Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
மே 2009

தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ ஆதரவுக் கூட்டனி ஏன் உருவாகவில்லை? யார் காரணம்?
தொல்.திருமாவளவன் விளக்கம்

கடந்த ஏப்ரல் 13 அன்று, சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியனின் ஒன்றே சொல், நன்றே சொல் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்ட எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், தமிழக நாடாளுமன்றத் தேர்தலில், ஈழ ஆதரவுக் கூட்டணி ஏன் உருவாகவில்லை என்பது குறித்தும், அந்நிலைக்கு யார் யாரெல்லாம் காரணம் என்பது குறித்தும் விரிவாகப் பேசினார். அவர் பேச்சிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்படுகின்றது :

Thirumavalavan சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்திக்கிறார் மேதகு பிரபாகரன் அவர்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை ஊடகங்களும் அங்கே வந்து குவிந்தன. ஒரே நேரத்தில் உலகமே மேதகு பிரபாகரன் அவர்களின் பேட்டியை ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து ராஜபக்சே ஆத்திரப்படவில்லை. சோனியா காந்தி ஆத்திரப்படவில்லை. போயஸ் தோட்டத்தில் அதைப் பார்த்த ஜெயலலிதா ஆத்திரப்படுகிறார். ஆவேசப்படுகிறார் ! சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறார். பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டுவந்து குற்றவாளிக் கூணடில் நிறுத்தி அவரை விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்று சொல்கிறார். தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் முதலமைச்சராக அமர்ந்து கொண்டு, எங்கள் இனத்தைத் தலைநிமிர வைத்த மேதகு பிரபாகரன் அவர்களைக் கைது செய்ய வேண்டும், இந்தியாவுக்குக் கொண்டு வந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும், விசாரிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய அந்த ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாவலரா ? ராஜபக்சேவால் அப்படிச் சொல்ல முடிந்ததா ? கணவனை இழந்த சோனியா காந்தியால் அப்படிச் சொல்ல முடிந்ததா ? ஆனால், ஜெயலலிதா சொன்னார். இன்றைக்கும் சட்டசபைக் குறிப்பில் இருக்கிறது.

அப்படிப்பட்ட ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்தால் தமிழினப் பாதுகாப்பா ? தயவு கூர்ந்து எண்ணிப்பார்க்க வேண்டும். கொள்கை அளவிலும் சரி நடைமுறை அளவிலும் சரி அதிமுகவோடு என்னால் சேரமுடியாது என்று தொடக்கத்திலேயே நான் சொன்னேன். வருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டதாக மருத்துவர் சொல்கிறார். அது தவறு, அப்படி எந்த இடத்திலும் சொல்லவில்லை. உங்களோடு சேர்ந்து ஈழத் தமிழர்களுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று சொன்னேன்.

கடந்த சனவரி 2 ஆம் நாள் கிளிநொச்சியை ஆக்கிரமித்துவிட்டார்கள் சிங்களவர்கள். அந்தச் செய்தியைக் கேட்டதும் எனக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு விட்டது. இப்படியயல்லாம் மனநலம் பாதிக்கப்படும் என்று நான் அன்றைக்குத்தான் உணர்ந்தேன். அதுவரையில் எனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அன்று இரவு முழுக்க என்னால் உறங்கவும் முடியவில்லை. பேசவும் முடியவில்லை. கலக்கத்தில் இருந்தேன். 4 ஆம் நாள் திருச்சிராப் பள்ளியில் அய்யா ஆனைமுத்து அவர்களின் மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டேன். அந்த மாநாட்டில் நான் சொன்னேன். நாம் மிக மோசமான அழிவின் விளிம்பில் நிற்கிறோம். தமிழ்நாட்டில் இனி அரசியல் முரண்பாடு களைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கிற கட்டம் வந்துவிட்டது. அரசியல் தலைவர்களே ! ஒன்றுபடுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் வீட்டில் வந்து சந்திப்பேன். அந்த முயற்சியில் நான் ஈடுபடுவேன் என்று பேசிவிட்டு, 5 ஆம் தேதி சென்னைக்கு வந்து, 5 ஆம் தேதியில் இருந்து 11 ஆம் தேதிவரை ஆறு நாட்கள் மருத்துவர் இராமதாசு அவர்களுடன் சந்திப்பு, ஆசிரியர் வீரமணி அவர்களுடன் சந்திப்பு, பழ. நெடுமாறன் அவர்களோடு சந்திப்பு என அடுத்தடுத்து அவர்களைச் சந்தித்து ஒருங்கிணைப்பதற்குள் நான் பட்டபாடு சாதாரண பாடு அல்ல. பெரும்முயற்சி எடுத்துக்கொண்டேன். இதை யாரும் மறுக்க முடியாது.

