Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஏப்ரல் 2009
தமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா
த. செயராமன்

அண்ணாவின் பார்வையில் இந்தியத் தேசியம்

அண்ணா தன்னை என்றைக்காவது ஓர் இந்தியராகக் கருதிக் கொண்டது உண்டா? இந்தியாவைத் தனது தேசம் அல்லது தாய்நாடு என்று ஏற்றுக் கொண்டது உண்டா? இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வரிக்கு வரி, மூச்சுக்கு மூச்சு கூறுவது போல ‘இந்தியத் திருநாடு’ என்றோ அல்லது ‘இந்திய ஒருமைப்பாட்டைக் காக்க’ என்றோ எப்போதாவது மறந்து போயாவது அண்ணா கூறியிருக் கிறாரா? 1963இல் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டு, இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுக் கூடுதல் அதிகாரங்களைப் பெறுவது என்று தம் குறிக்கோளை மாற்றிக் கொண்ட பிறகாவது, இந்தியாவைப் பற்றிய தம் பார்வையை மாற்றிக் கொண் டாரா?

சமரசங்களும் குறைபாடுகளும் நிறைந்த அரசியல் வாழ்வு நடத்திய அண்ணா, கொள்கைத் தளத்தில் சரிவையும் தேர்தல் களத்தில் வெற்றி யையும் கண்டு 1967இல் ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்த பிறகாவது ‘இந்தியா ஒரு தேசம்’ என்றோ, இந்திய ஒருமைப் பாட்டைக் காக்க வேண்டும் என்றோ பேசியதுண்டா? தம் அரசியல் வாழ்வு முழுக்க எதிர்க் கட்சியாக இருந்த போதும், முதல்வராகப் பதவி வகித்த போதும் - அவர் பதவியேற்ற நாளான 06.03.1967 முதல் 02.02.1969 நள்ளிரவு 12.22 மணிக்கு அவர் உயிர் பிரியும் வரையிலும் கூட - ‘இந்தியத் திருநாடு’ என்றோ இந்தியா தம் தாய்நாடு என்றோ அண்ணா ஒருபோதும் பேசியதில்லை. தில்லி வல்லாதிக்க அரசும் இந்திய ஆளும் வர்க்கமும் மனம் குளிரும்படி ‘ஏக இந்தியப் பஜனை’யை தி.மு.க. அண்ணாவின் இறப் புக்குப் பிறகே தொடங்கியது.

இந்தியமும் ஆரியமும்

இந்தியத் தேசியத்தின் ஆரிய உள்ளீடு குறித்தும் அதன் அரசியல் பரிமாணம் குறித்தும் அண்ணா முன்வைத்த கருத்துக்கள் 1945 முதல் 1962 வரை படிப்படியான வளர்ச்சியும் விரிவாக்கமும் பெற்று வந்திருக் கின்றன. ஆரிய ஆதிக்கத்தின் அரசியல் வடிவம்தான் இந்திய தேசியம் என்ற புரிதலை தந்தை பெரியாரும், ஆரியத்தின் பாதுகாவல் அரண்தான் இந்தியத் தேசியம் என்றபுரிதலை அறிஞர் அண்ணாவும் தமிழ் மக்களிடையே கொண்டு சென்றனர். இந்தியத்தை வீழ்த்தாமல் ஆரியத்தை வீழ்த்த முடியாது என்ற புரிதலைத் தந்தவர்கள் இவர்கள் தாம்.

தேர்தல் அரசியலிலும் இந்தியத் தேசிய மறுப்பு

1957ஆம் ஆண்டுத் தேர்தலில் முதன்முதலாகக் களமிறங்கிய தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையை முன் வைக்காமல், தேர்தல் அறிக்கையில் மாநிலங் களுக்கு சமத்துவம் மற்றும் சுயநிர்ணய உரிமை கோரியிருந்தது. காங்கிரசு எதிர்ப்பு முழக்கமாக இல்லாமல், வேறு பல கோரிக்கை களுடன் சுயநிர்ணய உரிமையையும் தமிழகத்திற்கு அண்ணா கோரியிருந் தார். 205 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் அண்ணா உள்ளிட்ட 15 தி.மு.க. உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுச் சட்டமன்ற உறுப்பினர் களாக நுழைந்தனர்.

