Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
மே 2009

ஈழம் மலரும் - வரலாறு பேசும்
எழில் இளங்கோவன்

பதினைந்தாம் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப் பட்டு, தமிழக அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கிவிட்டன. இங்கே இரண்டு அணிகள் எதிர் எதிர் நிலையில் நிற்கின்றன. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்குத் தி. மு. க. தலைமையேற்கிறது. பா. ம. க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு அ.தி.மு.க தலைமை தாங்குகிறது.

இவ்விரு அணிகளும் தேர்தலைச் சந்திக்க, மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகள் என்ன ?

‘சொன்னதைச் ( செய்தோம் ) செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, தன் ஆட்சியில் மக்களுக்குச் செய்த நலத்திட்டங்களுடன் மக்களைச் சந்திக்கிறது தி.மு.க.

‘மத்திய, மாநில நலத்திட்டங்கள், நதிநீர் பிரச்சினை, ஈழப்பிரச்சினை, இவைகளை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திப்போம்’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்கனவே அறிவித்து விட்டார். தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து நிற்கிறது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்.

அ.தி.மு.க தெளிவாகச் சொல்லிவிட்டது ‘சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வோம்’ ‡ என்று. ஆனால் அ.தி.மு.க அணிகள் என்ன சொல்கின்றன ?

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, பா. ம. க நிறுவனருக்காக அவரின் மகன் அன்புமணி சொல்கிறார். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதை வழிமொழிந்து கொண்டிருக்கின்றன. ஒரு படி மேலே சென்று, சேதுத் திட்டம் வருவதற்கு நானே காரணம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்ற ம.தி.மு.க வின் வைகோ, ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தருவேன் என்று சொல்லிக்கொண்டே, சேது சமுத்திரத் திட்டம் மாற்றுப் பாதையில் அமைய வேண்டும் என்று சொல்கிறார்.

சேதுத் திட்டம் அமையவேண்டும் என்பதில் பா.ம.க, கம்யூனிஸ்டுகள், மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என்பதில் ம.தி.மு.க, இல்லையில்லை திட்டத்தை அடியோடு ரத்து செய்யப்படும் என்பதில் அ.தி.மு.க இப்படி முரண்பாடு களின் மொத்த உருவமாகக் ‘ கபட நாடகத்தை ’ அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க அணி.

மக்கள் முன் வைக்கச் சரியான திட்டம் இல்லை, தெளிவான கொள்கை இல்லை, அதனால், இந்த அணியினர் கையில் எடுத்துள்ள ஒரே ஆயுதம் கருணாநிதி பதவி விலகவேண்டும், அவரைப் பதவி விலக்க வேண்டும் என்பதுதான்.

Vaiko - Jeyalalitha சரி ! எதற்காக அவரைப் பதவி விலக்க வேண்டும் ? ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் கருணாநிதியே காரணம். அவர் காங்கிரசுக்குத் துணைபோகிறார் ‡ இது அவர்கள் சொல்லும் விளக்கம் ! இங்கே ஈழப் பிரச்சனையை முன்னிலைப்படுத்த முயலும் இவர்களின் நிலைப்பாடு என்ன ?

இரண்டு மாதங்களுக்கு முன்னால், ஈழத் தமிழர்கள் சிங்கள இனவெறி இராஜபக்சேவின் இராணுவத்தால் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றத் தமிழக மக்களை எழுச்சிபெறச் செய்ய, இழக்கக் கூடாத தன் இன்றியமையாத உயிரை நெருப்புக்குக் கொடுத்தார் இனமான முத்துக்குமரன்.

செய்தி பரவியது. மாணவர்கள் வீதிக்கு வந்தார்கள். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கினார்கள். வணிகர்கள், மதங்களைக் கடந்து இஸ்லாமிய ‡ கிறித்துவத் தலைவர்கள் என்று தமிழக மக்களிடையே ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது முத்துக்குமரனின் வீர மரணம்.

