Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009(15-31)

என்னைக் கவர்ந்த புத்தகங்கள்
உண்மையான காதல்...
இரா. ஜவஹர்

javaghar சரக்கு என்றால் என்ன?
விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படும் பொருளே சரக்கு ஆகும்.

எதற்காக விற்பனை? இலாபத்துக்காக.

லாபம் எப்படிக்கிடைக்கிறது?

‘உற்பத்திச் செலவுடன் கூடக் கொஞ்சம் சேர்த்து அதாவது 900 ரூபாய்; உற்பத்திச் செலவு என்றால், அதோடு 100 ரூபாய் சேர்த்து 1,000 ரூபாய்க்கு - விற்கப்படுகிறது. இதன் மூலம் 100 ரூபாய் லாபம் கிடைக்கிறது.”

அப்படித்தானா?

அப்படியென்றால் கூடுதலாக 100 ரூபாய் ஏன் சேர்க்க வேண்டும்? 10,000 ரூபாய் சேர்க்கலாமே! சேர்த்து, 10,900 ரூபாய் என்று விலை வைத்து விற்கலாமே! 10,000 ரூபாய் இலாபம் கிடைக்குமே!

அப்படியாரும் விருப்பப்படிச் சேர்த்து, விலை வைத்து விற்க முடிவதில்லை. பிறகு எவ்வாறு

விலை நிர்ணயிக்கப்படுகிறது?

பார்க்கலாம்...

Marx ஒரு முதலாளி மூலதனத்தைப் போடுகிறார். எந்திரங்களை நிறுவுகிறார். கச்சாப் பொருள்களை வாங்குகிறார். கூலிக்குத் தொழிலாளர்களை அமர்த்தி வேலைவாங்குகிறார்.

கச்சாப் பொருள், எந்திரத்தின் தேய்மானம், தொழிலாளர்களின் உழைப்பு ஆகியவை சேர்ந்து ஒரு சரக்கு உற்பத்தி ஆகிறது. விற்பனைக்கு வருகிறது.

விற்பனைக்கான விலை எவ்வாறு நிர்ணயிக்கப் படுகிறது? சரக்கின் மதிப்பு எவ்வளவோ, ஏறத்தாழ அந்த அளவுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. சரக்கின் மதிப்பை எது நிர்ணயிக்கிறது? சரக்கில் செலுத்தப்பட்டுள்ள மனித உழைப்பின் மதிப்பே, சரக்கின் மதிப்பை நிர்ணயிக்கிறது.

அதாவது, கச்சாப் பொருளிலுள்ள உழைப்பின் மதிப்பு 400 ரூபாய், எந்திரத் தேய்மானத்தில் இருந்த உழைப்பின் மதிப்பு 400 ரூபாய், சரக்கு செய்யும் தொழிலாளர்களின் உழைப்பின் மதிப்பு 200 ரூபாய் என்றால், சரக்கின் மொத்த மதிப்பு 1,000 ரூபாய்.

முதாலாளி 1,000 ரூபாய்க்குத் தான் விற்கிறார். ஆனால் 100 ரூபாய் இலாபம் கிடைக்கிறது! எப்படி?

கச்சாப் பொருளின் விலையை அவர் கொடுத்துத் தான் வாங்க வேண்டும். கொடுக்கிறார். எந்திரத்தின் விலையை அவர் கொடுத்துத் தான் வாங்க வேண்டும். கொடுக்கிறார்.ஆனால் தொழிலாளியின் உழைப்பின் விலையைக் கூலியாகக் கொடுக்கிறாரா? இல்லை!’ உழைப்புச் சக்தி”யின் விலையைத்தான் கூலியாகக் கொடுக்கிறார்!

அப்படியானால் உழைப்பு வேறு, உழைப்புச் சக்தி வேறா?

ஆமாம்! இது தான் மார்க்சின் கண்டு பிடிப்புகளின் ஆணிவேர்!

