Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
செப்டம்பர் 2007
கலாநிதி மாறனின் ஆண்டு சம்பளம் 11 கோடி
பைந்தமிழ்


ஒருவரின் அதிகப்பட்ச ஆண்டு வருவாய் ரூ. 25 கோடி

Kalanidhi Maran ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 9.14 விழுக்காடு

ரூ 5 கோடிக்கும் அதிகச் சொத்து வைத்திருப்போரின் எண்ணிக்கை 1 லட்சம்

படித்து முடித்ததுமே மாதம்
ரூ 2 லட்சத்தில் வேலை

ஆண்டுக்கு 50 வகையான ஆடம்பரக் கார்கள் அறிமுகம்

***

3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 79 விழுக்காட்டினர் போதிய சத்தில்லாமல் நலிவடைந்தவர்களாக இருப்பவர்கள்

கருவுற்ற பெண்களில் 48 விழுக்காட்டினருக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை கூட சத்தான உணவு கிடைப்பதில்லை.

40 கோடிப் பேரின் வருமானம் ஒரு நாளைக்கு ரூ 20க்கும் குறைவு.

10 கோடிப் பேருக்கும் மேல் வேலையின்றித் தவிக்கின்றனர்.

சுமார் 2 லட்சம் கிராமங்களுக்கு நடந்து போவதற்குக் கூடச் சரியான பாதை இல்லை.

**

மேலே குறிப்பிட்ட இரண்டு புள்ளி விவரங்களையும் படிப்பவர்களுக்கு முதலில் கூறப்பட்ட தகவல்கள் அமெரிக்காவைப் பற்றியதெனவும் இரண்டாவதாகக் கூறப்பட்ட செய்திகள் சோமாலியாவைப் பற்றிதெனவும் தோன்றினால் வியப்பில்லை. ஆனால் இந்த இருவிதமான புள்ளி விவரங்களுமே இந்தியா வைப் பற்றியவை என்பதுதான் அதிர்ச்சியும் சோகமும் கலந்த உண்மை.

இந்தியர்கள் அனைவரின் பொருளாதார நிலையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, அனைவரையும் இந்நாட்டு மன்னர்களாக்குவதே எங்கள் குறிக்கோள் என்ற சவாலுடன் 1990களில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள், உள்ளபடியே அனைவரின் பொருளாதார நிலையையும் தலைகீழாகப் புரட்டித்தான் போட்டுவிட்டன. ஆம்... அதுவரை இலட்சாதிபதிகளாக இருந்தவர்கள் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக கோடீசுவரர்களாக மாறிவிட்டனர். சில ஆயிரங்களையாவது வருவாயாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்களோ தெருக்கோடியில் நிற்கும் ஈசுவரர்களாகி விட்டனர்.

அதன்பிறகும் புதிய பொருளாதாரம் என்ற இந்தப் புயலில் சிக்கி ஏழைகளின் கூரைகள்தான் பறக்கின்றவே தவிர, பணக்காரர்களின் மாளிகைக்கு எதுவுமே நேர்வதில்லை. இந்தியாவின் முதல் பணக்காரக் குடும்பமாக இருந்த அம்பானி குடும்பம் இரண்டாக உடைந்தாலும், இருவருமே இந்தியாவின் முதல் இரண்டு பணக்காரர்களாகி விட்டனர். இந்தியா வில் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த டாடா நிறுவனம் இப்போது உலக நிறுவனங்களையெல்லாம் வாங்கிக் குவித்து வருகிறது. ஒரு காலத்தில் அமெரிக்க நிறுவனங்களில் வேலை கேட்டு இந்திய நிறுவனங்கள் அலைந்த நிலை மாறி இப்போது இந்திய நிறுவனங்களில் வேலைக்குச் சேர அமெரிக்கர்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள் என்று புதிய பொருளாதாரப் புராணம் பாடும் வல்லுநர்களுக்குக் கிராமங்களில் வாழும் ஏழைகள் கீற்றுக் கொட்டகையையும் விற்றுவிட்டு வீதிக்கு வந்துவிட்ட நிகழ்ச்சி மட்டும் உறைக்கவே இல்லை.

