Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஏப்ரல் 2009
சீமான் விடுதலை! கொளத்தூர் மணி நாஞ்சில் சம்பத்தையும் விடுதலை செய்க!

இது ஒரு நரியின் கதை: நரி ஆற்றைக் கடந்து போய்க் கொண்டிருந்த போது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாம். “அய்யோ! ஆபத்து! உலகத்துக்கே ஆபத்து!” என்று அது கத்தியதாம். சிலர் அந்த நரியைக் காப்பாற்றிக் கரை சேர்த்த பின், “உலகத்துக்கு ஆபத்து என்றாயே, எப்படி?” என்று கேட்டார்களாம். நரி சொன்னதாம்: “நான் வெள்ளத்தில் மூழ்கி விட்டால், என்னைப் பொறுத்த வரை உலகமே மூழ்கி விட்டதாகத்தானே பொருள்? அதனால்தான் அப்படிக் கத்தினேன்.”

இந்தியாவை ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரசும், தமிழகத்தை ஆளும் தி.மு.கழகமும் இந்த நரியைப் போலத்தான்... தங்களுக்கு ஆபத்து என்றால் தேசத்துக்கே ஆபத்து என்று கூவுகின்றன. தமிழீழத்துக்கு ஆதரவாக மேடையில் பேசிய ‘குற்ற’த்துக்காக இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் ஆகிய தோழர்களைத் தளைப்படுத்திய தி.மு.க. அரசு அம்மூவரையும் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் (தேபாச = NSA) படி தடுப்புக் காவலில் அடைத்து, வழக்கு விசாரணையே இல்லாமல் குறைந்தது ஓராண்டுக் காலம் அவர்களைச் சிறையில் பூட்டுவதற்கு வழி செய்துள்ளது.

எவர் ஒருவரையும் மேடைப் பேச்சுக்காகவே சிறைப்படுத்துவது குறித்து ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். இது பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது, சனநாயகத்தைக் காயப்படுத்துவது! அதிலும் தடுப்புக் காவல் சட்டத்தை ஏவுவது அப்பட்டமான அடக்குமுறையே! யார் என்ன பேசியிருப்பினும் அந்தப் பேச்சினால் தேசத்துக்கே ஆபத்து என்றால், அவ்வளவு நலிந்த தேசத்தைப் பாதுகாக்கத்தான் வேண்டுமா? என்ற வினா எழும். பேச்சின் வீச்சிலேயே பெயர்ந்து விழ உங்கள் தேசம் என்ன அட்டை வீடா?


சிறப்பாசிரியர்

தியாகு

வெளியீட்டாளர் - ஆசிரியர்:

சிவ.காளிதாசன்

தொடர்புக்கு:

சிவ.காளிதாசன்
1434 (36/22), இராணி அண்ணா நகர்,
சென்னை - 600 078
பேசி: 9283222988
மின்னஞ்சல்: [email protected]


ஓரிதழ் ரூ.8
ஓராண்டு ரூ.100
ஆறாண்டு ரூ.500
புரவலர் ரூ.1000

பிரித்தானியர் காலத்திய ரவுலட் சட்டம்தான் இந்தியாவின் அடக்குமுறைச் சட்டங்களுக்கெல்லாம் முன்னோடி. இந்தச் சட்டத்தைத்தான் காந்தியார் சட்டமல்லாத சட்டம் (Lawless law) என்று சாடினார். இந்தச் சட்டத்தை எதிர்த்து 1919இல் அமிர்தசரசு சாலியன்வாலாபாக் பொதுக் கூட்டத்திற்காகத் திரண்ட மக்களைத்தான் ஜெனரல் டயர் “தோட்டாக்கள் தீரும் வரை” சுட்டுத் தள்ளினான்.