இது பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

ஒரு தொழிலாளி உழைக்க வேண்டுமானால் அதற்கான சக்தி அவரது உடலில் இருக்க வேண்டும். இதற்காக அவர் சாப்பிட வேண்டும்;;, தூங்க வேண்டும், மற்ற பல தேவைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இவற்றுக்கு 100 ரூபாய் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இதன் மூலம் அவர் உழைப்பதற்கான சக்தியைப் பெறுகிறார்.

அவர் தொழிற்சாலைக்குச் சென்று எட்டு மணி நேரம் உழைப்பை அளிக்கிறார். எவ்வளவு உழைப்பை? 100 ரூபாய் மதிப்புள்ள உழைப்பையா?

இல்லை! 200 ரூபாய் மதிப்புள்ள உழைப்பை அளிக்கிறார்!

கூலி? 100 ரூபாய் பெறுகிறார். எப்படி?

100 ரூபாய் என்பது அவரது உழைப்புச் சக்தியைப் பெறுவதற்கான செலவு என்பது உங்களுக்கு நினைவிருக்கும். எனவே கூலி 100 ரூபாய்.

ஆகவே முதலாளி என்பவர் தொழிலாளியின் ‘உழைப்புச் சக்தி”க்குக் கூலி கொடுத்துவிட்டு, உழைப்புச் சக்தியை விட அதிக மதிப்புள்ள ‘உழைப்பை”ப் பெற்றுக் கொள்கிறார்!

அதாவது நான்கு மணி நேர உழைப்பின் மதிப்பான 100 ரூபாயைக் கூலியாகக் கொடுத்து விட்டுக் கூடுதலாக நான்கு மணிநேர உழைப்பை, மிகை உழைப்பை, உபரி உழைப்பை (Surplus Labour) முதலாளி கூலி கொடுக்காமல் எடுத்துக் கொள்கிறார்.

இந்த மிகையான உழைப்பின் மதிப்பைத்தான் மார்க்ஸ், மிகை மதிப்பு அல்லது உபரி மதிப்பு

(Surplus Value) என்று குறிப்பிடுகின்றார்.

இந்த மிகை மதிப்பில் இருந்துதான் இலாபம், வட்டி, வாடகை போன்ற அனைத்தும் கிடைக்கின்றன.

இந்தப் புகழ் பெற்ற ’மிகை மதிப்புக் கோட்பாடு” தான் மார்க்சியப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கல் ஆகும்.

இந்த ஆய்வின் போக்கில் தான் ‘தொழிலாளர்களுடைய உழைப்பின் ஒரு பகுதியைக் கூலி கொடுக்காமல் சுரண்டுவதற்குப் பயன்படும் பணமே, மூலதனம் ஆகும்” என்றும,; இன்னும் பல வகைகளிலும் வரையறுக்கிறார்.

குறிப்பாக, ’மூலதனம் என்பது பணமல்ல, பொருள் அல்ல. வரலாற்றின் குறிப்பிட்ட கட்டத்தில ஏற்படுகிற சமூக உற்பத்தி உறவே மூலதனம் ஆகும். இந்த உறவுப் பணமாக அல்லது பொருளாக வெளிப்படுகிறது” என்றும் நிறுவுகிறார்.

ஒரு கருப்பு இன மனிதர் (நீக்ரோ), கருப்பு இன மனிதர் தான். ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் அவர் அடிமையாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டார். அதனால் கருப்பு இனத்தவர் என்றாலே அடிமைகள் என்று அர்த்தமல்ல. அதேபோல பணம், எந்திரம் போன்றவையும் பொருட்கள் தான். குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் அவை மூலதனம் ஆகின்றன” என்று மார்க்ஸ் விளக்குகிறார்.

இவற்றைச் சாராம்சமாகக் கொண்ட நவீன சமுதாய இயக்கத்தின் பொருளாதார விதியை விளக்குகின்ற மிகமிக விரிவான, மிகமிக ஆழமான, மிகமிக மகத்தான ஆய்வுப் புத்தகமே ‘மூலதனம்’.

