Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
அக்டோபர் 2008

விளம்பரங்களில் பெண்கள்


இரா.உமா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பெண்களைக் குறிவைத்துத்தான் எடுக்கப்படுகின்றன. காரணம், தொலைக்காட்சியை அதிகம் பார்ப்பது பெண்கள் என்பதுதான். அதே நேரத்தில் அதில் ஒளிப்பரப்பாகும் விளம்பரங்களில் பெண்களுக்கு எதிரான ஆபாசங்கள் கொட்டிக் கிடக்கின்றன
என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஆண்கள் பயன்படுத்தும் ஒரு வாசனைத் திரவிய விளம்பரம். அதனைத் தெளித்துக் கொண்டதும் அப்படியே அவன் ‘சாக்லேட்’ பையனாக மாறிவிடுகிறான். காரணம் அந்தத் திரவியம் சாக்லேட் மணம் கொண்டது. அவன் தெருவில் இறங்கி நடக்கும்போது அந்த நறுமணம் பெண்களைக் கவர்ந்து இழுக்கிறது. திரைப்படக் கொட்டகையில், அவனுக்கு இருபுறமும் அமர்ந்திருக்கும் பெண்கள் அவன் முகத்தைத் தங்கள் நாவினால் (நாயைப் போல்) நக்கி நக்கிச் சுவைத்து மகிழ்கிறார்கள். அடுத்து அவன் பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்கிறான். அமர்ந்து கொண்டு பயணம் செய்யும் பெண்ணொருத்தி திடீரென அவனுடைய பின்பகுதியைக் கடித்துத் தின்கிறாள். உடனே பின்னணியில் சிரிப்பலை பரவுகிறது.

சிரிக்கக்கூடியதா இது? இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பெண்களின் உடல் அசைவுகள், அங்க சேட்டைகள் ஆபாசத்தின் உச்சம். பெண்கள் வெறும் சதைப் பிண்டங்களாக, விளம்பர உபகரணங்களாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

உடலின் வியர்வை நாற்றத்தை மறைக்கும் பொருளுக்கான இந்த விளம்பரத்தில், அதைக் காட்சிப்படுத்தியவர்களின் மனவிகாரம் முடைநாற்றம் வீசியடிக்கிறது. ஒரு சாக்லெட் விளம்பரம். பேருதில் ஒரு ஆணும் பெண்ணும் (காதலர்கள்?) பயணம் செய்கிறார்கள். இருவரும் நெருக்கமாக அமர்ந்துகொண்டு, சிரித்துப் பேசி மகிழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். திடீரென அவனுடைய இன்னொரு பெண் தோழி வருகிறாள். உடனே அவன், அதுவரை பேசிக்கொண்டு வந்த பெண்ணிற்கு தன் சட்டைப்பையில் இருந்து ஒரு சாக்லேட்டை எடுத்துக் கொடுக்கிறான். அதன் சுவையில் அவள் கண்மூடி மயங்கிக் கிடக்கும் சமயத்தில் அவளை அப்படியே விட்டுவிட்டு, இரண்டாவது பெண்ணுடன் போய்விடுகிறான். இப்படியே அடுத்தடுத்துப் பல பெண்களைச் சாக்லேட்டைக் கொடுத்து ஏமாற்றுகிறான்.

ஒரு சாக்லேட்டுக்கே ஏமாந்து விடுகிறார்கள், அந்தப் பெண்கள். எளிதில் ஏமாந்து விடக்கூடியவர்கள் பெண்கள் என்ற கருத்தே இதில் வெளிப்படுகிறது. ஏமாற்றுவது ஆணின் திறமை என்றும் காட்டுகிறது ஆணாதிக்கத் திமிர். இப்படிப் பலவிதங்களிலும் பெண்களைச் சிறுமைப்படுத்துவதாகவே விளம்பரங்கள் அமைந்துள்ளன. ஆண்களுக்குரிய பொருள்களின் விளம்பரங்களிலும் பெண்கள் தான், அவர்களின் அங்க அசைவுகள்தான், முக்கியமாகக் காட்டப்படுகின்றன.

ஆண்களுக்கான உள்ளாடை விளம்பரம் ஒன்று. அதில் உள்ளாடை (ஜட்டி) மட்டும் அணிந்து கொண்டு ஒரு வாலிபன் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். எதிர்வீட்டு பால்கனியில் அமர்ந்து இரண்டு பெண்கள் அதனைப் பைனாகுலர் வழியாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் அப்படியே மெய்மறந்து போய் மல்லாக்க விழுந்து விடுகிறார்கள். எவ்வளவு அருவருப்பான கற்பனை பாருங்கள். இதைப் பார்க்கும் இளைய தலைமுறையினரின் பெண்ணைக் குறித்த பார்வை எப்படி ஆரோக்கியமானதாக அமையும்.

உடல் சார்ந்த ஆபாசம், கருத்து சார்ந்த ஆபாசம் என்று இரண்டு வகை உண்டு. விளம்பரங்கள் இந்த இரண்டு விதங்களிலும் பெண்களைக் கொச்சைப்படுத்துகின்றன. குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க சட்டங்கள் உள்ளன. அதே நேரத்தில் இது போன்ற சமூக வன்முறைகளைத் தடுக்க என்ன சட்ட நடைமுறைகள் இருக்கின்றன? தணிக்கை எனப்படும் குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் கூட விளம்பரங்களுக்குக் கிடையாது. பெண்களுக்கான அமைப்புகளும் ஜனநாயகச் சிந்தனையாளர்களும் இதை நோக்கியும் தங்கள் போராட்டப் பாதையைத் திருப்ப வேண்டியது அவசியம். பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களின் ஆபாசத்தன்மையை கவிஞர் காசிஆனந்தன் கவிதை வரிகளில் சொல்வதானால் இவர்கள் பெண்களைக் குளிப்பாட்டி அழுக்காக்குகிறார்கள்!

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com