Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
செப்டம்பர் 2007
கொழும்பு அரசியல் திருப்பங்கள் தமிழர்களுக்கு உதவுமா?
அ. தமிழன்பன்

மகிந்த ராஜபக்சே அரசாங்கம் இன்று நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 50 கோடி டாலர் நிதி உதவியை உலக வங்கி, ஆசிய வங்கி மற்றும் உலக நாடுகளிடம் கோரியுள்ளது. பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறியே இந்த நிதி உதவியைக் கோரியுள்ளது. அதாவது. கட்டுநாயக்க விமான நிலைய விஸ்தரிப்பு, கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு மற்றும் கொழும்பு நகரப் போக்குவரத்து உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறியே நிதி உதவி கேட்கிறது.உண்மையில் இத்திட்டங்கள் குறித்து அரசாங்கம் தீர்மானங்கள் எதையும் போடவில்லை. இந்தப் பணத்தை முறைப்படி நிதியமைச்சகத்தின் மூலம் கோரவில்லை. முறைகேடாக மத்திய வங்கி ஆளுநர் மூலம் கோருகின்றது. எமது நாட்டை அடகுவைக்கும் இப்பெரும் தொகையைக் கடனாகக் கோரும் நடவடிக்கையை நாம் தடுக்கின்றோம். இதனாலேயே உலக நாடுகளை இலங்கைக்கும் கடன் வழங்க வேண்டாமெனத் தெரிவித்துள்ளோம்’’.

இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து ஓங்கி ஒலிக்கும் இந்தக் குரல் தமிழ்த் தலைவர்களுடையது அன்று. இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கேவுடையது. உலக நாடுகளை இலங்கைக்குக் கடன் கொடுக்க வேண்டாமெனச் சொல்வதோடு நிற்காமல், ‘அவ்வாறு உலக நாடுகள் கடன் கொடுத்தால் எமது ஆட்சியில் அதனை நாம் மீளச் செலுத்த முடியாதெனத் தெரிவித்துள்ளோம்’ என்றும் பேசியிருக்கிறார். ஒரு நாட்டில் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நேரடியாக உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுவதும், அதன்பின்பும் கடன் கொடுத்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைத் திருப்பித் தரமாட்டோம் என அறிவிப்பதும் எப்படி? ரணில் விக்கிரமசிங்கே இவ்வளவு வேகமாகப் பேசுவதின் பின்னணி என்ன?

Ranil Vikaramasinke, Samaraveera and Rajapakse இலங்கை அரசியலில், ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகிய இரு முன்னணித் தலைவர்கள் அமைச்சர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்களை அரசியல் ரீதியாகவும் முடக்கிப்போட பொய் வழக்குகளைப் போட்டுள்ளார் மகிந்த ராஜ பக்சே. இதனால் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவு என்று தனியாகச் செயல்படுகின்றனர்.

இந்த மக்கள் பிரிவும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயல்படத் தொடங்கியிருக்கின்றனர். இவர்களுக்குச் சந்திரிகாவின் ரகசிய ஆதரவும் உண்டு. இதனால் மீண்டும் பிரதமராகும் கனவு ரணிலுக்கு வந்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திராக் கட்சியின் மக்கள் பிரிவும் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே, பிரதமராக ரணிலும், துணைப்பிரதமராக மங்கள சமரவீராவும் வருவார்கள் என்பதற்கான குறிப்புகள் உள்ளன.

ராஜபக்சேவிற்கு அளித்து வந்த ஆதரவை ஜே.வி.பி. ஏற்கனவே விலக்கிக் கொண்டது இவர்களுக்குச் சாதகமான அம்சம். அண்மையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டது. இதுவும் ரணிலுக்குக் கூடுதல் பலம். ரணிலுடைய ஆவேசத்தின் பின்னணிகள் இவைதான். இலங்கை அரசியலில் படுவேகமாக நடக்கும் இந்த மாற்றங்கள் தமிழீழப் போராட்டத்துக்கு எந்த வகையிலாவது துணைபுரியுமா? ரணில் பிரதமராக வந்தால் தமிழீழ மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விகள் நமக்கு எழக்கூடும்.

