Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
அக்டோபர் 2008

தணிகைச்செல்வனின் ‘தேசியமும் மார்க்சியமும்’ ஒரு கண்ணோட்டம்


கா.திருநாவுக்கரசு

‘தேசியமும் மார்க்சியமும்’ எனும் புத்தகத்தை அறிவார்ந்த நூல்களை எப்போதும் வெளியிடும் அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டு இருக்கிறது. 368 பக்கமுள்ள ‘தேசியமும் மார்க்சியமும்’ எனும் நூலை தணிகைச்செல்வன் ஏழு பகுதிகளாக எழுதி இருக்கிறார். முதல் பகுதிக்குள் நுழைவதற்கு முன் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தை ‘வணக்கம், வருக’ எனும் தணிகைச்செல்வனின் முன்னுரைப் பகுதியில் கடுமையாக விமர்சனம் செய்கிறார். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தால் இயலாமல் போனதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதிகாரத்தில் இருந்த அகில இந்தியக் கட்சிகளில் கூட ‘இயலாமைகள்’ அநேகம் உண்டு. காணாமல் போன அகில இந்தியக் கட்சிகள் இந்த 60 ஆண்டுகளில் நிரம்ப உண்டு. வடிவம் மாறி, பெயர் மாறி, கொள்கை கலவையாகி, கந்தலாகி வேறு வழியில்லாமல் இருக்கிற அகில இந்தியக் கட்சிகள் உண்டு. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி - ‘கட்சிகள்’ ஆக மாறினாலும், விமர்சனங்களினால் தழும்புகள், விழுப்புண்கள் ஏற்பட்டாலும், அதன் ‘தியாகச் சிவப்பு’ இந்திய அரசியலில் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. அதன் காரம், குணம், மணம், நெடி குறைந்துவிடவில்லை என்பதைத் தணிகைச்செல்வனும் அறிவார்.

ஆனாலும் மற்ற கட்சியினரைப் போல பொதுவுடைமை இயக்கம் இருக்கக்கூடாது என்பதால், ‘குறைகளின் கொடுமுடிகளை’ அவர் காட்டுவதை நாம் வரவேற்கின்றோம், பொதுவுடைமைக் கட்சியினரும் வரவேற்பர்; விடையும் அளிப்பர். ‘தேசியமும் மார்க்சியமும்’ நூலின் முதல் பகுதி, ‘தேசியத்தை வளர்த்த மார்க்சியத்தைப்’ பற்றிக் கூறுகிறது. பனிரெண்டு உட்தலைப்புகளுள் அவர் விவாதிக்கும் போக்கிலிருந்தும் - அவர் கூறுவதுபோல ‘பொதுவுடைமை மரபு அறுபடாத வகையில்’ கூறிச் செல்லுவது சிறப்பாக உள்ளது. ஓர் இடத்தில் தணிகைச்செல்வன் ‘.... நான்மறையாம் மூலதனத்தின் நான்கு பகுதிகளிலும்.....’ என்று நான்மறையை நினைவுகூராது தவிர்த்திருக்கலாம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உள்ள நுட்பமான ஒரு செய்தியைத் தணிகைச்செல்வன் அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே குறிப்பிடுவது சிறப்பாக இருக்கிறது. அதை அப்படியே நாம் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். சில பழக்கங்கள் உண்மையைப் போக்கடித்து விடும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! “உலகத் தொழிலாளர்களே - ஒன்று சேருங்கள்!” என்று மார்க்சும் எங்கல்சும் உருவாக்கிய முதல் முழக்கம் 1847இல் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற அவர்களது மூல ஆவணத்தில் பதிவு பெற்றிருப்பதாகப் பெருமிதப்படுவார்கள் பொதுவுடைமையாளர்கள்.