தேர்தல் அரசியலில் ஈடுபட்ட பிறகும் அண்ணாவின் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந் தது. தி.மு.க.வின் வளர்ச்சியுட னேயே இந்திய எதிர்ப்புணர்வும் சேர்ந்து வளர்ந்தது. தேர்தல் அரசியலில் ஈடுபட்டுச் சட்டமன்றத்துக்குள் நுழைந்த பிறகு அண்ணா கூறிய கருத்துக்கள் கவனத்தில் கொள் ளப்பட வேண்டியவை. 1959இல் அண்ணா இப்படிக் கூறினார் :

“இந்திய அரசியலமைப்பு என்ற ஒரு பொன்விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது, மாநிலங்களின் கரங்களில்... எஜமானாக இருந்து அவர்களை ஆட்டிப் படைப்பார்கள். எடுபிடிகளாக இருந்து தொண்டு புரிந்தாக வேண்டும்.” (அண்ணா, ‘எழுகிறது ஆந்திரம்!’ (8.3.1959) சரிந்த சாம் ராஜ்யம், மணிவாசகர் வெளியீடு, சென்னை, 2007, பக்.163)

ஆட்டிப் படைக்கும் மத்திய அரசிடமிருந்து தமிழர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வழி பிரிந்து போகும் உரிமையுடன் கூடி வாழ்வது என்ற கருத்தையும் 1959இல் அண்ணா முன் வைத்தார். மாநில அரசுகள் வெறும் பொம்மைகள்தாம் என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சென்றார்:

“மத்திய அரசு மாநிலங்களை ஆட்டிப் படைக்கிறது. சூத்திர தாரி டில்லியில்; சொகுசாக உலா வருகின்ற கொலுப் பொம்மைகள் இங்கே...”

“இந்த அவல நிலையினை, ஆகாத முறையினை அகற்றிட நாடு நமதாக வேண்டும். நமது நாடாம் திராவிடத்தின் ஆட்சி நம் கரத்திலே ஒப்படைக்கப் படல் வேண்டும்...”

மாநிலங்களுக்கு இப்போது இருக்கின்ற அதிகார வரம்பினை ஓரளவு விரிவுபடுத்துவதாலேயே பிரச்சினை தீர்ந்து விடாதே!... விரும்பினால் பிரிந்து போகின்ற உரிமை மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டாலொழிய மத்திய அரசாங்கத்தினைக் கட்டுப் படுத்தக்கூடிய பயனுள்ள ஆயுதம் வேறென்ன?”

(அண்ணா, ‘பாதிவழியில்’ (15.2.1959) சரிந்த சாம்ராஜ்யம், சென்னை, 2007, பக்.151-152)

இந்தியா என்ற நாடு என்றென் றைக்கும் இருந்து வந்த ஒன்றல்ல. அதைப் படைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்தாம், அதிலிருந்து வெளியேறுவது நியாயப்பாடு டையதுதான் என்ற பார்வையை அண்ணா வைத்தார்: இந்தியா என்ற பெயர் - சொல், என்றாவது இந்த நாட்டில் இருந்ததா? வழங்கப்பட்டதா? இல்லையே! நூற்றுஐம்பது ஆண்டு காலம் ஆங்கிலேயன் ஆண்டபோதுதானே இந்தியா என்று பெயர் வைத்து ஒரே நாடு என்று ஆண்டான்? அதற்கு முன் எதிலும் இந்தியா என்ற சொல் கிடையாதே! ஒரு நாடாகவும் இருந்ததில்லையே!

“வடநாட்டுடன் இருப்பதால் என்ன லாபம்? பிரிந்துவிட்டால் என்ன நஷ்டம்? எடுத்துக் கூறட்டும். வகையும் வாய்ப்பும் வல்லமையும் இருந்தால்!”

(அண்ணா, இன்பத் திராவிடம், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1989, பக்.38)

இந்தியா என்பது செயற்கை யாகத் தங்கள் சுரண்டலுக்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டதுதானேயொழிய, அது ஓர்மையுள்ள ஒரு தேசம் ஆகாது என்ற பார்வையை அண்ணா கொண்டிருந்தார்.

“அந்நியன் - வெள்ளையனும், பிரெஞ்சுக்காரனும் ஆண்ட காலத்தில் தன் நிர்வாக வசதிக் காகத் துப்பாக்கி முனையில், சர்க் கஸ் கம்பெனியில் ஆட்டையும் சிங்கத்தையும் ஒரு சேர வைப்பது போல - இந்தியாவை ‘ஏக இந்தியாவாக’ வைத்திருந்தான். அதனாலேயே நாம், எப்படி வடவரோடு ஒன்றாக முடியும்?” (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் : 144, 18.6.1961)

இந்தியா முழுமையும் இந்து மதம் இருக்கிறது; ஆகவே இந்தியா ஒரு தேசம்; இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்றவாதத்தையும் அண்ணா நிராகரித்தார்.

“இந்து மதத்தைத் தழுவியவர்கள் இந்தியா முழுமையும் உள்ளாவர்கள். ஆகவே இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்றால், இஸ்லாம் மதத்தைத் தழுவியர்கள் எல்லோரையும் ஓர் அரசின் கீழ் கொண்டுவர இயலுமா? கிருத்துவ மதத்தைத் தழுவியிருக்கிற காரணத்தி னாலேயே அமெரிக்காவும் இங்கிலாந்தும் பிரான்சும் ஜெர்மனியும் ஓர் ஆட்சியின் கீழ் இருப்பது சாத்தியமாகுமா? அதைப் போலத்தான் திரா விடமும் இந்தியாவோடு ஒன் றாக இருக்க இயலாது” (மேலது).

