Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
மார்ச் 2009

மகளிர் தினத்தையொட்டி மூன்று கேள்விகள்

மகளிர் தினத்தையயாட்டி மூன்று கேள்விகளை தோழர் பூங்குழலி (உதவி ஆசிரியர்,தென் செய்தி ), மரு.தமிழிசை சவுந்திரராஜன்(பொதுச்செயலாளர், தமிழ்நாடு பா.ஜ.க), பேரா.அரங்கமல்லிகா ஆகியோரிடம் கேட்கப்பட்டன. வினாக்களும் அவர்களின் விடைகளும் கீழே தரப்பட்பட்டுள்ளன.

1. மகளிர் தினம் என்பது பெண் விடுதலையை நோக்கியதா?

பூங்குழலி

Poonkuzhali மகளிர் தினம் என்பது பெண் விடுதலையின் முதல்படி எனலாம். இன்று மகளிர்தினம் என்பது மேற்கத்திய தினமாக, இன்னமும் சொன்னால் வணிக அடிப்படையில் முன்னெடுக்கப்படும் தினமாக இருக்கிறது. இதற்கு நடுவில் பெண் விடுதலை என்பதற்கு ஒரு குறியீடாகவே பயன்படுகிறது மகளிர் தினம்.

தமிழிசை சவுந்திரராஜன்

மகளிர் தினம் என்பது மட்டுமே விடுதலைக்கான தினம் என்று சொல்லமுடியாது. அந்த ஒரே நாள் மட்டும் விடுதலைக்கானது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த நாளில் கோலப்போட்டி, சமையல்போட்டி என்று போட்டிகளை வைத்துக்கொண்டிருந்தால் எப்படி விடுதலை கிடைக்கும். பெண்விடுதலை என்பது சமஉரிமை, மகிழ்ச்சியான மனநிலையில் வாழ்வது. அதுவும் ஒரு கட்டுப்பாட்டிற்குள். உதாரணமாகச் சொன்னால் அரைகுறையான ஆடைகளை அணிவது, நண்பர்கள் வீட்டுக்கு இரவு நேரத்திலும் கூட யார் துணையும் இல்லாமல் போவது என்பது பெண் உரிமை இல்லை. இது கலாச்சாரத்தைப் பாதிக்கும். பெண்விடுதலை என்பது நம் நாட்டைப் பொறுத்தவரையில் கட்டுப்பாடுடன் கூடிய உரிமை.அது இல்லை என்றால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் போது யார் பாதிக்கப்படுகிறார்கள். பெண்விடுதலை என்பது நல்ல கல்வியுடன் கூடிய அடிமைத்தனம் இல்லாத அன்பு. இதுதான் பெண்ணுரிமையைக் கொண்டு வரும்.

பேரா.அரங்கமல்லிகா

மகளிர்தினம் என்பது பெண் விடுதலையை நோக்கியது என்பதை விட, பெண் விடுதலைக்கான கோரிக்கைநாள் என்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் இன்று மகளிர்தினத்தை ஒரு கொண்டாட்டமான நாளாக ஆக்கிவிட்டார்கள். கொண்டாட்டம் என்பதற்கும், கோரிக்கை என்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. கொண்டாட்டம் என்றால் முழுச் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று கொண்டாடுவது. பாலியல் வன்கொடுமை, வன்முறை, அகப்புறச் சூழலில் அடிமைத்தனம் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கான எச்சரிக்கையைத்தான் கோரிக்கையாக மகளிர்தினத்தில் பெண்களுக்கே வைக்கவேண்டி இருக்கிறது.

2. கற்பு என்னும் சொல்லானது மறைமுகமாகப் பெண் அடிமைத்தனத்திற்கே அழைத்துச் செல்கிறது என்னும் கூற்று சரியா ?

பூங்குழலி

கற்பு என்னும் சொல் மறைமுகமாக அல்ல, நேரடியாகவே பெண் அடிமைத்தனத்திற்கு அழைத்துச் செல்கிறது. இதில் மறைமுகமாக என்று சொல்வது ஏமாற்று வேலை. வரலாறு மட்டுமில்லாமல் இலக்கியங்கள் உட்பட கற்பு என்ற சொல்லால் பெண்ணடிமைத்தனத்தைத்தான் நிலைநாட்டுகின்றன.