இந்த அதிரடி அரசியல் மாற்றங்களுக்கான பின்னணிகளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. மாறாக, தமிழர்களுக்கு, தமிழீழப் போராட்டத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துகிற அரசியல் மாற்றமாகத்தான் இவை இருக்கும், எப்படி? மகிந்த ராஜபக்சே, இந்தியா உட்பட உலக நாடுகள் எவற்றின் பேச்சையும் கேட்பதில்லை. சட்டத்துக்குப் புறம்பான செயல்களையும் தொடர்ந்து மேற்கொள்கிறார். தமிழ் மக்களைப் பீதியில் ஆழ்த்தும் வெள்ளை வேன் கடத்தல்கள் உட்பட. உணவுப் பொருட்கள் கூட இன்றி அவதியுறும் நிலையில் ஈழப்பகுதி மக்களும் இருக்கிறார்கள். இவை உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்துக் கண்டனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

அண்மையில் இலங்கைக்குச் சென்றிருந்த ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகச் செயலாளர் ஜான் ஹோம்ஸ், ராய்ட்டர் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘இலங்கையில் மனிதாபிமானப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்துக் கடுமையான வேதனை ஏற்படுகிறது. இங்குள்ள நிலைமை உலகில் படுமோசமானவற்றுள் ஒன்றாக இருக்கிறது. ஜனநாயக ரீதியாகத் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் ஏனைய தரப்பினரைவிடவும் உயர்வான நியமங்களை அடிப்படையாகக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன. எனவே, மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பான அக்கறைகளை கவனத்திலெடுத்து முறைப்பாடுகளை விசாரிக்க வேண்டும். சர்வதேச உரிமைகள் கண்காணிப்புக் குழு வொன்றை இலங்கைக்கு அழைப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கையின் சர்வதேசப் பிரதிமைக்கு இது உகந்ததாக அமையும். இந்த விவகாரத்தில் அரசாங்கம் ஒளிப்பதற்கு எதுவுமில்லை’ என்று கடுமையான கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

இப்படித் தொடர்ந்து உலகநாடுகளின், உலக அமைப்புகளின் கண்டனத்தைப் பெற்றுவரும் மகிந்த ராஜபக்சே அரசு இனியும் தொடரக் கூடாது என உலகநாடுகள் நினைக்கின்றன. உலக நாடுகள் என்றால் அமெரிக்காதான். தற்போது அமெரிக்காவின் தோழனாகச் செயல்படும் இந்தியாவும் அந்தப் பட்டியலில் இருக்கிறதெனச் செய்திகள் தெரிக்கின்றன.

இலங்கையின் அரசியல் மாற்றங்களில் அமெரிக்காவின் பிரதிநிதிபோலச் செயல்படும் இந்தியாவின் மாயக்கரங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

ராஜபக்சேவின் தீவிரத் தன்மையில் இந்தியாவுக்கு உடன்பாடில்லை. இந்திய, இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கை இணைக்க மறுக்கும் தீவிரத்தன்மையிலா என்றால், இல்லை, தன் பேச்சைக் கேட்க மறுக்கும் போது கூட இந்தியாவிக்குக் கோபம் வரவில்லை. ஆனால் புலிகள் மீதான போரைத் தொடர்ந்து நடத்துவேன் என்பதுடன் தமிழ் மக்கள் மீது கொடிய அடக்குமுறைகளை ஏவுவதால் இந்தியாவுக்குக் கோபம். தமிழர்கள் மீது இந்தியாவுக்கு எவ்வளவு பாசம் என்று புளங்காகிதம் அடைந்து விடாதீர்கள்.

போர் என்றால் புலிகள் எப்படி இருப்பார்கள் என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும். போர்முனையில் மட்டுமல்ல, பேச்சுவார்த்தை மேசைகளிலும் புலிகளின் நேர்மையான, ஆணித்தரமான அணுகுமுறைகளை மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் உணர்ந்து தானிருக்கும், அதை வெளியில் சொல்ல வில்லையென்றாலும் கூட.

இந்நிலையில் இறுதிப்போரென்றால் அதன் வெற்றி யாரைப் போய்ச் சேரும் என்பது வெள்ளிடைமலை. ஆகவேதான் ராஜபக்சேவை இனியும் விட்டு வைத்திருந்தால் தமிழீழம் அமைவதை எக்காரணம் கொண்டும் தடுக்க முடியாதெனப் புரிந்து கொண்ட நாடுகள் ராஜபக்சேவுக்கு எதிராகத் தங்கள் சொற்படி நடக்கக்கூடிய அதற்கு உத்தரவாதம் அளித்துள்ள ரணிலை அதிகாரத்திற்குக் கொண்டுவர முயல்கின்றன.