10 ஆம் தேதி அனைத்துக் கட்சியினரையும் கூட்டுவோம். ஒரு கூட்டம் போடுவோம் என்று முடிவுசெய்து, அக்கூட்டத்தை ஆசிரியர் வீரமணி அவர்கள் கூட்டினால்தான் கலைஞரும் வந்து கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்றும், வீரமணி அவர்களே கடிதம் எழுதட்டும் என்றும் சொன்னவர் மருத்துவர் தான். நானும் மருத்துவரும் பெரியார் திடலுக்கே போய் அவரைக் கேட்டுக் கொண்டோம். எங்கள் வேண்டுகோளின் அடிப்படையில் அவரும் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் எல்லோருக்கும் வழங்கப்பட்டது. என்ன நடந்ததோ ஏது நடந்ததோ தெரியவில்லை. திடீரென அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தொலைபேசி மூலமாக இந்தக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று சொன்னார். அந்தக் கூட்டம் வேண்டாம் என்று சொன்னார்.

அங்கே இனம் அழிந்து கொண்டிருக்கிறது. பத்தாம் தேதி கூட்டம் என்பதே மிகவும் தள்ளிப் போகிறதே என்று நான் வருத்தப்பட்டேன். பத்தாம் தேதியும் அந்தக் கூட்டம் இல்லை என்றதும் நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். மருத்துவர் அவர்களிடத்தில் நான் போய் சொன்னேன். நம் பேச்சைக் கேட்டு ஆசிரியர் வீரமணி அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக்கூட்டத்திற்குப் போவோம் என்று சொன்னேன். பின்னர், நாங்கள் இருவரும் பெரியார் திடலுக்குப் போய் அவரைச் சமாதானப்படுத்தி வருந்த வேண்டாம் என்று சொன்னோம்.

அத்துடன் 12 ஆம் தேதி பழ. நெடுமாறன் அவர்கள் அந்தக் கூட்டத்தைக் கூட்டுவதாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் கூட்டத்திற்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும். கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த விரும்புகிறார்கள் அதுதான் காரணம் என்று சொன்னோம். அப்போது, இந்த இடத்திற்கு எல்லோரும் வந்திருக்கிறார்களே ; வைகோ வந்திருக்கிறார் ; தா. பாண்டியன் வந்திருக்கிறார்; அய்யா நெடுமாறன் வந்திருக்கிறார்; இது எல்லோருக்கும் பொதுவான இடம்தானே; இந்த இடத்தில் கூட்டத்தை நடத்தினால் என்ன குறைபட்டுவிடும் ? ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? நான் எங்கும் வரமாட்டேன் 12 ஆம் தேதி கூட்டத்திலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று ஆசிரியர் வருத்தப்பட்டார்.

