Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
செப்டம்பர் 2007
எட்டும் தொலைவில் எங்கள் உறவு
அன்பன்


எல்லோரையும் ஏத்திப் போகக் கப்பல் வருமா...
கைகள் தட்டும் பட்டாம்பூச்சி கையில் வருமா...
அட... தூரம் கையில் வருமா
இல்லை ஈரம் கண்ணில் வருமா

Jeeva and Bhavana கேட்போரின் கண்களைக் குளமாக்கும் வல்லமையுடைய கபிலனின் பாடல் வரிகளோடு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது ‘ராமேஸ்வரம்’.

‘ஆச்சார்யா’ படத்தைத் தயாரித்த எஸ்.என். ராஜா தயாரிக்கும் இந்த ‘ராமேஸ்வரம்’, ‘பழனி’, ‘திருப்பதி’ போன்ற வரிசையில் வரக்கூடிய படமல்ல. பக்திப் படத்துக்கான குறிப்பைக் கொண்டிருக்கிறதெனவும் நினைக்க முடியாது. இந்த ராமேஸ்வரத்துக்கு யாழ்ப் பாணத்திலிருந்து 36மைல் என்று துணைத் தலைப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஈழமக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பார்க்கும் விதமாக ராமேஸ்வரம் அமைந்திருக்குமாம். புது இயக்குநர் செல்வம், கதை, திரைக்கதை, எழுதி இயக்கும் இந்தப் படத்தில் ஜீவா கதாநாயகனாகவும், பாவனா நாயகியாகவும் நடிக்கிறார்கள். ஈழத்திலிருந்து ஏதிலியாய் தமிழகம் வந்திருப்பவர்தான் நாயகன் ஜீவா. அவருடைய தாத்தாவாக மணிவண்ணன்.

நெஞ்சில் வலியோடும், நெருப்போடும் சொந்த மண்ணைவிட்டுத், தாத்தாவின் வற்புறுத்தலுக்காகத் தமிழகம் வந்து சேரும் நாயகனுக்கு இங்கொரு காதல் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் சிக்கல்கள் போராட்டங்கள் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஏதிலியாய் இங்கு வந்துவிட்டாலும் மண்ணின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் இருக்கும்போது படத்தில் அரசியல் இடம் பெற்றிருக்குமே என்று இயக்குநரிடம் கேட்டால், ‘இது முழுக்க முழுக்க மனித உணர்வுகளைப் பற்றி மட்டுமே பேசக்கூடிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் எந்த அரசியலையும் நாங்கள் பேசவில்லை’ என்கிறார்.

ஏதிலியாய் வந்திருப்பவருக்குக் காதல் வருமா? வந்தால் என்ன ஆகும்? ஏதிலியாய் வந்திருக்கும் ஜீவா நெஞ்சில் நெருப்பைச் சுமந்து கொண்டிருக்கிறார். அவர் மனத்தில் இடம் பிடிக்கப் போராடும் நாயகியின் உணர்வுகளும் அதை மறுதலிக்கும் நாயகனின் உணர்வுகளுமே பெரிதும் இடம் பிடிக்கின்றனவாம். இவர்களுக்கு இடையிலான உரையாடலின் போது அம்மண்ணின் துயரங்களை பார்வையாளர்கள் அறிந்து கொள்ள முடியுமாம்.

படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களை ஏற்றுவரும் ஜீவா, இந்தப் படத்திற்காக நிறைய ஈழத்தமிழர்களைச் சந்தித்துப் பேசி இந்த வேடத்துக்காகத் தயாரானாராம். ராமேஸ்வரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திய போது உண்மையான ஈழ ஏதிலிகளை நடிக்க வைத்திருக்கிறார்களாம்.

