Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
செப்டம்பர் 2008

அமர்நாத் நிலமும், மதவெறியும் - பனிலிங்கமாய்ச் சுடும் நெருப்பு
க.மயில்வாகனன்


1947 அக்டோபரில் ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்போது பிரச்சனைகளோடுதான் இணைந்தது. அப்போதைய பாகிஸ்தான் பட்டாணிகளைக் குடி அமர்த்தியது. காஷ்மீர் அரசர் ஹரிசிங் இந்தியாவின் உதவியைக் கோரினார். இந்தியாவுடன் தன்னை இணைத்துக் கொண்டால் இராணுவ உதவி அளிப்பதாக நேரு சொன்னார். காஷ்மீர் அரசர் இந்தியாவின் இணைப்பில் கையெழுத்திட்டார். இந்திய இராணுவம், பாகிஸ்தான் இராணுவத்தை காஷ்மீரின் ஒரு பகுதியில் இருந்து வெளியேற்றியது.

ஷேக் அப்துல்லா, மீர்சா முகமது சால்பெக் ஆகியோர் காஷ்மீர் மக்களுக்குச் சுயநிர்ணயம் கேட்டு போராடத் தொடங்கினர். ஷேக் அப்துல்லா கொடைக்கானலில் சிறை வைக்கப்பட்டார். பல ஆண்டுகள் ஷேக் அப்துல்லா சிறையில் இருந்தார். மீர்சா முகமது வால் ஜம்மு காஷ்மீர் மாணவர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இவர்கள் ஷேக் அப்துல்லாவின் விடுதலையைக் கேட்டுக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பின்னாளில் அவ்வமைப்பு காஷ்மீர் ஜனநாயக விடுதலை முன்னணியாக மாறியது.

1978இல் அமானுல்லாகான் என்பவரால் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எப்) ஆரம்பிக்கப்பட்டது.

1982இல் ஷேக் அப்துல்லாவின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் பரூக் அப்துல்லா மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஆனார்.

1987 தேர்தலில் ஃபரூக் அப்துல்லா ராஜீவ் காந்தியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். இதே தேர்தலில் காஷ்மீர் அமைப்புகள் ஒன்றிணைந்து முஸ்லீம் ஐக்கிய முன்னணி ஏற்படுத்தித் தேர்தலில் போட்டியிட்டனர்.

காங்கிரஸ்-அப்துல்லா கூட்டணி 76 தொகுதிகளிலும், முஐமு - 43 தொகுதியிலும் போட்டியிட்டன. வாக்கு சாவடியில் முறைகேடுகள் நடந்தன. முஐமு - 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. பரூக் அப்துல்லா முதல்வர் ஆனார். 1987இல் முறையாக தேர்தல் நடக்காததாலும் இந்திய ஆதரவு அரசாங்கம் காஷ்மீரில் அமைய வேண்டும், எதிர் கருத்துகள் இருக்கக்கூடாது என்ற இந்திய அரசின் கொள்கையாலும், காஷ்மீர் இளைஞர்களிடையே இந்திய ஆட்சியாளர்கள் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. அது அவர்களைப் போராட்டப் பாதைக்குத் தள்ளியது.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் பகடைக்காய்களாகக் காஷ்மீர் மக்கள் மாற்றப்பட்டனர். பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற லெப். எஸ்.ஜே.சின்காவை ஆளுநராக நியமித்தது. இந்துத்துவா கொள்கையுடைய அவர் அமர்நாத் கோயில் அமைப்பின் நிர்வாகத் தலைவராகவும் ஆக்கப்பட்டார். அமர்நாத் கோயிலுக்கு நிலத்தை வழங்குவதற்கு அவர் வழிவகைகளைச் செய்தார். அப்போது முதல்வராக இருந்த குலாம் நபி ஆசாத், இந்துக்களின் வாக்குகளைப் பெற அதனை நல்ல வாய்ப்பாகக் கருதினார். அதனால் மே- 26ஆம் தேதி இந்திய அரசும், ஜம்மு காஷ்மீர் அரசும் 100 ஏக்கர் வனத்துறை நிலத்தை அமர்நாத் கோயில் அமைப்புக்கு ஒதுக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மக்கள் போராட்டம் நடத்தினர்.

மதப் பயன்பாட்டிற்காக ஒரு சிறிய அளவு நிலம் கூடத் தரக்கூடாது என்று காஷ்மீர் தலைவர்கள் கூறுவது பெரும்பான்மை இந்துக்களையும், இந்திய தேசியத்தையும் கேள்விக்குறியாக்கும் என்று கூறி இந்துத்துவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. ஜம்முவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஹிந்துத்துவா அமைப்பினர் முற்றுகையிட்டனர். இதனால் காஷ்மீர் பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் செல்ல முடியவில்லை அது போல ஜம்முவின் விளைபொருட்களான, ஆப்பிளும், ரோஜாவும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் செல்ல முடியவில்லை.

