Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஏப்ரல் 2009
திருமா இது தகுமா?

மானமிகு திருமாவளவன் அவர்களுக்கு,

இந்த அடைமொழியுடன் உங்களை யாரும் இதுவரை அழைத்தார்களா என்று எமக்குத் தெரிய வில்லை. ஆனால் அப்படி அழைப்பதில் தவறில்லை என்ற நம்பிக்கையுடன் மடலைத் தொடர்கிறோம். கடந்த பத்தாண்டுகளாய் உங்களை இந்தத் தமிழகம் கூர்மையாகக் கவனித்து வந்திருக்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட இனத்துச் சிறுத்தையாய் நீங்கள் வெளியே வந்தபொழுது இந்தத் தமிழகம் உங்களை ஆரத் தழுவி வரவேற்றது.

பெருமையுடன் உங்கள் அடையாளங் களை அரங்கேற்றியதும், அங்கீகரித்ததும் இந்தத் தமிழினம்தான். அதற்குக் காரணம் நீங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் அல்லது அந்த இனத்துக்காய்க் குரல் கொடுப் பவர் என்பது மட்டுமல்ல, அதையெல்லாம் தாண்டி எங்கெல்லாம் மனிதம் துன்புறு கிறதோ அங்கெல்லாம் உங்கள் ஆதரவுக் கரங்கள் நீண்ட காரணத்தினால்தான். சாதி அடையாளங்களைத் தாண்டி உங்களை ஒரு தலைவனாக உயர்த்திப் பிடிக்கத் தமிழர்óகள் ஒரு போதும் தயங்கியதே இல்லை.

தமிழுக்கு முகவரி தரத் தமிழ்ப் பெயர்களை நீங்கள் சூட்டிய பொழுது தமிழ்ப் பகைவர்கள் உங்களை எள்ளி நகையாடினார்கள். ஆனால் தந்தைக்கே பெயர் சூட்டிய தனயன் என்று உங்களை இந்தத் தமிழ் மக்கள் பெருமை யுடன் உச்சி முகர்ந்தார்கள். தமிழ் அடையாளங்களைக் காப்பதற்காக எதிரும் புதிருமாக இருந்த நீங்களும் மரியாதைக்குரிய இராமதாசும் தமிழ்ப் பாதுகாப்புக் குழுவை உருவாக்கி அரசியல் அரங்கில் ஒற்றுமை பேணிய போது உங்களை வாராது வந்த மாமணியாய் அரவணைத்துக் கொண்டோம்.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் ஆதிக்கச் சக்திகளை நீங்கள் அஞ்சாமல் எதிர்த்த போது உங்கள் கரங்களுக்கு தமிழர்கள் தாங்களாய் உரம் சேர்த்தார்கள். சங்கராச்சாரியாரின் பார்ப்பனப் பிதற்றலுக்கு ஒரு சரியான சவுக்கடியாக, ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரன் கையில் தண்ணீர் வாங்கிப் பருகச் சொல்லிக் கேட்டபோது இங்கு இருந்த பெரியார் தொண்டர்கள் எல்லாம் பூரித்துப் போனார்கள்.

சென்ற முறை தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறும் போது அவர்கள் ஆதரவில் நின்று வென்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தூக்கியெறிந்ததில் அரசியல் அரங்கில் ஒரு வேறுபட்ட மனிதனைக் கண்ட பெருமை எங்களுக்கு. உங்கள் பாதை தெளிவாய் இருந்தது. உங்கள் நடை நேர்மையாய் இருந்தது கண்டு, ஒடுக்கப்பட்டோர் மட்டுமல்லாமல் இன உணர்வாளர்கள் அனைவரும் உங்கள் தோளுடன் தோளாக நின்றார்கள். உங்களின் சுயமரியாதையும், இனமான உணர்வும் அவ்வப்போது எங்கள் இதயத்தில் நல்ல பதிவுகளாகப் பதிந்து போயின.

