிருந்து சிலர் அவசர அவசரமாக வாய்ப்பிய (சந்தர்ப்பவாத) முடிவுகளுக்குச் செல்வதை ஏற்க முடியாதுதான். உதாரணமாக ஈழ ஆதரவுக் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கருதக் கூடியவர்கள் இருக்கலாம். இந்த முடிவு தவறானது என்பதைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி உணர வைக்கும் கடமை நமக்குள்ளது. அதே நேரத்தில் காங்கிரசுக்குப் பாடம் புகட்ட வரும் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்டு அதற்குச் செயல் வடிவம் கொடுப்பதும் நம் வேலைதான்.

இந்த அடிப்படையில்தான் தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாட்டில் நின்று கொண்டே காங்கிரசைத் தனிமைப்படுத்துவதற்கான உத்தியை நாம் வகுக்க வேண்டியுள்ளது. ‘எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்’ என்பதன் பொருள் ‘அனைவரும் வாக்களியுங்கள், காங்கிரசு எதிர்ப்பு வேட்பாளருக்கு வாக்களி யுங்கள்’ என்பதல்ல. ‘எவருக்கும் வாக்களிக்காதீர் கள், யாருக்காவது வாக்களிக்கத்தான் வேண்டு மென்றால் காங்கிரசுக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள்’ என்பதே நமது வேண்டுகோள்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்வோம் என்பது நம் நிலைப்பாடில்லை. எனவே நம் நிலைப்பாட்டில் ‘தன் முரண்பாடு’ ஏதுமில்லை.

2) இந்த தேர்தல் முறைக்குள் சென்று ஒரு கட்சியை மட்டுமே எதிர்த்துப் பரப்புரை செய்கிறோம் என்றாலுங்கூட இந்தியத் தேர்தல் அமைப்பை நாம் ஏற்றுக் கொள்வதாகத்தானே பொருள்?

ஒரு கட்சியை மட்டுமே எதிர்த்துப் பரப்புரை செய்யப் போகிறோம் என்பது சரியல்ல. ஈழச் சிக்கல் உட்பட ஒவ்வொரு சிக்கலிலும் நம் நிலைப் பாட்டை எடுத்துரைப்போம். இந்த அடிப்படை யில் மாறுபட்ட நிலைப்பாடு கொண்ட ஒவ்வொரு கட்சியையும் குற்றாய்வு செய்வோம். தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுக்கு எதிராகவும் பரப்புரை செய்வோம். அப்போதும் இப்போதும் இதுவே நம் நிலைப்பாடு. புதிதாக வந்திருப்பது என்னவென்றால், வாக்களிக்கும் மக்களுக்கு நாம் எந்த வேண்டுகோளும் வைப்ப தில்லை என்ற நிலையில் ஒரு மாற்றம் : வாக்களிக்கத்தான் வேண்டுமென்றால் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்!

இந்தியத் தேர்தல் அமைப்பை ஏற்றுக் கொள்கிறோமா? என்ற வினாவிற்கு விடை காண்பதற்கு முன், இந்திய அரசமைப்பை ஏற்றுக் கொள்கிறோமா? என்று கேட்டுப் பார்ப்போம். தேசிய இனங்களின் தன்தீர்வுரிமை என்பது ஓர் அடிப்படைச் சனநாயக உரிமை. இந்த உரிமையை ஏற்றுக் கொள்ளாத அரசமைப்பு சனநாயக அரசமைப்பு ஆகாது என்பதை முதற்காரணமாய் கொண்டு இந்திய அரசமைப்பை ஏற்க மறுக் கிறோம். மற்றக் காரணங்களும் உண்டு. அதே போது இந்திய அரசமைப்பின்படியான கருத் துரிமை, பேச்சுரிமை, ஏட்டுரிமை, அமைப்புரிமை ஆகியவற்றைப் பயன்படுத்தி இயக்கம் நடத்து கிறோம். இந்த உரிமைகள் மீது அரசமைப்புக்குப் புறம்பான தாக்குதல் நடக்கையில் அதை எதிர்த்து அரசமைப்பின் பெயராலேயே போராடத் தயங்க மாட்டோம். அரசமைப்பை ஏற்கிறோமா என்ற வினாவிற்கு இல்லை, ஆம் என்று இருவிதமாக விடையளிக்கலாம். மூலவுத்தி வகையில் இல்லை, தந்திரவுத்தி வகையில் ஆம். அமெரிக்க வல்லாதிக்கம் எப்படிப்பட்டது? தோழர் மாவோ சொன்னார்: மூலவுத்தி வகையில் அது அட்டைப் புலி, தந்திரவுத்தி வகையில் அது உண்மைப் புலி.

