Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009(15-31)

மக்களை போல்வர் கயவர்
இரா.உமா

oviya கிளிநொச்சிப் போரில் வீரமரணமடைந்த பெண்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திச் சிங்கள இராணுவ வெறியர்கள் நடத்திய வெறியாட்டம் 4.01.2009 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தியாக வந்துள்ளது. இணையதளத்திலும் நகர்வுப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுவாக இராணுவக்கட்டுப்பாடுகள் மிகக் கடுமையானவை என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் கட்டுப்பாடுகளே இல்லாத ஒர் இராணுவம் உண்டென்றால் அது இலங்கை இராணுவமாகத்தான் இருக்க முடியும். இனவெறியை மட்டுமே தலை முதல் கால் வரை சுமந்து திரியும் ஓநாய்க் கூட்டம் அது.

அதனால்தான் வீரச்சாவடைந்த பெண் புலிகளின் மீது பாய்ந்து கடித்திருக்கின்றனர். குழந்தைகளைக் கொன்ற போதும், பெண்களைக் கொடூரமாகக் கற்பழித்த போதும் இவர்களுக்குக் குடும்பம் என்ற ஒன்றே கிடையாதோ, உடன் பிறந்தோர், உறவுகள், பெற்ற பிள்ளைகள் எவருமே கிடையாதோ என்றெல்லாம் மனசாட்சியுள்ளோர் ஆதங்கப்பட்டதுண்டு. ஆனால் இந்தச் சம்பவம், மனிதப் பிறவியிலேயே இவர்கள் சேர்த்தியில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகு இழிந்த இராணுவத்தின் தலைவர் இராஜபக்சேவோ பிச்சையாகப் பெற்ற வெற்றியைக் கொக்கரிப்போடு கொண்டாடி அற்பத்தனமான மகிழ்ச்சியடைகிறார்.

போர்க்காலங்களில் பெரும்பாலும் அதிகம் பாதிப்புகளுக்கு உள்ளாவது பெண்கள்தான். வெற்றிபெற்ற நாட்டுக்குள் நுழையும் எதிரிப் படையினர் முதலில் வேட்டையாடுவது அந்நாட்டுப் பெண்களைத்தான். காரணம் பெண்களை அவமதிப்பது என்பது அந்நாட்டை அவமதிப்பதற்குச் சமம் என்று கருதினர். ஆனால் இன்று பெண்களே சீருடை தரித்துத், துப்பாக்கி ஏந்திப் போரில் நேரடியாகப் பங்கு பெறும் மாற்றத்தைப் பார்க்கிறோம். உலக நாடுகள் பலவற்றில் பெண்கள் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் போர்முனைகளில் சென்று போரிடுவதாக எந்தவிதமான செய்திகளும் இல்லை. பின்புலத்தில், மருத்துவர்களாகவோ, அதிகாரிகளாகவோ பணியாற்றி வருவதையே அறிய முடிகிறது.

female_srilankan இந்நிலையில், பெண்கள் முதன்முதலாக ஆயுதம் ஏந்திக் களம் புகுந்தது தமிழீழ மண்ணில்தான். தாயகத்தின் விடுதலைப் போரில் உறுதியுடன்; போராடும் விடுதலைப்புலிகளின் பெண்புலிகள் படையணிகள் அளப்பரிய செயல்களை ஆற்றிவருகின்றன. பெண்களே தளபதிகளாகத் தலைமையேற்றுள்ள படைப் பிரிவுகள் உண்டு. தரைப்படை, கடற்படை, கரும்புலிகள் படை, என அனைத்திலும் பெண்கள் சமமாகப் பங்குபெற்றுள்ளனர்.

இவர்கள் தனிப்பிறவிகள் அல்ல. பிற பெண்களைப் போல, அன்புப் பெற்றோர்க்கு மகளாகவும், உடன்பிறந்தோர்க்கு நல்ல சகோதரியாகவும், கணவனுக்குக் காதலை அள்ளித்தரும் மனைவியாகவும், பிள்ளைகளுக்குப் பொறுப்புள்ள தாயாகவும் வாழ்ந்து வருபவர்கள்தான்; இவர்களும். பெண்ணினத்தின் எல்லா ஆசாபாசங்களும் இவர்களுக்கும் உண்டு. காலம் இவர்களின் கரங்களில் ஆயுதங்களைத் திணித்துவிட்டது.

