Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
மே 2009

தோழர் இ.எம்.எஸ். எழுதிய 'மகாத்மாவும் அவரது கொள்கைகளும்'
என்னைக் கவர்ந்த புத்தகங்கள் -5 : இரா.ஜவஹர்

“காந்தியா ? அவர் முதலாளித்துவ ஏஜண்ட் ஆச்சே ! சுதந்திரப் போராட்டம் புரட்சிகர வழியில் சென்றுவிடாமல் தடுத்தவர்தானே அவர் ! தொழிலாளி வர்க்கப் புரட்சியின் எதிரி ஆச்சே ! ” என்பது தான் முன்பு எனது கருத்தாக இருந்தது !

அது 1973 ஆம் ஆண்டு.

EMS அப்போது சிவகங்கை ராமகிருஷ்ணன் என்று ஒரு தோழர் வந்தார். தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று என்னிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார். ஆனால், காந்தியைப் புகழ்ந்து பேசினார்.

அவரிடமும் நான் “ தொழிலாளி வர்க்கப் புரட்சியின் எதிரிதான் காந்தி ” என்று கூறினேன்.

அதற்கு அவர் என்னிடம் “ உங்கள் கட்சித்தலைவர் இ. எம். எஸ். நம்பூதிரிபாட் எழுதிய ‘The Mahatma and the Ism’ என்ற புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா ? ” என்று கேட்டார்.

“ இல்லை ” என்றேன்.

“ படியுங்கள். மகாத்மா காந்தியின் பெருமைகளை உங்கள் கட்சித் தலைவரே கூறுவதைத் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு பேசுங்கள் ” என்றார்.

எனது தலைக்கனம் ‘ கொஞ்சம் ’ அடங்கியது !

உடனே அந்தப் புத்தகத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை. தேடுதல் தொடர்ந்தது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் கிடைத்தது அந்தப் புத்தகம்.

இந்தக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டேனே, பட்டினி கிடந்து ஒரு பழைய புத்தகம் வாங்கினேன் என்று, அதுதான் இந்தப் புத்தகம் ; ‘The Mahatma and the Ism ’ ( மாகாத்மாவும் அவரது கொள்கையும்) என்ற ஆங்கிலப் புத்தகம், தோழர்

இ. எம். எஸ். எழுதியது.

இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் தலைசிறந்த சிந்தனையாளர் களில் ஒருவர் இ. எம். எஸ்.

ஏலம்குளம் மனைக்கல் சங்கரன் நம்பூதிரிபாட் என்பது

அவரது முழுப் பெயர். கட்சித் தோழர்களாலும் மக்களாலும் அவர்

‘ இ. எம். எஸ் ’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

பெரும் நில உடைமை வர்க்கத்தைச் சேர்ந்த அவர் தனது இளம் வயதிலேயே தனது சொத்து முழுவதையும் ( இன்றைய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய்க்குமேல் ) கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொடுத்துவிட்டார். தனது பிராமண சாதி அடையாளமான பூணூலைக் கழற்றி வீசிவிட்டார்.

பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று தொடங்கியது அவரது பொது வாழ்க்கை. விரைவிலேயே காந்தியடிகளின் சீடராகி, காங்கிரஸ் கட்சியில் சேரந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். காங்கிரசுக்குள்ளேயே உருவான ‘ காங்கிரஸ் சோ­லிஸ்ட் கட்சி ’யிலும் சேர்ந்தார்.

விரைவிலேயே அவர் கம்யூனிஸ்ட் ஆனார். கட்சியின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். உழைக்கும் மக்களுக்கான போராட்ட வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை, சிறை வாழ்க்கை என்று அவரது வாழ்க்கை பயணித்தது.

பின்னர் 1957 ஆம் ஆண்டில் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆனார். பதவியேற்ற ஆறாவது நாளே, உழுபவருக்கே நிலத்தைச் சொந்தமாக்கும் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

‘ சமரமும் பரணமும் ’ ( போராட்டமும் ஆட்சியும் ) என்று அவரது வாழ்க்கை தொடர்ந்தது.

பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்திந்தியப் பொதுச் செயலாளராக 17 ஆண்டு காலத்துக்கு மேல் பொறுப்பேற்று வழி நடத்தினார்.

மாபெரும் சிந்தனையாளரான அவர் எழுதிக் குவித்தார். அரசியல், பொருளாதாரம், தத்துவம், சமூகம், பண்பாடு.... என்று அவர் தொடாத துறை இல்லை. அனைத்திலும் அவர் சாதனை படைத்தார்.

1998 ஆம் ஆண்டில் அவரது இறுதி மூச்சு அடங்கும் வரை அவரது பணி தொடர்ந்தது.

அந்த மேதையின் புத்தகத்தைப் பற்றி இப்போது பார்ப்போம்.

‘ மகாத்மாவும் அவரது கொள்கையும் ’ என்ற புத்தகத்தில் காந்தியடிகளின் தொடக்ககாலம் முதல் இறுதி வரை, ஏன், அவருக்குப் பிறகு நேர்ந்த நிகழ்ச்சிப் போக்கையும் கூட மிக ஆழமாகவும், விரிவாகவும், ஆதாரப்பூர்வமாகவும் இ. எம். எஸ் ஆய்வு செய்து தனது முடிவுகளை அளிக்கிறார்.

இந்தப் புத்தகம் முழுவதையும் நாம் சுருக்கிப் பார்த்தால், காந்தி அடிகளின் சிறப்புகளையும், குறைகளையும் கீழ்வருமாறு தொகுக்க முடியும் :

சிறப்புகள் :

1. காந்திஅடிகள் ( Gandhiji ) ஓர் உண்மையான லட்சியவாதி. தனது கடைசிமூச்சு வரை தனது லட்சியங்களில் அவர் உறுதியாக இருந்தார்.

உண்மை, அமைதிவழி ( அகிம்சை ) , வாழ்வின் உல்லாசங்களைத் துறப்பது போன்ற ஒழுக்க மதிப்புகளும், சுதந்திரம், ஜனநாயகம், சமாதானம் போன்ற அரசியல் லட்சியங்களும்,

தீண்டாமை ஒழிப்பு, பெண்களின் முன்னேற்றம், அனைத்து மதத்தினருக்கும் இடையிலான இணக்கம் போன்ற சமூகக் குறிக்கோள்களும்,

‡ அவரது வாழ்க்கையிலிருந்தும், போதனைகளில் இருந்தும் பிரிக்க முடியாதவை.

இந்த லட்சியங்கள் தான் அவரை எண்ணற்ற இயக்கங்களிலும் செயல்பாடுகளிலும் ஈடுபடுத்தியவை; இறுதியில் ஒரு துப்பாக்கிக் குண்டுக்குத் தனது உயிரையே அளிக்கச் செய்து அவரைத் தியாகி ஆக்கியவை.

2. அந்தக் காலகட்டத்தில் காந்தி அடிகளையும் மற்ற தலைவர்களையும் வேறுபடுத்திய மிக முக்கியமான ஓர் அம்சம் உள்ளது. அது என்னவென்றால், திரளான சாமானிய மக்களோடு, அவர்களது வாழ்க்கையோடு, அவர்களது பிரச்சினைகளோடு, அவர்களது உணர்ச்சிகளோடு, அவர்களது விருப்பங்களோடு இணைந்து, கலந்து, வாழ்ந்து செயல்பட்டவர் காந்தியடிகள் என்பதுதான்.

அவரைப் பொருத்தவரை அரசியல் என்பது உயர்மட்ட விவாதத்துக்கான வி­யம் அல்ல ; மக்கள் நலன் காப்பதற்கான சுயநலமற்ற சேவையே அரசியல் ; மக்கள் சம்பந்தப்பட்ட அனைத்தும் தனக்கும் சம்பந்தப்பட்டவை என்று அடையாளம் காண்பதே அரசியல்.

3. காந்தியடிகளுக்கு முன்பு வரையிலான இயக்கமானது, சமுதாயத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்களின் இயக்கமாக, கிராமப்புற ஏழை மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தது. பின்னர் அந்தக் கோடிக்கணக்கான ஏழை மக்கள் எழுச்சி பெற்று இயக்கத்தில் ஈடுபட்டதில் காந்தியடிகள்தான் ஒரு மாபெரும் பங்கு வகித்தார். சுதந்திரப் போராட்டமானது உண்மையிலேயே நாடு தழுவியதாக, அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கியதாக

எழுச்சி பெற்றது.

