Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஏப்ரல் 2009
கட்டுப்படுத்தலின் பேயுருவம்...
மா.இலெ. தங்கப்பா

மாந்தனின் மனவியலைப் பார்ப்போமானால் வியப்பாகவே உள்ளது. ஒவ்வொரு மாந்தனும் மற்றொரு மாந்தனை ஏதாவ தொரு வகையில் கட்டுப்படுத்த விரும்புகின்றான். தன் ஆளுமையை மற்றவன் மீது திணிக்க விரும்புகின்றான்.

பிறரைக் கட்டுப்படுத்த வேண்டும், தன் வழிக்குக் கொணர வேண்டும் என்ற எண்ணம் மாந்தனின் குருதியிலேயே ஊறிப் போயிருப்பது போல் தெரிகிறது. அதனால்தான் சிறு குழந்தைகள் கூடப் பிறரைக் கட்டுப்படுத்தித் தங்கள் விருப்பப்படி திருப்பும் கலையில் மிக வல்லவராக இருப்பதைக் காண்கின்றோம். உணவு ஊட்டும் தாயை ஒரு குழந்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கின்றது! ஒரு வாய் உணவை வாங்கிக் கொண்டு, மறு வாய்க்கு அங்கே வா, இங்கே வா என்று அலைக்கழிக்கின்றது! மூன்றகவைச் சிறுமி ஒருத்தி தன் ஆறகவை அண்ணனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கின்றாள்! அதைச் செய்யடா இதைச் செய்யடா என்று எப்படி அதிகாரம் பண்ணுகிறாள்!

கட்டுப்படுத்த நினைப்பவன் வலிமையானவனாக இருந்துவிட்டால் போதும். தன்கீழ் மாட்டிக் கொண்டவர்களை வறுத்தெடுத்து விடுகிறான். பிறரைக் கட்டுப்படுத்தும் வேட்கை தனி மாந்தர்களிடையே உராய்வுகள் ஏற்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், பல்வேறு குழுக்கள், இனங்களிடையிலும், சாதி மதங்களிடையிலும் நாடுகளிடையிலும் மோதல் ஏற்படுவதற்கும் அடிப்படையாக நிற்கின்றது. எப்பொழுது மாந்தன் கையில் அதிகாரம் கிடைக்கின்றதோ அப்பொழுது அவனுள் அடங்கியிருந்த கீழ்மைகள் கிறுக்குகள் எல்லாம் வெளிவரத் தொடங்குகின்றன. கொடுமை செய்யும் உணர்வு கொந்தளித் தெழுகின்றது.

அதிகார வெறிபிடித்த ஒருவனைத் தலைவனாகக் கொண்ட ஒரு நாடு அல்லது பேரினம் மற்றொரு நாட்டை அல்லது இனத்தைத் தன் காலின் கீழ் இட்டு மிதிப்பதையே தொழிலாகக் கொள்கின்றது. தன் மொழியைத் தன் வாழ்க்கை முறையைத் தன் அரசியல் பொருளியல் மேலாண்மையைப் பிறநாடுகள், இனங்களின் மேல் திணித்து அவற்றைச் சுரண்டித் தன்னைக் கொழுக்க வைத்துக் கொள்கின்றது.

அரசியல் வாழ்க்கையில்தான் இக்கட்டுப்படுத்துதல் பேருருவத்துடன், பேயுருவத்துடன் காணப்படுகின்றது. வல்லரசு நாடுகள் பிற எளிய நாடுகளை நட்பு என்றும், நல்லுறவு என்றும், உதவி என்றும் வளைத்துப் போட்டுக் கொள்வது அவற்றைக் கட்டுப்படுத்தித் தம் வல்லாண்மையை அவற்றின் மேற்செலுத்தித் தம் சுரண்டலை அவற்றின் மேல் நடத்துவதற்காகவே. இத்தகைய வல்லரசுகள் பொது நன்மை என்றும் நட்புறவு என்றும், உதவிக் கை நீட்டுதல் என்றும் கூறிக் கொள்வது வெறுந்தந்திரப் பேச்சே. உள்ளே இருப்பவை வாணிகச் சுரண்டலும் அரசியல் மேலாண்மையுமே.