மூலவுத்தி (Strategy) என்பது ஒரு புரட்சிக் கட்டம் முழுமைக்குமான நம் அடிப்படைத் திட்டம். தந்திரவுத்தி (Tactics) என்பது அடிப்படைத் திட்டத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க அவ்வப்போது நாம் மேற்கொள்ளும் வழிமுறை களைக் குறிக்கும். இந்திய அரசமைப்பையும் அதன் ஒரு பகுதியான தேர்தல் அமைப்பையும் நாம் மூலவுத்தி வகையில் ஏற்க மறுக்கிறோம். நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்க மறுத்தாலும், அவை நடைமுறையில் இருக்கவே செய்கின்றன என்பதைக் கணக்கில் கொண்டு நம் தந்திரவுத்திகளை வகுத்துக் கொள் கிறோம். வாக்களிப்பது மட்டுமல்ல, வாக்களிக்க மறுப்பதும்கூட இந்த தேர்தல் முறையை நம் அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதே ஆகும்.

யாருக்கும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்காமலே காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று அறைகூவல் விடுக்கலாம் என்கிறீர்களே! காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் எனப் பரப்புரை செய்வதே அதனை எதிர்த்துப் போட்டியிடும் ஓர் எதிர்கட்சியை - அதிமுக, மதிமுக, சிபிஜ (எம்), பாசக (வாய்ப்பிருந்தால்), பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என ஏதேனும் ஒரு கட்சியை ஆதரிப்பதாகத்தானே பொருள்? போரில் மக்கள் சாகத்தான் செய்வார்கள் எனச் சொல்லும் அதிமுக, அந்த அதிமுகவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் மதிமுக, தமிழின அழிப்பில் காங்கிரசைக் காட்டிலும் வெறி பிடித்து அலையும் சிபிஐ (எம்), காங்கிரசின் அதே தமிழீழக் கொள்கையைக் கொண்ட பாசக என எந்தக் கட்சி காங்கிரசுக்கு மேலானது?

யாருக்கும் வாக்களிக்காதீர்கள், வாக்களிக்கத் தான் வேண்டுமென்றால் காங்கிரசுக்கு வாக்களிக் காதீர்கள் என்னும் பரப்புரை காங்கிரசை எதிர்த்துப் போட்டியிடும் கட்சிக்குப் புறநிலையில் உதவுவது ஆகிவிடும் என்பது மெய்தான். மறுபுறம் இந்தக் கட்சிகள் அனைத்தையும் ஒரே நிலையில் வைத்து ஒருசேர எதிர்ப்பது புறநிலையில் காங்கிரசுக்கு உதவுவது ஆகிவிடுமே! அதிமுக, மதிமுக, சிபிஎம், பாசக ஆகிய கட்சிகளைப் பற்றிக் கேள்வியில் தரப்பட்டுள்ள குற்றாய்வு சரியானதே. ஆனால் தந்திரவுத்தி வகையில் காங்கிரசையும் இந்தக் கட்சிகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்கு இது தடையாகி விடக் கூடாது. விடாக் கண்டர்களைத் தனிமைப்படுத்துவது (isolating the diehards) என்ற மாவோவின் வழிகாட்டுதல் இங்கு நமக்குப் பயன்படும். எல்லாப் பகைவர்களையும் ஒரே நேரத்தில் ஒருசேர எதிர்ப்பது நல்ல போர்த் திட்டம் ஆகாது. அதேபோல் அரை நண்பர்களும் அரைப் பகைவர்களுமாய் இருப்பவர்களை முழுப் பகைவர்களாக்கிக் கொள்வதும் சரியான அணுகு முறையன்று. இந்தக் கருத்தாய்வில் நம் வலிமை யையும் நட்பின் வலிமையையும் கவனமாகக் கணக்கில் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணை வலியும் தூக்கிச் செயல்” - திருக்குறள் 471

4) மக்கள் காங்கிரசைத்தான் மிகுதியாக வெறுப்பதாக எந்தச் சான்றின் அடிப்படையில் சொல்கிறீர்கள்? சிங்களத்துக்கு ஆயுதம் வழங்கும் மைய அமைச்சரவையில் கூட்டுப் பொறுப்பு வகித்து அதன் தமிழின அழிப்பில் காங்கிரசின் பங்காளிகளாகச் செயல்படுகிறதிமுக, பாமக மீதுந்தான் மக்கள் கோபமாக உள்ளார்கள். அவர்கள் போடும் ராஜினாமா நாடகங்கள், கொண்டுவரும் வெற்றுச் சட்டமன்றத் தீர்மானங்கள், அன்றாடம் தலைமையமைச்சருக்கு எழுதும் "வலியுறுத்தல் கடிதங்கள்' இருப்பது ஓருயிர் எனப் பேசும் திரை வசனங்கள் போன்றவற்றால் நொந்து வெறுப்பின் உச்சத்தில் உள்ளார்கள். வெறுப்பில் முன்னே பின்னே வேறுபாடு இருக்கலாந்தான். ஆனால் தேர்தல் புறக்கணிப்பு என்ற அடிப்படை நிலைப்பாட்டையே மாற்றிக் கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன வேறுபாடு கண்டு விட்டீர்கள்?