நான் எழுந்து நின்று அவர் கைகளைப்பிடித்துக் கெஞ்சினேன். நம் இனத்திற்காக இந்தப் பிடிவாதத்தைக் கைவிடுவோம். அவர் எங்கு வேண்டுமானாலும் நடத்தட்டும். கட்டாயம் நீங்கள் வரவேண்டும் என்று கெஞ்சினேன். அதன்பிறகு ஒரு முடிவெடுக்கப்பட்டது. நாம் இது தொடர்பாக முதல்வரைச் சந்தித்து முறையிடுவோம். நாம் மூவரும் செல்லுவோம். முதல்வரிடம் ஒப்புதல் வாங்குகிற வேலையை பாமக செய்யட்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, 12 ஆம் தேதி காலையில் முதல்வரைச் சந்திக்க ஒப்புதல் கிடைத்தது. 12 ஆம் தேதி மாலை இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது. நாங்கள் மூவரும் கோபாலபுரம் இல்லத்தில் முதல்வரைச் சந்திக்கப் போகிறோம். திருமங்கலம் தேர்தல் முடிவு வெளிவந்துவிட்டது. உள்ளே ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி பொங்க கைகுலுக்கிக் கொண்டிருந்த நேரத்தில் அதையயல்லாம் புறந்தள்ளிவிட்டு எங்களோடு ஒரு மணி நேரம் முதல்வர் பேசினார், வேதனைப்பட்டார்.

“என்னதான் செய்ய ? முடிந்ததையயல்லாம் செய்தாகி விட்டது ; இந்திய அரசிடம் பேசியாகிவிட்டது. ஒரு மாநில அரசு இதற்கு மேல் என்னதான் செய்யமுடியும் ? வேண்டுமானால் நான் உண்ணாவிரதம் இருக்கட்டுமா?” என்று கேட்டார். அவர் சொன்ன மாத்திரத்தில் உடனடியாக ஆசிரியர் வீரமணி அவர்கள், இதெல்லாம் தவறு, நீங்கள் காந்தியவாதியாகப் பேசுகிறீர்கள் என்று பேசினார். உடனே மருத்துவர் அவர்களும் நீங்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

அதன்பின்னர், நான் சொன்னேன், இன்று மூன்று மணியளவில் அய்யா பழ. நெடுமாறன் அவர்களின் தலைமையில் ஒரு கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு நாங்கள் மூவரும் போகிறோம். தகவலுக்காகச் சொல்கிறேன் என்று சொன்னேன். அங்கேயும் ஆசிரியர் வீரமணி அவர்கள் நான் வரவில்லை என்று சொன்னார். இல்லை இல்லை தலைவர் முன்னாலேயே சொல்லிவிட்டேன். அதனால் நீங்களும் வரவேண்டும் என்று சொல்லிவிட்டு பின்னர் மூவரும் வெளியில் வந்துவிட்டோம்.

மருத்துவர் அய்யா அவர்களிடத்தில் முதல்வர் அவர்களே உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று சொன்னதை நீங்கள் ஏன் தடுத்தீர்கள் ? அவர் ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தால் கூட அது மிகப்பெரிய அதிர்வைத் தந்திருக்குமே. அந்த வாய்ப்பை நீங்கள் தவற விட்டுவிட்டீர்களே என்று நான் சொன்னேன்.

நாம் எடுத்த முயற்சி எதுவுமே நடக்கவில்லையே என்று எனக்குள் ஏதோ ஓர் உறுத்தலும், வருத்தமும் என்னை ஆட்டிப்படைத்தது. கொஞ்ச நேரத்தில் பழ. நெடுமாறன் அவர்களிடத்தில் இருந்து மறுபடியும் கூட்டம் ரத்து என்று ஒரு தகவல் வந்தது. பத்தாம் தேதியும் ரத்தானது, 12 ஆம் தேதியும் ரத்தானது.

ஏன் ரத்தானது என்றால், திருமாவளவனும் இராமதாசும் கலைஞரை சந்தித்துவிட்டு இங்கே வந்தால் அது நல்லதல்ல

என அந்தக் கூட்டம் இரத்து செய்யப்பட்டது. ஈழத்தமிழர் பிரச்சினையைவிடக் கலைஞரைச் சந்திப்பதா ? வேண்டாமா ? சந்தித்துவிட்டு இங்கே வந்து சந்திப்பதா ? என்று பிரச்சனை மாற்றப்பட்டுவிட்டது. பன்னிரென்டாம் தேதியும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. வெந்து நொந்து போனேன். வேதனையின் உச்சத்திற்கே தள்ளப்பட்டேன்.