உண்மையில் மார்க்சும், எங்கல்சும் படைத்த முழக்கத்தின் வாசகம் ‘அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பதுதான்! அனைத்து நாடுகள் என்ற தொடரை ‘உலகம்’ என்று சுருக்கியது அந்த அறிக்கையை மொழி பெயர்த்த நம் தமிழ்த் தோழர்களின் ஆர்வக் கோளாறுதான்.” கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில், மார்க்சும், எங்கல்சும் ‘அனைத்து நாடுகள்’ என்று குறிப்பிடுவதை ‘உலகம்’ என்று ஆக்கிவிட்டார்கள் மொழிபெயர்ப்பாளர்கள் என்பதைத் தணிகைச்செல்வன் நமக்கு நுட்பமாக எடுத்துக் காட்டி விளக்கி இருப்பது முதல் பகுதியில் சிறப்பாக இருக்கிறது. இப்போது இம்முழக்கத்தைப் பற்றி எழுதுபவர்கள் ‘அனைத்து நாடுகள்’ என்றே எழுதுகிறார்கள், அது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

முதல் பகுதியில் உலக நாடுகளில் மார்க்சியமும், தேசியமும் எவ்வாறு இருந்தன என்பதை எடுத்துக்காட்டிய தணிகைச் செல்வன், இரண்டாம் பகுதியில் இந்தியப் பொதுவுடைமை மரபில் தேசியம் பற்றி விவாதிக்கிறார். தணிகைச் செல்வன் ஒவ்வொரு கட்சியைப் பற்றியும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் போது கட்சியின் ஆவணங்களைக் கொண்டு விவாதிப்பது நூலுக்குத் தனித்த சிறப்பைச் சேர்க்கிறது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் அன்றி பிற கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அவர் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருப்பது அவருக்கு இருக்கிற அரசியல், சமூக அக்கறையைக் காட்டுவதாகவே நாம் கருதுகின்றோம். அவரது பொதுமை உணர்வை நாம் பாராட்டுகின்றோம்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகளில் ‘தேசியம்’ மிக ஆழமான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படவில்லை. இந்திய மாநிலங்களில் ஆங்காங்கே உள்ள மொழி சார்ந்த தேசியத்தைப் பொதுவுடைமை இயக்கத்தினர் கையில் எடுத்திருப்பார்களானால் அதன் வீச்சு எங்கேயோ போயிருக்கும். ‘இந்திய தேசியம்’ என்பதைக் காங்கிரஸ்காரர்கள் பார்த்தது போல், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பார்த்தது போல், கம்யூனிஸ்ட்களும் பார்த்திருப்பது ஒரு மாபெரும் குறையாகும். அதைத்தான் தணிகைச்செல்வன் இந்நூலில் மிக ஆழமாக எடுத்துக் காட்டுகிறார்.

நூலின் நான்காம் பகுதியில் ‘தாய்த் தமிழும் தேசியமும்’ என்று தலைப்பிட்டு, தமிழ்நாட்டுக் கட்சிகளைப் பற்றி தணிகைச்செல்வன் அச்சமின்றி விவாதிக்கிறார். பகுதி ஐந்துக்கு ‘திராவிடமும் தேசியமும்’ என அவர் தலைப்பிட வேண்டியதில்லை, ‘தாய்த்தமிழும் தேசியமும்’ எனும் தலைப்பிலேயே அவர் விவாதித்து இருக்கலாம்.
‘அப்பர் அன்று ஆன்மிகத்தில் துவக்கி வைத்த தமிழன் இயக்கத்தைத்தான், அயோத்திதாசர் அரசியலில் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றார்’ என்று தணிகைச்செல்வன் குறிப்பிட்டு இருக்கிறார்.