1947 அதிகாரக் கைமாற்றத்துக்குப் பிறகும் அடக்குமுறைச் சட்டங்களின் கொடும்பயணம் தொடர்கிறது. “தடுப்புக் காவல் சட்டங்களின் துணை கொண்டுதான் ஆள வேண்டும் என்றால் ஒரு நாள்கூட ஆள விருப்பமில்லை” என்று முழங்கியவர் சவகர்லால் நேரு! ஆனால் அடக்குமுறைச் சட்டங்கள் இல்லாமல் இந்தியா ஒரு நாள்கூட உயிர்வாழவில்லை என்பதே நாளது வரை மெய்!

இந்தியப் பாதுகாப்பு விதிகள் (DIR) - இந்தியப் பொதுமைக் கட்சி (சிபிஐ) உடைந்து மார்க்சியக் கட்சி (சிபிஎம்) பிறந்த போது அக்கட்சித் தலைவர்களை இந்தச் சட்டத்தில்தான் ஓராண்டுக்கு மேல் சிறைப்படுத்தி வைத்தனர். தமிழ்நாட்டில் 1965 மொழிப் போராட்டத்தின் போது கலைஞர் கருணாநிதியைச் சிறைப்படுத்த இந்தச் சட்டத்தைத்தான் பக்தவத்சலத்தின் காங்கிரசு ஆட்சி பயன்படுத்தியது.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Maintenance of Internal Security), சுருங்கச் சொன்னால் மிசா-, இந்தச் சட்டத்தின் துணை கொண்டுதான் 1975-77 நெருக்கடிநிலைக் காலத்தில் இந்தியத் தலைமையமைச்சர் இந்திரா காந்தி தம்மை எதிர்த்தவர்களையெல்லாம் சிறையில் தள்ளினார். செயப்பிரகாச நாராயணன், மொரார்சி தேசாய் போன்ற எதிர்த் தரப்புத் தலைவர்களை மட்டுமல்ல, ஆளும் காங்கிரசின் செயற்குழு உறுப்பினராக இருந்த சந்திரசேகரரையும் கூட மிசா விட்டு வைக்கவில்லை. மிசா அடக்குமுறையால் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட கட்சி தி.மு.க. சென்னை நடுவண் சிறையில் மு.க. ஸ்டாலின், சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி, நீலநாராயணன் போன்ற பலர் கொடுவதைக்கு ஆளானதும், விடுதலைக்கு முன்பே சிட்டிபாபு உயிரிழந்ததும் மறக்கக் கூடிய கொடுமைகளா?

1977இல் சனதா கட்சி ஆட்சிக்கு வந்து மிசாவை நீக்கிற்று. மிசாவின் இடத்தில் 1980ஆம் ஆண்டு பிறந்தது ‘நிசா’ (NSA - தேபாச) என்னும் தேசப் பாதுகாப்புச் சட்டம். மிசாவின் வடு தாங்கிய திமுக நிசாவைக் கையிலெடுக்கவே கூசியிருக்க வேண்டும். ஆனால் கருணாநிதியின் திமுக ஆட்சி எந்த அடக்குமுறைச் சட்டத்தையும் ஏவாமல் விட்டதில்லை. தடா, பொடா, குண்டர் சட்டம் என்று கறுப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவதில் திமுக, அதிமுக ஆட்சிகளிடையே எவ்வித வேறுபாடும் இல்லை.

ஆட்சியாளர்கள் அடக்குமுறைச் சட்டங் களைப் பயன்படுத்துவது வெட்கக்கேடு! மேடைப் பேச்சுக்காக எவரையும் சிறைப்படுத்துவது மானக்கேடு! மேடைப் பேச்சுக்காகச் சிறைப்படுத்த அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்துவது கேவலத்திலும் கேவலமான வெட்கக்கேடும் மானக்கேடும் ஆகும். கொஞ்சமாவது சனநாயகச் சொரணையுள்ள எந்த ஆட்சியும் இதைச் செய்யாது.

என்ன பேசினார் சீமான்? என்ன பேசினார் கொளத்தூர் மணி? என்ன பேசினார் நாஞ்சில் சம்பத்? இந்தப் பேச்சுகளால் என்ன ஆபத்து தேசத்துக்கு? சீமானை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைப்பதற்கான ஆணையில் அவர் பாளையங்கோட்டைப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை எடுத்துக்காட்டப் பட்டுள்ளது.