இந்தத் தமிழ்தேசிய எழுச்சியை, ஈழ ஆதரவு எழுச்சியைப் பயன் படுத்திக் கலைஞரை அரசியல் ரீதியாக வீழ்த்த நெடுமாறன், வைகோ, ராமதாசு தா. பாண்டியன், வரதராஜன் போன்றோர் ஈழ ஆதரவு என்ற போர்வையில் தேர்தல் அரசியலைப் பயன் படுத்தினார்கள்.

இவர்களின் ஈழத்தமிழர் முகமூடியை அகற்ற ஒரே ஒரு செய்தியை இங்கு பார்க்கலாம்.

24 மணிநேரத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சரணடைய வேண்டும் என்று சொன்ன கையோடு, சிங்கள இனவெறிப் பவுத்த இட்லர் ராஜபக்சே ஈழத்தமிழர்களை முற்றாக அழிக்கும் முகமாகத் தொடர் குண்டுகள் வீசி ஈழத்தின் மக்களைக் கொன்று குவித்து, அதை முழுமையாக்கிவிட இராணுவத்தை முடுக்கி விட்ட சமயத்தில், இது தேர்தல் நேரம் என்பதைக் கூடத் தள்ளிவிட்டு, 23 ஆம் தேதி தமிழகத்தில் பொதுவேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் ‡ கலைஞர்.

இதில் கட்சி வேறுபாடுகள், மனமாச்சரியங்களைக் கடந்து, அனைத்துக் கட்சியினரும் இயக்கங்களும் ஒன்றாக ஒத்துழைக்க வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். கூடவே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கூறி, பிரதமருக்கும், சோனியாகாந்திக்கும் தந்திகள் அனுப்பித் தொலைபேசியிலும் பேசி, ஈழத்தில் போர்நிறுத்தம் உடனடியாக ஏற்படவேண்டி முழு முயற்சியும் எடுத்தார்.

இதை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன.

உணர்வுப் பூர்வமாக ஈழத்தில் போர்நிறுத்தம் வேண்டும் என்று கருதிய கட்சிகளும் சங்கங்களும் கலைஞருக்கு ஆதரவாக அணிவகுத்தனர்.

திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, புரட்சி பாரதம், சமத்துவ மக்கள் கட்சி, எம்.ஜி. ஆர் கழகம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், பல்வேறு அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்கள், வழக்கறிஞர்கள், திரைப்படத் துறையினர், திரையரங்கச் சங்கம், திருப்பூர் பின்னலாடை சங்கத்தினர், தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம், வணிக சங்கங்கள் என்று அனைத்துத் தரப்பு கட்சிகளும், சங்கங்களும், மக்களும் ஈழத்தில் போர்நிறுத்தம் வேண்டிக் கலைஞர் அறிவித்த பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக நின்றார்கள்.

ஆனால் ஜெயலலிதா சொல்கிறார்....

தமிழகத்தில் தி.மு.க அறிவித்த பொதுவேலை நிறுத்தம் சட்ட விரோதம். கருணாநிதியின் இந்த வேலை நிறுத்தம் கபட நாடகம்.

 சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இதை ஆதரிக்கப் போவதில்லை.

 இந்தப் பொது வேலை நிறுத்தம் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்குமா ?

 இலங்கைப் போர்ப்பகுதியில் இருந்து தமிழர்கள் வெளியேற்றம் தொடர்கிறது.

 இலங்கையில் மடிந்து கொண்டிருக்கும் தமிழர் களுக்கு இவ்வேலை நிறுத்தம் மேலும் பல இழப்புகளையும் இடைஞ்சல்களையும் தான் ஏற்படுத்தும்.

எப்படிக் கதை? அப்படியானால் இலண்டன், அமெரிக்கா, நார்வே, ஐரோப்பிய நாடுகளில், ஆஸ்திரேலியா விலும் தமிழர்கள் போராட்டம் நடத்துகிறார்களே... அதுவும் கபட நாடகமா ? ஈழத்தமிழர்களுக்கு மேலும் இன்னல் இழப்புகளை ஏற்படுத்துமா ?