சைவமும், வைணமும் எல்லாத் தமிழர்களையும் முதலாவது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சைவமும், வைணமும் வர்ணாசிரமத்தை உதறாதவையாக இருந்தன. அவற்றின் கட்டு வர்ணாசிரமத்திற்குள் இறுக்கமாக இருந்தது. அவை வேதக் கருத்துகளை தமிழில் எடுத்து வைத்தனவே தவிர, வேறு ஒன்றுமில்லை. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ‘திராவிட வேதம்’ என்று சொல்லுவது வேதக் கருத்துகள் திராவிடத்தில் - தமிழில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால், அது திராவிட வேதமாயிற்று. திராவிட வேதமென்றால் தமிழர்க்குரிய சமயம் சார்ந்த கருத்துகள் என அவற்றை நாம் எண்ணிவிட முடியாது. அதன் வீச்செல்லாம் ‘வர்ணாசிரம சநாதன தர்மத்தை’த் தூக்கிப் பிடிப்பதே ஆகும்.
.
நம்நாட்டில் இரண்டு நெறிகள் இருந்து வருகின்றன. ஒன்று திராவிட நெறி; தமிழை முதன்மையாகக் கொண்டது. இரண்டாவது ஆரிய நெறி; சமஸ்கிருதத்தை முதன்மையாகக் கொண்டது. முன்னது மதம் - சமயம் சாராத கொள்கையை உடையது. இதுதான் ஆசீவகம், சமணம், பௌத்தம் போன்ற அறிவு இயக்கங்கள் தமிழரிடையே அதிக செல்வாக்குப் பெற்றதற்குக் காரணமாகும். பின்னர் அவையும் மதங்களாயின. ஆரிய நெறி வர்ணாசிரம சநாதன தர்மம் என்கிற வைதிகச் சமயம் சார்ந்தது. முன்னது ‘எல்லாவுயிர்க்கும் பிறப்பொக்கும்’ என்னும் சால்பை உடையது. பின்னது ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது.

ஆகவே, அப்பரின் ஆன்மிகத்தில் உள்ள தமிழர், வர்ணாசிரமத்தை ஒப்புக்கொண்ட தமிழர்; அயோத்திதாசரின் அரசியலில் உள்ள தமிழர் வர்ணாசிரமத்தைத் தூக்கியெறிந்த தமிழர் என்பதைத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்ளுகின்றோம். தேவாரத்திலும் நாலாயிரதிவ்ய பிரபந்தத்திலும் வேதம் எனும் சொற்களும் அவை சார்ந்த கருத்துகளும் எத்தனை இடங்களில் வந்துள்ளன என்பதைப் படித்துணர்ந்தவர் அதனை அறிவர்.

நம்மைப் பொருத்தவரை ‘திராவிடத் தேசியம்’ என்று ஒன்று இல்லை. தமிழ்த் தேசியத்தைத்தான் ‘திராவிடத் தேசியம்’ என்று எழுதினர்; பேசினர். ‘திராவிடம்’ என்றால் தமிழ், தமிழ் நிலப்பகுதி, தமிழிலிருந்து திரிந்த மொழிகள், அவை பேசப்படும் நிலப்பகுதி ஆகியவற்றிற்கான பொருளில் தான் வழங்கப்பட்டு வந்து இருக்கிறது. ‘மரபினம்’ (ஸிணீநீமீ) என்ற பொருளிலும் வழங்கினர்.

திராவிட இயக்கத்தார் பேசியவை, எழுதியவை அனைத்தும் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான கருத்துகளே ஆகும். இதனால் மொழி சார்ந்த தேசியமும் மரபினமும் ஒரே பொருளில் ஆளப்பட்டுக் குழப்பமும் ஏற்படலாயிற்று என்றும் சொல்லலாம்.

