Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
அக்டோபர் 2008

ஈழத்திலிருந்து எழும் எம் குரல்கள் உங்கள் செவிகளுக்குக் கேட்கிறதா


சுடர்வேங்கை

ஈழத்திலிருந்து எழும் எம் குரல்கள் உங்கள் செவிகளுக்குக் கேட்கிறதா? ஈழத்திலே
நாம் படும் வலிகள் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? இங்கொரு மனிதப் பேரவலம் நிகழ்வதைப் பார்த்தும், கேட்டும் உங்கள் இதயம் கனக்கவில்லையா? கேளுங்கள் எங்கள் அவலத்தை! திறவுங்கள் உங்கள் இதயத்தை!
நாலாபுறமும் போர்மேகம் சூழ்ந்து ஈழத்து மக்களின் வாழ்வு இருள்படிந்து கிடக்கின்றது.

இன்று நாங்கள், எங்களுடைய எதிர்காலத்தைத் தொலைத்து, காலம் காலமாக நாங்கள் வாழ்ந்த சொந்த மண்ணைப் பிரிந்து, வெறுங்கையராய் நிர்க்கதியாகி நிற்கின்றோம். தாங்கொணாத் துயரச் சுமையுடனும் உடுத்த உடுப்புடனும் ஓடி ஓடி ஒற்றை மர நிழல் கூட இன்றி அல்லல்படுகின்றோம். எங்கள் ஈழத்து மக்கள், அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம் வரை கல்விகற்ற பாடசாலைகளை, அவர்கள் உழுதுண்ட வயல் வெளிகளை, நிம்மதியாய் தொழில் செய்த நீலக் கடலை, செல்லமாய் வளர்த்த செல்லப்பிராணிகளை, அழகுப் பூக்கள் சொரிந்த முற்றங்களை, நோய் நீக்கிய வைத்தியசாலைகளை எல்லாம் ஈழத்திலே உடைத்தெறியப் படையெடுத்து வருகிறான் காடைச் சிங்களவன்.

இத்தனை துயர்களையும் இதயத்தில் பொதித்தபடி எப்படி வாழ்வது? நித்தமும் பொழியும் வான்குண்டு மழை வீச்சுக்களும் எறிகணைத் தாக்குதல்களும் ஈழத்து மக்களின் ஒவ்வொரு நாளையும் சாவுவீடாக்கி வருகின்றன. மக்கள் மரணத்தின் பிடியிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மக்களின் குரல்வளையை நெரித்துவிடத் துடிக்கின்றது மகிந்த அரசு.

பொருளாதாரத் தடை ஒருபுறம். படைத்தாக்குதல்கள் மறுபுறம். நடுவிலே இருந்தபடி மூச்சுத்திணறும் உங்களின் இரத்த உறவுகளின் வேதனைகளைப் பார்த்தபின்னும் கேட்டபின்னும் உங்களால் உறங்கமுடிகிறதா? தொப்புள் கொடி உறவு தொப்புள் கொடி உறவு என்று சொல்கின்றீர்களே, சொன்னால் மட்டும் போதுமா? அதனை செயலில் காட்டவேண்டாமா? எத்தனை செழிப்புடனும் இன்பக் களிப்புடனும் வாழ்ந்தவர்கள் நாங்கள். எமக்கு வேண்டியவற்றை நாமே தயாரித்து, உற்பத்திசெய்து எல்லா வளத்துடனும் கௌரவத்துடனும் வாழ்ந்தவர்கள் நாங்கள். மகிந்தவுக்குத் தெரியுமா நாம் வாழ்ந்த மாளிகை வாழ்வு.

இன்று உடுத்த உடையுடன் மாற்றத் துணியின்றி வழியிழந்து ஓடி ஓடிப் பற்றைக்குள்ளும் பதுங்கு குழிகளுக்குள்ளும் வாழும் பேரவலத்தை எங்களுக்குப் பரிசளித்த சிங்கள அரசின் கோர முகத்தை உற்றுப்பாருங்கள். ஈழத் தமிழினம் படுகின்ற வதையும் வலியும் உங்களுக்குத் தெரியும். இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து மரங்களின் கீழும், காடுகளிலும், கூரைவிரிப்புகளின் கீழும் எத்தனை காலம்தான் வாழ்வது? மக்கள் உண்ண உணவின்றி, பழுதடைந்த உணவை உண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர்துறக்கின்றார்கள்.

இந்த அவலத்தை யாருக்குச் சொல்வது? உறவுகளே, கருவுற்ற தாய்மார்கள், முதியவர்கள், நோயாளிகள், சிறுவர்கள் என எம் உறவுகள் படும் துயரத்தை யார் தீர்ப்பது? தங்க இடமற்று, தாங்க எவருமற்று எம் உறவுகளை நாம் தவிக்க விடலாமா? செய்வதற்குத் தொழில் இல்லை, கையில் பணமில்லை, குழந்தைக்குப் பால் இல்லை, நோயாளிக்கு மருந்தில்லை எப்படி வாழ்வது? உறவுகளே சிந்தியுங்கள்.

இவர்கள் உங்கள் இரத்தச் சொந்தங்கள் அல்லவா? இவர்கள் உங்கள் பாட்டன் முப்பாட்டன் பிள்ளைகள் அல்லவா? ஆயிரம் ஆயிரம் கனவோடு வாழ்ந்தவர்கள் இன்று அனைத்தையும் இழந்து ஏதிலிகளாகி விட்டார்கள். இவர்களிடம் இன்று உயிரைத் தவிர வேறொரு சொத்தும் சொந்தமாக இல்லை. அந்த உயிர்கூட இன்றோ நாளையோ என்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்கள். சர்வதேசத்தின் உதவிகளையும் சிங்கள அரசு முடக்கி வைத்துள்ளது. சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் விசாரணை என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றார்கள். விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்படும் தமிழினப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்ப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றார்கள். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் கைதுசெய்யப்பட்ட அப்பாவித் தமிழர்கள் ஆறாயிரம் பேர் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொலைசெய்யப்பட்டுள்ளனர் மற்றும் வடக்கிலும் கிழக்கிலும் 1000க்கும் அதிகமானோர் காணாமல் போய் உள்ளார்கள்.

உறவுகளே, சிங்கள இராணுவத்திற்கோ இந்தியா உட்பட பலநாடுகள் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்கின்றன. ஆனால் எம் உறவுகளைக் காக்க உங்களை விட்டால் உலகிலே வேறு யார் உள்ளார்கள். எனவே விரைந்து முடிவெடுத்து இடர்ப்படும் மக்களுக்கு உடனே உதவிக்கரம் கொடுங்கள். துயருறும் எம் மக்களை காப்பேன் என இன்றே சபதமெடுங்கள்.

குருதியிலும் கண்ணீரிலும் தோய்ந்து வாழ்வைத் தொலைத்து அல்லற்படும் நாங்கள் எங்கள்
பொன்னான காலத்தைப் புலர்விக்க, தாயகத் தமிழர்களே ஒன்றாக எழுவோம்!
உறவுகளே சிந்திப்பீர், எங்கள் இனம், எங்கள் இரத்தம், எங்கள் சகோதரர்கள், எங்கள் பிள்ளைகள், எங்கள் கண்முன்னே படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் மௌனமாக இருக்கலாமா?
கூப்பிடு தூரத்தில் ஆறுகோடி தமிழர்கள். இறுதிப் போர்க்களத்தில் ஈழம். என்ன செய்யப்போகிறது எமதருமைத் தாய்த் தமிழகம்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com