ஜெயலலிதாவின் பின்னால் இருந்து கொண்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் ?

‘ இன்று பொது வேலை நிறுத்தம் நடத்தப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்தக் கபட நாடகத்தால் இலங்கைத் தமிழர்களையும் காப்பாற்ற முடியாது, தமிழக வாக்காளர் களையும் ஏமாற்ற முடியாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்பது உறுதியாகியிட்டது. வாக்காளர்களை ஏமாற்றும் கடைசி ஆயுதமாக இலங்கைப் பிரச்சனையை முதல்வர் பயன்படுத்துகிறார். இதையும் மீறித் தி.மு.க கூட்டணி தோற்பது உறுதி ’

‡ விட்டத்தில் மறைந்திருக்கும் பூனை அம்பலத்திற்கு வந்துவிட்டது.

ஈழத்தின் போர்நிறுத்தம் பற்றிப் பேசுவதாகக் காட்டிக் கொண்டு தி. மு.க தோற்பது உறுதி என்று கலைஞருக்கு எதிராக மட்டுமே இப்படிப்பேசும் வரதராஜன் சாயம் ஜெயலலிதாவின் கபட நாடகம் வாசனையில் அம்பலமாகிவிட்டது.

“ முதல்வர் கருணாநிதியின் வேலைநிறுத்த அறிவிப்புத் தமிழர்களை முட்டாள்கள் எனக் கருதிக் கொண்டு நடத்துகிற வஞ்சக ஏமாற்று வேலை. ம.தி. மு.க திட்டமிட்டபடி 23 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கலிலும், அதிமுக பொதுச்செயலளார் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களிலும் பங்கேற்கும் ”

- புரட்சிப் புயல் வைகோவின் புரட்டு வசனம் இது. தமிழர்களை முட்டாள்களாகக் கருதும் வைகோவிற்குத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதும், ஜெயாவின் கூட்டங்களில் பங்கேற்பதும் மட்டுமே முக்கியம். ஈழத்தமிழர் உயிரைக்காக்க போர்நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகூட இல்லை என்பது தெளிவாகிறது.

“ ஏப்ரல் 24 ஆம் தேதி கருப்புக் கொடி ஊர்வலம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்ததும், அதற்குப் போட்டியாக வேலை நிறுத்தம் என்று நள்ளிரவில் அவசர அவசரமாகக் கருணாநிதி அறிவிப்புச் செய்கிறார். இப்படி ஏட்டிக்குப் போட்டியாகச் செயல்படுவது ஈழத்தமிழர்களைக் காக்க உதவாது. சிதம்பரத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டு டெல்லி செல்லுங்கள் ; சோனியாவைச் சந்தித்துப் போரை நிறுத்துங்கள் என்று எச்சரிக்கை விடுக்கச் செய்து அதில் வெற்றிபெற்றுத் திரும்புங்கள். இது ஒன்றுதான் ஈழத்தமிழர்களைக் காக்கும். வேலைநிறுத்தம் காக்காது ”

‡ மருத்துவர் இராமதாசின் பொறுப்பற்ற பேச்சு இது. வேலை நிறுத்தம் காக்காது என்றால் இவர் அறிவித்த ஏப்பரல்

24 ஆம் தேதி கருப்புக் கொடி ஊர்வலம் மட்டும் காப்பாற்றிவிடுமா? டெல்லியில் மத்திய அமைச்சராக இருந்த மகன் அன்புமணியைத் துணைக்கு அழைத்துச் சென்று சோனியாவைச் சந்தித்து போரை நிறுத்த எச்சரிக்கை விடுக்கச் செய்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்றி இருக்காலாமே ! ஏன் காப்பாற்றவில்லை ? காங்கிரஸ் உறவைத் தி.மு.க. துண்டிக்க வேண்டும் என்று சொல்வதில் இருந்து, இவரின் சிந்தனை ஈழத்தில் போர்நிறுத்தம் அல்ல, தேர்தலில் அறுவடைதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