“மொழி வழிப்பட்ட ஒரு தேசியத் தமிழனைக் கண்டறிந்தவர் அயோத்திதாசர் என்றால், மொழி வழிப்பட்ட ஒரு தேசிய தமிழ்நாட்டைக் கண்டு அதற்கு அரசியலில் கால்கோள் விழாவும் கண்டவர் பெரியார் ஆவார்.
எனவேதான் தமிழ்த் தேசியத்தின் தந்தை பெரியார் என்ற உண்மையைத் தமிழர் யாரும் மறுப்பதில்லை”
என்று தணிகைச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

‘திராவிடமும் தேசியமும்’ எனும் தலைப்பின் கீழ் இப்படிக் குறிப்பிடுகிறார் தணிகைச்செல்வன் :
“1930களில் தொடங்கிய தமிழ்நாடு விடுதலைப் பயணத்தை 1973இல் ஆற்றிய அவர் இறுதிப் பேருரை வரை பெரியார் தொடர்ந்தார். அவரது இடைக்கால கோரிக்கைகளான சென்னை மாகாணம் - திராவிட நாடு - ஆகிய தடுமாற்றங்களால் “தனித் தமிழ்நாடு” என்ற அவரது உறுதி குலையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது”
இதில் தணிகைச்செல்வன் “இடைக்கால கோரிக்கை” ‘தடுமாற்றங்களால்’ எனும் சொற்களைத் தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமிழ் தவிர்த்த இதர திராவிடமொழி பேசுவோரையும் பெரியார் தமிழர்களாகவே கருதினார். தெலுங்கை ஆந்திரத்தில் பேசிய தமிழ் என்றும், கன்னடத்தை கர்நாடகத்தில் பேசிய தமிழ் என்றும், மலையாளத்தை கேரளாவில் பேசிய தமிழ் என்றும் பெரியார் குறிப்பிட்டார்.

இதனால் சென்னை மாகாணத்தையும் பெரியார் தமிழ்நாடாகவே பார்த்தார். அப்போதைய ‘அரசியல் பூகோள சூழ்நிலை’ அது! ஆகவே அது இடைக்கால கோரிக்கை அல்ல. சென்னை மாகாணமும், திராவிட நாடும் பெரியார்க்குத் தமிழ் நாடாகவே தெரிந்தன. அது ஆய்வு நோக்கில் சரியாகவே இருந்தது. ஆகவே, அதனைத் தடுமாற்றங்கள் என்றும் சொல்லிவிடமுடியாது. அக்கருத்தியல் வெற்றி பெற வில்லை என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், அக்கருத்தியலை தவறு என்று கூறிவிட முடியாது.

ஆந்திரர், கர்நாடகர், கேரளர்களெனத் தனித்தனியாகப் பிரிந்து சென்ற பின்னர் நமக்கு வேலை எளிதாக ஆயிற்று என்றும் பெரியார் கருதினார். பொறுப்பும் குறைந்தது என்றும் நினைத்தார் பெரியார். ஆகவேதான் தமிழ்நாடு கோரிக்கையில் அவரது உறுதி அதிகமாயிற்று. போனது போக இருப்பதை மீட்கலாம் என்றே பெரியார் கருதினார். ஆகவே சென்னை மாகாணம் - திராவிட நாடு ஆகியவற்றைத் தடுமாற்றங்கள் என்றோ இடைக்கால கோரிக்கை என்றோ கூறிவிட முடியாது.

நூலின் ஐந்தாம் பகுதியாக திகழுகின்ற ‘திராவிடமும் தேசியமும்’ பத்து துணைத் தலைப்புகளின் கீழ்ப் பேசப்படுகிறது. திராவிடர் கழகத்தைப் பற்றி அவர் குறிப்பிடும்போது - பொதுவுடைமைக் கட்சி தவிர்த்த நிலையில் திராவிடர் கழகம் மட்டுமே பெரியார் பேசியவை, எழுதியவை குறித்து நிரம்ப நூல்களை வைத்துள்ளன. வேறு எந்த ஓர் அமைப்பும் அப்படி இல்லை என்பதை அறைந்து சொல்லுகிறார் - தணிகைச்செல்வன்.