தமிழிசை சவுந்திரராஜன்

இல்லை. அதை நான் மறுக்கிறேன். நான் மருத்துவராக இருப்பதால் சொல்கிறேன். கர்ப்பிணிப் பெண்களை இடப்புறம் திரும்பிப் படுக்கச் சொல்வார்கள். அது சுகப்பிரசவத்திற்கு என்று. ஆனால் மருத்துவர்கள் சொல்வார்கள் இடது புறம் இதயம் இருக்கிறது. ஆகவே அது கூடாது என்று. இதைப்போலத்தான் சொல்வதுமட்டுமல்ல கட்டுப்பாடும் அவசியம். சிலர் கற்பு என்பது பற்றி வேறுவிதமாகச் சொல்கிறார்கள். அது பெண்ணடிமைத்தனத்திற்கு விடுதலை தராது. ஒரு பெண் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்குக் கற்பு என்பது பயன்படுகிறது. இது ஒரு கோட்பாடு. கற்பைப் பற்றி நிறையப் பேசுகிறார்கள். கற்பு ஆண்களுக்குக் கிடையாதா என்று. பாரதி சொல்கிறார் பெண்களைப் போல ஆண்களுக்கும் கற்பு உண்டென்று. ஆகவே ஆண்களுக்கும் கற்பு வேண்டும் என்று சொல்ல வேண்டும்.கற்பு என்பது பெண்ணடிமைத்தனத்தை உண்டு பண்ணாது, பாதுகாப்புத் தரும். கற்பு என்பதை ஆண்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

பேரா.அரங்கமல்லிகா

Poonkuzhali நிச்சயமாக! கற்பு என்ற சொல்லே அடிமைத்தனத்தின் கருத்தாக்கம் தான். இதற்கு அடுத்த கட்டம் கற்பு வேண்டாம் என்று சொல்வது. இது முற்போக்கு வட்டத்தில் கூட 60 விழுக்காட்டிற்கும் மேலாக முழுமை பெறவில்லை என்று சொல்லலாம்.குறிப்பாக மன அளவில் ஆணும் சரி பெண்ணும் சரி வளரவில்லை. திருமணம் என்று எடுத்துக் கொண்டால், அதற்கு முன்னால் ஒரு பெண் சுதந்திரமாக நண்பர்களிடம் பேசிப் பழகி இருந்தாலும், திருமணம் என்று வரும் போது அதைக் காரணம் காட்டி நிராகரிக்கும் குடும்பங்களில் அங்கே பெண் மனத்தளவில் பாதிக்கப்படுகிறாள்.அப்பொழுது ஒருவேளை கற்போடு நாம் இல்லையோ என்று கூட எண்ணத் தோன்றிவிடும். அதேசமயம் ஆண்கள்கூட அவர்கள் பாலியல் உணர்வுடையவர்களாக இருந்தாலும், தனக்கு வரும் மனைவி மிகச் சுத்தமாக இருக்கவேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். அவள் விதவையாக இருந்தாலும், கைவிடப்பட்டவளாக இருந்தாலும், வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தாலும் அது ஆண்கள் மனத்தை உறுத்தவே செய்கிறது.ஆகவே கற்பு என்ற பழைய சித்தாந்தம் மாறவில்லை. இன்னமும் கற்பு என்பது நிச்சயமாக அடிமைத்தனத்திற்கான ஒரு சொல்தான்.

3.பெண்விடுதலைக்கு எல்லா மதங்களும் தடையாகத்தான் இருக்கின்றன என்பது உண்மை தானே ?

