ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்
பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கும், ராஜபக்சே தலைமையிலான சிங்கள இன வெறி அரசு, அதனை மறைத்துத் திசை திருப்பும் நோக்கத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக ஒரு வதந்தியை உலகெங்கும் பரப்பி வருகின்றது.
இலங்கைக்கே உணவளித்துக் கொண்டிருந்த வன்னிப்பெரு நில மக்கள், இன்று உணவின்றியும், குடிநீர் இன்றியும், காயங்களுக்கு மருந்தின்றியும் பேரவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். அம்மக்களின் துயர் துடைக்க வேண்டிய கடமை, உலகத் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச சமூகத்திற்கே உரியதாக உள்ளது.
இச்சூழலில், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்பதற்கும், ஜனநாயக உரிமைகளை அவர்கள் பெற உதவுவதற்கும், தமிழ் மக்களைக் கொன்றொழித்து வரும் ராஜபக்சே என்னும் போர்க் குற்றவாளியை அனைத்து நாடுகளின் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் உரிய முயற்சிகளை எடுக்க, திராவிடர் கழகத் தலைவர் திரு கி. வீரமணி தலைமையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் தொடங்கப்படுகிறது.
சர்வதேச இயக்கமாக விரிவு பெறவிருக்கும் இவ்வியக்கத்தில், திரு தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகளும், திரு சுப. வீரபாண்டியன் தலைமையிலான திராவிட இயக்கத் தமிழ்ர் பேரவையும் தம்மை இணைத்துக் கொள்கின்றன. ஒத்த கருத்துள்ள பல்வேறு இயக்கங்களும், இயக்கத்தில் இணைந்து செயல்படுமாறு அழைக்கப்படுகின்றன.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கக் கலந்துரையாடல்
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 23. 05. 2009 அன்று காலை 10.30 மணிக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், தொல். திருமாவளவன் எம்.பி., பேரா.சுப.வீரபாண்டியன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பொன்.குமார், கவிஞர் மு. மேத்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
• “ ஈழத் தமிழர்களைக் காப்போம் ! ” எனும் பொருளில் கீழ்க்கண்ட ஊர்களில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
கூட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்பது என்று முடிவு செய்யப்படுகிறது.
07. 06. 2009 மாலை சென்னை - சைதை தேரடித் தெருவில் ( பொதுக்கூட்டம் மட்டும் )
13. 06. 2009 மாலை மதுரை - பேரணியும், பொதுக்கூட்டமும்.
திருச்சி, கோவை, நெல்லை ஆகிய ஊர்களில் நடக்கவிருக்கும் கூட்டங்களின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பேரணி, பொதுக்கூட்டத்தின் நோக்கங்கள் :-
• ஈழ மண்ணில் உணவின்றியும், மருந்தின்றியும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்குப் பன்னாட்டுப் பார்வையாளர்களின் முன்னிலையில் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உதவிகள் செய்து அவர்களைக் காப்பாற்றவேண்டும்.
• சொந்தத் தேசத்தில் அகதிகளாக வாழும் அம்மக்களை, அவரவர் பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்திட உலக நாடுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
• தமிழின அழிப்பையே நோக்கமாகக் கொண்டு, தமிழீழ மக்களை அழித்தொழித்த ( றூeஐலிஉஷ்de ) ராஜபக்சேயைப் போர்க் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்.
• தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று, உடனடியாக இலங்கை சென்று உண்மைகளைக் கண்டறிய இந்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
• இலங்கைக்கான இந்தியத் தூதுவராகத் தமிழர் ஒருவரே உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.
• மேற்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|