“பிரபாகரன் என்னிடத்தில் ‘அன்புத்தம்பி! ஒரு ஐயாயிரம் இளைஞர்களை ஒன்று திரட்டி உன்னால் நம் இன விடுதலைக்குப் போராட முடியாதா?’ என்று கேட்டார். அதற்கு நான் "அண்ணா, பார், தமிழின விடுதலைக்காக எழுச்சிமிகு மறத்தமிழர் கூட்டம், உன் பின்னால் நிற்பதைப் பார். நீ நம்பிக்கையோடு களமாடு. உன் பின்னால் இந்தத் தமிழ் இனமே விடுதலைக் காகப் போராடும்' என்றேன்”.

மேலும் அவர் சொன்னாராம்: “இந்தியா ஒரு கருத்துச் சுதந்திரமற்ற, பேச்சு சுதந்திரமற்ற மிகப் பெரிய சர்வாதிகார நாடு என நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசவே கூடாதா? தடை தடை என்றால் உடை உடை என்றும், சிறை சிறை என்றால் அதை நிறை நிறை என்றும் போராடுவான், அதுதான் சீமான்”.

“வாக்களித்த மக்களை சந்திக்க வரும் போது எலிப்படை, பூனைப்படை, இசட் பிரிவு, ஒய் பிரிவு என்று வருகிறீர்களே. எங்கள் ஆத்தாவும் அப்பனும் ஒரு வெங்கலத் தட்டிலே ஆரத்தி எடுக்கிறார்களே, அதில் ஆசிட் வைத்து ஊற்றினால் என்ன பண்ணுவீர்கள்?”

“என் தலைவர் பிரபாகரன் பின்னால், என் அன்பான தம்பிகளே, எழுச்சியுடனும் புரட்சியுடனும் எழுந்து நில்லுங்கள். இந்த மண்ணிலே புரட்சி எழுந்தாக வேண்டும். புரட்சி எப்போது வெல்லும்! அதை நாளை தமிழ் ஈழம் சொல்லும்!”

சீமானின் இந்தப் பேச்சை உணர்ச்சிமயமான பேச்சு என்று தடுப்புக் காவல் ஆணை வர்ணிக்கிறது. இந்தப் பேச்சின் வாயிலாக அவர் பொதுமக்கள் இடையே வன்முறையைத் தூண்டியதாக அது குற்றஞ்சாட்டுகிறது.

மேலே எடுத்துக்காட்டிய சீமானின் உரையில் வன்முறையைத் தூண்டக்கூடிய வாசகம் எது என்பதை இந்த ஆணை குறிப்பிட்டுச் சொல்ல வில்லை. பிரபாகரனை நம்பிக்கையோடு களமாடச் சொல்வது வன்முறைக்கான தூண்டுதலா? இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று குற்றஞ் சாட்டுவது வன்முறைக்கான தூண்டுதலா? இந்த மண்ணில் புரட்சி வேண்டும் என்று அறைகூவல் விடுப்பது வன்முறைக்கான தூண்டுதலா? புரட்சி புரட்சி என்று பேசக் கூடியவர்கள், எழுதக் கூடியவர்கள் எல்லாம் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்று குற்றஞ் சாட்ட முடியுமா? பொதுமையர் (கம்யூனிஸ்டுகள்) எப்படி? புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் எப்படி? புரட்சிக் கலைஞர் எப்படி? இப்படிக் கேட்டுக் கொண்டே போகலாம்.

எங்கள் ஆத்தாவும் அப்பனும் ஆரத்தித் தட்டில் அமிலம் ஊற்றினால் என்ன பண்ணுவீர்கள்? என்ற கேள்வியும்கூட தலைவர்களின் பாது காப்புக்கான ஏற்பாடுகளை எள்ளி நகையாடுவது தானே தவிர, வன்முறையைத் தூண்டுவது அன்று. மக்களின் பகைமையை ஈட்டிக் கொண்டால் எவ்விதப் பாதுகாப்பும் எடுபடாது என்பதற்கான எச்சரிக்கையே இது. ஒருவேளை இந்தப் பேச்சு வன்முறைக்கான தூண்டுதலாகவே கருதப் பட்டாலும்கூட, இதனால் தேசப் பாதுகாப்புக்கு எப்படிக் கேடு வரும்?

