Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
செப்டம்பர் 2007
எத்தனை வஞ்சகம்-ஒழுக்கக் கேடு?
அ. அருள்மொழி

ஆண் ஆதிக்கச் சிந்தனை கொண்ட சமூகங்கள் தமிழ்நாட்டில் இருப்பதைவிட இந்தியாவின் வட பகுதி மாநிலங்களில் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக மார்வாரி, சமூகத்தில் நிலவும் சாதாரண வாழ்க்கைமுறை பெண்ணை ஒரு வீட்டின் வேண்டாத குழந்தையாக நடத்துவதாக அமைந்துள்ளது. கொள்ளையடிப்பதைப் போல வரதட்சணையாக நகைகளையும், பணத்தையும் வாங்கித் திருமணம் செய்துகொண்டு சில மாதங்களில் அந்தப் புது மணமகளை எரித்துக் கொன்று விடுவது டெல்லியில், அதாவது இந்தியாவின் தலைநகரத்தில்தான் அதிகமாக நடந்துள்ளது. பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் பெண் குழந்தைகள் எப்படிச் சாகிறார்கள் என்பதைப் பற்றி விவரம் சேகரிக்கக் கூட முடியாமல், சமூகநல அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையின் சுற்றுச் சுவரின் அருகிலேயே நூற்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளின் சிதைந்த உடற்பகுதிகளும், எலும்புக் கூடுகளும் புதைக்கப்பட்டுள்ளன.

Devadasi கழிப்பறையில் ஆண்கள் மலங்கழித்து விட்டு வந்த பிறகு பெண்கள் தண்ணீர் எடுத்துச் சென்று ஊற்றி அந்த இடத்தைச் சுத்தம் செய்வது எழுதாத சட்டமாக ஆந்திராவில் சில பகுதிகளில் இருந்து வருகிறது.

இவற்றோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் அல்லது தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலை கொஞ்சம் மேம்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் மேலோட்டமாகத் தெரியும் சில சலுகைகள், சில உரிமைகள் ஆகியவைகூட உண்மையில் ஒரு பெண்ணின் தனிப்பட்ட பிரச்சனையான திருமணத்தை அவளே முடிவு செய்துகொள்ள தலைப்படும்போது வேரோடு புரட்டிப்போடப்படுகின்றன. ‘‘ஜாதி பார்த்து மாட்டை ஜோடி சேர்ப்பதைப்போலத்தானே நம் திருமண முறையில் ஆணையும் பெண்ணையும் பெற்றோர் பார்த்து ஜோடி சேர்க்கிறார்கள்’’ அப்படி சேர்த்து வைக்கப்படும் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டேயாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக அல்லவா நமது திருமண முறை இருக்கிறது என்று தந்தை பெரியார் கேட்ட அந்தக் கேள்வியை இன்றுவரை நாம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

அந்த ஏற்பாட்டு முறையில் முரண்பட்டால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படித் தீர்வு சொல்கிறது நம் சமூகம்? வேற்று சாதிப்பெண் அல்லது தாழ்ந்த சாதிப்பெண்ணை விரும்பி அவளோடு உடலாலும் பழகிவிட்ட தங்கள் மகன் அல்லது தம்பிக்கு அந்த வீட்டின் பெரிய வர்கள் சொல்லும் அறிவுரை நம் அனைவருக்கும் தெரியும். ‘நம்ம ஜாதிப் பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. அந்தப் பெண்ணை ஒரு பக்கமா தனியா வச்சுக்கோ. அவ இருக்கற வரைக்கும் இருக்கட்டும். வேற கல்யாணம் நடந்தா போயிறட்டும்’ இந்த அறிவுரையில் இருக்கும் வஞ்சகம், ஒழுக்கக்கேடு, ஏமாற்று வேலை, நேர்மையற்ற வாழ்க்கை இவை எதுவுமே நம் பண்பாட்டுக்கும் பாரம்பரியத்திற்கும் எதிரானதாகத் தெரிவதில்லை. ஆனால் அதே காதலும் உடலுறவும் தங்கள் பெண்ணுக்கு ஏற்பட்டுவிட்டால், அந்தப் பெண்ணைக் கொன்று புதைத்து விட்டு அதையே தங்கள் குடும்பப் பெருமையாகவும் அடுத்த தலைமுறைப் பெண் குழந்தைகளுக்குப் பாடமாகவும் சொல்லிக் கொண்டிருக்கும் குடும்பங்களை நாம் அறிவோம்.

