Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜூன் 2009

சர்வதேச சமூகத்தால் மட்டுமே முடியும்
- தொல்.திருமாவளவன்

ஈழத்தின் இன அழிப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு தொல். திருமாவளவன் அவர்களிடம், ஈழப் பிரச்சினையின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து ஒரு நேர்காணல்.
- இரா. உமா

# தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று முதலில் கூறிய, புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே. பத்மநாதன், இப்போது அவர் உயிருடன் இல்லை என்று கூறியிருக்கிறார். உங்களுக்குக் கிடைத்த தகவல் என்ன ? உண்மை என்ன ?

எமக்குக் கிடைத்த தகவலின்படி, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார். பாதுகாப்பாக இருக்கிறார். அவர் நலமுடன் இருக்கும் செய்தியைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் திரு.பத்மநாதன் அவர்கள் அனைத்துலகுக்கும் அறிவித்தார். ஆனால் இப்பொழுது அவர் இவ்வாறு மறுதலித்துச் சொல்வதற்கு என்ன நெருக்கடி அல்லது என்ன பின்னணி என்பது தெரியவில்லை. ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் நலமுடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறார் என்பதில் உறுதியுடன் இருக்கிறோம்.

# ஈழத்தில் மிச்சப்பட்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்ற நீங்கள் என்ன முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறீர்கள் ?

அங்கிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்ற இனி சர்வதேசச் சமூகத்தால் மட்டுமே முடியும். மே 26ஆம் தேதி கூடிய ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், தமிழர்களைப் பாதுகாக்க உதவும் தீர்மானங்களும், முடிவுகளும் எடுக்கப்படும் என்று நாங்கள பெரிதும் நம்பினோம். இந்திய அரசு இலங்கை அரசுக்குத் தொடர்ந்து துணையாக இருக்க முயற்சித்து வருகிறது. கடந்த காலங்களில் எப்படி உதவிகரமாக இருந்து வந்ததோ அதேபோலத்தான் இப்போதும் இந்தியா அவர்களுக்கு உறுதுணையாகவே இருக்கிறது. குறிப்பாக மே 26 ஆம் தேதி கூடிய ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை எதிர்த்துச், சிங்கள அரசின் ஆதரவான நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. எனவே இந்திய அரசை நம்ப முடியாது. தமிழினத்திற்கு எதிரான நிலையை எடுத்திருக்கும் இந்திய அரசை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்பொழுதும் ஐ. நா. மனித உரிமைப் பேரவை மனிதநேய அடிப்படையில் முன்னெடுக்கிற முயற்சிகள்தான் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறோம்.

# எஞ்சியிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றுவதில் மாநில அரசின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?

Thol. Thirumavalavan மாநில அரசு, வெளிவிவகாரத் துறையின் செயல்பாட்டில் தலையிட முடியாது. எந்த முடிவும் எடுக்க முடியாது. இது உலகறிந்த உண்மை. தி.மு.க. அரசைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதில் அக்கறையுள்ள அரசு என்பதை நேர்மையாகச் சிந்திக்கிற ஒவ்வொருவரும் உணருவார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈழத்தமிழருக்காக கடந்த காலங்களில் பல்வேறு அடக்குமுறைகளையும், ஒடுக்கு முறைகளையும், அவதூறுகளையும் சந்தித்திருக்கிறது. இந்த முறை தமிழீழ மக்களையும், போராளிகளையும் சிங்கள இனவெறிப் போரில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் உண்மையான அக்கறையோடு ஈடுபட்டார். ஆனால் நம்முடைய எதிர் பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற வகையில் இந்திய அரசின் அணுகுமுறைகள் இல்லை என்பதை நாம் மறுத்து விட முடியாது. இந்திய அரசின் அணுகுமுறைகளை, வெளிவிவகாரம் தொடர்பான கொள்கைகளை, நிலைப்பாடுகளை மாற்றக்கூடிய வலிமை எந்தவொரு மாநில அரசுக்கும் இல்லை. ஆகவே, தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பயனற்றுப் போய்விட்டன. இந்திய அரசு சிங்கள அரசுக்குப் பல்வேறு வகைகளில் துணை புரிந்து, இன்றைக்கு அந்தப் போராட்டம் வெகுவாக நசுக்கப்பட்டுவிட்டது என்பதை நாம் மறுக்க முடியாது. இந்திய அரசின் நிலைப்பாடுகளை மாற்றக்கூடிய வலிமை, நாடாளுமன்ற அவையிலே நாம் பெறுகின்ற வலிமையைப் பொறுத்தது.