அது உண்மைதான்! திராவிடர் கழகத்தின் இலட்சியத்தை விளக்க தற்போதைய கையேடு போதுமானதாக இல்லை. திராவிடத் தமிழனின் இலக்கை விளக்க திராவிடர் கழகம் இன்னொரு கையேட்டை வெளியிட வேண்டும் என்கிறார் தணிகைச்செல்வன். பெரியாரின் தனித் தேசக் கோரிக்கையின் தடச்சுவடே தெரியாமல் கொள்கையேடு தயாரிப்பது பெரியார்க்கு அறம் செய்ததாகாது என்று ஓர் இடத்தில் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இது எஸ்.வி. இராஜதுரையின் ‘பெரியாரின் மரபும் திரிபும்’ எனும் நூலை நினைவுப்படுத்துவதாக இருக்கிறது. பெரியாரின் பிரிவினைக் கொள்கையைத் திராவிடர் கழகம் தேவையில்லை என்று கருதினால் அதை பகிரங்கமாக நாட்டு மக்களுக்குச் சொல்லலாம் என்கிறார் நூலாசிரியர்.

ஐந்தாம் பகுதியில் தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளையும் அவர்களது கொள்கை ஆவணத்தைக் கொண்டு விமர்சனம் செய்து இருக்கிறார். மேலே திராவிடர் கழகத்தைப் பற்றிப் பார்த்தோம். இப்போது திமுக பற்றித் தணிகைச்செல்வன் கூறியிருப்பதைப் பார்ப்போம். “தமிழ்த்தளத்தையே தன் உயிர்த் தளமாகக் கொண்டுள்ள தி.மு.கழகம் தமிழின் பெயரையோ, தமிழனின் பெயரையோ, தமிழ்நாட்டின் பெயரையோ தன் கோட்பாட்டில் பதிவு செய்ய இயலாமல் தடுத்திருப்பது அதன் திராவிடக் கருத்தியலே”

‘திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அடிப்படையிலும், நடைமுறையிலும் தமிழையும் தமிழர்களையும் முன்னேற்றும் நோக்கோடு பிறந்த தமிழ்நாட்டுக் கழகமே’ என்று அவரே குறிப்பிடுவதிலிருந்து ‘திராவிடக் கருத்தியல்’ என்று ஒன்று தனியாக இல்லை அதுவும் தமிழியமே என்பது தெரிகிறது. இதனால் தணிகைச்செல்வன் குறிப்பிடுவது போல ‘தமிழ்நாடு’ காணாமல் போய் விடுவதற்கு வாய்ப்பில்லை. இங்கே மேலும் ஒரு கருத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

1967ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெறும் வரை - அக்கட்சியை சோவியத் இதழ்கள் ‘வகுப்புவாத வலதுசாரிக் கட்சி’ என்று வருணித்துக் கொண்டு இருந்தன. ஆனால், 1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு - தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் திமுகவை ‘தமிழன் தேசியக் கட்சி’ என்று குறிப்பிட்டன. இதனை 15.03.1967 “நம் நாடு” இதழ் செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
தேசியமும் மார்க்சியமும் எனும் நூலில் திமுகவைப் பற்றி ஐந்தரைப் பக்கங்களே எழுதியிருக்கிறார் தணிகைச்செல்வன்.

ஆனால் அஇஅதிமுகவைப் பற்றி 17 பக்கங்கள் எழுதியிருக்கிறார். திமுகவை எதிர்ப்பதைத் தவிர - கலைஞர் கருணாநிதியை எதிர்ப்பதைத் தவிர வேறெந்த கொள்கையும் இல்லாத கட்சியைப் பற்றி தணிகைச்செல்வனுக்கு நிரம்பச் சொல்ல வேண்டியிருந்தது. ‘திராவிட’ என்கிற சொல்லை ஓர் அடையாளத்திற்காக வைத்துக்கொண்டு - திராவிட இயக்க நெறிகளுக்கு எதிராகச் செயல்படுவதுதான் அக்கட்சியின் வேலை. ஆகவே, தணிகைச்செல்வன் அஇஅதிமுகவின் கொள்கை விளக்க அறிக்கையை வைத்துக் கொண்டு மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்.