4. காந்தியடிகளின் லட்சியங்களும் இந்திய முதலாளித்துவ நலன்களும் பலமுறை முரண்பட்டன. குறிப்பாக, அவரது இறுதிக்காலத்தில் இந்த முரண்பாடு தீவிரமானது.

அதிலும் குறிப்பாக இந்து ‡ முஸ்லிம் மோதல் கலவரங்களும் காங்கிரஸ் தலைவர்களின் ஊழலும் அவரை வெறுப்பின் எல்லைக்கே கொண்டு சென்றன. “ கடவுள் என்னை அழைத்துக் கொள்ளட்டும் ” என்றும் “ காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட வேண்டும் ” என்றும் அவரைச் சொல்ல வைத்தன.

குறைகள் :

“ நரகத்துக்குச் செல்லும் பாதை, நல்ல எண்ணங்களாலேயே நிரப்பப்பட்டுள்ளது ” என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. அதைப் போல காந்தி அடிகளின் நோக்கங்கள் அநேகமாக நல்லவையாகவே இருந்தபோதும், அவரது நடைமுறை அநேகமாக இந்திய முதலாளி வர்க்க நலன்களைக் காப்பவையாகவே இருந்தன.

முதலாளி வர்க்கத்தின் கருத்தியல் பிரதிநிதியே காந்தி அடிகள். மேலும் அவரது பல கருத்துகள், நிலப்பிரபுத்துவ பிற்போக்குக் கருத்துகளாக இருந்தன.

இவை எவ்வாறு என்று பார்ப்போம்.

1. காந்தி அடிகள் தனது திட்டங் களிலும் கோரிக்கைகளிலும் உழைக்கும் வர்க்கத்தினரின் கோரிக்கைகளைச் சேர்த்துக் கொள்ள, தொடர்ச்சியாக மறுத்து வந்தார்.

குறிப்பாக, பெரும் நில உடைமையாளர்களின் நிலங்களை எடுத்து நிலமற்ற விவசாயத் தொழிலாளிகளுக்கு அளிப்பது, விவசாயிகளின் கந்துவட்டிக் கடன்களை ரத்து செய்வது, பெரும் நில உடைமையாளர்களுக்குக் குத்தகைதாரர்கள் தரவேண்டிய குத்தகை, வாரம் ஆகியவற்றைக் குறைப்பது போன்ற கோரிக்கைகளை அவர் ஏற்க மறுத்தார்.

2. ‘ தர்மகர்த்தா கொள்கை ’ என்ற ஒன்றை அவர் கூறி வந்தார். முதலாளிகளும் மற்ற செல்வந்தர்களும் தங்களது உடைமைகளை தங்களது தனி உடைமையாகக் கருதக் கூடாது ; ஒரு தர்மகர்த்தாவைப் போல இருந்து கொண்டு தொழிலாளர் களுக்கும் மற்ற ஏழை மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று கூறி, நடைமுறைச் சாத்தியமற்றதை அவர் வலியுறுத்தி வந்தார்.

தொழிலாளி வர்க்கப் போராட்டங்களை அவர் எதிர்த்தார். 1937 ஆம் ஆண்டில் அமைந்த காங்கிரஸ் அரசுகள், தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவிவிட்டபோது, அந்த அடக்குமுறையை நியாயப்படுத்தினார்.

3. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து 1946 ஆம் ஆண்டில் பம்பாயில் கப்பல்படைப் புரட்சி நடந்தது. அப்போதும், அதற்கு முன்பு சில சந்தர்ப்பங்களிலும் இந்திய சுதந்திரப் போராட்டமானது புரட்சிகர வழியில் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. இதை முழுமூச்சுடன் எதிர்த்தார் காந்தி அடிகள்.

4. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் கூட இடதுசாரிகளை முறியடிக்கவே அவர் செயல்பட்டார். இதைமீறி காங்கிரஸ்

கட்சியின் தலைவராக, இடதுசாரியான சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து காந்தி அடிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட “ பட்டாபி சீதாரமைய்யாவின் தோல்வி எனது தோல்வி ” என்று காந்திஅடிகள் அறிவித்தார். இதை அடுத்து சர்தார்பட்டேல், நேரு உள்ளிட்ட 12 தலைவர்கள் கட்சியின் செயற்குழுவில் இருந்து ராஜினாமா செய்தார்கள். போஸ் முடக்கப்பட்டார். பிறகு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். விரைவில் கட்சியிலிருந்தே விலகிவிட்டார்.

5. அமைதி வழி ( அகிம்சை ) என்பது தனக்கு ( கடவுள் நம்பிக்கை போன்ற ) உயிர் மூச்சான நம்பிக்கை என்றே காந்தியடிகள் கூறி வந்தார். தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும், மற்ற போராட்டங்களும் போர்க்குணம் அடைந்த போதெல்லாம் அதை உறுதியாக எதிர்த்தார்.

ஆனால் வன்முறையின் உச்சம் என்பது போர், யுத்தம். போயர் போர் உள்ளிட்ட ஏகாதிபத்தியப் போர்களில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு ஆள் எடுத்துக் கொடுப்பது உள்ளிட்ட உதவிகளைக் காந்தி அடிகள் செய்தார். காங்கிரஸ் அரசுகளின் போலிசின் வன்முறைத்

தாக்குதலை நியாயப்படுத்தினார்.

6 . “ உடலுறவினால் ஏற்படும் நோய்களையும், நுகர்வினால் ஏற்படும் நோய்களையும் குணமாக்க மருத்துவமனைகள் இல்லாவிட்டால், நமது மத்தியில் நுகர்வும்,உடலுறவுத்தீமையும்

குறைந்துவிடும். ரயில்வே, தந்தி, மருத்துவமனைகள், வழக்கறிஞர் தொழில், மருத்துவத் தொழில் மற்றும் இவை போன்றவை அனைத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் ” என்று காந்தி அடிகள் கூறினார். இவை உட்படப் பல பிற்போக்கான கருத்துகளை காந்தி அடிகள் வலியுறுத்தினார்.

‡ இதுதான் காந்தி அடிகளைப் பற்றி தோழர் இ. எம். எஸ். அளிக்கும் சித்திரம்.

இனி, இந்தப் புத்தகத்தின் சில பகுதிகளைச் சுருக்கிப் பார்ப்போம் :

“ ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் அல்லது வகுப்பின் நலனை மட்டும் அல்லாமல், தேசம் முழுவதன் நலனையும், தான் பாதுகாப்பதாக மகாத்மா காந்தி உண்மையாகவே நம்பியிருக்கலாம். ஆனால் வி­யம் என்னவென்றால், அவருடைய செயல்களின் உண்மையான விளைவுகள் என்ன என்பதுதான்.

எனினும் ஒரு மனிதரை, அவரது செயல்களின் விளைவுகளை மட்டும் வைத்து மதிப்பிடுவது சமநிலையான மதிப்பீடு ஆகாதுதான் ; அவரது நோக்கங்களும் முக்கியமானவையே. ஒருவரது நோக்கங்கள், வழிமுறைகள், விளைவுகள் ஆகிய அனைத்தையும் வைத்து அவரை மதிப்பிடுவதே சரியான முறையாக இருக்கும் ”

“ சுரண்டும் வர்க்கம் தனது அதிகாரத்தையும், சொத்தையும் தானாகவே விரும்பி விட்டுத் தராது ; சமூக மாற்றத்தை ஏற்காது. இத்தகைய சமூக மாற்றம் பற்றித் தீர்க்கதரிசிகள் கனவு காண்கிறார்கள் ; புரட்சியாளர்கள் போராடுகிறார்கள் ”

அடுத்து நாம் பார்க்கப் போவது, திராவிட இயக்கம் பற்றிய எனது பார்வையில் ஒரு பெரும்மாற்றத்தை ஏற்படுத்திய அருமையான புத்தகத்தைப் பற்றி.

( இன்னும் படிக்கலாம் )


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com