தவற்றைத் தவறு என்றும் சரியைச் சரி என்றும் சரியாகச் சொன்னதினால் தமிழ் அரசி யல் வரலாற்றில் பத்தாண்டுகள் பல படிகள் உங்களை உயர்த்திக் கொண்டு வந்தவர்கள் இந்தத் தமிழர்கள். அதிலும் மிக முக்கியமாக ஈழப் பிரச்சனை யில் நீங்கள் எடுத்த நிலைப்பாடு உள்ளூர்த் தமிழர்களைத் தாண்டி உலகத் தமிழர்கள் மத்தியிலும் உங்களுக்கு என்று உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தந்தது. அய்யா நெடுமாறன், வைகோ ஆகியோரோடு நீங்கள் கொள்கைக் கூட்டணி கொண்ட போது ஈழத் தமிழனுக்காய்க் குரல் கொடுக்க ஒரு தன்மானத் தமிழன் எழுந்து விட்டான் என்றுதான் இந்த இனம் நம்பியது.

போர் செய்யும் சிங்கள அரசையும், போருக்கு உதவும் இந்திய அரசையும் பற்றி நீங்கள் போட்டுடைத்த உண்மைகளில் இந்த இனம் உங்களை இனமானத் தலைவனாய் உயர்த்திப் பிடித்தது. மேடைமேடையாய் நீங்கள் முழங்கிய முழக்கங்கள் ஈழத்தமிழர் துயர் துடைக்கும் மருந்தாய், அவர்களுக்கு ஒரு விடியல் காட்டும் வெளிச்சமாய் இருந்ததில் உங்களை இந்தத் தமிழினம் நம்பியது.

ஈழத்தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்த இந்தக் காங்கிரசு அரசு ஒப்புக்கொள்ளும் வரை, போர் நிற்கும் வரை, நீங்கள் சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்ட போது எத்தனைத் தமிழர்கள் கண்ணீருடன் உங்கள் பின்னே காத்துக் கிடந்தார்கள் தெரியுமா? உங்களின் ஒவ்வொரு இதயத் துடிப் புடனும் எத்தனைக் கோடித் துடிப்புகள் கலந்தன தெரியுமா?

உண்ணாவிரதம் முடிந்த போது உங்கள் நண்பர்கள் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் ஞாபகம் இருக்கிறதா? அவை உங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டவை அல்ல, எங்களுக்கும், ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் கொடுக்கப்பட்டவை. தமிழினத்தின் தலைவர் என அறியப் பட்டவர்கள் எல்லாம் இனத்தை இந்தியக் காங்கிரசுக்கு அடகு வைத்த போது எதிர்த்துக் குரல் கொடுத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று எல்லோரும் ஒருங்கிணைந்து வேலைநிறுத்தம், உண்ணா நோன்பு, மனிதச் சங்கிலி எனப் போராட ஆரம்பித்த போது திருமா என்ற மூன்றெழுத்து தமிழோடும் தமிழ் மக்களோடும் இரண்டறக் கலந்து போனது.

தமிழின எதிரிகள் யார் என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டியதில் உங்கள் பங்கு மகத்தான ஒன்று என்பதைத் தமிழினம் எப்போதும் மறக்காது. இந்திய அரசும் அதை நடத்துகின்ற காங்கிரசுக் கட்சியுமே ஈழத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் எதிரிகள் என்று நீங்கள் அறிவித்து அவர்களைத் தமிழ் நாட்டை விட்டு அப்புறப்படுத்துவது என்ற கொள்கை முழக்கம் எடுத்தீர்கள். நம் எதிரிகள் ஏன் உங்களைக் கைது செய்ய வில்லை என்று கரடியாய் கத்திய போது நாம் எடுத்த போராட்ட நடவடிக்கையால் சத்திய மூர்த்தி பவனே சற்று ஆடித்தான் போயிற்று. மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்துத் தற்கொடை அளித்த போது அவன் உதடுகள் உச்சரித்த கடைசி சொற்கள் பிரபாகரனும், திருமாவும்.