திராவிடர் கழகத் தலைவர் சொல்கிறார், “ ஈழப் போர் நிறுத்தத்தை வலியுறுத்திக் கட்சி மன மாச்சரியங்களைக் கடந்து அனைவரும் வரவேண்டும். தேர்தல் களம் வேறு ; ஈழத்தமிழர் பாதுகாப்புக் களம் வேறு ” - இங்கே இனம் இருக்கிறது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் சொல்கிறார் “ இரண்டாம் உலகப் போர் கூட காணாத அளவுக்கு ஒர் இனத்தையே அழிக்கின்றது இராஜபக்சே அரசு. கட்சிகள் கடந்து, சாதிமதம் பார்க்காமல், தமிழர்களாக, ஒரே குரலில் இப்பொது

வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வோம். இது சிங்கள வெறியர்களுக்குக் கண்டனம் . நாம் விடுகின்ற கண்ணீர் - ஆதரவு ” - இங்கே மானம் இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலைஞரின் அழைப்பை வலியுறுத்தி அனைவரையும் அழைத்திருக்கிறார் ‡ இங்கே இனமானம் ஒன்றிணைகிறது.

ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து அமெரிக்கா, இலண்டன், நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய, ஏன் உலகநாடுகளில் தமிழர்கள் நடத்திய போராட்டங்கள், இங்கே கலைஞர் தலைமையில் நடத்திய போராட்டங்கள் உலகநாடுகளிடையே ஓர் அசைவை ஏற்படுத்திவிட்டன.

இலங்கையில் போரை நிறுத்தி மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இராஜபக்சேவை வலியுறுத்தியதோடு, தன் வேதனையையும் தெரிவித்துள்ளார் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட்.

இலங்கை அரசின் நடவடிக்கை உலக நாடுகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இலங்கையில் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்கிறார் ஹிலாரி கிளின்டன்.

இலங்கை நிலவரம் குறித்துப் பேச ஐ.நா.வின் சிறப்புக் கூட்டம் 24. 04. 2009 அன்று கூட்டப்பட்டது. ஐ.நா.வின் சிறப்புத் தூதர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்.

இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருக்கிறார், ‘ இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் ’ என்று.

இவை எல்லாம் ஈழத்தமிழர்களுக்காக தமிழக மக்கள் ஒவ்வொரு கட்டத்திலும் நடத்திய பல்வேறு போராட்டங்களின் விளைவுகளினால் தான்.

அது மட்டுமல்ல, முதல்வர் பதவி ஏற்கும்போது ரகசிய காப்புப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார். அதன்படி முதல்வர் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசிவிட முடியாது. ஆனால் போராட்டங்களுக்கு அப்பாற்பட்டு முதல்வர் என்ற முறையில் ராஜ தந்திர உத்திகளின் மூலம் மத்திய அரசைத் தொடர்பு கொண்டு ஈழத்தமிழர்களுக்காக நடவடிக்கைகள் எடுத்திருப்பார் என்பதைச் சாதாரண அரசியல் வாதி கூட அறிவான்.

முதல்வர் கலைஞர் அவர்களின் உழைப்புக் கபட நாடகமா ? அல்லது இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ் திமுகவுக்கு தேர்தலில் சரியான பாடம் அளிக்கப்படும் என்று சொன்ன நெடுமாறனும், அவரது கூடாரத்தைச் சேர்ந்தவர்களின் தேர்தல் ஆதாயம் கபட நாடகமா ?

இப்பொழுது முதலில் தேவை தேர்தல் அல்ல ; ஈழத்தில் போர் நிறுத்தம். அதற்குக் கலைஞரின் கரத்தைத் தொடர்ந்து பலப்படுத்த வேண்டியது தமிழர்களின் கடமை. அங்கே ஈழம் மலரும் ; இங்கே வரலாறு பேசும் !நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com