சரி... அப்படி என்னதான் மிகப் பெரிய தவற்றைப் புதிய பொருளாதாரக் கொள்கை செய்துவிட்டது?. அதுவா ஏழைகளிடமிருந்த சொத்து களையெல்லாம் பிடுங்கிப் பணக்காரர் களிடம் தந்தது? என்ற கேள்வி உங்களின் மனத்தில் எழலாம். அப்படி ஓர் ஐயம் ஏற்பட்டவர்களுக்கு இதோ ஓரு விளக்கம்.

Mukesh Ambani ஒரு தந்தை ஒரு நாளைக்கு ரூ 100 வருமானம் ஈட்டுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த வருமானத்தைத் தனது இரு மகன்களுக்கும் பிரித்துத்தர அவர் விரும்பினால் ஆளுக்கு ரூ50 என பிரித்துத் தந்தால் தான் சரியாக இருக்கும். அதை விடுத்து முதல் மகனுக்கு 90 ரூபாயும், இரண்டாவது மகனுக்கு 10 ரூபாயும் கொடுத்து வந்தால் ஓராண்டுக்குப்பிறகு முதல் மகனின் பொருளாதார நிலை எப்படி இருக்கும், இரண்டாவது மகனின் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியைப் பெருக்குகிறோம் எனக் கூறி தொழிலதிபர்களுக்கே தொடர்ந்து சலுகைகள் வழங்கப்படுவதால் அவர்கள் வளர்ந்து கொண்டே செல்கிறார்கள். மறுபுறம் ஏழை உழவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உரமானியம் போன்ற சலுகைகள் கூட பறிக்கப்படுவதால் உழுதவனின் கைகளே உணவுக்காகப் பிறரிடம் கையேந்த வேண்டியிருக்கிறது.

அப்படியென்றால் பொருளாதாரக் கொள்கையினால் ஒரு பயனுமே இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறதா? நிச்சயமாகப் பயன் உண்டு, ஆனால் அது முழுக்க முழுக்க பணக்காரர்களையே சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படுவதுதான் தவறு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சேவைத் துறைக்கும், தொழில்துறைக்கும் சலுகைகளைக் கொட்டிக்கொடுத்த அரசு, அடிப்படைத் துறையான வேளாண்துறையைக் கண்டு கொள்ளாததால் பொருளாதார அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவிட்டன.

சான்றாகச் சொல்ல வேண்டுமானால், அரசு கொடுக்கும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெகுவேகமாக வளர்ந்து வருகின்றன, இதனால் அதில் வேலைக்குச் சேர்வோருக்கு 25 வயதிற்குள்ளாகவே இயல்பை மீறி மாதத்திற்குக் குறைந்த பட்சம் ரூ, 30 ஆயிரம் முதல் அதிகப்பட்சம் ரூ, 3 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தத் துறைகளில் வல்லுநர்களாக இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடி வரை கொட்டித் தரப்படுகிறது.

அடிப்படைத் தேவைகளில் தொடங்கி வீட்டு வாடகை வரை எல்லாமே அதிக வருவாய் ஈட்டுவோரின் வசதியைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுவதால் ஏழைகளால் வாழவே முடியாத நிலை உருவாகியுள்ளது.

கடந்த சூலை மாத நிலவரப்படி இந்தியாவில் ஆண்டுவருமானம் ஐம்பது லட்சத்திற்கும் மேல் இருப்போரின் எண்ணிக்கை 850. முதலாளிகளாக இருக்காமல் தொழிலாளியாக இருந்து இவ்வளவு ஊதியம் பெறும் நிலையை உருவாக்கியது பொருளாதாரக் கொள்கையின் சாதனைதான். ஆனால், ஒரு நாளைக்கு ரூ. 20 கூட சம்பாதிக்க முடியாமல் திண்டாடும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?... 39 கோடியே 50 லட்சம் பேர். இவர்களில் எவருக்குமே எந்தச் சமூகப் பாதுகாப்புமே இல்லை என்கிறது இது பற்றி ஆய்வு நடத்திய அமைப்பு சாரா தொழில்களுக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை.