மக்கள் காங்கிரசையும் வெறுக்கிறார்கள், நடைமுறையில் அதற்குத் துணைபோகும் மற்றக் கட்சிகளையும் வெறுக்கிறார்கள் என்பது மெய்தான். ஒரே அளவில் வெறுக்கிறார்களா, மாறுபட்ட அளவுகளில் வெறுக்கிறார்களா என்பது ஒரு பொருட்டன்று. காங்கிரசை வெறுப்பதாகச் சொல்வது ஒரு கணிப்பு. மற்றக் கட்சிகளை வெறுப்பதாகச் சொல்வதும் ஒரு கணிப்பே. இவை புறஞ்சார் கணிப்புகளாக இருக்க வேண்டுமே என்ற கவலை நமக்கு உண்டு. யார் எவ்வளவு மோசம் என்பதற்கும் யார் எவ்வளவு வெறுக்கப் படுகிறார்கள் என்பதற்கும் நேர்த் தொடர்பு எதுவுமில்லை. ஒரு நிலையில் இப்படியும் சொல்ல லாம்: மோசமானவர்களெல்லாம் வெறுக்கப் படுவதுமில்லை. வெறுக்கப்பட்டவர்களெல்லாம் மோசமானவர்களுமில்லை. வெறும் வெறுப்பின் அடிப்படையிலேயே அரசியல் முடிவுகளை நாம் எடுப்பதில்லை. அதுவும் ஒரு காரணியாக இருக்க லாம், அவ்வளவுதான்.

இந்திய வல்லாத்திக்கத்தின் தலைமை ஆற்றல், ஈழ மக்கள் மீதான இனக் கொலைப் போருக்குத் துணை போகிற வகையில் முதல் குற்றவாளி என்பதையெல்லாம் கணக்கில் கொண்டுதான், காங்கிரஸ் ஒழிப்பு நிலைப்பாட்டை மேற்கொள் கிறோம். ஒரு வேளை காங்கிரசின் குற்றங்கள் மக்களுக்குத் தெரியாமல் போய், அது வெறுக்கப் படாத நிலை இருந்தாலும்கூட நாம் இதே நிலைப் பாட்டைத்தான் மேற்கொள்வோம். ஆனால் இதற்காக நாம் தேர்தல் புறக்கணிப்பு நிலைப் பாட்டைக் கைவிட வேண்டிய தேவையில்லை.

5) காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தோற்றாலும் மற்றஇடங்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கட்சிகளுங்கூட தோற்பதாகக் கொண்டால், இந்த ஒட்டுமொத்த தோல்வி வழக்கம்போல் ஆட்சிக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு எனத்தானே கொள்ளப்படும்? காங்கிரஸ் தான் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் வைப்புத் தொகை இழக்கும் அளவுக்குப் படுதோல்வி அடைகிறபோதில் வேண்டுமானால் உங்கள் விளக்கம் பொருத்தமாக இருக்கக் கூடும். இப்படியேதும் நடக்குமென உண்மையிலேயே நம்புகிறீர்களா?

தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் அல்லது பெரும் பாலான தொகுதிகளில் தோற்கடிக்கப்பட்டால், அதற்கு இப்போதைய சூழலில் ஈழச் சிக்கல் முதற்காரணமாக அமையும் என நம்புகிறோம். முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு ஆகிய சிக்கல்களும் இதேபோல் காரணமாக அமைந்தால் அப்போதும் காங்கிரசின் இனப்பகைமைக்குப் பாடம் கற்பித்ததாகவே கருதப்படும். வழக்கம் போல் ஆட்சிக்கு எதிரான மக்கள் வாக்கு என்ற கருத்துக்கும் இடமிருப்பினும், அது முதன்மை யானதாக இருக்காது என நம்புகிறோம். வரப் போகும் தேர்தலில் ஈழச் சிக்கல் எந்த அளவுக்கு இடம்பிடிக்கப் போகிறது என்பது பற்றிய கருத்துக் கணிப்புகள் நம் எண்ணத்திற்கே வலுச் சேர்க்கின்றன. நம்மைப் பொறுத்த வரை வழக்க மான தேர்தல் புறக்கணிப்புப் பரப்புரையில் பேசியது அனைத்தையும் இப்போதும் பேசுவோம். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என்றமுழக்கத்தைப் பொறுத்த வரை, ஈழச் சிக்கலையும் பிற தமிழ்த் தேசியக் கோரிக்கைகளையும் முன்னிறுத்துவோம்.

ஒட்டுமொத்த மக்கள் மனநிலை பற்றிய நம் கணிப்புகளையும், காங்கிரசைத் தனிமைப்படுத்தித் தாக்கும் நம் முயற்சியையும் மீறி காங்கிரஸ் வெற்றி பெற்று விடுவதாக அல்லது படுதோல்வி அடையாமல் தவிர்த்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது நம் நிலைப்பாடு தவறு என்று ஆகி விடுமா? இல்லை. காங்கிரசைத் தனிமைப்படுத்தும் முயற்சியைத் தேர்தலுக்கு அப்பாலும் இன்னும் வலுவாகத் தொடர வேண்டும் என்பதையே அது காட்டும். எப்போதும் உடனடி வெற்றி மகிழ்ச்சிக்குயுரியதே. ஆனால் ஓர் அரசியல் கொள்கை சரியா தவறா என்பதை உடனடி வெற்றி தோல்விகளைக் கொண்டு தீர்வு செய்ய முடியாது.

