Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
மார்ச் 2009

என்னைக் கவர்ந்த புத்தகங்கள் -3 : இரா.ஜவஹர்
லெனின் எழுதிய ‘செய்ய வேண்டியது என்ன?’

Nedumaran “தம்பிகளா, காம்ரேட் ‘எலின்’ என்ன சொன்னாரு ?” கரகரத்த, அழுத்தமான அந்தக் குரல் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது கூட எனது காதில் ஒலிக்கிறது ! இரயில்வேத் தொழிலாளியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆண்டி என்ற அந்தத் தோழருக்கு அப்போதே எழுபது வயது இருக்கும். முறுக்கிவிட்ட நரைத்த மீசை. உறுதியான உடற்கட்டு. கம்பீரமான நடை. லெனின், மாரக்ஸ், கம்யூனிசம்... என்றெல்லாம் நானும் என் நண்பர்களும் காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருக்கும் போது திடீரென்று அவர் குரல் கேட்கும் : “தம்பிகளா, காம்ரேட் ‘எலின்’ என்ன சொன்னாரு ?” அவருக்கு ‘லெனின்’ என்று சொல்ல வராது ‘எலின்’ என்றுதான் சொல்வார்.

உடனே நாங்கள், “எலின் என்ன சொன்னாருன்னா...” என்று கேலிசெய்து கொஞ்சநேரம் விளையாடுவோம். அவரும் சிரித்துக் கொண்டே கேட்பார். பிறகு அந்த 70 வயதின் அனுபவமும், இருபது வயதுகளின் படிப்பும் பரிமாறிக் கொள்ளப்படும். மதுரையில், தென்னக ரயில்வே தொழிலாளர் சங்க அலுவலகத்தில்தான் இதுபோன்ற விவாதங்களை அப்போது நடத்துவோம். மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களான தோழர்கள் ராஜாராம், பூமிநாதன், கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், நான் ஆகிய ஐவரும் இணைந்து படிப்போம். விவாதிப்போம். செயல்படுவோம். எங்களை ‘ஒத்தப்பட்டி பொலிட்பீரோ மெம்பர்கள்’ என்று கட்சித்தலைவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிடுவார்கள் !

நாங்கள் கற்ற தத்துவம், அரசியல், பொருளாதாரம், மற்றும் எல்லாமே லெனின் வழியாகத்தான் தொடங்கின. குறிப்பாக லெனின் எழுதிய ‘மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும், மூன்று உள்ளடக்கக் கூறுகளும்’ , ‘காரல்மாரக்ஸ்’ , ‘ஃபிரெடரிக் எங்கெல்ஸ்’ , ஆகிய மூன்று கட்டுரைகள் அடங்கிய சிறு புத்தகத்தைப் படித்துவிட்டு, வரிவரியாக இரவு பகலாகப் பல நாட்கள் விவாதித்திருக்கிறோம். எனினும் கட்சி என்ற அமைப்பின் முக்கியத்துவம் அப்போது எங்களுக்குத் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நடைமுறை வேலைகளில் ஈடுபட ஈடுபடத்தான் அதன் முக்கியத்துவம் தெரியவந்தது.

இது தொடர்பாகப் படித்ததுதான் லெனினின் புகழ்பெற்ற புத்தகமான ‘செய்ய வேண்டியது என்ன ?’ லெனின் ! இது அவருடைய புனைபெயர்.சென்சார் அதிகாரிகள், போலீஸ் உளவாளிகள் ஆகியோரைச் சமாளிப்பதற்காக அவர் தனக்கு வைத்துக் கொண்ட 160க்கும் மேற்பட்ட புனைபெயர்களில் ஒன்றுதான் ‘லெனின்’ . அவரது இயற்பெயர் ‘விளாதிமிர் இல்யீச் உல்யானோவ்’ என்பதுதான். எனினும் லெனின் என்ற பெயரே நிலைத்துவிட்டது. உலகின் முதல் சோசலிசப் புரட்சிக்கு, ரஷ்யப் புரட்சிக்கு தலைமை தாங்கிய புரட்சிகரத் தலைவர் லெனின்.

வறுமை, வேலையின்மை போன்ற சமூகக் கொடுமைகளுக்கு முடிவுகட்டி, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற இனிய சோ­லிசச் சமுதாயத்தை முதல் முறையாக உருவாக்கிக் காட்டியவர் லெனின். ரஷ்யராகப் பிறந்தும், ரஷ்யப் பேரினவாதத்தை முறியடித்து, அனைத்துக் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சம உரிமை அளித்தவர் லெனின். அன்றைய இந்தியா உள்ளிட்ட அடிமை நாடுகளின் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தும், ஏகாதிபத்தியங்களை எதிர்த்தும் தொடர்ச்சியாகப் போராடியவர் லெனின்.

உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வுக்காக உலகக் கம்யூனிச இயக்கத்தை உருவாக்கி வழிகாட்டியவர் லெனின். “மார்க்சியத்தில் நிர்ணயகரமானது எது ? அதன் புரட்சிகர இயக்கவியல்தான்” என்றும், “வறட்டுத்தனம் இல்லாத நெகிழ்வுத்தன்மை அவசியம்” என்றும் அறிவுறுத்தி அதன்படி மார்க்சியத்தை ஆக்கப்பூர்வமாக வளர்த்து, மகத்தான பங்களிப்புகளைச் செய்த மாமேதை லெனின். இத்தகைய லெனினின் புகழ்பெற்ற புத்தகம்தான் ‘செய்ய வேண்டியது என்ன ?’

லெனின், இந்தப் புத்தகத்தை 1902 ம் ஆண்டு எழுதி முடித்தார். அன்றைய ரஷ்யா, ஜார் மன்னனின் ( ரஷ்யாவின் பேரரசர்கள் ‘ஜார்’ என்று அழைக்கப்பட்டார்கள்) கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருந்தது. நாடாளுமன்றம், பத்திரிகைச் சுதந்திரம், சங்கம் சேரும் சுதந்திரம் போன்ற குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள் கூட அன்று அங்கு இல்லை. “இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்” என்று இந்த நிலையைத்தான் பாரதியார் வருணித்தார்.

ஜார் ஆட்சியை எதிர்த்துப், பல்வேறு குழுக்கள் போராடி வந்தன. குறிப்பாக ‘நரோத்னிக்குகள்’ என்ற இரகசிய அமைப்பினர் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் தீவிரமாகப் போராடினார்கள். எனினும் அவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டார்கள். விரைவாகவே இந்த இயக்கத்தை அரசு அழித்தது. இதை அடுத்து பல மார்க்சியக் குழுக்கள் உருவாயின. எனினும் விரைவிலேயே மார்க்சியத்தைத் திரித்துக்கூறும் திருத்தல்வாதமும், பொருளாதார நலன்களுக்காக மட்டும் போராடினால் போதும் என்று கூறும் பொருளாதாரவாதமும் பரவின.

இத்தகைய போக்குகளை முறியடித்து, ஒரு புரட்சிகரமான மார்க்சியக் கட்சியைக் கட்டுவதற்காகத்தான் ‘செய்ய வேண்டியது என்ன ?’ என்ற புத்தகத்தை லெனின் எழுதினார். செய்ய வேண்டியது என்ன ?

1. மார்க்சியத்தைத் திருத்துவதாகக் கூறிக்கொண்டு, வர்க்கப் போராட்டத்துக்குப் பதிலாக, வர்க்க சமரசத்தை முன்வைக்கும் திருத்தல்வாதத்திற்கு முடிவுகட்ட வேண்டும்.

2. புரட்சிகர, மார்க்சிய சித்தாந்தத்தின் தேவையை மறுக்கும் போக்குக்கும், புரட்சிகர இயக்கத்தை நடத்துவதற்குப் பதிலாகத் தொடக்கநிலை நடைமுறைகளை மட்டுமே மேற்கொள்ளும் போக்குக்கும் முடிவுகட்ட வேண்டும்.

3. பொருளாதார நலன்களுக்காக மட்டும் போராடினால் போதும் என்று கூறும், பொருளாதார வாதத்துக்கும், தொழிற்சங்க வாதத்துக்கும் முடிவுகட்ட வேண்டும்.

4. இயக்கத் தலைமையானது, திட்டமிட்ட இயக்கத்தைப் புறக்கணித்து, தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களின் பின்னால் செல்லக்கூடிய வால்பிடிக்கும் வாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்.

5. புரட்சியாளர்களைக் கொண்ட போர்க்குணமிக்க, நாடு முழுவதும் ஒன்றுபட்ட, கட்டுப்பாடான கட்சியைக் கட்ட வேண்டிய தேவையை மறுத்து, சிதறிக் கிடக்கும் குழுக்களே போதும் என்ற வாதங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

6. கட்டிடம் கட்டுவதற்கு சாரம்கட்டுவது கட்டாயத் தேவையாக இருப்பதைப் போல, கட்சியைக் கட்டுவதற்குக் கட்சியின் செய்தித்தாள் கட்டாயத் தேவை என்பதை மறுக்கும் போக்குக்கு முடிவுகட்ட வேண்டும்.

