Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009(15-31)

திசைகாட்டியுள்ளது திருமங்கலம்
சுப.வீரபாண்டியன்

Kalaignar திருமங்கலத்தில் தி.மு.க.வின் வெற்றி எதிர்பார்த்ததுதான் என்றாலும், எதிர்பார்க்காத வேறு சில செய்திகளையும், தேர்தல் முடிவு உள்ளடக்கியுள்ளது. சென்ற தேர்தலில்(2006), தி.மு.க. 40,923 வாக்குகளைப் பெற்றிருந்தது. இம்முறை வாக்கு வித்தியாசமே அந்த எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அழகிரி சொன்ன செய்தி அப்படியே உண்மையாகி இருக்கிறது. இதனை மாபெரும் வெற்றி என்று கூறுவதில் எந்த மிகையுமில்லை. இடதுசாரிகள் எதிரணிக்கு மாறிய பிறகும், பா.ம.க.வின் நடுநிலையைத் தாண்டியும் இந்த வெற்றியைத் தி.மு.கழகம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க.விற்கு வாக்குச் சரிவு ஏற்பட்டுள்ளது என்ற போதிலும் இரண்டாவதாக அக்கட்சிதான் நிலைபெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது. விஜயகாந்தின் தே.மு.தி.க., சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகிய இரண்டு குறித்தும் பல செய்திகளைத் திருமங்கலம் தெரிவித்துள்ளது. விஜயகாந்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருப்பதாக ஊடகங்கள் மக்களை நம்ப வைத்தன. கடந்த தேர்தலில் ஏழு சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்த தே.மு.தி.க. இப்போது ஏறத்தாழ 20 சதவீதம் வாக்குகள் பெறும் அளவுக்கு வளர்ந்துவிட்டது என ஏடுகள் எழுதியபோது, எல்லோருமே மலைத்துப் போனார்கள். திருமங்கலம் தேர்தலில் கூட, அ.தி.மு.க வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிவிட்டு, விஜய்காந்த் இரண்டாவது இடத்திற்கு வந்துவிடுவார் என்ற கருத்துக் கணிப்புகள் கூட வெளிவந்தன.

எல்லாம் நூறு சதவீதம் பொய்த்துவிட்டது. ஒரு வார இதழ், அவரை ஒவ்வொரு ஊராக அழைத்துக் கொண்டு உலா சென்று வந்த பிறகும், ஒரு பயனும் ஏற்படவில்லை. முன்னைக் காட்டிலும், இப்போது பெற்றுள்ள வாக்குகளில் பெரும் சரிவே ஏற்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு, இதே திருமங்கலத்தில் பதிவான 1,17 ஆயிரம் வாக்குகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் வாக்குகளை விஜயகாந்த் பெற்றிருந்தார். ஆனால் இப்போதோ, ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்துக்கும் மேலாக வாக்குகள் பதிவு ஆகி உள்ள போதும், அவருடைய கட்சி வேட்பாளர் வெறும 13,136 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். பதிவான வாக்குகள் கூடியும், பெற்றுள்ள வாக்குகள் குறைந்தும் உள்ளன என்பது அவருக்கு ஏற்பட்டுள்ள இரட்டைச் சரிவையே காட்டுகின்றது.

dmk ஆக மொத்தம், நடைபெற்று முடிந்த திருமங்கலம் தேர்தலில் அவருடைய கட்சி, கட்டுத் தொகையையே (ஜாமீன்) இழந்துள்ளது. எனவே ஊடகங்கள்தான் அவரை ஊதிப் பெருக்கின்றன என்பது தெளிவாகின்றது. சரத்குமார் நிலைமையோ அதனைவிட மோசமாக உள்ளது. முதன்முதலாகத் தேர்தல் களம் புகுந்த அவருடைய கட்சியின் எதிர்காலத்தையே இத்தேர்தல் இருட்டாக்கிவிட்டது. அவரும், கட்சியின் துணைத் தலைவரான அவர் மனைவி ராதிகாவும் தெருத்தெருவாக நடந்து, தெருவோரக் கடைகளில் எல்லாம் வடையும், பஜ்ஜியும் வாங்கிச் சாப்பிட்டு, மக்களோடு மக்களாய்த் தாங்களும் இருப்பதாகக் காட்டிக் கொள்ள எவ்வளவோ பாடுபட்டும், இறுதியில் 831 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர்.

