Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஏப்ரல் 2009
பொருளியல் கல்வித் தொடர் -24
சரக்குப் பொருளாக்கம் ஆதிக்க நிலை அடைதல் என்றால் என்ன?
தியாகு

சரக்குகளை ஆக்கும் மனிதர்களிடையிலான சமூக உறவு சரக்கு களிடையிலான சமூக உறவாகத் தோற்றமளிப்பதே சரக்குகளின் மாய்மாலம் எனப்படுகிறது. உழைப்பின் ஆக்கப் பொருள்கள் சரக்குகளாக மாறாத காலத்தில் இவ்வாறான மாய்மாலம் தோன்ற வழியில்லை என்பதற்குச் சில சான்றுகளைப் பார்த்தோம். தனியொரு தீவில் தனியொரு மனிதனாய் வாழும் ராபின்சன் குரூசோவின் ஆக்கங்கள் சரக்குகளாவதில்லை. அடிமையுடைமைச் சமூகத்தில் அடிமைக்கும் ஆண்டைக்குமான உறவு சரக்கு ஆக்குநர்களுக்கு இடையிலான உறவன்று. சாதியடிமைச் சமூகத்திலும் அடிமை-ஆண்டை, பண்ணையடிமை-பண்ணையார் உறவுகள் இப்படித்தான்.

அடிமையுடைமைச் சமூகத்துக்கு முற்பட்ட ஆதிப் பொதுமைச் சமூகத்திலும் சரக்குப் பொருளாக்கம் நடைபெறவில்லை என்பதால் சரக்குகளின் மாய்மாலத்துக்கு இடமில்லை. எதிர்காலத்துக்குரியதான புதுமப் பொதுமைச் சமூகத்திலும் ஆக்கக் கருவிகளும் ஆக்கப் பண்டங்களும் தனியுடைமையாக இருக்க மாட்டா என்பதாலும், ஒவ்வொரு தனியாளது உழைப்பும் முழுச் சமூகத்தின் கூட்டு உழைப் பின் ஒரு கூறாகவே அமையும் என்பதாலும் விற்றல் - வாங்கல் இல்லை, எனவே சரக்குப் பொருளாக்கம் இல்லை, சரக்குகளின் மாய்மாலமும் இல்லை. ஆக, சரக்குகளின் மாய்மாலம் எந்தச் சமூகத்துக்குரியது என்பது தெளிவாகிறது. அது சரக்குப் பொருளாக்கச் சமூகத்துக்கே உரியது.

பரிமாற்றத்துக்கென்றே, அதாவது சந்தைக்கென்றே நடைபெறும் பொருளாக்கம்தான் சரக்குப் பொருளாக்கம் என்று முன்பே கண்டோம். இதற்கு மாறாக, பரிமாற்றத்துக்காக அல்லாமல் சொந்தப் பயன்பாட்டுக்காக நடைபெறும் பொருளாக்கமே இயற்கைப் பொருளாக்கம். மனித குலம் தொடக்கமுதல் இயற்கைப் பொருளாக்கச் சமூகமாகவே இருந்து வந்தது. ஆதிப் பொதுமைச் சமூகம் என்பது இயற்கைப் பொருளாக்கத்தின் அடிப்படையில் அமைந்ததே. பொதுமைச் சமூக அமைப்புக் கொண்ட குலங்களிடையே பண்டமாற்று தொடங்கிய போதுதான் சரக்குப் பொருளாக்கம் முளை விட்டது.

தனியுடைமைச் சமூக அமைப்புகளில் சரக்குப் பொரு ளாக்கம் வளர்ந்து வந்த போதி லும் முதலில் இயற்கைப் பொரு ளாக்கமே மேலோங்கி நிற்கிறது. சரக்குப் பொருளாக்கம் வளர வளர இயற்கைப் பொருளாக் கத்தின் பங்கு குறைந்து குறைந்து செல்கிறது. முதலாளியச் சமூகத் தில்தான் சரக்குப் பொருளாக்கம் ஆதிக்க நிலையை அடைகிறது. இயற்கைப் பொருளாக்கம் அடியோடு அழிந்து விடுவ தில்லை. அது சமூகத்தின் மூலை முடுக்குகளில் ஒதுங்கிக் கிடக் கிறது. சமூகத்தின் மொத்தப் பொருளாக்கத்தில் அதன் பங்கு அற்ப சொற்பமாகிப் போகிறது.

பொதுமைச் சமூகம் கூட்டுழைப்பின் அடிப்படையி லானது என்பதால் சரக்குப் பொருளாக்கத்துக்கு இட மில்லை. ஆனால் முதலாளியச் சமூகத்துக்கும் புதுமப் பொதுமைச் சமூகத்துக்கும் இடையில் ஒரு நீண்ட மாறு நிலைக் காலம் (transitional period) உண்டு. இக்காலத்துக்குரிய சமூக அமைப்பையே நிகர்மை (சோச லிசம்) என்கிறோம். நிகர்மைச் சமூகத்தில் சரக்குப் பொருளாக் கத்தின் பங்கு என்ன? வேறு வகையில் சொன்னால், சந்தை யின் பங்கு என்ன? என்பது இன் றளவும் விவாதத்துக்குரிய செய்தி யாகவே இருந்து வருகிறது.

முதலாளியப் பொருளாக்க முறைக்குரிய பல்வேறு மாயை களுக்கும் சரக்குகளின் மாய் மாலமே அடிப்படைக் காரண மாகும். பணம் பற்றிப் பயிலும் போது இதை விரிவாகத் தெரிந்து கொள்வோம். இப்போதைக்கு சரக்கு என் பதைப் பற்றி நாம் கற்றுள்ள செய்திகளைத் தொகுத்துப் புரிந்து கொள்ள அடுத்து முயல் வோம்.

இலக்கணம்:

சரக்குப் பொருளாக்கத்தின் ஆதிக்க நிலை என்பது ஒவ்வொரு பண்டமும் சந்தைக்காகவே ஆக்கப்படும் முதலாளியச் சமூக அமைப்பைக் குறிக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.