Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜூன் 2009

இந்திய அரசுக்குக் கடும் கண்டனம் !

பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்னும் பெயரில், சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரில், கணக்கற்ற மனிதப் படுகொலைகளும், மனித உரிமை மீறல்களும் நடந்தேறியுள்ளன. பட்டினி போட்டும், மருத்துவ மனைகளில் குண்டுகள் போட்டும், பாலியல் வல்லுறவு களில் ஈடுபட்டும் தன் கோர முகத்தை ராஜபக்சே அரசு வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஏறத்தாழ 50 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. மனித உரிமைக் குழுவில், சில மேலை நாடுகள், இலங்கை அரசின் மீது கண்டனம் மற்றும் குற்ற விசாரணைத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. வேதனையில் வெந்துகிடக்கும் தமிழ்ச் சமூகத்திற்கு இது ஒரு சிறிய ஆறுதலாக உள்ளது. இந்தத் தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாத நிலையிலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்தை முதல் ஆளாக ஆதரித்திருக்க வேண்டும். மிகக் குறைந்தபட்சம் நடுநிலையாவது வகித்திருக்க வேண்டும்.

ஆனால் இந்தியாவோ எதிர்மாறான நிலையை எடுத்துள்ளது. அந்தத் தீர்மானத்தை எதிர்த்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களித்துள்ளன. அத்தீர்மானத்தை 17 நாடுகள் மட்டுமே ஆதரித்துள்ளன. அதனால் அத்தீர்மானம் தோல்வியடைந்து விட்டது.

ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடக்கூடா தென்றும், அந்நாட்டின் இறையாண்மையை மதித்திடல் வேண்டும் என்றும் இலங்கை சொல்கிறது. எது உள்விவகாரம்? எது இறையாண்மை ?

தன் சொந்த மக்களையே குண்டுகள் வீசித் தாக்குவதும், பெண்களைப் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குவதும்தான் ஒரு நாட்டின் இறையாண்மை என்றால் அதனை அழித்தொழிப்பதுதானே, மனிதநேயமும், ஜனநாயக உணர்வும் கொண்டவர்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும் !

இலங்கையின் இந்தப் பித்தலாட்டத்தை ஆதரித்து, இந்தியா, சீனா, பாகிஸ்தான், பஹ்ரைன், பொலிவியா, கியூபா, எகிப்து, இந்தோனேசியா, மலேசியா, நிகரகுவா, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா முதலான 22 நாடுகள் வாக்களித்துள்ளன.

இந்தியா மட்டுமின்றி, இஸ்லாமிய நாடுகளும், பொதுவுடைமைக் கொள்கை கொண்ட நாடுகளும், தமிழினத்திற்கு எதிராய் நிற்பதை அறியும் போது நம் நெஞ்சம் நடுங்குகிறது. என்ன பிழைசெய்தோம், யாருக்கு நாம் கெடுதல் செய்தோம்?

பாலஸ்தீன மக்கள் தாக்கப்படும் போதெல்லாம், தமிழர்கள் பதறி எழுந்து ஆதரவுக் குரல் கொடுத்தனரே, அதற்காகவா இஸ்லாமிய நாடுகள் இன்று நம்மை எதிர்க்கின்றன? கியூபாவின் திறத்தை, நெஞ்சுரத்தை வாய்நிறையப் பாராட்டினோமே அதற்காகத்தான் அந்த நாடும் இன்று நம்மை எதிர்க்கிறதா? ஈரமும், இரக்கமும் இந்த உலகை விட்டு விடை பெற்றுவிட்டனவா? எட்டுக் கோடித் தமிழர்கள் இருந்தும் நாம் அநாதைகள்தானா என்று நம் நெஞ்சம் பதறுகிறது.

“ இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களின் எதிர்கால நன்மைகளையும் கருத்தில் கொண்டு ( இந்திய அரசு ) உரிய முடிவை எடுக்க வேண்டுமெனத்” தமிழக முதல்வர், பிரதமருக்கு மடல் எழுதியுள்ளார்.

அதையும் ஏற்க மறுத்து தமிழினத்திற்கு எதிராய், இலங்கைக்குத் துணைபோகும் இந்திய அரசைக் கடுமையாய்க் கண்டிக்கிறோம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.