தொடர்ந்து இதுவரை ஒரே ஒரு லட்சியத் துக்காக, ஒரே ஒரு கோரிக்கைக்காகப் பதினாறு உயிர்கள் தற்கொடை அளிக்கப்பட்ட போது ஒவ்வொரு இறுதி நிகழ்விலும் உங்கள் கண்ணீருடன் எங்கள் கண்ணீரும் விழுந்தது. அவ்வளவு ஏன், உங்கள் அரசியல் இயக்கத்தி லிருந்தே மூவர் தீக்குளித்தார்கள். எல்லோரும் சேர்ந்து யாரை நம்பினார் களோ இல்லையோ உங்களை நம்பினார்கள். உங்கள் கைகளிலும் தொடர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகளை விட்டுப் போனார்கள்.

நாங்களெல்லாம் அதை நம்பினோம். யார் எப்படியோ, திருமாவின் பார்வையில் தெளிவு குறையாதென்று உறுதியாயிருந்தோம். என்ன ஆயிற்று உங்களுக்குத் தேர்தல் வந்து விட்டதா? தேர்தல் எப்போதும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரத்தான் செய்யும். அதற்காகத் துரோகிகளுடனும் எதிரிகளுடனும் கூட்டணி சேர்வதா? எதுவும் மாறவில்லை இதுவரை. தினந் தோறும் குண்டு வீச்சும், செத்து மடியும் தமிழின மும், வீடின்றி, நாடின்றி, தங்கக்கூட இடமின்றி அலையும் அவலமும் இன்று வரை குறையவில்லை.

குண்டு போடுவதை நிறுத்துங்கள் என்றால் காங்கிரசோ குண்டுவீச்சில் செத்தவர்கள் போக மீதமிருப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்கிறோம் என்கிறார்கள். ஆனால் போர் நின்று விட்டது போலவும், அமைதி திரும்பி விட்டது போலவும், தமிழர்கள் பாதுகாப்பு அடைந்து விட்டார்கள் என்பது போலவும் நீங்களும் உங்கள் நண்பர்களும் பேசி வருகிறீர்களே? நாங்கள் எந்தத் திருமாவை உண்மை என நம்புவது? கொள்கையே உறுதியாய் நின்ற குன்றா விளக்கையா? இல்லை கொள்கையை எதிரிகள் காலடியில் ஓரிரு பாராளுமன்றத் தொகுதிக்காய் அடமானம் வைக்கும் இந்தத் திருமாவையா?

காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்ற கொள்கை முழக்கத்தைத் தொடக்கி வைத்த நீங்கள் இப்போது எந்த முகத்தோடு அதே காங்கிரசுடன் அணி சேர்ந்தீர்கள்? தி.மு.கவும், நீங்களும் ஈழப் பிரச்சினையில் ஒரே கொள்கை கொண்டுள்ளதாக அறிவித் திருக்கிறீர்களே, அது எப்படி? திமுகவும், காங்கிரசும்தான் ஏற்கனவே ஒரே கொள்கை என்று அறிவித்தவர்களாயிற்றே!

நீங்களும், காங்கிரசும், திமுகவும் ஒரே அணியில் வாக்கு கேட்டு எப்படி எங்களிடம் வருவீர்கள்? இதில் இராமதாசையும் வேறு அழைத்திருக்கிறீர்கள். அப்படியே அம்மையாரையும் மார்க்சியவாதிகளையும், முடியு மானால் விஜயகாந்தையும் உங்கள் அணிக்கே அழைத்துக் கொண்டு போய் விட வேண்டியது தானே? நாங்கள் ஓட்டு போட வேண்டிய தேவையே இல்லாமல் போகுமே!