இந்தியா ஒரே நாடு என்பதை மாநிலங்களவையிலேயே மறுத்துப் பேசினார் அண்ணா. மாநிலங்களவைக்குத் தலைமை வகித்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனிடம், அண்ணா இவ்வாறு சுட்டிக் காட்டினார் : “தாங்களே இந்தியா ஒரு நாடு என்பதற்கு ஒரு காரணம் காட்டி யிருக்கிறீர்கள் - கன்னியாகுமரியி லிருந்து இமாலயம் வரையிலும் இராமனையும், கிருஷ்ணனையும் தொழுகிறார்கள் என்று கூறினீர் கள். ஆனால் ஏசுநாதரை ஐரோப்பா முழுவதும் தொழு கிறார்கள். ஆனால், அங்கே பல தேசிய நாடுகள் இருக்கின் றனவே.” (நம் நாடு, 4.5.1962)

இந்திய வல்லாதிக்க மைய அரசுடன் இணக்கமாகக் கூடிக் குழைந்து இருப்பதால் தமிழ் நாட்டுக்குப் பல திட்டங்கள் கிடைக்கும்; அவ்வாறு நாங்கள் சில திட்டங்களைத் தமிழகத்துக் கும் பெற்று வந்திருக்கிறோம் என்று இன்று பெருமை பேசும் தமிழகத் தலைவர்களின் நிலை அண்ணாவின் பார்வையில் எள்ளி நகையாடத் தக்கது. “மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், தமிழகத்துக்கு அதிக திட்டங்களை மைய அரசு ஒதுக்கித் தந்தால் திராவிட நாடு கோரிக்கையைக் கை விடு வீர்களா?” என்ற கேள்வியை சிலர் அண்ணாவிடம் கேட்ட போது, அண்ணா தெளிவாகப் பதிலுரைத்தார்:

“ஒரு நாடு விடுதலை பெற்ற நாடாக இருப்பதும், ஒரு மனிதன் சுதந்திர மனிதனாக வாழ்வதும், அதனால் ஏற்படும் இலாப நட்டக் கணக்கல்ல - நாம் பார்க்க வேண்டியது. எல்லா வசதி களையும் கொடுத்து வாழ்நாள் முழுவதும் சிறைக் கைதியாக இருப்பாயா? என்று ஒருவனைக் கேட்டால், கூலிக்காரனாக இருந்தாலும் சுதந்திர மனிதனாக இருக்க விரும்புவான் என்பது மறுக்க முடியாததாகும். அதைப் போலத்தான் ஒரு நாடும் அடிமை யாக இருந்தால் இலாபமா? சுதந்திர நாடாக இருப்பதால் இலாபமா - என்பதல்ல நாம் கவனிக்க வேண்டியது. ஒரு பெண் கற்போடு இருப்பது இலாபமா? கற்பிழந்தவளாக இருந்தால் இலாபமா? என்று யாரும் கேட்க மாட்டார்கள். ஒரு பெண்ணின் கற்புக்கு எப்படி விலையில்லையோ அதுபோல ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கும் விலையில்லை.” (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், எண் 144, 18.06.1961)

தமிழகம் நீண்ட வரலாறும் விடுதலையுடைய இருப்பையும் கொண்டிருந்தது. இதை வலுவந்தமாக இந்தியத் துணைக் கண்டத்துடன் ஆங்கிலேயர்களே இணைத்தனர். இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு வெளியேறும் போது, ஆங்கி லேயர்கள் தமிழகத்தைத் தனியே பிரித்து விடுதலை பெற்ற நாடாக ஆக்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை அண்ணா முன்வைத் தார்:

“இரண்டு கைதிகளை, வசதிக் காகப் போலிசுக்காரன் ஒரு கைதி யின் வலது கையுடன் மற்றவனின் இடது கையைச் சேர்த்து விலங்கிட்டு, சிறைக்கு அழைத்துச் சென்று ஓர் அறையில் பூட்டி வைப்பதாக வைத்துக் கொள் வோம். விடுதலை அடைந்ததும், அந்தக் கைதிகள் வீடு திரும்புகை யில், அவரவர்கள் வீட்டுக்கு அவரவர்கள் போவார்கள். இதுவரை ஒன்றாகவே சிறையில் வைக்கப்பட்டிருந்தோம். ஆத லால் இனியும் ஒன்றாகவே வெளி யிலும் வாழ்க்கை நடத்துவோம், அப்படித்தான் இருக்க வேண்டும் - என்பது எப்படி நீதியல்லவோ, அதைப் போலத்தான் வெள்ளைக் காரனால் அடிமையாக்கப்பட்ட நாம் வெள்ளையர்கள் வெளி யேறியவுடன் தனித்தனியே வாழ்வது - அரசோச்சுவது தான் நீதி என்கிறோம்...” (மேலது)

‘இந்தியா’ என்பது என்ன என்பதை மிக நுட்பமாக அண்ணா புரிந்து வைத்திருந்தார்; அதை மிக எளிமையாகத் தமிழர் களுக்குப் புரியவும் வைத்தார்.