அமெரிக்கா வளர்ச்சி அடையாத நாடுகட்குத் தன்னைப் பாதுகாவலனாகக் காட்டிக் கொள்வது எப்படிப் பொய்யோ, அது போலவே தில்லி அரசு பாரத மாதாவின் புனித ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்று பேசுவதெல் லாம் வெறும் பசப்பல்; பச்சைப் புளுகு. அதன் உள் நோக்கம், வலியவன் மெலியவனைச் சுரண்ட வழிசெய்து கொடுத்தலே. காசுமீரம் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்பதும், இந்திய மக்கள் எல்லாரும் ஒரு தாய் மக்கள் என்பதும் எவ்வளவு பெரும் பொய்! தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை தொடர்ந்து பல்லாண்டு களாகச் சுட்டுக் கொன்றுவரும் நிலையிலும் இந்திய அரசு ஏனென்று கேட்காதிருப்பது ஒன்றிலிருந்தே இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று பசப்புவது பொய் என்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டதே.

இந்தியா ஒற்றுமைப் பாட்டுப் பாடுவது எதற்காக? வடநாட்டுக் கொள்ளை முதலாளிகளுக்கும் பெருந்தொழில் வாணிக முதலைகட்கும் விரிவான விற்பனைக் களமும், தடையில்லாத சுரண்டல் உரிமையும் வேண்டும் என்பதற்காகத் தானே. தென்னாட்டு வளங்களைச் சுரண்டி வடநாட்டான் கொழுக்க வேண்டும் என்பதற்காகத்தானே. இக்கொடிய சுரண்டல்காரர்களும் ஏழைகளின் குடலை உருவிக் குருதியை உறிஞ்சுபவர்களும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் கால் ஊன்றிக் கொள்ளவும் இயற்கைச் சூழலை அழித்துத் தம் செயற்கைத் தொழில்நுட்பப் பேரரசை நிலைநாட்டிக் கொள்ளவும் எந்தச் சிறு தடையும் இருத்தல் கூடாது என்பதே இவர்களின் உள்நோக்கம். இதற்குத் தானே ஒருமைப்பாடு பயன்படு கின்றது. மாறாகக் காவிரி நீரைத் தமிழனுக்குப் பெற்றுத் தர இது பயன்படுகின்றதா? சேதுக் கடல் திட்டத்தை நிறைவேற்றப் பயன்படுகின்றதா? கங்கை காவிரி இணைப்புக்குப் பயன்படுகின்றதா? திருவள்ளுவரைத் தேசியப் பெரும்புலவராக அறிவிக்கப் பயன்படுகின்றதா?

உயர்ந்த கொள்கைகள் கூறி மாந்தனை மாந்தன் எப்படி யெல்லாம் கட்டுப்படுத்தப் பார்க் கின்றான் பாருங்கள். பன்மொழி பேசும் ஒரு துணைக் கண்டத்தில் ஒரு மொழிதான் தேசியமொழியாம்! அதைத்தான் பொது மொழி யாக எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டுமாம்! தமிழ் மண்ணில் ஆங்கிலந்தான் பயிற்றுமொழியாம்! ஏழை எளிய தமிழ் இளைஞர் தங்கள் தாய் மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத் தின் வாயிலாகத்தான் கல்வி கற்க வேண்டுமாம்!

இப்படி ஏதாவது வகையில் ஒருவன் இன்னொருவனைக் கட்டுப்படுத்தப் பார்க் கின்றானே, எதற்கு? தான் மேலாண்மை செய்வதற்கு! பிறர் விடு தலையைக் கட்டுப் படுத்தித் தன் காற்கீழ் வைத்துக் கொள்வதற்கு! இக்கட்டுப்படுத்தல் வேட்கை முற்றி முதிர்ந்துதான் பிறர் விடுதலையையே மறுக்கும் பேய்த்தன்மையாக மாறுகின்றது. மாந்த இனத்தின் உயிர் மூச்சே விடுதலைதான். மாந்த இனத்துக்கு மட்டுமன்று, உயிரினங்கள் எல்லாற்றுக்கும் விடுதலையே உயிர் மூச்சு. விடுதலை இயற்கையின் கூறு; வாழ்வு மலர்ச்சியின் அடை யாளம்.