உள்ளபடி வன்முறையைத் தூண்டியதற்காக எவர் ஒருவரையும் தடுப்புக் காவலில் வைப்பதற் கான வழிவகை ஏதும் தேபாச-இல் இல்லை. சீமானின் பேச்சு எந்த வகையில் தேசப் பாதுகாப்புக்கு கேடு செய்கிறது என்பதைத் தடுப்புக் காவல் ஆணை விளக்கவே இல்லை.

ஆணை இப்படி சொல்கிறது:

“மேற்கூறிய உணர்ச்சிமயமான பேச்சின் வாயிலாக சீமான், பொதுமக்களிடையே வன்முறையைத் தூண்டி விட்டார்; மேலும் பொது ஒழுங்கைக் காப்பதற்கும், இந்திய இறையாண்மைக்கும் தீங்கு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டார்.” தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் எந்த விதியும் ஒருவரை மேடைப் பேச்சுக்காகவே சிறைப் படுத்துவதற்கு வழிவகை செய்யவில்லை. அந்தச் சட்டத்தின் பிரிவு 3, உட்பிரிவு (2) ஒருவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான காரணியங் களை குறிப்பிடுகிறது.

அரசுப் பாதுகாப்புக்கோ, பொது ஒழுங்கைக் காப்பதற்கோ, சமுதாயத்திற்கு இன்றியமையாத வழங்கல் மற்றும் சேவைகளுக்கோ கேடு பயக்கும் விதத்தில் ஒருவர் செயல்படுவார் என்று நடுவண் அரசோ, மாநில அரசோ உறுதியாகக் கருதினால் அவரை அப்படிச் செயல்பட விடாமல் தடுப்பதற் காகத் தடுப்புக் காவலில் வைக்கலாம் என்று இந்த விதி சொல்கிறது. செயல்பட விடாமல் என்று உள்ளதே தவிர பேச விடாமல் என்று காணப் படவில்லை. எனவே வெறும் பேச்சுக்காகவே எவரையும் தடுப்புக் காவலில் வைப்பதற்கான வழிவகை ஏதும் இச்சட்டத்தில் காணப்பட வில்லை. இதை மனத்திற் கொண்டுதான் சீமான் மீதான தடுப்புக் காவல் ஆணையானது அவர் பேசியதை எடுத்துக்காட்டுவதோடு நில்லாமல், “மேலும், பொது ஒழுங்கைக் காப்பதற்கும், இந்திய இறையாண்மைக்கும் தீங்கு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டார்” என்றும் குறிப்பிடு கிறது. மேலும் செயல்பட்டார் என்றால் அவரது பேச்சையே செயலாகக் கருதுவதற்கில்லை என்றாகிறது. ஆனால் பேச்சல்லாத அவரது செயல்கள் எதுவும் ஆணையில் எடுத்துக்காட்டப் படவில்லை. என்ன செயல் புரிந்தார் என்ற குறிப்பும் இல்லை, என்ன செயல்புரிய விடாமல் தடுப்பதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதற்கான குறிப்பும் இல்லை.

சீமானைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கும், திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையருக்கும் ஒரு கேள்வி: தேசப் பாதுகாப்புச் சட்டத்தை நீங்கள் படித்துப் பார்த்தது உண்டா? படித்திருந்தால் அதிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள்? சீமான் இந்திய இறையாண்மைக்குத் தீங்கு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டதாகக் குறிப்பிடுகிறீர்கள். இந்திய இறையாண்மைக்கும் தேசப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் என்ன தொடர்பு? தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் இறையாண்மை பற்றிய பேச்சே இல்லை, அந்தச் சொல்கூட இடம்பெறவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