“இந்தியப் பேரரசு என்பது அரசியல் ஆதிக்கத்தால் இறு மாந்து கிடக்கும் ஒரு புதிய ஏகாதிபத்தியம்; வடநாட்டு முதலாளிகளுக்கு அமைந்துள்ள கோட்டை; தென்னாட்டைத் தேய வைக்கும் சுரண்டல் யந்திரம்...” (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், எண்.144, 18.6.61) அண்ணாவின் இந்தக் கூற்றுக்குச் சான்றாகவும், தெளிவு படுத்தும் வகையிலும் பல்வேறு கட்டுரைகளிலும் சொற்பொழிவு களிலும் விளக்கங்களையும், புள்ளி விவரங்களையும் அண்ணா அள்ளி வழங்கியிருக்கிறார்.

“எல்லா அதிகாரங்களும் டில்லியில்தான் குவிந்துள்ளது... இந்த நாட்டின் வெள்ளையன் எந்தெந்த விதங்களிலே வாணிபம் செய்து, செல்வத்தைச் சுரண்டி சீமைக்குச் சென்றானோ அதே முறையில், வடநாட்டார் இன்று தென்னாட்டின் செல்வத்தை, எல்லாத் துறைகளிலும் ஆதிக்கஞ் செலுத்திச் சுரண்டி வருகின்ற னர்.”

...இன்று எல்லா வாணிபத் துறைகளும் வடநாட்டாரின் பிடியில்தானே இருக்கின்றன? ஏற்றுமதி இறக்குமதியிலிருந்து எண்ணெய் வியாபாரம் வரையில், இரும்பு, பொன், சிமெண்டு, துணி, மருந்து முதலிய எல்லா வாணிபங்களும் இவர்கள் ஆதிக்கத்திற்குட்பட்டுத் தானே இருந்து வருகின்றன.”

(அண்ணா, இன்பத் திரா விடம், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1989, பக். 42 - 43)

தமிழக ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தைத் தங்கள் மேலாதிக் கத்தில் வைத்துக் கட்டுப்படுத்தும் 87 மார்வாடி - பனியாக்களின் பெயர்களை அண்ணா பட்டிய லிட்டார். “திராவிட நாட்டின் செல்வத்தைச் சுரண்டும் வணிக வேந்தர்களின் பணபலம், தொழில்பலம், இவற்றிற்கு அரணாக அவர்களுக்கு அமைந் துள்ள அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் கண்டால், எவ்வளவு வேகமாகப் புதியதோர் ‘பொருளாதார ஏகாதிபத்தியம்’ உருவாகிக் கொண்டு வருகிற தென்பதைக் காணலாம்.” (மேலது, பக்.43)

இந்தியம் பற்றிய அண்ணா வின் பார்வை துல்லியமானது. தமிழர்களின் பிரச்சினைகளுக்குக் காரணம் இந்தியாதான் என்பதை யும், அதற்கான தீர்வு இந்தியாவி லிருந்து வெளியேறுவதுதான் என்பதையும் உணர்ந்திருந்தார்; அதையே தமிழினத்துக்கும் உணர்த்தினார்.

“இந்தியா என்பது போலி, சூது, சூழ்ச்சி, ஒரு சுரண்டல் யந்திரம். இதுவே என் கருத்து. தமிழர், தனி இனம் - தாழ்ந்த நிலையினில் இன்றுளர் - அதற்குக் காரணம் வடவர். வடவர் வாழ்ந்திட வழிவகுத்ததுதான் இந்திய அரசியல் சட்டமென்னும் பொறி. இதில் சிக்கி இருக்கு மட்டும் தலை நிமிர்ந்து வாழ்ந் திடான் தமிழன் எனும் இனத் தான். அவன் மானம் அழிக்கின் றார்; மொழியைப் பழிக்கின் றார்; வாழ்க்கை வழியை அடைக் கின்றார்! வளமெல்லாம் வடக்கேதான்; வாட்டம்தான் தமிழர்க்கு; இந்தியா என்பதிலே இதுவும் ஓர் இடம் என்று இயம்பு மட்டும் தன்மானமும் இல்லை, தழைத்திடப் போவதுமில்லை.”