தமிழகத்திலிருந்து 40 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாம் கடந்த ஐந்தாண்டு காலத்தில் போயிருந்தோம் என்றாலும்கூட, கடைசி ஐந்தாண்டுகால ஆட்சியும் நிறைவுற்ற நிலையில் இந்தப் போர் உக்கிரமடைந்து வந்தது. ஆகவே, இந்திய அரசை நிர்வகித்த காங்கிரஸ் கட்சியினர் மாநில் அரசின் தயவு இனி தேவையில்லை என்ற மன நிலையில் இருந்த நேரம். ஆனால் காங்கிரசின் தயவு தி.மு.க அரசுக்குத் தேவை என்கிற ஒரு நெருக்கடி இருந்த நேரம். இப்படிப்பட்ட சூழலில், காங்கிரசைப் பகைத்துக் கொண்டு தி.மு.க. வெளியேறியிருந்தால் தி.மு.க. ஆட்சியை இழந்திருக்குமே தவிரப் போரை நிறுத்தியிருக்க முடியாது. ஆகவே, நட்புறவைப் பயன்படுத்தி, முடிந்த வரையில் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் தான் தி.மு.க. காங்கிரசோடு நெருக்கமாக இருந்தது என்பதை நாம் உணர்வோம். எவராலும் காப்பாற்றமுடியாத ஒரு நிலை தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது. இந்தியா மட்டுமில்லாமல் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற பல நாடுகள், மற்றும் மலேசியா, அரபு நாடுகள் அனைத்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவியாக இருந்திருக்கின்றன. ஆகவேதான், உலகநாடுகள் மனிதாபிமான அடிப்படையில் கூட, ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. நாம் அதைத்தான் எதிர்பார்த்தோம். இந்தியா செய்யவில்லை என்றாலும் கூட, அமெரிக்கா செய்யாதா, பிரிட்டன் செய்யாதா, நார்வே மீண்டும் தலையிடாதா என்றெல்லாம் வெகுவாக எதிர்பார்த்தோம். ஆனால் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்து, விடுதலைப்புலிகளின் முன்னணித் தளபதிகளை எல்லாம் பலியாக்கியிருக்கிற இந்தச் சிங்கள இனவெறிப்போரை நிறுத்துவதற்கு எந்த நாடும் முன்வரவில்லை என்பது தான் வேதனைக்குரியது. உலகெங்கும் 10 கோடித் தமிழர்கள் இருந்தும் எமது தமிழ்ச் சொந்தங்களைப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டதே என்கிற வேதனையும், வலியும் எம்மை வாட்டிக்கொண்டுள்ளது.