பின்னர், மாலை 5 மணிக்கு பொங்குதமிழ் அலுவலகத்திற்குப் போய் மருத்துவர் அவர்களைச் சந்தித்து முறையிட்டேன். நான் தலைவர்களோடு பேசிப் பார்த்துவிட்டு ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். முடிந்தால் ஒத்துழைப்புத் தாருங்கள் என்று சொன்னேன். என்னவென்று கேட்டார்.

நான் மட்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவெடுத்திருக்கிறேன். எங்கள் கட்சி தொடர்ச்சியாக அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்திவிட்டது. இரயில் மறியல் போராட்டம், மகளிர் அணியினுடைய உண்ணாநிலைப் போராட்டம், தொழிலாளர் விடுதலை இயக்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம், மாணவர் அணியின் சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஈழத்தமிழர்களைக் காப்பாற்றச் சொல்லி முழக்க அட்டைகளைச் சட்டையில் பொருத்திக் கொண்டு தொடர்ச்சியாகப் பிரச்சார இயக்கம் நடத்தினோம். தமிழீழ அங்கீகார மாநாட்டை நடத்தினோம். காங்கிரசார் அந்த மாநாட்டைத் தடை செய்யச் சொன்னார்கள். சட்டப் பேரவையில் திருமாவளவனைக் கைது செய்யச் சொன்னார்கள். எல்லாவற்றையும் மீறி நீதிமன்ற ஆணையைப் பெற்று கலைஞர் அவர்களின் ஒப்புதலையும் பெற்று மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். ஏறத்தாழ மூன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டதாக காவல்துறையே சொன்னார்கள். அவ்வளவு எழுச்சி மிகுந்த மாநாடு. இவ்வளவையும் செய்து முடித்தாகி விட்டது. மீண்டும் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த நான் விரும்பவில்லை. சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கப் போகிறேன். எதைப் பற்றியும் நான் சிந்திக்கவில்லை. என் கண்முன்னால் நிற்பது இது ஒன்றுதான். 14 ஆம் நாள் பொங்கல் திருநாள் அன்று உண்ணாநிலையை நான் தொடங்கப் போகிறேன் என்று சொன்னேன். அன்றைக்கு மருத்துவர் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, இதெல்லாம் தேவையில்லை என்று சொன்னார்.

வேறு வழி எனக்குத் தெரியவில்லை. நாம் இணைந்து செயல்படுவதற்கு ஒரு வழியிருக்கிறது. முடிந்தால் கோக. மணி அவர்களையும் என்னோடு உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று நான் கேட்டேன். மருத்துவரும் சரி என்றார். அப்போது கோக. மணி அவர்கள் அங்கு இல்லை. கொஞ்ச நேரத்தில் அவர் அங்கு வந்தார், அண்ணா உங்களைக் கேட்காமலேயே நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்துவிட்டோம் என்று நான் சொன்னேன். உடனே அவர் சிரித்தார். என்னவென்று கேட்டார். திருமா இப்படிச் சொல்கிறார் என்று மருத்துவர் அவருக்கு விளக்கிச் சொன்னார். பரவாயில்லையே இருப்போம் என்று சொல்லிவிட்டு, ஆனால் 14 ஆம் நாள் இருக்க வேண்டாம். பொங்கல் திருநாளில் நாம் உண்ணாநிலை இருக்க வேண்டாம் என்று சொன்னார்.