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், எண்.140, 21.5.61)

இதைவிடவும் தெளிவாக ஓர் இனத்தின் தலைவர் அடிமைப் பட்டுக் கிடக்கும் தன் மக்களுக்கு அறிவுறுத்த முடியாது. இந்தியத்துக்கு மாநில அரசு கள் நிலை பற்றியும் அண்ணா தெளிவுபடுத்தினார். மாநில அரசு என்பது உண்மையில் ஓர் அரசு அல்ல. முதலாளியாக மைய அரசும் அதன் கங்காணி யாக இருந்து மக்களை ஒடுக்கும் வேலையை மாநில அரசும் செய்யும் என்று அண்ணா உணர்த்தினார்:

“முதலாளி தோட்ட வேலைக் காரர்களுக்கு என்ன குறை என்று கேட்கவே மாட்டார் - அவர் நகரிலே விருந்துண்டு மகிழ்வார். கங்காணி, தோட்ட வேலைக் காரருடன்தான் இருப்பார் - கையில் சவுக்குடன்.”

(அண்ணா, இன்பத் திராவிடம், பக்.7)

“...முன்னாளில் தனியாட்சி யுடன் இருந்த நாடு. இதை அடிமைக்காடு ஆக்கிவிட்டார்கள் அவர்கள்... இன்று திராவிடத்தின் ‘தலைவிதி’ டில்லியில் எழுதப்படு கிறது. திராவிடம் திக்கெட்டும் முன்பு தீரர்களை அனுப்பி வந்தது. இன்று திராவிடம் வாழ மந்திரிகள் காவடி எடுக்கிறார்கள் டில்லிக்கு. திராவிடம் தேய் கிறது. தன்மானம் அழிகிறது. அவர்களோ ‘ஒரே நாடு இந்தியா’ என்று ஒய்யாரம் பாடுகிறார்கள்.” (மேலது, பக்.13)

தமிழ்நாடு - திராவிடநாடு : பகை இலக்கு ஒன்றே

அண்ணா திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை முன் வைத்தார். ஆனால் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இந்தக் கோரிக்கை கேள்விக்கு உள் ளானது. 1959லிருந்தே ஈ.வெ.கி. சம்பத் தி.மு.க.வுக்குள் பிரச்சினையை எழுப்பத் தொடங்கினார். 1961இல் ‘திராவிட நாடு பகற்கனவு’ என்று கூறிய சம்பத் திமுக.வை விட்டு வெளியேறி ஏப்ரல் 1961இல் தமிழ்த் தேசியக் கட்சியை நிறுவி னார். பிரிந்து போகும் உரிமை யுடன் கூடிய தமிழ்த் தேசிய சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி னார். 1938இல் முதலில் எழுப்பிய தமிழ்நாடு தமிழருக்கே கோரிக்கையை ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என மாற்றி யிருந்த பெரியார் 1956இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு விடுதலை கோரிக்கைக்குத் திரும்பினார். 1945 முதல் ம.பொ. சிவஞானம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வந்தார். ‘தினத்தந்தி’ இதழ் நிறுவனரும் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை உருவாக்கியவருமான சி.பா. ஆதித்தனார் தமிழ்நாட்டையும் ஈழத்தையும் இணைத்து ‘தமிழ்ப் பேரரசு’ அமைக்கும் முழக்கத்தை முன்வைத்தார். அவர் எழுப்பிய தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையை அண்ணா 1962இல் கடுமையாக விமர்சித் தார். இவ்வாறு இயல்பாக எழுந்த தமிழக விடுதலைக் கோரிக்கைக்கும் நடைமுறைச் சாத்தியமற்ற திராவிட நாடு கோரிக்கைக்கும் இடையே கருத்தியல் முரண்பாடு நிலவியது. 1961இல் தி.மு.க உடைவதற்கும் ‘வெளிப்படை’க் காரணமாக அதுவே இருந்தது.

தவறான கோரிக்கையைத் தூக்கிச் சுமந்த அண்ணா, இலக்கு எதுவாயினும் எதிரி ஒன்றுதான் என்று கூறிய கருத்து மிக முக்கிய மானது. 1961இல் அண்ணா இவ்வாறு கருத்தறிவித்தார் : “திராவிட நாடு கேட்பவர்கள் தமிழ்நாட்டுக்குத் துரோகிகள் என்றோ, தமிழ்நாடு கேட்பவர் கள் திராவிட நாட்டுக்குப் பகைவர்கள் என்றோ பேசும்படி தூண்டிவிடுவது அடிப்படைப் பிரச்சினையை மாய்க்க முனை யும் மாபெரும் குற்றமாகும்...

“ அடிப்படைப் பிரச்சினை தமிழ்நாடா? திராவிட நாடா? என்ற அளவு, முறை, வகை என்பதுதானா? அல்ல. அடிப் படைப் பிரச்சினை இந்தியப் பேரரசு என்ற ஒன்றின் கீழ் அடிமையாக இருக்கத்தான் வேண்டுமா? அல்லது விடு பட்டுத் தனிஅரசு ஆகவேண்டுமா என்பதுதான்...”

“ அடிப்படை பிரச்சினை ‘ஏக இந்தியா’ எனும் பொறி உடைக்கப்பட்டாக வேண்டும். இந்தியப் பேரரசு எனும் திட்டம் தகர்க்கப்பட்டாக வேண்டும் என்பதுதான் என்பதை மறத்தல் ஆகாது.''