6) உள்ளபடியே காங்கிரஸ் மாபெரும் தோல்வி அடையப் போவதாக நீங்கள் ஊகித்தறிவதாகக் கொண்டாலும், அதற்காக நாம் ஏன் இந்தத் தேர்தல் முறைக்குள் நுழைய வேண்டும்? இப்படி நடப்பது தமிழ்த்தேசக் கருத்தியல் வளர்ச்சிக்கு நல்லது எனக் கருத்துக் கூறுங்கள்; இதை மனதில் கொண்டு உங்கள் தமிழீழ ஆதரவுப் பரப்புரைகளில் காங்கிரஸ் எதிர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்றக் கட்சிகளை விமர்சிப்பதைச் சற்றே அடக்கி வாசியுங்கள். இதை விடுத்து நாடாளுமன்றத் தேர்தலிலேயே இறங்க வேண்டும் என்னும் தேவை எங்கிருந்து வந்தது?

தமிழகத்தில் காங்கிரஸ் பெரும் தோல்வி அடையும் என்பது நம் ஊகம்தான். ஆனால் இந்த ஊகத்தின் அடிப்படையில் நாம் நமது உத்தியை வகுக்கவில்லை. ஏதோ காரணத்தால் காங்கிரஸ் பெருவெற்றி பெறும் என்ற சூழல் நிலவினாலும் கூட, இதுவே நம் ஊகமாகவும் இருந்தாலுங்கூட, அப்போதும் இதே உத்தியைத்தான் கடைபிடிப்போம். தேர்தல் முறைக்குள் நுழைவது, நாடாளுமன்றத் தேர்தலில் இறங்குவது... இதற்கெல்லாம் என்ன பொருள்? நாம் எந்த வேட்பாளரையும் நிறுத்தப் போவதில்லை. நேர்வகையில் எந்த வேட்பாளரையும் ஆதரித்து வாக்குத் திரட்டப் போவதில்லை. எவருக்கும் வாக்களிக்கப் போவதில்லை. வாக்களிக்கத்தான் வேண்டும் என்றநிலையில் இருப்பவர்களைப் பார்த்து, காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கப் போகிறோம். இதற்குப் பெயர் தேர்தல் முறைக்குள் நழைதல், தேர்தலில் இறங்குவது என்பதாக இருக்குமானால் இருக்கட்டும். தேர்தல் புறக்கணிப்பை மட்டுமே வழக்கம் போல் வலியுறுத்தினால் அதையும் இவ்வாறே பெயரிட்டு அழைக்க முடியாதா? நுழைவதற்கும் நுழையாமல் இருப்பதற்கும் அல்லது இறங்குவதற்கும் இறங்காமல் இருப்பதற்கும் இடைப்பட்ட ஒரு செய்நுட்ப வேறுபாடாக இதைச் சுருக்கி விடாமல், குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் விரிந்து வரும் அரசியல் - கருத்தியல் போராட்டத்தில் ஆழ்ந்தகன்ற முறையில் தாக்கங் கொள்வதற்கு ஏற்ற உத்தி எது என்று கருதிப் பார்க்க வேண்டும்.

7) மக்கள் ஏதேனுமொரு தமிழ்த் தேசியச் சிக்கலின் அடிப்படையில் ஏதேனுமொரு கட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் போதெல்லாம் அந்த நிலையை நாமும் ஆதரித்துத் தேர்தல் பரப்புரையில் இறங்க வேண்டும் என்றால் இதற்கு முடிவுதான் ஏது? ஒவ்வொரு கட்சிக்கும் எதிராக மக்களிடம் பெரும் எதிர்ப்புணர்வு கிளம்பும் போதெல்லாம் நாமும் தேர்தலில் அக்கட்சிக்கு எதிராகப் பரப்புரையாற்றி ஒவ்வொரு கட்சியாகத் தேர்தல் அரங்கிலிருந்து வெளியேற்றித் தமிழ்த் தேசியப் புரட்சியை அரங்கேற்றுவது நமது கட்சித் திட்டங்களில் ஒன்றாகிப் போகுமோ? இந்நிலை மற்ற வாக்குக் கட்சிகளிலிருந்தும், தேர்தல் ஆதரவுக் கட்சிகளிலிருந்தும் நமக்குள்ள தனித்தன்மையைக் கெடுத்து, நம்மை இறுதியில் தேர்தல் சாக்கடையில் தள்ளி விடும் ஆபத்து இருப்பதை நீங்கள் உணரவில்லையா?