7. ரஷ்ய சோசலிச ஜனநாயக இயக்க வரலாற்றின் மூன்றாவது கட்டமான இன்றைய நிலையில் இத்தகைய தவறான போக்குகள் ஏற்பட்டுள்ளன. எனவே, செய்ய வேண்டியது என்ன என்ற கேள்விக்குச் சுருக்கமான பதில் இதுதான் : “மூன்றாவது கட்டத்துக்கு முடிவுகட்டுக”

இதுதான் இந்தப் புத்தகத்தின் சுருக்கம். ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள் கூட இல்லாத, கொடுங்கோல் மன்னராட்சி நடந்த சூழலில் என்ன செய்ய வேண்டும், கட்சி அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று அவர் இதில் கூறியுள்ளார்.

அவர் இதில் கூறியுள்ளவற்றை முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள் உள்ள, ‘நாடாளுமன்ற ஆட்சி’ நடக்கிற நாடுகளில், வரிக்கு வரி, எந்திரகதியாகச் செயல்படுத்த முடியாது, கூடாது என்பது உண்மைதான்.

எனினும், இதன் சாராம்சம், அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக்கூடியதே என்பது அதைவிட உண்மையாகும்.

இப்போது, இந்தப் புத்தகத்தின் சில பகுதிகளின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

( ஒரு சிறு விளக்கம் : இந்தப் புத்தகத்தில் Social – Democracy, Social – Democratic Party என்ற சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் சோஸலிச ஜனநாயகம் அல்லது சமூக ஜனநாயகம் என்று சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் சோசலிசம் அல்லது கம்யூனிஸம் என்பதற்குப் பதிலாக இந்தச் சொற்கள் பயன்படுத்தப்பட்டன )

“தொழிலாளர்களுக்கு சோ­லிச ஜனநாயக உணர்வு என்பது தானாகவே ஏற்பட்டுவிடாது. இந்த உணர்வை வெளியில் இருந்து கொண்டு வந்து அவர்களிடம் சேர்க்க வேண்டும்” “அரசியல் கல்வியில் இடம்பெற வேண்டியவை எவை ? ஒடுக்கு முறையானது பல்வேறு வர்க்கங்களை எந்த அளவிற்குப் பாதிக்கிறது, வாழ்க்கையின் பல்வேறுபட்ட தளங்களை ‡ அதாவது தொழில், குடிமை ( சிவில் ), தனிப்பட்டவை, குடும்பம், மதம், அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் இது எவ்வாறு வெளிப்படுகிறது என்பவை அனைத்துமே விளக்கப்பட வேண்டும். அரசியல் உணர்வு அதன் அனைத்து அம்சங்களிலும் வளர்க்கப்பட வேண்டும்.”

“பகுதியை முழுமைக்குக் கீழ்ப்படுத்துவது போல, சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை, சுதந்திரத்திற்கும் சோ­லிசத்திற்குமான புரட்சிகரப் போராட்டத்துக்குக் கீழ்ப்படுத்த வேண்டும்”. “சர்வாதிகார ரஷ்யாவைப் பொறுத்தவரை புரட்சிகர நடவடிக்கைகளை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள்தான் கட்சியில் முதன்மையாக இடம்பெற வேண்டும்”.

“( கட்சியினுடைய ) செய்தித்தாள் என்பது ஒரு கூட்டுப் பிரச்சாரகர் ; கூட்டுக் கிளர்ச்சியாளர். அது மட்டுமல்ல ; கூட்டு அமைப்பாளரும் கூட”.

“நமது அன்றாடப் பணிகளை நாம் எப்போதுமே செய்து வர வேண்டும். ஒவ்வொரு நிலைமையையும் சந்திப்பதற்கு, எப்போதுமே தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால், நிலைமை எப்போது எப்படி மாறும் என்பதை முன்கூட்டியே கண்டுகொள்வது அனேகமாக இயலாது”.

அடுத்து நாம் பார்க்கப் போவது இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் மகத்தான சிந்தனையாளர்களில் ஒருவரும், இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் முதலமைச்சருமான தோழரின் புத்தகத்தைப் பற்றி.

இன்னும் படிக்கலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com