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், எண்.144, 18.6.1961)

அண்ணாவின் அரசியலின் சாரம் ‘ஏக இந்தியா’ என்பது மறுக்கப்பட வேண்டும்; தகர்க்கப்பட வேண்டும் என்பது தான். அதை நிறைவேற்றிக் கொள்ளும் வழியாகவே திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை முன்வைத்தார். திராவிட நாடு விடுதலைக்கு மாற்றாக ‘விரும்பி னால் பிரிந்து போகின்ற உரிமை’ மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றார். இந்த இரண்டு தீர்வுகளின் சாரமும் ஏக இந்திய மறுப்பாக இருப்பதைத் தமிழ்த் தேசியர்களும் ஆய்வாளர் களும் உற்றுநோக்க வேண்டும். திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்ட போதும், தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுக் கொண்ட நிலையிலும், அண்ணா ஏக இந்திய ஆதரவாக ஓர் ஒற்றைச் சொல்லைக்கூட பதிவு செய்யவில்லை.

‘ஏக இந்தியா’ என்பதன் நடை முறைச் செயல் திட்டமே ‘ஒருமைப்பாட்டைக் காத்தல்’ என்பது ஆகும். அண்ணாவின் காலத்திய தி.மு.க.வும், இன்றைய தி.மு.க.வும் தம்முடைய அரசியல் நோக்கு, நடைமுறை, செயல் பாடு ஆகியவற்றில் வேறுபடும் இரு வேறு கட்சிகளாகும். முன்னமே நடந்து வரும் உயிர் காக்கும் மருந்துகள் நிறைந்த மருந்துக் கடையை ஒருவன் வாங்கி போதை தரும் மதுகாசவக் கடையாக மாற்றி இலாபத்தைக் குவிப்பது போல, தி.மு.க.வின் உள்ளீடு இன்று மாறிப் போனது.

தி.மு.க.வின் இன்றையத் தலைமையான கலைஞர் கருணாநிதி தனது ஒவ்வொரு செயல்பாட்டின் போதும் ‘இந்திய ஒருமைப்பாட்டை’க் காக்க என்று கூறியும், எழுதியும், தன்னை ஏக ‘இந்தியப் பாதுகாவலராக நிலைநிறுத்திக் கொள்வது அண்ணாவின் ஒவ்வொரு கூற்றையும் அடியோடு மறுப்பதாகும். இன்றைய தி.மு.க.வின் அரசியல் ‘அண்ணா - எதிர் அரசியல்’ ஆகும்.

அண்ணாவின் அரசியலை மறுக்கும் திராவிடக் கட்சிகள் அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடுவது அண்ணாவை இழிவுபடுத்துவதாகும். சிறப்பு மிக்கத் தலைவர்களை இழிவு படுத்த எளிய வழிகள் உள்ளன. புத்தர் படத்தை மாட்டி வைத்துக் கொண்டு கசாப்புக் கடை நடத்துவது புத்தரை இழிவுபடுத்தும் வேலை. காந்தி படத்தை படத்தை மாட்டி வைத்துக் கொண்டு கள், சாராயம் விற்பது காந்தியை இழிவு படுத்தும் எளிய முறை. அது போலவே, அறிஞர் அண்ணா வின் படத்தை மாட்டி வைத்துக் கொண்டு ‘இந்தியத் திருநாடு’ என்றும், ‘இந்திய ஒருமைப்பாடு’ என்றும் நீட்டி முழக்குவது அண்ணாவை இழிவுபடுத்துவ தாகும்.

அண்ணாவும் திராவிடத் தேசியமும்

எதிரியை சரியாக அடை யாளம் கண்ட அண்ணா தன் தேசிய இனத்தை அடையாளம் கண்டாரா? ஓர் இன விடுதலை அரசியலை முன்னெடுக்கக் கோட்பாட்டு வரையறுப்பும், அதில் தெளிவும் அடிப்படைத் தேவைகளாகும். உலக வரலாற்றையும் அரசியலையும் நன்கறிந்த அண்ணாவுக்கு மொழியினத் தேசியம் பற்றித் தெரியாதா? தெரிந்தும் திராவிடத் தேசியம் பேசினார். சென்னை மாகாணம் அவருடைய அரசியல் களமாக இருந்தபோதும் திராவிடம் பேசினார்; சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டுத் தனித்தனி மொழியினத் தாயகங்களை மொழிவழி மாநிலங்களாக்கிய பிறகும் திராவிடத் தேசியம் பேசி னார். அண்ணா தன் அரசியல் தேவைக்கேற்பக் கோட்பாட்டை வரையறுக்க முனைந்தார். அண்ணாவின் கோட்பாட்டுக் குளறுபடி தமிழினத்தின் இலக்குத் தப்பிய பயணத்தை அரை நூற்றாண்டுக் காலம் வழி நடத்தியது. அண்ணாவின் எழுத் தும் பேச்சும் தமிழின உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தன; ஆனால் தமிழின விடுதலைத் திசையில் ஓர் அங்குலம்கூட நகர்த்தவில்லை. சில இரசாயன மருந்துகள் அடித்தபின் செடி பச்சைப் பசேல் என்று தழை மண்டும், ஒரு காய் கூடக் காய்க்காது. அது மாடு களுக்கு உணவாகும், மனித னுக்குப் பயன்படாமற் போகும். அண்ணாவின் பங்களிப்பும் அப்படித்தான். தமிழினத்துக்கு உணர்வூட்டியது; உசுப்பி எழுப்பியது; ஆனால் விடுதலை அரசியலுக்குப் பயன்படாமற் போனது. எழுத்தாலும் பேச்சா லும் உணர்வூட்டப்பட்ட தமி ழினத்தின் எழுச்சி தேர்தல்களில் வாக்குகளாக அறுவடை செய்யப் பட்டது.