நல்லூர் கோயிலில் நாயனம் ஊதிடும் நாள் வருமா, புங்குடு சந்தையில் புகையிலை வாங்கிடும் நாள் வருமா, கண்ணகி தேவிக்குப் பொங்கல் படைக்கிற நாள் வருமா, ரீகல் தியேட்டர் சென்று நைட்ஷோ காண முடியுமா எனப் போகும் பாடலைக் கேட்டு, ஊர் நினைவு வந்து எல்லோரும் கதறி அழுததை எங்களால் மறக்கவே முடியாது என்கிறார் இயக்குநர். முதல் படமாக இந்தக் கதையை படமாக்குவது ஏன் என்று கேட்டால், திரைப்படக் கலையை நல்ல நோக்கில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கதையை தேர்ந்தெடுத்தேன். இந்தப் படத்தை இயக்கத் தொடங்கியது முதல் என் தூக்கம் போய்விட்டது. ஈழ மக்களின் வாழ்க்கைத் துயரங்களைப் படம் பிடிக்கப்போக உலகமெங்கும் உள்ள துண்டிக்கப்பட்ட மக்களினைத் திரையில் பதிவு செய்ய வேண்டும் என்கிற உத்வேகம் வந்திருக்கிறது என்கிறார்.

இந்தக் கதையைச் சொன்னவுடன் இதைப் படமாக்க நான் முன் நிற்கிறேன் என்று சொல்லி, படத்தை தயாரிக்கும் ராஜா அவர்கள்தான் பாராட்டுக்குரியவர். இந்தப் படத்துக்கென உள்ள வியாபாரம் பற்றி எதையும் யோசிக்காமல் கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்யும் சுதந்திரத்தை அவர் வழங்கினார் என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் இயக்குநர். படத்தின் இசை அமைப்பாளர் நிரு. இவரும் ஒரு ஈழத்தமிழர்தான், ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பிரான்ஸில் இருந்தவர் இசைத் துறையில் தேர்ச்சி பெற்று தமிழகம் வந்திருக்கிறார். ஏற்கனவே ‘கலாபக் காதலன்’ படத்துக்கு இசையமைத்த இவர், இந்தப் படத்துக்கு உணர்வுப்பூர்வமாக உழைத்திருக்கிறாராம்.

நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் மணிவண்ணன் பெரிய பலமாக இருப்பார். ஏற்கனவே ஈழச் சிக்கலை நன்கு அறிந்திருக்கும் அவரும் தொழிலைத் தாண்டிய ஈடுபாட்டோடு நடித்திருக்கிறார். அவருடைய நினைவாக வரும் காட்சிகளில், யாழ்ப்பாணம் வருகிறதாம், அங்கு நடப்பதுபோல் சில காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறதாம்.

நந்தா, கன்னத்தில் முத்தமிட்டால், காற்றுக் கென்ன வேலி போன்ற படங்கள் ஏற்கனவே ஈழச் சிக்கலைப் பற்றி பேசியிருக்கின்றன. இவற்றில் ‘காற்றுக்கென்ன வேலி’ நேரிடையாக அரசியல் பேசியது. மணிரத்தினம் ஈழத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற விமர்சனம் இருக்கிறது. ‘நந்தா’வின் கதை சிக்கலைப் பேசவில்லை. நாயகியின் பின்புலமாக ஈழச்சிக்கல் இருந்தது. இந்தப் படத்தின் துணைத் தலைப்பே யாழ்ப்பாணத்திலிருந்து 36 மைல் என்று இருப்பதால், இது ஈழச் சிக்கலைப் புதிய பார்வையில் அணுகுமென நம்பலாம். ஈழ ஏதிலிக்குக் காதல் வந்தாலும் அவன்,

தன்னைத் தொலைத்தவன் நானே
மண்ணைப் பெறும்வரை காத்திருப்பேனே
....
தீயில் செய்த திண்பண்டம்
தித்திக்காது பெண்ணே
ஆயுதம்தான் திருகாணி
ஆகாதே

என்று பாடுகிறான். ஈழச்சிக் கலைக் கண்டும் காணாதது போல தமிழ்த் திரையுலகம் இருந்த நிலை மாறி, இப்போது அச்சிக்கலின் ஆழ, அகலத்தோடு அலசுகிற அதே நேரம் திரைமொழியின் எல்லைக்குள் நின்று உரையாடும் போக்கு வளரத் தொடங்கியிருக்கிறது. இதன் முதலடியை இயக்குநர் செல்வம் எடுத்து வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com