தமிழீழ மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வரும் வரலாற்று பின்னணியில் வரவிருக்கும் தேர்தலை வழக்கமான ஒன்றாக நாம் கருதவில்லை. பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவொன்று என்றிருக்குமானால் புதிய உத்தி எதையும் வகுக்க வேண்டியிருக்காது. இப்போதுள்ள நிலையில் ஈழச் சிக்கலை ‘ஏதேனும் ஒரு தமிழ்த்தேசிய சிக்கல்’ என்று குறுக்கிப் பார்ப்பதற்கில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இப்படியொரு சூழல் ஏற்படும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. கடந்த காலத்தில் எந்தத் தேர்தலிலாவது இப்படி ஏற்பட்டதுண்டா என்பது கருத்துக்குரிய வினா. 1967, 77 பொதுத் தேர்தல்களை இவ்வகையில் வழக்கத்துக்கு மாறான தேர்தல்கள் எனக் கருதலாம். 1965 மொழிப் போராக எழுந்த தமிழ்த்தேசியப் பேரெழுச்சியை அடுத்து வந்த பொதுத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துங்கள் என்ற முழக்கம் பொருத்தமானதாய் இருந்திருக்கும். 1977இல் நெருக்கடி நிலையை ஒட்டி சனநாயகமா, சர்வாதிகாரமா என்பதை மைய வினாவாகக் கொண்டு நடைபெற்ற தேர்த லில் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என்ற முழக்கம் பொருத்தமானதாய் இருந்திருக்கும்.

இங்கு ஒரு கேள்வி எழும். இந்த இரு தேர்தல்களிலும் அவற்றின் முக்கியத்துவங் கருதி காங்கிரஸ் எதிர்ப்பு ஆற்றல்களுக்கு (திமுகவிற்கும் ஜனதா கட்சிக்கும்) நாம் வாக்குக் கேட்டிருக்கக் கூடாதா? கூடாது. ஏனென்றால் அப்படிச் செய்வது மக்கள் பார்வை யில் இந்த எதிர்க்கட்சிகளுக்கு நாம் பொறுப்பேற்ப தாகி விடும். இவற்றைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு மக்களைத் திரட்டும் ஆற்றல் நமக்கு இருக்கும் போது மட்டுமே நம்மால் இப்படிப் பொறுப்பேற்பது குறித்துக் கருதிப் பார்க்க இயலும். வரவிருக்கும் தேர்தலிலும் இதே போன்ற நிலைதான். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என்று கேட்கப் போகின்றோமே தவிர எதிர்த்துப் போட்டியிடும் எவர்க்கும் நாம் வாக்கு கேட்கப் போவதில்லை. அப்படி யாருக்கேனும் நாம் வாக்குக் கேட்பதாக இருந்தால் மக்களிடம் அவருக்கு நாம் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். அதற்கான மக்கள் செல்வாக்கு நமக்கில்லை. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்குக் கூட நாம் பொறுப்பேற்க முடியாது என்னும் போது, மற்ற எதிர்க் கட்சிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. நமது வலிமை அல்லது வலிமைக் குறைவையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் நமது உத்தியை வகுத்துள்ளோம்.

ஒவ்வொரு கட்சியாகத் தேர்தல் அரங்கிலிருந்து வெளியேற்றித் தமிழ்த்தேசியப் புரட்சியை அரங்கேற்றுவது நம் கட்சித் திட்டங்களில் ஒன்றாகி போகுமா? போகாது. ஏனென்றால் முன்பே எடுத்துக் காட்டியதைப் போல, கேட்பாட்டளவில் கூட தமிழ்த் தேசிய அரசியல் அதிகாரத்திற்கு வழி விடக் கூடியவையல்ல இப்போதைய அரசமைப்பும் தேர்தல் முறையும். இதில் நாம் தெளிவாக இருப்பதால் தனித்தன்மையை இழந்து தேர்தல் சாக்கடையில் விழுந்துவிடும் ஆபத்திற்கு இடமில்லை. எப்படியோ ஏதேனுமொரு சாக்கடையில் விழுந்து விட்டாலும் எச்சரிக்கை உணர்விருந்தால் எழுந்து வந்து விடலாம். ஓரத்திலிருக்கும் சாக்கடைக்கு அஞ்சி சாலையில் செல்வதையே தவிர்த்துவிட வேண்டாமே!

8) இந்திய அளவில் காங்கிரசுக் கூட்டணி தோற்று பாசக கூட்டணியோ, மூன்றாவது அணியோ வென்று, அவர்களும் காங்கிரசை அடியொற்றி அல்லது விஞ்சும் வகையில் ஈழத்தமிழின அழிப்பைத் தொடர்ந்து மேற்கொள்வார்களானால் (அப்படித்தான் செய்வார்கள்), அது நம் கோரிக்கையை ஏற்ற மக்களை ஏமாற்றுவதாகாதா? இஃதன்னியில், இங்கும் நமது இந்த முயற்சிக்கு முடிவேதும் இல்லை என்பதை உணர்கிறீர்களா? அதாவது இந்த இனஅழிப்புக்கு மிகைப் பொறுப்பான ஒரு கட்சியை எதிர்த்து அடுத்தடுத்த தேர்தல்களில் பரப்புரை செய்ய வேண்டிய தேர்தல் சுழற்சி ஒன்றில் மாட்டிக் கொள்ள மாட்டோமா?