தங்கள் மானம் கெடுப்பவர்களை, மண்ணை அழிக்க நினைப்பவர்களைக் களத்தில் சந்திக்கும் பெண் புலிப் போராளிகள் பெருமைதரும் வரலாற்றினைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்புலிகளின் படையணிகள் தனித்து நின்று வென்ற களங்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் அண்மையில் முறிகண்டியில் நடந்த தாக்குதலில் பெற்ற வெற்றி. முழுக்க முழுக்கப் பெண்புலிகளின் படையணி மட்டுமே முறிகண்டித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. பெண் போராளிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத் சிங்கள இராணுவம் சிதறி ஓடியிருக்கிறது. அதில் தப்பியோடிய ‘வீரர்’களின் ஈனச்செயல்தான் இது.

இந்தக் காட்டுமிராண்டித்தனம் ஒரு வார இதழில் வெளிவந்த பின்பும் அதுபற்றி யாரும் வாய் திறக்கவில்லை என்பது அதை விட வேதனை தருவதாக உள்ளது. நாடு, இனம், மொழி வேறுபாடின்றி பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் பெண்கள் அமைப்புகளும், பெண்ணியம் பேசுவோரும் கூட இதனை ஒரு பத்திரிக்கைச் செய்தி என்ற அளவில் மட்டுமே எடுத்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. உலகத்தின் எந்த மூலையில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் ஆதரவுக் குரல் கொடுக்கும் இவர்களின் உணர்வுகள் மிகவும் மதிக்கப் படத்தக்கவை, பாராட்டப்படத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. திரைப்படங்களும், திரைப்படப் பாடல்களும் பெண்களைக் கொச்சைப் படுத்துவதைக் கடுமையாக எதிர்க்கும் இவர்கள் இதைப் பெரிய அளவில் கண்டிக்க முன்வரவில்லை.

சிங்கள இனவெறி இராணுவத்தின் மனிதத் தன்மையற்ற இந்தச் செயல், சிங்கள இனத்திற்குத் தமிழ் இனத்தின் மீதுள்ள வன்மத்தின் உச்சகட்ட வெளிப்பாடு. இப்படிப்பட்ட இழிந்த இராணுவத்தின் தலைமையை, அதற்கு உதவிடும் இந்திய அரசைக் கண்டித்திருக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உடையவர்கள் அமைதிகாத்தது ஏன்?

.....என்ற கேள்வியை முன்வைத்த போது பெண்ணியப் போராளி தோழர் ஓவியா அவர்கள் பதிவு செய்த கருத்து:

உயிருள்ள பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வதைக் காட்டிலும் பல மடங்கு கொடுமையானது போரில் மரணமடைந்த பெண்போராளிகளின் உயிரற்ற உடலில் சிங்களவெறியர்கள் நடத்தியிருக்கும் வெறியாட்டம். இதை பெண்கள் அமைப்புகள் கண்டிக்க முன்வராதது வேதனையானதுதான். இதை வன்மையாகக் கண்டித்திருக்க வேண்டியது பெண்கள் அமைப்புகளின் கடமைதான் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த உணர்வு ஏற்படாததற்குக் காரணம், இந்த மண்ணின் அரசியல் சார்ந்து இயங்கும் பெண்கள் அமைப்பு இல்லை. எந்த ஒரு பெண்கள் அமைப்பும் இந்த நாட்டுமக்களின் பொருளாதார ஆதாரத்தை நம்பி இல்லை. பிறகு எப்படி இந்த மாதிரியான உணர்வு வரும்? அதனால் தான் ஈழத்தமிழர் பிரச்சினைக்குப் போராட இங்குள்ள பெண்கள் அமைப்புகள் எதுவும் முன்வரவில்லை. விடுதலைச் சிறுத்தைகளின் பெண்கள் அமைப்பு மட்டுமே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. அதைக் கூட அக்கட்சித் தலைவருடைய உணர்வின் வெளிப்பாடாகவே கொள்ள முடியும். அடுத்துத் திருநங்கைகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம். இவை கொஞ்சம் ஆறுதல் தரக்கூடிய நிகழ்வுகள்.

பெண்கள் இனியாவது தங்களது இனம், மொழி சார்ந்த போராட்ட வெளிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற உணர்வுகள் இயல்பாக வெளிப்படும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com