தேசப் பாதுகாப்புச் சட்டம் என்பது அரசுப் பாதுகாப்பு (State security), பொது ஒழுங்கு (Public Order), இன்றியமையாப் பணிகள் (Essential Supplies and Services) ஆகிய மூன்று கூறுகளைக் காப்பதற்கானதே தவிர, இந்திய இறையாண்மை தொடர்பானது அன்று. சீமான் மீதான குற்றச் சாட்டு இந்திய இறையாண்மையோடு பொது ஒழுங்கையும் குறிப்பிடுகிறது. ஆனால் அவர் எப்படிப் பொது ஒழுங்குக்குத் தீங்கு விளைவித் தார் என்பதற்கோ, எதிர்காலத்தில் எப்படித் தீங்கு விளைவிக்கப் போகிறார் என்பதற்கோ எந்தச் சான்றும் தரவில்லை.

இந்திய இறையாண்மையை ஆதரித்தோ! எதிர்த்தோ பேசுவதற்கும் எழுதுவதற்கும் இந்தியக் குடிமகன், குடிமகள் ஒவ்வொருவருக் கும் உரிமை உள்ளது. இந்திய இறை யாண்மையை எதிர்த்து சீமான் எதுவும் பேசியதற் கான சான்று இல்லை. பேசியிருந்தாலும் குற்றம் இல்லை. குற்றமென்றாலும் தேசயப் பாது காப்புச் சட்டம் அதற்கானதன்று.

ஆகவே சீமானைத் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தியிருப்பது அரசின் சட்ட விரோத நடவடிக்கையாகும். எத்தனை முறை தளைப்படுத்தினாலும் அவர் மீண்டும் மீண்டும் புலிகளை ஆதரித்துப் பேசுகிறார் என்பதற்காக அவர் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியிருப்பதாக அரசு கூறுமானால், அதுவும் சட்டப்படி ஏற்புடையதன்று. அவர் பிணையில் வெளியே வருவதைத் தடுப்பதற்காகவே தடுப்புக் காவலில் வைக்கப்படுவதாக தடுப்புக் காவல் ஆணையே ஒப்புக் கொள்கிறது. இது நாட்டின் நீதியியல் நடைமுறையில் குறுக்கிடுவது ஆகும். காங்கிரஸ்காரர்கள் வலியுறுத்தியதாலேயே சீமான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்றால், இது ஆளுங்கட்சியின் தேவைகளுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் தரும் அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்வது தவிர வேறல்ல.

இந்தியா கருத்துரிமையற்ற, பேச்சு உரிமை யற்ற, சர்வாதிகார நாடு என்று சீமான் பேசியதாக எடுத்துக் காட்டி விட்டு, அதற்காகவே அவரைத் தளைப்படுத்தித் தடுப்புக் காவலில் சிறைப் படுத்தியிருப்பது ஒரு பெரிய நகைமுரண் எனலாம். அவர் கூறியது உண்மையில்லை என்று அரசு மெய்ப்பிக்க விரும்பினால், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தேசப் பாதுகாப்புச் சட்டத் தின் பிடியிலிருந்து விடுவிப்பது மட்டுமல்ல, மேடைப் பேச்சுக்காக அவர் மீது தொடுக்கப் பட்டுள்ள எல்லா வழக்குகளையும் விலக்கிக் கொள்ளவும் வேண்டும்.

இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் சனநாயகத்தில் நம்பிக்கை இருக்குமானால் சீமானின் கருத்தைக் கருத்தால், பேச்சைப் பேச் சால் சந்திக்கட்டும். அவரைச் சிறைப்படுத்து வதை இத்தோடு கைவிடட்டும். சீமானை விடுதலை செய்யக் கோருவது தமிழ் இனத்தின் கருத்துரிமையை மீட்பதற்கான கோரிக்கையாகும். தமிழீழ மக்களுடன் தமிழக மக்கள் ஒருமைப்பாடு கொள்ளும் தேசிய உரிமையை மீட்பதற்கான கோரிக்கையாகும். ஆகவே இது நம் தமிழின உரிமைக் கோரிக்கை : சீமானை விடுதலை செய்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com