இந்திய அளவில் காங்கிரசுக் கூட்டணியைத் தோற்கடித்து எதிர்க்கட்சிக் கூட்டணிகளில் ஒன்றை ஆட்சியில் அமர்த்துவது அல்ல நம் முயற்சி. ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புள்ள எல்லாக் கூட்டணிகளும் அடிப்படையில் ஒன்றே என்பதை நாம் அறிவோம். இதையே மக்களுக்கும் சொல் வோம். ஒருவேளை காங்கிரசுக் கூட்டணியை வீழ்த்தி மற்றொரு கூட்டணியை வெற்றி பெறச் செய்வது ஒப்பளவில் நன்று என நாம் நினைத் தாலுங்கூட அதற்கான வலிமை நமக்கில்லை. இந்தியாவில் கோட்பாட்டளவில் கூட இதற்கு வாய்ப்பில்லை. வாக்களிக்கும் மக்களிடம் காங் கிரசைத் தனிமைப்படுத்தித் தோற்கடிக்கும்படித் தமிழக அளவில் நாம் வேண்டுகோள் விடுப்பதும் பரப்புரை செய்வதும் ஆட்சி மாற்றத்துக்காக அல்ல. நமது முயற்சியின் நோக்கம் தமிழக அளவில் காங்கிரசுக்குப் பாடம் புகட்டுவதும், இப்படிச் செய்வதன் வாயிலாக பிற கட்சிகளை எச்சரிப்பதுமே. பிறகட்சிகள் என்பது காங்கிரசு ஆதரவுக் கட்சிகள் மட்டுமல்லாது காங்கிரசு எதிர்ப்புக் கட்சிகளையும் சேர்த்தே குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக காங்கிரசுக்கு விழும் அடி திமுக வுக்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும் எச்சரிக்கையாக அமையும்.

நமது உத்தியின் நோக்கம் வரம்புக்குட்பட்ட ஒன்று. அந்த வரம்புக்குள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் நம் நோக்கம் அன்று. ஒருவேளை வேறு பல காரணிகளோடு சேர்ந்து நம் முயற்சியின் பயனாய் ஆட்சி மாற்றம் நிகழுமானால், யாருக்கும், எந்தக் கூட்டணிக்கும் நாம் வாக்கு கேட்கவில்லை என்பதால் புதிய ஆட்சிக்குப் பொறுப்பேற்க வேண்டிய தேவை இல்லை.

எனவே மக்களை ஏமாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆட்சி மாற்றத்தால் ஏதேனும் பயன் விளையுமா? விளையவே விளையாது என்று முன்கூட்டியே அறுதியிடுவது இயக்கவியல் பார்வை ஆகாது. ஓர் அரசின் கொள்கை - உள்நாட்டுக் கொள்கை ஆனாலும், அயற் கொள்கை ஆனாலும் - எவ்வாறு தீர்வு செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசுக் கொள்கைகளை இறுதியாகத் தீர்வு செய்யும் முதன்மைக் காரணி ஆளும் வர்க்க நலனே. இதில் இறுதியாக, முதன்மை என்னும் சொற்களைக் கவனிக்கத் தவறக் கூடாது. முற்றமுழுக்க ஆளும் வர்க்க நலனே அரசுக் கொள்கையைத் தீர்வு செய்கிறது என்ற புரிதல் மற்றக் காரணிகளைக் காணத் தவறி விடுவதாகும். இந்த மற்றக் காரணிகளில் மிக முக்கியமானது மக்களின் விழிப்புணர்வும் எழுச்சியுமாகும்.

இந்திய அரசின் தமிழீழக் கொள்கையை எடுத்துக் கொள்வோம். இந்திய வல்லாதிக்கத்தின் விரிவாக்க நலன் இந்தக் கொள்கையின் முதன்மைக் காரணி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தக் கொள்கையின் உருவாக்கத்தில் தமிழக மக்களின் விழிப்புணர்வையும் எழுச்சியையும் அலட்சியம் செய்துவிட முடியாது. இந்திய அரசின் தமிழீழக் கொள்கை எப்படிப் படிமலர்ச்சி கண்டது என்பதை ஆய்ந்து பார்த்தால் அதில் ஏற்பட்ட மாற்றங் களுக்கும் தமிழக மக்களின் விழிப்புணர்வுக்குமான தொடர்பை உய்த்துணரலாம். தமிழீழ விடுதலைக் கான போராட்டமும் அதற்கு ஆதரவான தமிழகத் தமிழர்களின் போராட்டமும் இந்த மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது. 1991 முதற்கொண்டு தமிழகத்தின் ஈழ ஆதரவு மனநிலை யில் ஏற்பட்ட பெரும் சரிவைப் பயன்படுத்திக் கொண்டுதான் இந்திய அரசு இந்த அளவுக்குச் சிங்கள அரசின் இனக்கொலை முயற்சிக்கு துணை போயிற்று.

