Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
செப்டம்பர் 2007
டாடாவின் தொழிற்சாலை தமிழகம் ஏற்கலாமா?
பேரா. கார்த்தி


ஆகஸ்டு 1991 முதல் மே 2002 வரை தமிழ்நாட்டில் ரூ.23,236 கோடிக்கு அந்நிய நேரடி முதலீடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மராட்டியம் முதலிடத்திலும் (ரூ.48,660 கோடி), தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இதைப்போல் கல்வி அளவில் தமிழ்நாடு 73.45 விழுக்காட்டைப் பெற்றுள்ளது. இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. இன்றைய உலகப் பொருளாதாரத்தைக் காண்கையில், விவசாயத்தின் பங்கு வளர்ந்த நாடுகளில் 2 அல்லது 3 விழுக்காட்டைத் தாண்டவில்லை என்பது வரலாறு. ஆங்கில - அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதார நாடுகளில் விவசாயத்தின் பங்களிப்பு குறைவாக உள்ளது என்றாலும், உணவில் தன்னிறைவை அடைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் விவசாயிகளின் நிலங்களைப் பொருளாதார மண்டலங்களுக்குக் கையகப்படுத்தி, அந்த நிலங்களில் புதிய தொழில்களை ஏற்படுத்தலாமா? அது விவசாயிகளின் வாழ்வில் புதிய வாழ்வு ஏற்படுத்துமா என்பதே நம் முன் உள்ள கேள்வி,

மேற்கு வங்கத்தில் டாடா நிறுவனம் சிறிய கார் உற்பத்திக்கு நிலங்களைக் கையகப்படுத்தியதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதைப்போல மராத்தாவில் ரிலையன்ஸ் தொழில் தொடங்க நிலம் கையகப்படுத்துவதிலும் மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் சாத்தான் குளத்தில் டாடா டைட்டானியம் தொழிற்சாலை தொடங்குவதில் கடும் எதிர்ப்புத் தோன்றியுள்ளது. இது வருவது நல்லதா? கெட்டதா? என்பது ஆய்வுக்கு உரியதாக உள்ளது.

இதற்கு தமிழக முதல்வர் கலைஞர் 1998இல் நோபல் பரிசு பெற்ற பொருளியல் மேதை அமர்த்திய குமார் சென் கூறியதைக் கூறி விளக்கம் அளித்துள்ளார். அதாவது உலகம் முழுவதும் வளர்ந்த நாடுகளிலெல்லாம் விளை நிலங்களில்தான் பெருந்தொழில்களைத் தொடங்கியுள்ளனர் என்றும், தொழில்துறையில் தான் வருமானமும், வேலை வாய்ப்பும் அதிகரிக்கக்கூடும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார். இந்தக் கூற்று உண்மைதான். வளரும் பொருளாதாரத்தில் விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். எப்படி என்றால் விவசாயிகள் வேறு துறைக்குச் சென்றுவிடுவர். எனினும் ஆந்தக் லூயி என்ற ஆங்கிலப் பொருளியல் வல்லுநர் கூறுவதாவது, இந்திய விவசாயத்திற்கு 25 விழுக்காட்டிலிருந்து 35 விழுக்காடு வரையிலும் விவசாயத் தொழிலாளர்கள் இருந்தால் போதும், அதற்கு அதிகமாக விவசாயத்தில் இருப்பது உற்பத்தியை அதிகரிக்கச் செய்யாது என்பது அவருடைய வாதம். அதன்படி பார்த்தால் இந்திய விவசாயத்தில் 69 விழுக்காட்டினர் ஈடுபட்டிருப்பது கூடுதல் அளவாகவே உள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம் சில நல்ல விளைவுகளும் நடைபெறுகின்றன.

1. விவசாயத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள விவசாயிகள் இடப்பெயர்ச்சி பெற உதவுகிறது,
2. சமச்சீர் வளர்ச்சி அடைய இப்பொருளாதார மண்டலங்கள் உதவுகின்றன.
3. வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்கின்றன, துணைத் தொழில்கள் ஏற்படுகின்றன.
4. விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்களின் மதிப்பு கூடுவதோடல்லாமல், உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்படுகிறது.
5. தென்மாவட்டங்களில் சாதிக்கலவரங்கள் கூடுதலாக உள்ளன என்பது நாம் அறிந்த உண்மை. தொழிற்சாலைகள் பெருகும்போது, காலப்போக்கில் சாதிக்கலவரங்கள் குறைய வாய்ப்புண்டு.

டைட்டானியம் திட்டம் ரூ. 2,500 கோடியில் தொடங்கப்பட உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ள ‘டைட்டானியம் டையாக்சைடு’ என்ற கச்சாப் பொருள் பெயிண்ட், பசை, அழகு சாதனப்பொருட்கள், இன்னும் பலவற்றைத் தயாரிப்பதற்குப் பயன்படும், நேரடியாக 1000 பேர்களுக்கும், மறைமுகமாக 3000 பேர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படும் என்று டாடாவின் மேலாண்மை இயக்குநர் முத்துராம் கூறுகிறார். இத்திட்டம் நிறைவேறினால் தமிழக அரசிற்கு வருவாய் பெருகும்.