அதனால், அவருக்கு எழுதுவதற்குக் கூடுதலான பக்கங்கள் செலவாகி இருக்கின்றன.
அஇஅதிமுகவையும், அதன் நிறுவனரான புரட்சி நடிகர் எம்ஜிஆரையும், தற்போதைய பொதுச் செயலாளரான ஜெயலலிதாவையும் தணிகைச் செல்வனின் விமர்சனக் குத்துவாளால் பாய்ச்சும் பகுதிகள் சிலவற்றைக் கீழே தருகிறோம்.
1) தமிழரல்லாதவர் என்ற தகுதிக்குறை எம்ஜிஆருக்கு இருந்தபோதும், பார்ப்பனர் அல்லர் என்ற தகுதிப்பாடு அவரது திராவிடத் தன்மையை ஈடு செய்தது.

2) ஜெயலலிதாவுக்கோ இரண்டு தகுதிக் குறைகளும் இருந்தன. குடிப்பிறப்பில் அவர் கன்னடர், குலப்பிறப்பில் அவர் பார்ப்பனர். இவ்விரு தகுதியின்மை இருந்தும், தமிழ்நாட்டின் திராவிட இயக்கம் ஒன்று அவர் தலைமையை ஏற்றது நகை முரணாகும்.

எனவே, திராவிட இயக்கங்களின் பட்டியலில் இருந்து ஜெயலலிதாவின் அஇஅதிமுகவை விலக்கி வைப்பதொன்றே தமிழியத்தின் தடுக்க முடியாத விதியாக இருக்க முடியும் என்பது நம் கருத்து. இதே பார்வைதான் நம் பார்வையும். நாம் நீண்டகாலமாக - அஇஅதிமுகவை திராவிடக்கட்சி என்று ஒப்புக் கொள்ள முடியாது என்றே பேசியும் எழுதியும் வருகின்றோம். தணிகைச் செல்வனும் அஇஅதிமுகவைத் திராவிடக் கட்சியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்கிற போது நமக்கு ஒரு புதிய சக்தியே பிறந்து விடுகிறது.

தணிகைச்செல்வன் அஇஅதிமுகவைப் பற்றி விமர்சிக்கும் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் எதிர்மறையான சித்திரத்தைப் பல வண்ணங்களில் காட்டிவிட்டு - முடிக்கிறபோது, “நாமறிந்தவரை அவர் தமிழியக் காவலராக ஏற்கப்படுகிறாரா என்று பார்ப்பனியம் கவலைப் படுவதில்லை. ஆனால், பகைவராகப் பார்ப்பனியத்தால் பார்க்கப்படுகிறார் - தாக்கப்படுகிறார் என்பதே அவரது அழுத்தமான அடையாளமாகும்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இரண்டும் உண்மைதான். ஓர் உண்மையான விமர்சகராகத் தம்மை தணிகைச்செல்வன் காட்டிக் கொள்ளுவதற்கு இதைவிட ஒரு கூற்றை நாம் காட்டிவிட முடியாது.

“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டெல்லியில் அரசாங்கம் மாறும்; அரசு மாறாது. கம்யூனிஸ்ட்களே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும், தனியுடைமையைப் பொதுவுடைமையாக்க இந்திய அரசு ( அதாவது இந்திய அரசமைப்புச் சட்டம் ) அனுமதிக்காது.”
தணிகைச்செல்வன் எடுத்து வைத்துள்ள கருத்திற்குப் பொதுவுடைமைக் கட்சிகள் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளன.
தணிகைச்செல்வன் ஒவ்வொரு கட்சியைப் பற்றியும் விமர்சிக்கும் போதும் சான்றாதாரத்தோடு சிக்கல்களை விளக்குவது பளிச்சென விவகாரத்தைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியைப் பற்றி, தணிகைச்செல்வன் கூறத் தொடங்குகிறார். ‘பெரியார் சமவுரிமைக் கழகம்’ 1988இல் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. ‘மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. அதனைத் தணிகைச்செல்வன் கூறுகிறபோது ‘மேம்படுத்தி’ எனும் சொல்லைப் பயன்படுத்தி இருப்பது மிகச் சிறப்பாக இருக்கிறது. அதனையே முரணியக்கப் (இயக்க இயல் ) பார்வை
என்று சொல்லுகின்றோம்.