இப்போது இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்துவ திலும் தமிழக மக்களின் விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும் பங்கிருப்பதை ஈழத் தமிழர்கள் உணர்ந்துள்ளார்கள். அவர்களது விடுதலை இயக்க மும் உணர்ந்துள்ளது. இந்திய அரசு என்றாலே இப்படித்தான் என்றால், தமிழக மக்களை நோக்கி “விழித்தெழுந்து போராடுங்கள்!” என்று சொல்வதில் என்ன பொருள்? தமிழக மக்களை உணர்வூட்டி அறிவூட்டி அணிதிரட்டிப் போராடச் செய்வதன் மூலம் இந்திய அரசின் கையைக் கட்ட முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.

காங்கிரசுக்குப் பாடம் புகட்டுவது இந்திய அரசின் தமிழீழக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு கூறே ஆகும். எந்தக் கூட்டணி தில்லியில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் காங்கிரசுக்கு விழும் அடியைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கும். காங்கிரசுக் கூட்டணியே தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்வதைக் காட்டிலும் மற்றொரு கூட்டணி அதை மாற்றுவது எளிதாய் இருக்கும். நாம் போராடி இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் அது ஒரு வாய்ப்பாக அமையும். மாற்றம் வராமல் போனாலோ போதிய அளவுக்கு வராமல் போனாலோ, நம் போராட்டத்தைத் தொடரப் போகிறோம் அவ்வளவுதான். அந்தப் போராட்டத்திற்கும் காங்கிரசுக்கு விழும் அடி உதவியாகவே இருக்கும்.

வரப்போகும் தேர்தலின் பகைப்புலம் வாடிக்கை யான ஒன்று அல்ல. ஈழத் தமிழின அழிப்பும், அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள ‘வாழ்வா சாவா?’ நெருக்கடியும் வழக்கமான ஒன்றல்ல. நம் முயற்சியால் மூச்சுவிடும் சிறு அவகாசம் அவர்களுக்குக் கிடைக்குமென்றாலுங்கூட அதை நாம் செய்யத்தான் வேண்டும்.

தேர்தல் வழிபட்ட ஆட்சி மாற்றங்கள் வழக்கமாகப் பொருட்படுத்தத் தக்கவை அல்ல என்றாலும், இந்த விதிக்கு சில விலக்குகள் உண்டு. 1977ஆம் ஆண்டுத் தேர்தலை சான்றாகக் கொள்ளலாம். இத்தேர்தலில் இந்தியா காந்தியின் காங்கிரசு அடைந்த படுதோல்வி சனநாயக உரிமைகளின் மீட்புக்கு வழி செய்தது. 1977க்கும் 80க்கும் இடைப்பட்ட காலத்தில் மிசா போன்றஅடக்குமுறைச் சட்டங்கள் பெரும்பாலும் ஒழிந்தன. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் ஆசை எதுவாயினும் நெருக்கடி நிலைக்காலத்திய சிறைக் கூட்டிலிருந்து வெளிப்பட்டு வீசிய சனநாயக உரிமைக் காற்றைப் பெருமளவில் கட்டுப்படுத்திட முடியவில்லை. 77 தேர்தல் முடிவு இன்று வரையிலும் கூட சனநாயக மறுப்பு ஆட்சி யாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவே இருந்து வருகிறது.

வரப்போகும் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசைப் படுதோல்வி அடையச் செய்தால் அது உடனடியாகவும் எதிர்காலத்திலுங்கூட தமிழின அழிப்பாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவே அமையும். ஆட்சிக்கு வரும் எந்தக் கூட்டணியும் இந்த எச்சரிக்கையை எளிதில் புறந்தள்ள முடியாது. எனவே குறிப்பானதொரு சூழலில் குறிப்பான சில தேவைகளைக் கருதி நாம் கைக்கொள்ளும் புதிய உத்தியைப் பொதுமைப்படுத்தி நாமும் தேர்தல் சூழலில் சிக்கிக் கொள்வோம் என்று அச்சப்படுவதும் அச்சமூட்டுவதும் தேவையற்றவை.