தொடக்கத்திலேயே குறிப்பிட்டது போல, மார்க்சின் அறிவுப் பூர்வமான, உணர்சிகரமான, இலக்கியத் தரம் வாய்ந்;த எழுத்து நடையும் உங்களைக் கவர்ந்து இழுப்பது நிச்சயம். இரண்டு எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்:

சரக்கு என்பது விற்பனை செய்யப்பட்டு பணமாக மாற்றப்படவேண்டும். சரக்கு-பணம்-சரக்கு-பணம்... என்ற சுழற்சி சுமுகமாக இருப்ப தில்லை. இதனுடைய சுழற்சியின் பொருட்டும், வளர்ச்சியின் பொருட்டும் சமூக அளவில் சிக்கலான, கடினமான, தீவிரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதை விளக்கும் போது மார்க்ஸ் சொல்கிறார்:

‘சரக்கு என்பது பணத்துடன் காதல் கொண்டுள்ளது. உண்மையான காதல், ஒருபோதும் சுமுகமாகப் பயணம் செய்வதில்லையே. அதைப் போல....” என்று கூறி விளக்குகிறார் மார்க்ஸ்!

அடுத்து -

சமூகமாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கு விரிவான விளக்கம் தருகிறார் மார்க்ஸ்.

பழைய சமுதாயத்தில் சிறு, சிறு உடைமை யாளர்களின் சொத்துகளை நவீன முதலாளிகள் பறிமுதல் செய்தார்கள். அவர்களைக் கூலி அடிமை களாக மாற்றினார்கள். பறிமுதல் செய்த சொத்து களை ஒன்றுதிரட்டித்தான் புதிய முதலாளித்துவ சமுதாய அமைப்பு முறையை ஏற்படுத்தினார்கள். இந்த அமைப்பு முறை வளர்ந்து வருகிறது. ஏகபோக முதலாளித்துவமாக வளர்ச்சி பெறுகின்றது.

மறுபுறம், உழைக்கும் மக்களின் வறுமையோ அதிகரிக்கிறது சமுதாய வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு, இந்த முதலாளித்துவ முறையே தடையாக மாறுகிறது. தடை உடைக்கப்பட்டு வளர்ச்சி ஏற்படுகிறது.

ஓடும் அதனுள்ளே விதையும் உள்ளன. ஓட்டின் பராமரிப்பின் கீழ்தான் விதை வளர்கிறது. ஆனால் விதை மேலும் வளரும்போது அந்த ஓட்டை உடைத்துக் கொண்டுதான் முளை விடுகிறது. அதைப்போலவே சமுதாயமாற்றமும் நிகழுகிறது.

என்பதை மார்க்ஸ் என்ன அழகாகச் சொல்கிறார் பாருங்கள்:

‘உற்பத்திச் சாதனங்கள் மையப்படுத்தப் படுகின்றன. உழைப்பு சமூகமயம் ஆகிறது. இவை கடைசியில் ஒரு கட்டத்தை அடைகின்றன. அப்போது இவற்றின் வளர்ச்சிக்கு முதலாளித்துவ ஓடு தடையாகிறது. ஓடு சிதறடிக்கப்படுகிறது. முதலாளித்துவத் தனிச் சொத்தின் சாவுமணி ஒலிக்கிறது. பறிமுதல் செய்தோர் பறிமுதல் செய்யப்படுகிறார்கள்.”

ஆ! மார்க்ஸ், மார்க்ஸ் தான்!

அடுத்து நாம் பார்க்கப் போவது,

‘மார்க்சுக்கு மட்டுமே அடுத்தபடியாகக் கொள்ளத்தக்க”, மாபெரும் சிந்தனையாளரின் புத்தகத்தைப் பற்றி.

(இன்னும் படிக்கலாம்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com