தன்னைப் போன்ற ஒருவனின் விடுதலையைப் பறித்துக் கொண்டு அவனைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ள எண்ணும் எவனும் உண்மையான மாந்தனாக இருத்தல் முடியாது. எவனொரு வன் ஏதாவதொரு தலைக்கீட்டில், ஏதாவதோர் உயர்ந்த கோட்பாட் டின் பெயரில், ஏதாவதொரு போலிச் சட்டத்தின் போர்வையில் பிறனொருவனின் விடுதலையைக் கட்டுப்படுத்த முயல்கின்றானோ அவன் சரியான மாந்தனாக இரான். மாந்த இனத்துக்கே அவன் பகைவன். இதற்கு இன்றைய எடுத்துக் காட்டு சிங்களனும், அவனுக்கு உதவும் தில்லிக்காரனும். இத்தகைய மாந்த இனப் பகைவர்களே உலகின் அரசியல் அரங்குகளில் பேயாட்டம் ஆடி மாந்த இனத்தைப் பூசலிலும் மோதலிலும் போர்களிலும் பிடித்துத் தள்ளுகின்றனர்.

வேறு வேறு இனமக்கள் சில செயற்கையான அரசியல் சூழ்நிலைகளால், கட்டாயத்தால் ஒரே நாடாகக் கூடி வாழ நேர்கின்றது. ஆயினும் இக்கூட்டு அமைப்புகளில் வலிமைமிக்க இனம் வலிமையற்ற இனத்தைத் தன் காலின்கீழ் இட்டு நசுக்கத் தொடங்குகின்றது. அப்பொழுதுதான் பிரிவினைக் குரல் எழுகின்றது. ஓர் இனம் கூட்டமைப்பில் தனக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காத பொழுது பிரிந்து நின்று தனிநாடாக வாழ விரும்புவதில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால் அதிகார வலிமை படைத்த வலிய இனம் இதை விரும்புவதில்லை. “பிரிவினையா? ஐயோ! ஐயோ! அதைப் போல் கொடிய பாவம் வேறில்லை!” என்று ஓலமிடுகின்றது.

விடுதலை வேண்டும் இனங்களின் முறையான கோரிக்கைகளை ஏற்றுக் கொள் ளாமல், அமைதி யான அறப் போராட்டங்களைச் சற்றும் மதிக்காமல் வன்முறை கொண்டு அவர் களை அடக்கி ஒடுக்க முனை யும் பேரின அதிகார வெறி அரசுகளாலேயே உலக வரலாற்றில் பெருமளவு குருதி சிந்தல்களும் இனப்படு கொலை களும் நிகழ்ந்துள்ளன. ஒரு நாடு உண்மையான, நேர்மையான மக்களாட்சி நாடாக இருக்குமானால் அந்நாட்டின் சிறுபான்மை இனத்திடமிருந்து முறையான பிரிவினைக் கோரிக்கை எழுமானால் அந்நாட்டரசு உடனே அதை மதித்து அவர்கள் பிரிந்து செல்ல வழிவகுக்கும். இத்தகைய பிரிவினைக் கோரிக்கைகள் தடையின்றி நிறைவேற்றப் பட்டிருக்குமானால் மாந்த இனம் எத்தனையோ குருதி சிந்தல்களினின்று காப்பாற்றப்பட்டிருக்கும்.