பூங்குழலி

மதம் ஒரு குறியீடாக இருக்கிறது. மதம் அது சார்ந்த நம்பிக்கைகள் எல்லாமே ஆதிக்கத்தின் வெளிப்பாடு அல்லது குறியீடாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்து சாதி மத ஆதிக்கத்தின் அடையாளம் பெண் அடிமைத்தனம். ஆதிக்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மதத்திலும் சமத்துவம் இல்லை.பவுத்தம் மதமாக அல்லாமல் நெறிமுறைக் கோட்பாட்டில் இருந்த போது அங்கு சமத்துவம் இருந்தது. அது மதமாக மாறி ஆதிக்கத்தைக் கையில் எடுத்தபோது அங்கும் சமத்துவம் இல்லாமல் போயிற்று. ஆகவே அனைத்து மதங்களுமே பெண் விடுதலைக்குத் தடையாகத்தான் இருக்கின்றன.

தமிழிசை சவுந்திரராஜன்

பெண் விடுதலைக்கு மதம் தடையாக இருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். நாங்கள் மத நம்பிக்கை உள்ளவர்கள்.எந்த மதமாக இருந்தாலும் அந்தந்த மதக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கிருத்துவ மதத்தைப் பார்த்தால் அங்கே மேரிமாதாவைத் தனிப்பெரும் தெய்வமாக வைக்கிறார்கள்.இஸ்லாம் மதத்தில் நபிகள் நாயகம் நல்லதைத்தான் பேசுகிறார். ஆனால் பெண்கள் பர்தா அணிவதை நாங்கள் ஒப்புவது இல்லை. வேதகாலத்தில் ஆண்களும் பெண்களும் சமமாக இணையாக வாதம் செய்திருக்கிறார்கள்.எந்த மதமாக இருந்தாலும் மூலம் சரியாக இருக்கிறது.ஆனால் இடையில் வந்த இடைப்பட்ட மதவாதிகள்தான் அடிமைத்தனத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இந்து மதம் என்றால் பெண்களைத்தான் தெய்வங்களாகப் பெரிதும் நாம் பார்க்கலாம்.உதாரணத்திற்குச் சொன்னால் கிராமங்களில் காளி, அம்மன் சாமிகள் அதிகம். இந்த தெய்வங்கள் பெண்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது. இந்து மதம் பெண்களுக்கு ஊக்கம் தருகிறது.எல்லா மதமும் அப்படித்தான். இன்னொரு மதத்தைப் பரிகசிப்பது தவறு.

இந்துமதத்தில் பெண்கள் ஒன்பது பெண் தெய்வங்களை வணங்குவதாக நவராத்திரி கொண்டாடுகிறார்கள்.ஆனால் ஆண்களுக்கு ஒரு ராத்திரி ‡ அதுவும் சிவராத்திரி அவ்வளவுதான். ஆகவே, இடைப்பட்ட மதவாதிகளைப் பார்க்காமல் மூலத்தைப் பார்த்தால் பெண்களுக்கு முன்னுரிமையே தருகிறது. பெண் விடுதலைக்கு மதம் தடையாக இல்லை.

பேரா.அரங்கமல்லிகா

உண்மை! மதம் பெண்விடுதலைக்கு முற்றிலும் தடையாகத் தான் இருக்கின்றது. அது எந்த மதமாக இருந்தாலும் சரி. முக்கியமாக மதம் சாதி, சடங்குபோன்ற கட்டுப்பாடுகளால் பெண்களை மிகவும் அடிமைப்படுத்துகிறது. கிருத்துவத்தில் ஆதாம் ஏவாள் முன் பின் என்றும், இஸ்லாமில் பர்தா அணிதல் போன்றவையும் இருக்கத்தானே செய்கிறது.மதம் பெண்களை இரண்டாம் நிலையிலேயே இருத்தி வைக்கிறது. அங்கே பெண் விடுதலை அற்றுப்போய் விடுகிறது. அதேசமயம் சில விசயத்தில் மட்டும் பெண்கள் சுதந்திரம் கொஞ்சம் இருக்கிறது.உடை உடுத்துவதில், கல்வியில், வேலை வாய்ப்புகளில் சுதந்திரம் இருக்கிறது. என்றாலும் அதுவல்ல முழுச்சுதந்திரம். மனஅளவில் சமூகப் பொறுப்புணர்ந்து பெறும் விடுதலை பெண்களுக்கு இல்லை.அதற்குப் பெரும் தடையாக இருப்பது மதம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com