ஒரு சுயேச்சை வேட்பாளரே இதனை விடக் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளதைக் காணும் போது, மக்களிடையே சரத்குமார் கட்சிக்கு என்ன செல்வாக்கு உள்ளது என்பதை அறியமுடிகிறது. சென்ற தேர்தலில்,பா.ஜ.க.சார்பில் போட்டியிட்ட ஒச்சாத் தேவர் என்பவர் 7790 வாக்குகள் பெற்றுள்ளார். அந்த வாக்குகள் இப்போது அ.தி.மு.க.வைச சென்றடைந்திருக்கும். அவற்றையும் சேர்த்துத்தான் அ.தி.மு.க. இப்போது 40 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

இன்னொரு கூட்டல், கழித்தல் கணக்குக்கும் திருமங்கலம் உதவுகிறது. அ.தி.மு.க.வும், விஜய்காந்தும் கூட்டணி சேர்ந்துவிட்டால், அவ்வளவுதான், 40 இடங்களிலும் வெற்றி என்பது போன்ற ஒரு ‘பிரமையும் இங்கு திட்டமிட்டு ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த், மட்டுமின்றி சரத்குமாரையும் சேர்த்துக் கொண்டாலும் 55 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாகவே வருகின்றது. இடதுசாரித் தோழர்கள், ம.தி.மு.க வாக்குகளும் அதனுள் அடக்கம். அப்படி அனைத்தையும் கூட்டிப் பார்த்தாலும், 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வென்றிருக்கும் என்பதுதான் உண்மை.

விஜயகாந்தின் இந்த வீழ்ச்சிக்கு யார் காரணம்? அவரேதான். தேர்தல் களத்தில் அவர் நடந்து கொண்ட முறையும், பேசிய விதமும் மக்களிடமிருந்து அவரை அந்நியப்படுத்தி உள்ளன. தன் மகனுக்குப் பிரபாகரன் என்று பெயர் சூட்டியுள்ளதாகவும், ஈழம் கிடைக்கும் வரை தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்றும் பேசிக்கொண்டிருந்த அவர், நெருக்கடியான இன்றைய கால கட்டத்தில் ஈழம் குறித்து எதுவும் பேசுவதில்லை. ஈழத்திற்கு ஆதரவாகச் சட்டமன்றத்தில், ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறிய நாளில் கூட, அவர் அவையில் இல்லை. படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுவிட்டார்.

கூட்டங்களில் பேசும் பொழுது, மக்களைப் பார்த்து, ‘பன்றி மேய்க்கப் போங்கள்”; என்று பேசியுள்ளார். இதன்மூலம் அவர் மக்களை மதிக்கவில்லை என்பதோடு, பன்றி மேய்ப்பது, மாடு மேய்ப்பது போன்ற தொழில்களை அவர் எவ்வளவு இழிவாகக் கருதுகின்றார் என்பதும் புரிகின்றது. ஒரு கூட்டத்தில், குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்னபோது ‘பிரேமா’என்று தன் மனைவியின் பெயரை வைத்துள்ளார். ‘தலைவா, அது ஆண் குழந்தை என்று குழந்தையின் அப்பா கூவிச் சொன்னவுடன், ’சரி, சரி அப்படியானால் ‘பிரேமானந்தா’ என்று பெயர் சூட்டுகிறேன்”என்று கூறியுள்ளார்.

பிள்ளையின் பெற்றோர்கள் திகைத்துப் போய்விட்டனர். ‘இப்படி ஒரு பெயரா, வேண்டாம் வேறு பெயர் சூட்டுங்கள”; என்று கேட்க, ‘பிறகெதற்கு என்னிடம் வந்தீர்கள்? நீங்களே பெயர் வைத்துக் கொள்வதுதானே’என்று கோபமாகப் பேசியுள்ளார். இதுபோன்ற அவருடைய குணங்கள், மக்களை வெறுப்படையச் செய்துள்ளன. மேலும் நிலையான கொள்கை எதுவுமற்ற, குழப்பமான ஒரு தலைமையை மக்கள் எவ்வளவு நாள் ஏற்பார்கள்?

கடந்த மூன்று ஆண்டுகளாக, ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடங்கி ஏராளமான சமூக நலத் திட்டங்களைச் செய்து வரும் கலைஞர் தலைமையிலான அரசுக்குத் தங்கள் முழு ஆதரவை மக்கள் தெரிவித்துள்ளார்கள். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் திருமங்கலம் வழிகாட்டியுள்ளது என்று நம்பலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com