ஈழத்தில் நம் மக்கள் துன்பப்படும்போது நாம் இங்கே பொங்கல் கொண்டாடுவது நல்லதாக இருக்காது. அதனால் பொங்கல் நாளன்றே அமருவோம் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல, பொங்கல் கழித்து சனவரி 17 ஆம் நாள் திருமாவளவனும், கோக. மணி அவர்களும் இணைந்து சாகும்வரை உண்ணாநிலை அறப்போரில் ஈடுபடுவதென்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த வரலாற்றுச் செய்திகளையயல்லாம் தோழர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். அன்று இரவு 8.30 மணி மருத்துவர் என்னுடைய தொலைபேசியில் வருகிறார். தம்பி உண்ணாநிலைப் போராட்டம் நாம் நடத்த வேண்டாம். முதல்வர் அவர்கள் ஒரே ஒரு மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாலே அது சிறப்பாக இருக்கும். நானொரு வழி சொல்லுகிறேன். நீங்கள் நாகநாதன் அவர்களைப் போய்ப் பாருங்கள். அவர்தான் காலையில் முதல்வரோடு நடைப்பயிற்சிக்குப் போகிறவர். அவர் உணர்வு மிக்கவர். அவரிடத்தில் சொன்னால் இது நடக்கும். ஒரே ஒரு மணிநேரம் முதல்வர் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தால் போதும். நீங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார்.

நான் உடனே தோழர் ரவிக்குமாரை அழைத்துக் கொண்டு நாகநாதன் அவர்களை அவரது இல்லத்திற்குப் போய்ச் சந்தித்து அவருடன் இரண்டு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். எப்படியாவது தலைவரிடத்தில் எடுத்துச் சொல்லி உண்ணா விரதத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி விட்டு வந்தோம். அதன்பிறகு இவரையும் நான் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்ன பதில் என்றும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான், தனிமையில் நான் கைவிடப்பட்ட நிலையில்தான் இனி யாரையும் சந்திப்பதில்லை, யாரோடும் சேர்வதில்லை தனித்தே போராடுவோம் . சாகும் வரை உண்ணாவிரதமிருப்போம் என்று நான் முடிவெடுத்தேன்.

என் கேள்விக்கு என்ன பதில்?

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கியபோதே நான் சொன்னேன். முதல் அமர்வில், அய்யா ராமதாசு அவர்கள் இருந்தார்கள், அண்ணன் வைகோ அவர்கள் இருந்தார்கள், அண்ணன் தா. பாண்டியன் அவர்கள் இருந்தார்கள். அவர்களிடத்தில், இந்த நான்கு அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தேர்தலில்கூட ஓரேயணியாக இருக்க வேண்டும். அது ஈழத்தமிழர் ஆதரவு அணியாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னேன். தேர்தலில் தனித்தனியாகப் பிரிந்து போய்விடலாம் இப்போது மட்டும் ஒன்றாக இருக்கலாம் என்றால் அது நடக்காது. அது பேரம் பேசுவதற்கு மட்டும்தான் உதவும் என்று நான் சொன்னேன்.

ஒவ்வொருவருக்கும் ஓர் அணுகுமுறை ; ஒரு நிலைப்பாடு இருககிறது. ஒவ்வொரு சூழல் இருக்கிறது. ஆகவே, இதுவும் வேண்டாம், அதுவும் வேண்டாம். நாம் மட்டும் துணிந்து தனி அணியைக் கட்டி எழுப்புவோம் என்று சொன்னேன். வாதாடினேன். அய்யா நெடுமாறன் அவர்களிடத்தில் திரும்பத் திரும்பச் சொன்னேன். மருத்துவர் அவர்களிடத்தில் மறுபடியும் மறுபடியும் சொன்னேன். அண்ணன் வைகோ அவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் சொன்னேன். அந்த அணியை ஏன் அவர்கள் உருவாக்கவில்லை ?

தமிழ்உணர்வாளர்களே, தயவுகூர்ந்து உங்கள் காதுகளை மிகக்கவனமாக இந்தப் பக்கம் திருப்பிக் கேட்க வேண்டுகிறேன். இன்றைக்குத் திருமாவளவன் மீது துரோகப் பட்டம் சுமத்தும் சில தமிழ் உணர்வாளர்களைப் பார்த்து நான் கேட்கிறேன். இந்தக் கேள்விக்கு என்ன விடை ?




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com