இந்த இடத்தில் உலகப் பெருந்தலைவர் முன்னாள் மலேசியா வின் துங்கு அப்துல் இரகுமானை என்னால் நினைக்காதிருக்க முடியவில்லை. உண்மை அரசியல் உலகில் அனைவராலும் மதித்துப் போற்றப்பட வேண்டிய மிகப் பெருந் தலைவர் அவர். மாந்த இனத்தின் விடுதலை உணர்வின் முழு வடிவமும் அவராகவே கண்டு என் உள்ளம் அவரைத் தொழுகின்றது. மலேசியக் கூட்டமைப்பிலிருந்து சிங்கப்பூர் பிரிந்து செல்ல விரும்பிய பொழுது எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக அதனை ஏற்றுக் கொண்டு வழி விட்டவர் அவர். எவ்வளவு பெருந்தன்மையான செய்கை அவருடையது! இத்தனைக்கும் சிங்கப்பூரில் வாழும் மக்கள் வேற்றினத்தவரோ வேறு மொழியினரோ அல்லர். மேலும் சிங்கப்பூர் ஒரு நகரமே. அந்த நகரமும் இன்று ஒரு தனி நாடாகி உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது என்றால் அப்துல் இரகுமானையே அதற்கு முதற்காரணமாகக் கூறலாம். இந்தியத் தலைவர் எவராலும் இத்தகைய ஒரு செயலைச் செய்ய முடியுமா? முடிந்திருந்தால் காசுமீர மக்கள் இத்தனை அல்லல்கட்கு ஆளாகியிருப்பரா? அண்மை வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போமானால் பேரின வெறியர்களின் பிடியிலிருந்து எத்தனையோ சிறிய நாடுகள் தப்பி அல்லது போரிட்டு வென்று விடுதலை அடைந்திருக்கின்றன.

வரலாறு இப்படியிருக்க, வரலாறு தெரிந்த காலந்தொட்டு ஆங்கிலேயன் உள்ளே நுழையும் வரை தனி நாடமைத்து ஆண்டிருந்த ஈழத்தமிழ் மக்கள் - ஆங்கில ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்திலும்கூட அடிப்படை உரிமைகள் இழவாமலும் மொழி பண்பாட்டு உரிமைகள் செழித்தோங்கவும் தலைநிமிர்ந்து வாழ்ந்திருந்தவர்கள், விடுதலைக்குப் பின்பு சிங்கள அரசின் சூழ்ச்சி வலைக்குள் மாட்டிக் கொண்டு இழந்து போன தங்கள் வாழ்வை மீட்டுக் கொள்ளப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும் வரலாற்று, அரசியல் பொய்கள் மூலம் இப்போராட்டத்தைத் திரித்துரைத்து, ஈழத் தமிழர் ஏதோ செய்யத்தகாத பெரும் பாவத்தைச் செய்தது போன்று வெளியுலகுக்குக் காட்டும் சிங்களனும் அவனோடு சேர்ந்து ஈழத் தமிழரைக் கொலை புரியும் தில்லி அரசும், துங்கு அப்துல் ரகுமானுடன் ஒப்பிடுகையில் எவ்வளவு கீழ்மையராய், எவ்வளவு கொடியவராய் எவ்வளவு அருவருக்கத் தக்க மாந்தராய்க் காட்சி தருகின்றனர்! இவர்கள் ஈழத் தமிழர்க்கு விடுதலை மறுப்பது மாந்த இனத்துக்கே விடுதலை மறுப்பதாகும்.

எவன் ஒருவன் தான் விடுதலையாக இருந்து கொண்டு தன்னை ஒத்த மற்றொருவனுக்கு விடுதலை மறுக்கின்றானோ அவன் மாந்த இனத்தின் பகைவன் என்றுதான் என்னால் நினைக்க முடிகின்றது. ஒழுங்கைத் தவிர வேறு நிலைகளில் எவனுக்கும் எவனையும் கட்டுப்படுத்த உரிமையில்லை. அப்படியிருந்தும் சிங்களப் பேரின வெறியர்களும் இந்திய வஞ்சகக் கொடியவர்களும் மாந்த உரிமைகளையும் மாந்த நேயத்தையும் முற்றும் தூக்கியெறிந்து தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக ஈழ மண்ணில் கொலைவெறித் தாண்டவம் ஆடுகின்றனர். உலக நாடுகளுங் கூடத் தங்கள் சொந்த அரசியல் வாணிக ஆதாயங்களுக்காக இக்கொலை வெறியர்களைத் தட்டிக் கேட்காமல் விடுதலைப் போராளியரையே குற்றம் சொல்கின்றன. சிங்கள இன வெறியரும் இந்தியத் தமிழின வெறுப்பாளரும் இப்போது வேண்டுமானால் வெற்றி அடையலாம். ஆனால் இவர்கள் நிகழ்த்தும் இனப்படுகொலைக்கும் மாந்த உரிமை மறுப்புக்கும் இவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் காலம் ஒருநாள் வரத்தான் வரும். அப்பொழுது உலகம் இவர்கள் முகத்தில் காறி உமிழும்.