இது திராவிடம் பேசிய தேர்தல் அரசியல் வணிகர்களுக்கு வாழ் வளித்தது; வளம் கூட்டி யது. இன்று அண்ணாவின் பெயரில் அரசியல் கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியல் வணிகம் செய்ய வழிகாட்டியது.

திராவிடத் தேசியம் - திகைப்பூட்டும் வரையறை

சென்னை கொத்தவால்சாவடி யில் 4.6.1961இல் அறிஞர் அண்ணா பேசும்போது திராவிடத் தேசியத்தை வரையறுத்தார். ஈ.வெ.கி. சம்பத் தி.மு.க.வை விட்டு வெளியேறி 19.4.1961இல் தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கினார். திராவிடநாடு கோரிக்கை மீதான சம்பத்தின் கடுமையான தாக்குதல்களை அண்ணா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஈ.வெ.கி சம்பத் கட்சி ஆரம்பித்த இரண்டு நாட்களில் தூத்துக்குடி யில் தி.மு.க.வின் பொதுக்குழு வும், மதுரையில் 13.6.1961இல் பொது மாநாடு கூட்டப்பட்டன. முன்னெப்போதையும் விட அப்போது அண்ணா திராவிட நாடு கோரிக்கையை உயர்த்திப் பிடிக்க வேண்டிய சூழல் எழுந்து விட்டது. ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்ற முழக்கம்... திராவிட நாடு இனி சாத்தியமே இல்லை என்ற காலத்தில் எழுப்பப்பட்டது. இந்தக் காலக் கட்டத்தில்தான் அண்ணா திராவிடத் தேசியத்தை வரையறுக்க முற்பட்டார்.

‘அழகு, அழகு’ என்கிறோமே, எது உண்மையான அழகு? ‘இது தான் அழகு’ என்று இதுவரை இலக்கணம் வரையறுக்கப்பட வில்லை. ‘தேசீயம்’ என்று காங்கிரஸ் காரர்கள் சொல்கிறார்கள். ‘திராவிடத் தேசியம்’ என் கிறோம் நாம். இல்லை, இல்லை, தமிழ்த் தேசீயம்தான் இருக்கிறது என்கிறார்கள் ஒரு சாரார்.

‘இந்தியத் தேசீயம்’ என்று வடநாட்டில் இருப்பவர்களும் இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்கள் ‘ஆசிய தேசீயம்’ என்றும்; ஆசியாவுக்கு வெளியே இருப்பவர்கள் ‘தேசீயம்’ என்பதே இல்லை! எல்லாம் ‘சர்வதேசீயம்தான்’ என்றும் சொல்கிறார்கள். இன்னும் வானவெளிக்குச் சென்று வந்தால், ‘அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரே தேசியம்’ என்பார்கள். இப்படி எது தேசீயம் என்று இன்னமும் வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.

“இந்தக் கூட்டத்தில் உங்களைப் பார்த்து பாட்டுப் பாடத் தெரிந்தவர்களெல்லாம் ஒரு பக்கம் வாருங்கள்; பாடத் தெரியாதவர்களெல்லாம் மற் றொரு பக்கம் இருங்கள்” என்று நான் கேட்டுக்கொண்டு, அதன் படி நீங்கள் வந்தால்... அந்த இரு பிரிவினரையும் பாட்டுப் பாடத் தெரிந்த தேசீயம், பாடத் தெரி யாத தேசீயம் என்று சொல்ல லாம். இன்னொருவர் வந்து இந்தக் கூட்டத்திலுள்ள உயரமானவர்களெல்லாம் ஒரு பக்கமும், குட்டையானவர்கள் மற்றொரு பக்கமும் வாருங்கள்” என்று சொன்னால் பாடத் தெரிந்த பிரிவினரும் பாடத் தெரி யாத பிரிவினரும் கலைவார் கள்... உயரத்தின் அளவிலேதான் பிரிக்கப்படுவர்.”