# இப்பொழுது நீங்கள் தொடங்கியுள்ள ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகள் குறித்துச் சொல்லுங்கள்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் உருவாக்கப் பட்டுள்ளது. திராவிட இயக்கத்தமிழர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு அமைப்புகளும் திராவிடர் கழகத்தோடு இணைந்து உருவாக்கியதுதான் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம். இதில், திரு பொன்குமார் தலைமையிலான தொழிலாளர் விவசாயிகள் கட்சி, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், கவிஞர் மு.மேத்தா அவரகளின் தமிழ்க் கவிஞர் மன்றம் ஆகிய அமைப்புகளும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளன. இந்த இயக்கத்தின் நோக்கம், சிங்கள இனவெறியன் இராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி அவனைப் போர்க்குற்றவாளியாகத் தண்டிக்க வேண்டும், அதற்கான முன்முயற்சிகளைச் சர்வதேச அளவில் முன்னெடுக்க வேண்டும்; சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழர்களை இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவித்து, அவரவர் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யும் ஏற்பாடுகளைச் சர்வதேச சமூகம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவது ; உதவி செய்ய முன்வருகிற நாடுகள், சிங்கள இனவெறி அரசின் மூலம் அதைச் செய்யாமல் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் மூலம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்வது ; தமிழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களை, அவர்கள் விருப்ப மில்லாமல், வலுக்காட்டாயமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கும் முயற்சிகளை இந்தியா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டால் அதைத் தடுத்து நிறுத்தி, அவர்களுக்குள்ள உரிமைகளையும், நலன்களையும் பாதுகாத்தல் போன்ற அடிப்படை நோக்கங்களை முன்வைத்து இந்த இயக்கம் சர்வதேச அளவில் ஆதரவினைத் திரட்டிப் போராடுவது எனத் திட்டமிட்டுள்ளது.

# தனிஈழம் என்றவர்கள் இப்போது அதிகாரப் பகிர்வில் வந்து நிற்கின்றனர். இந்நிலையில் தனிஈழமோ, அதிகாரப்பகிர்வோ யாரிடம் அளிக்கப்படும் ?

அந்தக் கோரிக்கையே தவறானது. ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சொல்லப்போனால், இறுதிப்போர் என்று சொல்லப்படுகின்ற நான்காவது ஈழப்போரில் வீரச்சாவடைந்திருக்கிற மக்களையும், களப்பலியான போராளிகளையும் சேர்த்தால் ஏறத்தாழ இரண்டுலட்சம் பேர் இந்த விடுதலைப் போரில் இறந்திருக்கின்றனர்.

இவ்வளவு பெரிய இழப்பிற்குப் பிறகும், அனைத்து உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து, தேசம்தோறும் ஒரு தமிழனாகச் சிதறி, தமிழ்ச் சமூகத்தின் அடையாளங்கள் சிதைந்துகிடக்கின்ற வேளையில், மறுபடியும் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலிருந்து, அதே கட்டமைப்பிலிருந்து வாழ்வைத் தொடங்க வேண்டும் என்று முன்வைக்கும் கோரிக்கை ஜனநாயகமான கோரிக்கை அல்ல. ஆகவே தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவரீதியாகப் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் கூட, உலகநாடுகள் ஜனநாயக அடிப்படையிலே இதை அணுக வேண்டும். சிங்கள அரசை வற்புறுத்தி தமிழீழத்தை மீட்டுத்தர வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகத்திற்குச் செய்கின்ற மரியாதையாக, தமிழீழ மக்களின் தாகத்தைத் தணிக்கிற ஒரே செயலாக தனிஈழம் மட்டுமே அமையும். அதை விடுத்து, சமஉரிமை, சமஅந்தஸ்து போன்ற கோரிக்கைகள் நியாயமானவை அல்ல. எனவே சர்வதேச சமூகம் சிங்கள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழீழம் அமைவதற்குத் துணைநிற்க வேண்டும்.

# ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் முயற்சிகளுக்குத் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் ஆதரவினைக் கேட்பீர்களா ?

தமிழக அரசின் ஆதரவு இதற்கு மிகவும் இன்றியமை யாதது. தமிழக அரசின் மூலமாக இந்திய அரசின் ஆதரவையும் நாம் பெற்றுத்தான் தீரவேண்டும். அத்துடன், சர்வதேச சமூகத்தின், குறிப்பாகப் புலம்பெயர்ந்த தமிழ்ச் சொந்தங்களின் ஆதரவும் தேவை. எனவே கலைஞர் உள்ளிட்ட அனைவரின் ஆதரவையும் நாம் நிச்சயம் பெறக்கூடும்.

# தமிழர்களை உடனடியாக அவர்கள் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்திய அரசு அதைவிடுத்து ராஜீவ் கொலை வழக்கை விரைந்து முடிப்பதில்தான் அதிக அக்கறை காட்டிவருகிறது. அதைப் பற்றி...