பொதுவுடைமைக் கட்சி என்றால், கட்சித்திட்டம் ஒன்று வேண்டும் அப்படி ஒரு திட்டம் மா.பெ.பொ.கட்சியிடம் இல்லை. இதனைத் தணிகைச்செல்வன் தெரிவிக்கும் போது, ‘கம்யூனிஸ்ட் கட்சிகளில் கடைப்பிடிக்கப்படும் அமைப்பு விதி’ என்கிறார். இப்படிக் கூறுவதுதான் சிறந்த திறனாய்வு நோக்கு, பொதுவுடைமைக் கட்சி என்று வந்த பிறகு அதற்கான மரபுகள் வேண்டும் என்று தணிகைச்செல்வன் சுட்டிக்காட்டியிருப்பது சிறப்பாக இருக்கிறது.

மா.பெ.பொ.கட்சி மற்ற திராவிடக் கட்சிகளிலிருந்து அரசியல் கோட்பாட்டில் பெருத்த மாறுதலை உடையதாக இருக்கிறது. மார்க்சியமே மாறுதலுக்குரியதாகிறபோது பெரியாரியம் மாறலாம்தானே எனும் கருத்தியலில் அக்கட்சி மய்யம் கொண்டு சிந்திக்கிறது. ஆகவே, அக்கட்சியின் கொள்கை ‘இந்தியாவை’ ஏற்றுக் கொள்ளுகிறது. “இந்தியாவில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனும் இலக்கை அடைந்திட முதன்மை தருவோர் சமதர்ம அரசு அமைப்புக் கொண்ட மொழி வழி தேசிய மாநில அரசுகள், தாங்களே விரும்பி இணைந்து கொள்ளுகிற ஓர் உண்மையான கூட்டாட்சியாக இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவதே சரியானது என மா.பெ.பொ.கட்சி கருதுகிறது.”
இதைப் பற்றி தணிகைச்செல்வன் பிறிதொரு இடத்தில் கீழ்க்காணும்படி ஒரு வினாவை எழுப்புகிறார்.

“இந்திய ஒன்றியத்தையே பொதுவுடைமைப் பூமியாக்கி விட்டால், தேசிய இனங்கள் பிரிந்து போகத் தேவையில்லை என்று எண்பது ஆண்டுகளாகப் பேசி வரும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகள் தேசிய சிக்கல்களில் கண்ட தோல்விகளுக்குப் பிறகும் பெரியாரிய இந்தியாவை உருவாக்கும் பேரவா மா.பெ.பொ.கவுக்கு ஏற்படலாமா?”
இவ்வினா சரியில்லை என்றே எமக்குத் தோன்றுகிறது. பொதுவுடைமையினர் பேசியதற்கும் பெரியாரியம் பேசுவதற்கும் வேறுபாடு அடிப்படையிலேயே உண்டு. நாம் இங்கே பார்க்க வேண்டியது ‘வர்ணாசிரம சநாதன தர்மம்’ இந்தியாவெங்கும் இருக்கிற கொள்கை. இதற்கு எதிராக இருக்கிற சித்தாந்தம்தான் பெரியாரியம். இதனைப் பொதுவுடைமையோடு - மாறுபட்ட சிந்தனைகளோடு - கடந்த கால சிக்கல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட்டால் பெரியாரிய கட்சி இயங்க வாய்ப்பு உண்டு என்று கருதலாமே.
(அடுத்த இதழில் நிறைவடையும் )

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com