“ஆங்கிலேயன் இந்தியாவுக்கு வந்தபின் ஆங்கிலேயன் ஆளுபவ னாகவும், இந்தியர்கள் ஆளப் படுபவர்களாகவும் பிரிக்கப் பட்டனர். “உயரமாக இருப்பவர்களை அழைத்ததும், பாடத் தெரிந்த அணியிலிருந்த உயரமானவர்கள் பிரிந்து இன்னொரு பக்கம் வந்தது போல், வெள்ளையன் வெளியேறிய பின் கொடுமைப் படுத்தப்படும் மக்கள் ஒரு பக்க மும், கொடுமைப்படுத்துபவர் மற்றொரு பக்கமும் இருந்தார் கள்... “ வட நாட்டினர் சுரண்டுபவ ராகவும், தென்னாட்டினர் சுரண்டப்படுபவராகவும் இருந்த னர்...”

“...வடநாட்டால் நாம் சீரழிக்கப்படுகிறோம் என்ற நம்பிக்கை இருப்பவர்கள் இருக் கிறார்கள்; அவர்களைத் திரா விடர் என்கிறோம். அதனால் இந்நாட்டைத் திராவிடம் என் கிறோம். இப்படிச் சொல்லிச் சொல்லி உள்ளத்தில் பதிந்து விட்டால் இது ஒரு தேசீய மாகிறது.” (சி.என். அண்ணாதுரை, திரா விடத் தேசீயம், பாரதி பதிப்ப கம், சென்னை 1999, பக்.7-9)

அண்ணாவின் தேசீயம் பற்றிய வரையறை திகைப்பூட்டக் கூடி யது. அவருடைய வரையறை அரசியல் அறிவியலுக்குப் பொருந்தாது; ஆனால் அவர் அதுவரை மேற்கொண்டு வந்த அரசியல் நிலைப்பாட்டுக்குப் பொருந்துமாறு தேசீயத்தை வரையறுக்க முற்பட்டார். தேசீயம் பற்றிய தம்முடைய கருத்து குறைபாடுடையது என்பது அண்ணாவுக்கும் தெரியும். 1961இல் இது குறித்து கம்யூனிஸ்ட்டு தலைவர் இராம மூர்த்தி கேள்வி எழுப்பியதாகப் பதிவு செய்திருக்கிறார் அண்ணா:

“இந்தச் சென்னை இராஜ்யத் திலே தமிழர்கள், ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடியர்கள் ஆகியோர்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிடுவார்களா? என்று கம்யூ னிஸ்டு தலைவர் இராமமூர்த்தி கேட்டார் - ஒன்பது ஆண்டு களுக்கு முன்னால்”

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், எண்.139, 14.5.1961)

“திராவிட தேசியம் ஏற்பட வில்லை - ஏற்பட முடியாது. தமிழ் தேசியம்தான் சாத்தியம் என்கிறார்கள்... “ தமிழ்த் தேசியத்தை ஆந்திர தேசியத்திலிருந்து, கருநாடகத் தேசியத்திலிருந்து, கேரளத் தேசியத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை யாவை? மொழி ஒன்றுதான் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது... “ ஒரு தேசீய இனம் என்பதற்கு மொழி ஒற்றுமையைக் காட்டி லும் கலாச்சார ஒற்றுமை, வாழ்க்கை ஒற்றுமை ஆகியவை அதிக அவசியம்.”

(மேலது, 14.5.1961)

மொழிவழித் தேசியம் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் வலுப்பெற்று விட்ட நிலையிலும், மொழிவாரி மாநிலங்களாகத் தென்னிந்தியா பிரிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், இனி திராவிட நாடு என்ற ஒன்று சாத்தியமில்லை என்று தெளி வாகி விட்ட நிலையிலும், மொழி வழித் தேசியம் பற்றிப் பலர் எடுத்துக் கூறினாலும் அதை ஏற்க அண்ணா மறுத்தார். ஏனெனில் அது அவருடைய அரசியலுக்குப் பொருந்திவரக் கூடியதல்ல.

இன விடுதலை என்றஇலக்கை அடைய தேர்தல் வெற்றிகளே வழி என்று கூறிய அண்ணா, தமிழின உணர்வூட்டப்பட்ட இளைஞர்களைப் பெருவாரி யாகத் திரட்டி தேர்தல் அரசிய லில் ஈடுபடுத்தினார். 1963இல் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை அண்ணா கைவிட்டார். அதன் பிறகு, தேர்தல் வெற்றியே இலக்கு, இன உணர்வூட்டலே அதை ஈட்டும் வழி என இலக்கும் வழிமுறையும் இடம் மாறின. தமிழினத்தின் இன்றைய தடுமாற்றத்திற்கும் இன விடுதலைப் பயணத்தின் திசை மாற்றத்திற்கும் காரண மானோர் பட்டியலில் முதற் பெயர் அறிஞர் அண்ணா.

வரும்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com