9) இந்தக் கட்சிக்கு அந்தக் கட்சி 2 அவுன்சு பரவாயில்லை எனச் சொல்லி இருப்பனவற்றில் நல்ல தீமையை ஆதரித்துச் செயல்படும் தேர்தல் ஆதரவுக் கட்சிகளை நாம் இதுவரை விமர்சித்து வந்துள்ளோம். ஆனால் இப்போது நீங்களும் அதே காரியத்தைச் செய்யத் துணிந்து விட்டீர்கள். ஒரே வேறுபாடுதான், இருப்பனவற்றில் மோசமான தீமையை எதிர்ப்போம் என்கிறீர்கள், அவ்வளவுதான். நல்ல தீமையை ஆதரிப்பது தவறு, ஆனால் மோசமான தீமையை எதிர்ப்பது சரி என்பது என்ன ஏரணமோ? (இருபதாண்டுக்கு மேலாக ஈழத் தமிழின அழிப்பில் முன்னின்று செயல்பட்டு வரும் காங்கிரசை இருப்பனவற்றில் நல்ல தீமை எனச் சொல்லிப் போன நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரித்தவர்கள் எல்லாம் ஐந்தே ஐந்து ஆண்டு இடைவெளியில் இப்போது அதே காங்கிரசை இருப்பனவற்றில் மோசமான தீமை எனச் சொல்லி எதிர்க்கப் புறப்பட்டிருப்பதைப் பற்றி என்ன சொல்ல?)

மோசமான தீமையை எதிர்ப்பதற்காக நல்ல தீமையை ஆதரிக்கும் வாய்ப்பியத் தேர்தல் அணுகுமுறையை முன்போலவே இப்போதும் மறுதலிக்கிறோம். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. பாசகவை எதிர்த்து காங்கிரசையோ, காங்கிரசை எதிர்த்து பாசகவையோ ஆதரிப்பதை நாம் ஏற்கவில்லை. கருணாநிதியை எதிர்த்து செயலலிதாவையோ, செயலலிதாவை எதிர்த்துக் கருணாநிதியையோ ஆதரிப்பதில் நமக்கு உடன்பாடில்லை. காங்கிரசைத் தனிமைப்படுத்தி எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் பொருள் அடிப்படையில் அதே தன்மை கொண்ட இன்னொரு ஆட்சியை ஆதரிக்க வேண்டு மென்பதோ அல்லது அந்த இன்னொரு கட்சிக்கான எதிர்ப்பைக் கைவிட வேண்டும் என்பதோ அல்ல. ஈழச் சிக்கலை முன்னிறுத்திக் காங்கிரசை தனிமைப் படுத்தி எதிர்க்கும் போதே தமிழின அழிப்பில் முன்னின்ற எவரைப் பற்றியும் மாயை கொள்வ தில்லை என்பதில் கவனமாய் இருக்க வேண்டும், இருப்போம்.

10) காங்கிரசு, பாசக, கம்யூனிஸ்டு என அனைவரும் தமிழகக் கட்சிகளையே பக்கத்தில் வைத்துக் கொண்டு ஈழ அழிப்பில் துடிப்புடன் செயல்படும் உண்மையைத் தமிழர்களிடம் எடுத்துச் சொல்லி அனைத்து அனைத்திந்தியக் கட்சிகளையும், தமிழகக் கட்சிகளையும் அவர்களிடமிருந்து அன்னியப்படுத்தும் அருமையான வாய்ப்பாக வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலைக் கருதிச் செயல்படுவதே அறிவுடைமையாக இருக்குமன்றோ?

இப்படி எல்லாக் கட்சிகளையும் “ஈழ அழிப்பில் துடிப்புடன் செயல்படும்” கட்சிகள் என்று முழுக்கச் சமப்படுத்துவது புறஞ்சார் உண்மைகளிலிருந்து முடிவுகளுக்கு வருவதற்கு மாறாக, ஓர் அகவயக் கருத்தியலுக்கேற்ப உண்மைகளை உருத்திரிப்ப தாகும். இந்தத் தவறான அணுகுமுறை நண்பர் களைப் பகைவர்களோடு சேர்த்து விடுவது மட்டு மல்லாமல், பகைவர்களுக்கிடையிலான முரண்பாடு களை விலக்கி அவர்களை ஒன்று சேர்ப்பதாகவும் அமையும். அருமையான வாய்ப்புதான் - நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள!

இறுதியாக ஒன்று: ஒரு புதிய அணுகு முறையைக் கைக்கொள்ளும் போதெல்லாம் ஐயப் பாடுகள் எழுவதும் வேறுபாடுகள் முளைப்பதும் இயல்பே. தெளிவும் முடிவும் விவாதத்தினால் மட்டுமே வந்து விடுவதில்லை. அதற்கு நடைமுறைப் பட்டறிவும் தேவைப்படுகிறது.

நம் புதிய அணுகுமுறையைச் செயல்படுத்து வோம்; பிறழ்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருந்து செயல்படுத்துவோம். செயல்படுத்தி முடித்த பின் அதன் விளைவுகளைக் கருதிப் பார்ப்போம். நம் அணுகுமுறையில் தவறுகள் இருப்பதாகக் கண்டால் சரி செய்து கொண்டு முன்னேறுவோம். தவறு வந்து விடுமோ என்ற அச்சத்தில் செயல்படாமலே இருப்பதைக் காட்டிலும், செயல் புரிந்து பிழை களைந்து முன்னேறிச் செல்வதே நன்று.

“தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்

தீரா இடும்பைத் தரும்.” - திருக்குறள் 510


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com