எனவே காஷ்மீர் மக்கள் தங்களுடைய பொருட்களை பாகிஸ்தான் பகுதியான முஸாபராபாத்துக்கு எடுத்துச் செல்லப் போவதாகக் கூறினர். அதனைக் காஷ்மீர் வர்த்தக சங்கம், தொழில் வர்த்தக சங்கம், ஜனநாயக மக்கள் கட்சி, ஹ§ரியத் மாநாட்டு கட்சிகள் ஆதரித்தன. ஆனால் இந்திய அரசு வேண்டாம் என அறிவுறித்தியது. தடைகளை மீறி மக்கள் செல்ல முற்பட்ட போது, போலீசாருக்கும், மக்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் ஹ§ரியத் மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான - ஷேக் அப்துல் அஜிஸ் இறந்தார். மேலும் அவருடன் சேர்ந்து 20 பேர் இறந்தார்கள். பலர் காயமடைந்தனர். இந்த செய்தி பரவியதும் காஷ்மீர் முழுவதும் கலவரம் பரவியது. காஷ்மீர் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் சிவராஜ் பாட்டில் தலைமையில் 18 பேர் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு ஜம்முவில், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு சிவராஜ் பாட்டில், ஜம்மு மக்களின் உணர்வுகளோ அல்லது காஷ்மீர் மக்களின் உணர்வுகளோ பாதிக்காத வகையில் இப்பிரச்சனை தீர்க்கப்படும் என்றார். ஆனால் இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சனை தேசிய அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

பா.ஜ.க. இதை மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு முக்கியமான தளமாக்கிக் கொண்டுள்ளது. ஜம்முவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமர்நாத் யாத்திரா சங்கர்ஷ் சமிதியை ஆதரிக்கப்போவதாக பா.ஜ.க. அறிவித்திருக்கிறது.
அடுத்தகட்டமாக தில்லியில் நடைபெற்ற ஆராதனா திவாஸியில், அமர்நாத் குகையில் இருப்பது போன்ற பனிலிங்கத்தை பா.ஜ.க.வினர் வைத்திருந்தனர். இவ்வாறு மதவெறி அரசியலை மெல்ல மெல்ல பா.ஜ.க. இந்தியா முழுவதும் எடுத்துச் செல்கிறது.

அமர்நாத் கோவிலுக்கு மீண்டும் நிலம் வழங்கக்கோரி விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் தலைவர் அசோக் சிங்கால் அயோத்தியில் ராமர் கோயில், ராமர் பாலம் இடிப்பதற்கு எதிர்ப்பு, அமர்நாத் பிரச்சனை ஆகியவற்றை வலியுறுத்தி வரும் மக்களவை தேர்தலுக்கு விஷ்வ இந்து பரிஷத் மாபெரும் பிரச்சார இயக்கத்தை தொடங்கும் என்று கூறியுள்ளார்.

அமர்நாத் கோயில் விவகாரம் இரண்டாவது அயோத்தியாக உருவெடுக்கும் என வி.எச்.பி. தலைவர் பிரவின் தொகாடியா பேசியிருக்கிறார். அமர்நாத் கோவிலுக்கு ஒரு அங்குலம் கூட நிலம் வழங்கக்கூடாது எனக் கடுமையாகக் காஷ்மீரிகள் எதிர்க்கின்றனர். அவர்கள் தங்களுக்கு வழங்கிய 320வது பிரிவின் கீழ் வரும் தங்களது சிறப்பு உரிமைகள் குறைந்துவிடும் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.

இப்பிரச்சினை காஷ்மீருக்கு மட்டும் உரியதன்று. ஒரு குறிப்பிட்ட நிலம் அரசு உடைமையாக உள்ள வரையில், அது அனைவருக்கும் பொதுவானது. அதே நிலம் ஒரு மதத்திற்கோ, ஒரு கோவிலுக்கோ வழங்கப்பட்டு விடுமானால், பொதுவுடைமை தனி உடைமை ஆகிவிடுகிறது. இப்படித்தான் பழங்காலத்திலும் மன்னர்கள் பலர், பொது நிலத்தை பார்ப்பனர்களுக்கு இலவயமாக வாரி வழங்கினர். அந்நிலங்களே பிரம்மதேயம் என்றும், சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. உழைக்காமல், மதத்தின் பெயரால் மண்ணைச் சுரண்டும் அவர்களின் பழக்கம் இன்றும்
தொடர்கிறது.

இறுதியில் இந்துத்துவாவின் மிரட்டல்களுக்குப் பயந்து, அந்நிலம் ‘தற்காலிகமாக’ அமர்நாத் கோவிலுக்கு வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அத்வானி மகிழ்ந்து பாராட்டி வரவேற்றுள்ளார். யானை வாய்ப் புகுந்த கரும்பு ஒரு நாளும் மீளாது என்பது அவாளுக்குத் தெரியாதா என்ன?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com