இது தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் கூட்டணித் தலைவர் சோனியாகாந்தி இருவரும், பரூக் அப்துல்லா அவர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தார்கள். தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக, இந்திய அரசு முதல்கட்டமாக 500 கோடி ரூபாயைச் சிங்கள அரசுக்கு வழங்க முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தனர். இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் தருவதற்கு இந்திய அரசு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், நீங்கள் குறிப்பிட்டதைப் போல ராஜீவ் கொலை வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் என்ற நோக்கில்தான் மிகத் தீவிரமாக அதிகாரிகளும், அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 6 மாதகாலமாகத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து போராடியும், 17 உயிர்களைப் பலிகொடுத்தும் கூட அசைந்து கொடுக்காத இந்திய அரசு, இன்றைக்குச் சிங்கள அரசின் அறிவிப்பை ஏற்று, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அனைவருமே உயிருடன் இல்லை என்ற அறிவிப்பை ஏற்று வேகவேகமாக கொழும்புக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதும், பிரபாகரனின் இறப்புச் சான்றிதழைக் கேட்பதும் நம்முடைய வலியை, வேதனையை இன்னும் அதிகப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. என்றாலும், அவர்களை விமர்சிப்பதோ, எதிர்த்து நிற்பதோ எஞ்சியுள்ள தமிழர்களின் மறுவாழ்வினைச் சீரமைக்கும் முக்கியமான பணிக்கு உதவாது. எனவே அங்கு மிச்சப்பட்டிருக்கின்ற தமிழர்களின் மறுவாழ்வுக்குரிய நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் விரைந்து எடுக்க வலியுறுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் ஈடுபடும்.

# தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் அனைத்து இன மக்களையும் குடியமர்த்தினால்தான், அவர்கள் ஒற்றுமையுடன் வாழ வழி பிறக்கும் என்று ஜாதிக யஹல உறுமய போன்ற சிங்களக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது சிங்கள குடியேற்றத்திற்கான முன்னோட்டமாகத் தெரிகிறது. இது தடுக்கப்படுமா ?

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்களைக் கட்டாயமாகக் குடியமர்த்துவார்கள் என்பதில் ஐயமில்லை. வடக்கு மாகாணத்தில் ஏற்கனவே ஏராளமான சிங்களர்களை அவர்கள் குடியேற்றிவிட்டார்கள். வன்னிப் பகுதியிலேயும் அப்படி ஒரு நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அங்கே பெளத்த பிக்குகள் ஒன்றுகூடி, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கெல்லாம், சிங்களப் பெயர்களை வைப்பது. அதிலும் குறிப்பாகச் சிங்கள இராணுவ அதிகாரிகளின் பெயர்களை வைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றியிருக் கிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்துகின்ற முயற்சிகளில் தமிழக அரசும், இந்திய அரசும் ஈடுபடவேண்டும். ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காகவாவது இந்திய அரசு தீவிரம் காட்டினால், இத்தகைய சிங்களக் குடியேற்ற முயற்சிகளைத் தடுக்க முடியும்.

# இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் தொடர்ந்து செயல்படுவீர்களா ? இல்லை வெளியேறிவிட்டீர்களா ?

இலங்கைத்தமிழர் பதுகாப்பு இயக்கத்தை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு மகத்தானது என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து, தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிற நாள்வரையில், அதில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளோம். தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்தநாள், நான் இலங்கைத் தமிழர் பதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இணைந்து செயல்படுவதற்கான விருப்பத்தையும் வெளிபடுத்தினேன். ஆனால் ஏனோ தெரியவில்லை, அண்மையில் அவர்கள் நடத்திய எழுச்சிப் பேரணிக்கு என்னை அழைக்கவில்லை. தகவலும் தெரிவிக்கவில்லை. ஆகவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருந்து வெளியேறியதாகவோ அல்லது அவர்களால் வெளியேற்றப் பட்டதாகவோ எந்த அறிவிப்பும் இல்லை. இந்த நிலையில் தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை

மீட்பு இயக்கத்தைத் தொடங்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்னைப் போன்றவர்களை, அதாவது பேரா.சுப.வீ, ஆசிரியர் கி.வீரமணி போன்றவர்களை ஏனோ புறக்கணிக்க வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியாக இருந்துள்ளனர் என்பது தெரிகிறது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்குவதற்கான முதல் கூட்டத்திலேயே என்னைத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு முயற்சி நடந்திருக்கிறது. நானாக வலிந்து சென்று அந்தக் கூட்டத்தில் பங்கேற்று, அந்த இயக்கத்தை உருவாக்குவதில் எனது பங்களிப்பைச் செய்தேன். அதன் செயல்பாடுகளை விமர்சிக்க விரும்பவில்லை. ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் மூலம் சிறப்பான முயற்சிகளை மேற்கொள்வதில் தீவிரமாக இருக்கிறோம்.

# புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புகின்ற செய்தி அல்லது தருகின்ற நம்பிக்கை என்ன ?

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நாம் விடுக்கின்ற வேண்டுகோள், தமிழக அரசியலில் ஈழ ஆதரவு சக்திகள் என்ற அளவில், தனிநபர்களையோ, இயக்கங்களையோ அடையாளம்கண்டு, அவர்களோடு இணைந்து செயல்படுவதற்கான செயல்திட்டங்களை வரையறுக்க வேண்டும். மற்றபடி, தேர்தல் அரசியலில் உருவாகிற குளறுபடிகளிலோ, அணிகளின் சேர்க்கைகளிலோ புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். ஒரு சார்பானவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல், ஒரு சார்பினருக்கு எதிரானவர்கள் என்ற நிலையை ஏற்படுத்திக் கொள்ளாமல், நமக்கான ஆதரவு சக்திகளை எல்லாம் அடையாளம் கண்டு, அவற்றோடு நட்புறவை வளர்த்துக் கொண்டு செயல்படவேண்டும் என்பதுதான் புலம்பெயர்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு நான் விடுக்கின்ற தோழமையான வேண்டுகோள். அண்மையில் நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க வுக்கு வாக்களிக்கலாம் என்று விடுதலைப்புலிகளே அறிவித்துவிட்டதாக ஏடுகளில் செய்திகள் வெளியாகின. அது இங்கிருந்து திரித்துக் கூறப்பட்ட செய்தியாகத்தான் இருக்கும் என்பதை நான் இப்போதும் உறுதியாக நம்புகிறேன். தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில், அப்படிப்பட்ட அரசியல் உத்திகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் தமிழீழ அரசியல் பிரிவு பொறுப்பாளர் திரு.நடேசன் அவர்களின் பெயரில் அந்த அறிவிப்பு வார ஏடு ஒன்றில் வெளியாகியிருந்தது. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தைப் பற்றி எண்ணிப் பார்க்காமல், காங்கிரஸ் மீதுள்ள கோபத்தால் அந்த அணியில் உள்ளவர்கள் எல்லாம், ஈழத்திற்கு எதிரானவர்கள் என்பதைப் போல எண்ணக்கூடிய அளவுக்கு அவர்கள் குழப்பப்பட்டுள்ளனர் என்பதைக் காணமுடிகிறது. எந்த அணியில் யார் இருந்தாலும், நமக்கான ஆதரவாளர்கள் எப்போதும் நமக்கான களத்தில் உறுதியுடன் நிற்பார்கள் என்ற நம்பிக்கை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டும்.

25 ஆண்டுகாலமாக எனது கல்லூரிப் பருவத்திலிருந்து ஈழத்தமிழர்களின் நலன்காக்கும் அனைத்துப் போராட்டங் களிலும் முழு உணர்வோடு ஈடுபட்டுவருகிறேன். என்னுடைய தலைமையிலேயே பல அடுக்கடுக்கான போராட்டங்களை , பேரணிகளை, மாநாடுகளை நடத்தி வருகிறவன். இப்படி 25 ஆண்டுகளாக ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக இயக்கத்தை நடத்தியவனை, தி.மு.க. அணியில் இடம்பெற்றதால் துரோகியாக நினைப்பதும், தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் உணர்வுப்பூர்வமாக எதிராக செயல்பட்டுவந்த செல்வி ஜெயலலிதா அவர்களை ஒரே நாளில் அவர் மாறி விட்டார் என்று சொல்லி உயர்த்திப் பிடிப்பதும் தமிழக அரசியலில் ஒரு வெட்கக்கேடான நிலையாகும்.