பா.ம.க. தலைவர் டாக்டர் இராமதாஸ் அவர்கள் டாடாவின் தொழிற்சாலை தூத்துக்குடி - திருநெல்வேலி பகுதியில் வருவதை எக்காரணம் கொண்டும் ஆதரிக்க இயலாது என்கிறார். சாத்தான்குளம், இராதாபுரம் போன்ற பகுதிகளில் மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர், அவர்களின் விருப்பத்திற்கும், எதிர்ப்பிற்கும் எதிராக டாடா தொழிற்சாலை ஏற்பட்டால் இப்பகுதி பாலைவனமாக மாறிவிடும் என்று இராமதாஸ் எச்சரித்துள்ளார். இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்கு டாடாவின் மேலாண் இயக்குநர் முத்துராம் கூறுவது முக்கியமாகும்.

முத்துராமின் பதில்: ‘‘மக்களில் நான்கில் மூன்று பகுதி மக்களின் ஆதரவுடனும், தமிழக அரசின் ஆதரவுடனும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. வாங்கப்போகும் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பெரும்பாலும் மதிப்பற்ற வறண்ட நிலங்களாகும். இத்தொழிற்சாலை வரவில்லை என்றால், இந்நிலங்களின் மதிப்பு பூஜ்யமாகும்.

டாடாவின் தொழிற்சாலை வந்தால் நிலங்களின் மதிப்பு பல மடங்கு கூடும். டாடா நிறுவனம் கோர்வையாக விவசாயிகளிடமிருந்து நிலங்களை வாங்குவதில் தயக்கம் இல்லை. அதே நேரத்தில் நில உரிமையிலும், அனுபவ பாத்தியத்திலும் பல்வேறு பிரச்சனைகள் புதைந்துள்ளன. ஆகையால் தமிழக அரசின் ஆதரவுடன்தான் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும் என்பது டாடாவின் விருப்பமாகும்’’.

இந்நிலையில் இரண்டு பக்கச் செய்திகளையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இஸ்ரேல், ஜப்பான், அயர்லாந்து போன்ற நாடுகளில் இயற்கை வளம் இந்தியாவில் உள்ள அளவிற்கு இல்லை என்றாலும் அந்நாடுகளில் தனி நபர் வருமானம் இந்தியாவைக்காட்டிலும் பன் மடங்கு அதிகமாக உள்ளது ஏன் என்பதை நம் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும். உலகிலேயே உயர்ந்த இரும்புத் தாதுப்புக்கள் (Iron Ore) இந்தியாவில் கிடைக்கிறது. ஆனால் மிகச்சிறந்த எஃகு இரும்பை ஜப்பான் தயாரிக்கிறது, எப்படி? நட்சத்திரப் போர் (star War) நடத்தும் அமெரிக்காவுடன், மகிழுந்துப் போர் (Car war) நடத்தும் ஜப் பானை நாம் ஏன் வெல்லவில்லை?

நம்மைவிட விவசாயம் செய்யப் படும் நிலப்பரப்பு குறைவாக உள்ள சீனாவில் நம்மைக் காட்டிலும் ஏறத்தாழ 42 டன்னிற்குக் கூடுத லாக உணவு தானிய உற்பத்தி உள்ளதே எப்படி? அமெரிக்கா முழுவதும் டாலர் மரம் (Dollar Tree) என்று எப்பொருள் எடுத்தாலும் ஒரு டாலர் என்று பொருள்களை விற்று அமெரிக்கர்களை அதிர வைத்திருக்கும் சீனர்களை நாம் எப்பொழுது வெல்வது?

மென்பொருள் தொழிலில் இந்தியர்கள், தமிழர்கள் கொடிகட்டிப் பறந்தாலும், அறிவுசார் சொத்துரிமை நம்மிடம் எத்தனை பொருட்களுக்கு உள்ளது? அப்படி இல்லை என்றால் ஏன் என்பதை நம் அரசியல் வித்தகர்கள் சிந்திக்க வேண்டும். அதே நேரத்தில் ஏகாதிபத்தியத்தின் கோரப்பிடியில் மக்களைச் சிக்க வைக்காமல் பொருளாதாரப் பயன்களை அடித்தட்டு மக்கள் அனுபவிக்கும்படி அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஜோசப் சம்பீட்டர் என்ற அமெரிக்கப் பொருளாதார மேதை ‘‘ஆக்க சக்தி அழிப்பு முறை’’ (The Process of Creative Destruction) என்ற தலைப்பில் முதலாளித்துவம், சோசலிசம், ஜன நாயகம் என்ற நூலில் ஏழாவது அத்தியாயத்தில் ஒரு முக்கியக் கருத்தை வைக்கிறார். அதாவது பொருளாதாரம் விரைந்து முன்னேறும் பொழுது, ஆக்க சக்தி அழிப்பு முறை ஏற்படுத்தும் என்கிறார். அதாவது ‘‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’’ என்பதைப் போன்று, பழைய உற்பத்தி முறை அழிக்கப்பட்டு, புதிய உற்பத்திமுறை மாறிவரும். கௌதமபுத்தர் கூறியதைப்போல், ‘‘மாற்றம் ஒன்றே நிரந்தரம்’’ என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

(கட்டுரையாளர் ஓய்வுபெற்ற பொருளியல் பேராசிரியர்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com