இந்த ஏறுமாறான அமைப்பைச் சமன்படுத்தினாலோ, மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போடச் சொன்னாலோ, குடும்பம் என்கிற வண்டி நேராக ஓடாது என்று எச்சரித்து அறிவுரை கூறுகிறார்கள் நம் பழம்பெரும் புலவர்கள் பலர். அதற்கும் ஒருபடி மேலே சென்று அந்த மேடு பள்ளமே இறைவனின் ஏற்பாடுதான் என்றும் கடவுள் பாம்புக்குத் தவளையைப் படைத்ததைப் போல ஆணுக்குப் பெண்ணைப் படைத்தான் என்றும், எளியதை வலியது காக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் பெண்ணை மெல்லியலாகவும், ஆணை வன்மையுடையவனாகவும் எல்லாம் வல்லான் உருவாக்கினான் என்றும் பேசுகின்றன மதங்கள். விளக்கங்கள் வேறுபட்டாலும் அடிப்படை வாதம் ஒன்றுதான். ஆண் உயர்ந்தவன், வலிமையானவன், காப்பாளன், பெண் அவனைச் சார்ந்து வாழும் உயிர்களில் ஒன்று. மென்மையான குணம், காக்கப்படும் தன்மை ஆகியவை பெண்ணின் இயற்கையோடு படைக்கப்பட்டவை என்ற கருத்தாக்கத்தின் மீது எழுப்பப்பட்டுள்ள நம்பிக்கை சார்ந்த வாதங்கள்.

இவை வெறும் வாதங்கள் மட்டுமல்ல. வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கிற சமூகச் சட்டங்களாக நிலை நிறுத்தப்பட்டுவிட்டன. ஆண் குழந்தை பிறரை அடிப்பதை ஊக்கப்படுத்தியும், பெண் குழந்தைக்குப் பசி தாங்கப் பயிற்சி கொடுத்தும் வளர்க்கும் வாழ்வியல் சட்டமாகி விட்டது. இப்படி நியாயமும் சமத்தன்மையும் அற்றமுறையில் ஆணையும் பெண்ணையும் வளர்த்து அவர்களை கணவன் மனைவியாக்கி அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளகைளையும் இதே சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களாக்கப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் அமைப்புதான் திருமணமும் குடும்பமும்.

மாறிவரும் காலச் சூழல், அறிவியல் வளர்ச்சி, வசதிகள், நுகர்வு வேகம், வேறுபட்ட சமூகங்களுக்கு இடையிலான பண்பாட்டுத் தொடர்புகள் என எவ்வளவு மாற்றங்கள் நடந்தாலும் அது குடும்பம் என்ற வீட்டின் வாசற்கதவைத் தாண்டி உள்ளே வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருக்கிறது சமூகம்.

இப்படிப்பட்ட பின்னணியில் நடக்கும் திருமண உறவுகள் இன்று பெரும் சிக்கலைச் சந்தித்து வருகின்றன என்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் அந்தச் சிக்கல்களை எதிர் கொள்ளும் போதுதான் இந்த சமூகப் பழமை விதியையும் சேர்த்து நாம் உடைக்க முடிகிறது. அந்த அணுகுமுறையுடன் கூறப்படும் அறிவுரைகளும், ஆலோசனைகளும் பல பெண்களின் வாழ்க்கையை உயர்த்தி, ஆண்களுக்கும் கூட தங்கள் குடும்பப் பிரச்சனையை அதிகக் குழப்பம் இல்லாமல் தீர்த்துக் கொள்ள முடிகிறது என்பதைக் குடும்ப வழக்குகளை நடத்தும் போது நானே உணர்ந்தேன்.

இன்றும் தேவதாசிகள்

இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது.

எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டு களாக அங்கு தொடருகிறது. அந்தப் பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள். தமது பெண் குழந்தைகளை அந்தத் தெய்வத்துக்குச் சேவை செய்வதற்காகக் காணிக்கையாக்குகின்றனர்.

அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாகச் சித்தரிக்கப்படும் இந்தப் பெண்களில பலரது வாழ்க்கை ஒட்டுமொத்தத்தில் பாலியல் அடிமைகளாகத்தான் சென்று முடிகிறது. 50 வருடங்களுக்கு முன்னர் இந்த தேவதாசி முறைமையை ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருக்கின்ற போதிலும், தேவதாசிகளாக பெண்கள் பொட்டுக்கட்டப்படுவதும். பாலியல் அடிமைகளாக வாழ்க்கை தொடர்வதும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் சுமார் இருபத்தையாயிரம் தேவதாசிகள் இருப்பதாக இந்த முறைமைக்கு எதிரான செயற்பாட்டாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com