மாவீரன் முத்துக்குமாருக்கும் அவர் பின்னே போன பதினைந்து பேருக்கும் என்ன பதில் சொல்கிறீர்கள்? தன்மானச் சிங்கங்களெல்லாம் தேர்தல் அரசியலில் அசிங்கங்களாய் மாறிப் போனதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தச் சிறுத்தையும் இப்போது பூனையாய் மாறி ‘மியாவ்’ என்பது எங்களையெல்லாம் அதிர வைக்கிறது. விலை மகளிர் பலர் வேசித்தனம் செய்யலாம். ஆனால் ஒரு கண்ணகி சோரம் போவதில் எங்களுக்கெல்லாம் உடன்பாடு இல்லை.

உண்மைகளை உரத்துப் பேசிய குற்றத்திற்காக சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் போது நீங்கள் மட்டும் தேசிய நீரோட்ட சாக்கடையில் குதித்துக் களிப்பதா? ஆறு கோடித் தமிழ் இதய நாற்காலிகளை விட ஓரிரு எம்.பி. நாற்காலிகள் உங்களுக்கு அதிக அங்கீகாரம் அளித்து விட்டனவா? உங்களுக்கு அங்கீகாரம் தந்த தமிழ் மக்களை விடவா இந்தப் பாராளுமன்றப் பதவி அதிக அங்கீகாரம் தந்துவிடப் போகிறது?

பொதுவாக சிதம்பரம் என்றாலே உடன் நினைவுக்கு வந்து தொலைப்பது தமிழ் விரோதக் கும்பல்தான். புராணத்தில் பார்வதியைத் தோற்கடிக்க ஒரு காலைத் தூக்கி சிவன் ஆடிப் பெண்ணடிமைத் தனத்தைத் தொடக்கி வைத்தது சிதம்பரத்தில் தான். நஞ்சைக் கக்கும் உள்துறை அமைச்சரும் சிதம்பரம் என்ற பெயருக்குச் சொந்தக்காரர்தான். தமிழே கூடாது என்று அடித்து விரட்டிய தீட்சிதர் கும்பலும் சிதம்பரத்தில்தான். இன்று ஓரிரு மக்களவைத் தொகுதிக்காக ஒரு இனமான தமிழன் சோரம் போனான் என்று வரலாறு எழுதப் போவதும் இந்த சிதம்பரத்தில்தான்.

ஈழத்தில் நல்ல தலைவன் கிடைத்திருக் கிறான். ஆனால் நாடு சொந்தமாயில்லை. தமிழ்நாட்டில் நாடு சொந்தமாயிருக்கிறது. ஆனால் நல்ல தலைவர்கள் கிடைப்பதில்லை. அதனால்தான் இன்னும் சில அறியாக் கூட்டம் நடிகர் ரஜினிகாந்தை கட்சி ஆரம்பிக்க சொல்லி பின்னால் அலைந்து கொண்டிருக்கிறது. எது எப்படி ஆனாலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் திருமா.

நீங்களே தூக்கிப் பிடித்தாலும் சரி, இல்லை வேறு யாரையும் துணைக்கு அழைத்துப் பல்லக்குத் தூக்கினாலும் சரி, இந்தத் தேர்தலில் மனிதத்தின் எதிரிகளான காங்கிரசு, பார்ப்பன கட்சிகளுக்குக் கண்டிப்பாக நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை. நீங்கள் தோற்றால் பரவாயில்லை, தமிழ் தோற்பதில், தமிழர்கள் தோற்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மீண்டும் மடலின் ஆரம்பத்தைப் பாருங்கள். உங்களை அப்படி அழைக்கவே ஆசைப்படு கிறோம். இனிமேலும்...

எங்களைப் பொறுத்த வரையில் மாண்புமிகுவை விட மானமிகு உயர்வானது, உங்களுக்கு எப்படியோ...?

அன்புடன்

தளபதி, மதுரை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com