மேதகு பிரபாகரன் அவர்களைக் கைது செய்து கொண்டுவந்து தண்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர்தான் ஜெயலலிதா, அந்தத் தீர்மானம் அவைக் குறிப்பிலேயே இடம் பெற்றுள்ளது. போர் நடந்தால் மக்கள் சாகத்தானே செய்வார்கள் என்று பொறுப்பற்ற முறையில் பதில் சொன்னவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவரைத் தான் பா.ம.க., ம.தி.மு.க, உலகத்தமிழர் பேரமைப்பு, பொதுவுடைமைக் கட்சிகள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் ஆதரித்துப் பேசினார்கள். தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கிற குளறுபடிகளுக்கும், குழப்பங்களுக்கும் ஆட்பட்டு, அதற்கேற்ப பேசக்கூடிய நிலைக்கு புலம்பெயர்ந்த சொந்தங்கள் தள்ளப் பட்டுவிட்டார்கள் என்பதை எண்ணித்தான் வேதனைப்படுகிறேன். ஈழத் தமிழர்களுக்காக

25 ஆண்டுகளாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற திருமாவளவன் மேல் நம்பிக்கையில்லை, தேர்தலுக்காக ஈழம் விடுதலை பெறட்டும் என்று சொன்ன ஜெயலலிதாவை நம்புகிறார்கள் என்று சொன்னால் அந்த நம்பகத் தன்மையில் உள்ள கோளாறு எத்தகையது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். எந்த அணியிலிருந்தாலும், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதுதான் எமது கட்சியின் உறுதியான நிலைப்பாடு. எப்போதும் ஈழத்தின் குரலாக, ஈழ மக்களின் குரலாக சிறுத்தைகளின் குரல் ஒலிக்கும். அந்த வகையில் புலம் பெயர்ந்த சொந்தங்களுக்கு நான் சொல்ல விரும்புவது , ஒன்றுபட்டு போராடுவோம், நமது குறிக்கோளான தனி ஈழம் பெறுவது எப்படி என்பது குறித்து மட்டுமே நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. சோர்வடைந்து விடக் கூடாது. தனித்தமிழீழம் மட்டுமே நமது தாகம் என்பதில் எப்படித் தமிழீழத் தேசியத் தலைவர் உறுதியுடன் இருக்கிறாரோ, அதே மன உறுதியோடு நாம் அனைவரும் நின்று போராட வேண்டும். எந்த நிலையிலும் நம்முடைய குறிக்கோளில் இருந்து பின்வாங்கக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.

# நாடாளுமன்றத்தில் உங்களின் முதல் குரல் எதைப் பற்றியதாக இருக்கும் ?

பொதுவாக நாடாளுமன்ற அவையிலே நாம் விரும்புகிற அளவுக்குப் பேசமுடியாது. விரும்புகிற செய்திகளையும் பேசமுடியாது. இது சட்டமன்ற அவையிலேயே நான் பெற்ற அனுபவம். இருப்பினும் கிடைக்கின்ற நேரத்தைப் பயன்படுத்தி என்னுடைய உணர்வுகளை நான் கட்டாயம் வெளிப்படுத்துவேன். முதல்பேச்சு கன்னிப் பேச்சு என்பார்கள். கன்னிப் பேச்சில் யாரும் தலையிடக்கூடாது என்பது மரபு. எனவே கொடுக்கப்பட்ட நேரத்தைப் பயன்படுத்தி ஓடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக் காகவும், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காகவும் என்னுடைய முதல் குரல் அங்கே ஒலிக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com