இந்திய சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் போது ரணில் இந்தியா வந்ததும், தொண்டமான் கட்சி ராஜபக்சேவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதும் இந்தியாவின் கரங்கள் இலங்கை அரசியலை ஆட்டி வைப்பதை வெளிப்படுத்து வதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியா விரும்புகிறபடி ரணில் பிரதமர் பதவிக்கு வந்தால் தமிழர்களுக்கு நன்மை பயக்குமா? உடனடியாகத் தீவிரமான போர் நடவடிக்கைகளுக்கு அவர் முட்டுக்கட்டையாக இருப்பார் என்கிறார்கள். அது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும்? இதற்கு விடையைக் கடந்த காலத்தில் தேடுவோம்.

விடுதலைப்புலிகளின் கிழக்குப் பகுதிப் பொறுப்பாளராக இருந்த கருணா, தமிழ் மக்களின் துரோகியாக மாறக் காரணமே ரணில் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதுமட்டுமின்றி, கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் பேரினவாத அரசியலைக் கைவிட்டிருந்தால் ஐந்து இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராகவே ஆகியிருப்பார். இப்போதும் கூட, சுதந்திராக்கட்சி மக்கள் பிரிவுடன் போடப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நாம் முன்வைக்கும் தீர்வுத் திட்டத்தை ஏதாவது ஒரு கட்சி அல்லது குழு நிராகரித்து, தொடர்ச்சியாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாக இருந்தால் அனைத்துலகச் சமூகம் மற்றும் சமாதானத்தை விரும்பும் அனைவரின் ஒத்தழைப்புடன் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் நாட்டிலிருந்து முழுமையாக நீக்கும் வகையில் விரிவான வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படும். முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்களை வழங்கி அனைத்துலக போர்க்காலச் சட்டதிட்டங்களுக்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து, பெயருக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை வெளியிட்டு அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பரப்புரை செய்யும் நோக்கம் அவர்களுக்கிருப்பது தெரியவருகிறது. தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்பதோடு நிறுத்தாமல் அதை யாராவது நிராகரித்தால் அனைத்துலகச் சமூகத்தின் ஒத்துழைப்போடு போர் நடத்துவோம் என்கிற இவர்களது சொற்கள் இவர்களின் திட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ராஜபக்சே இருந்தால், அவர் போரை முன்னெடுத்து அதில் புலிகள் வெற்றி பெற்றால் இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் அதைச் குறை சொல்ல எந்த நியாயமும் இல்லை. நார்வே சாட்சியாக ராஜபக்சே சமாதானத்தை மீறிப் போர் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். எனவேதான் சமாதானப் போதகர் வேடத்திலிருக்கும் ரணில் அதே காரியத்தைச் செய்தால் புலிகள் மீது குற்றம் சுமத்தும் வாய்ப்பு எல்லா வகையிலும் ஏற்படுத்தப்பட்டுவிடும் என மற்றநாடுகள் கருதுகின்றன.

தமிழர்களைப் பூண்டோடு அழித்துவிடும் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் இலங்கை அரசியலில் மாற்றங்கள் நடந்து கொண்டிருப்பதையும், இதன் பின்னணியில் இந்தியா இருந்து செயல்படுவதையும் பார்க்கும் போது, இந்தியப் பார்ப்பன உயரதிகாரிகள் இங்கு மட்டுமில்லை கடல் தாண்டியும் தமிழர்களை வாழவிட மாட்டார்கள் என்பது தெளிவாகிறது.

இந்திய அரசு தனது நாட்டினது இன, மத, பண்பாட்டுத் தொடர்பு உறவினது பாற்பட்டும் தென் ஆசியப் பொருளாதார, அரசியல் நலன்களின் அடிப்படையிலும் தமிழர்களின் வாழ்வுரிமையை அங்கீகரித்து அவர்களுடைய தாயகத்தில் அவர்களுக்குக் கௌரவமான சுதந்திரமான இருப்பை உறுதிப்படுத்துவ தொன்றே மிகவும் பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என்று விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தமிழ்ச் செல்வனின் கோரிக்கையை ஏற்று அதைச் செயற்படுத்த முனைவதே இந்திய அரசுக்கு மரியாதையை ஏற்படுத்தும் செயல், அப்போதுதான் தமிழகத் தமிழர்களுக்கு இந்தியக் குடிமகன்களாக இருப்பதில் பெருமையாகவும் இருக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com