ஏற்றுமதியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரிச் சலுகையும், தொழில் துறையினருக்கு பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனும் வழங்கும் மத்திய அரசுக்கு, 60 வயதைத் தாண்டிய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.400 ஓய்வூதியம் வழங்க வகை செய்யும் சட்டத்தை, அது தயாரிக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும் நிறைவேற்ற மனம் வரவில்லை.

புதிய பொருளாதாரக் கொள்கைகளின் பயனாக வருவாய் அதிகரித்து இந்தியாவில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டதாகவும், ஆசியாவிலேயே அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடு இந்தியாதான் என்றும் மத்திய அரசு கடந்த மாதம் பெருமைப் பட்டுக்கொண்டது.

ஆனால் மறுபுறமோ, இந்தியாவில் 6 முதல் 35 மாதம் வரை உள்ள குழந்தைகளில் 70% பேர் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியக் குழந்தைகளில் 45% பேர் எடை குறைவாகவும், 38% பேர் வளர்ச்சிக் குறைவாகவும் உள்ளனர். இந்தியக் குழந்தைகளில் 56% பேர் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். கருவுற்ற பெண்களில் 48% பேருக்கு ஒருவேளை சத்தான உணவு கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்றுவதற்காக ஒவ்வொரு குடியிருப்பிலும் ஓர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை மையத்தை (அங்கன்வாடி) தொடங்கவேண்டும் என நாங்கள் பிறப்பித்த உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என்று உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

முதலாளிகளும் இவர்களே... தொழிலாளிகளும் இவர்களே...!

இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில நாளேடுகளில் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வில், அதிக ஊதியம் பெறும் தனியார் நிறுவன நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 850 தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமாக ஊதியம் பெறுகிறார்களாம்.

குறிப்பாக நாட்டிலேயே அதிக ஊதியம் பெறும் 10 நிர்வாகிகளின் பட்டியலும், அவர்களின் ஆண்டு வருமானமும்:

1. முகேஷ் அம்பானி - ரூ. 24.51 கோடி
ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர்

2. லால் முஞ்சால் - ரூ. 15.58 கோடி
தலைவர். ஹீரோஹோண்டா

3. பவன் முஞ்சால் - ரூ. 15.22 கோடி
நிர்வாக இயக்குநர், ஹீரோஹோண்டா

4. நவின் ஜிண்டால் - ரூ. 13.54 கோடி
தலைவர் ஜிண்டால் நிறுவனம்

5. சுனில் பார்தி மிட்டல் - ரூ. 12.61 கோடி
தலைவர் பார்தி நிறுவனம் (ஏர்டெல்)

6. மிக்கி யமாமோட்டோ - ரூ. 12.60 கோடி
நிர்வாகி, ஹீரோ ஹோண்டா

7. டாகோ எகுச்சி - ரூ. 12.55 கோடி
நிர்வாகி, ஹீரோ ஹோண்டா

8. கலாநிதி மாறன் - ரூ. 11.13 கோடி
தலைவர், சன் தொலைக்காட்சி

9. காவேரி கலாநிதிமாறன் -ரூ. 10.26 கோடி
நிர்வாக இயக்குநர், சன் தொலைக்காட்சி

10. ஏ.ஜே.அகர்வால் - ரூ. 10.00 கோடி
நிர்வாக இயக்குநர், எமர்கேடர்லைன்ஸ் கப்பல் நிறுவனம்

11. அனில் அம்பானி - ரூ. 7.32 கோடி
தலைவர், திருபாய் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com