Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009(15-31)

முடியாமையா? முயலாமையா?
க.ப.அறவாணன்

aravanan நாம் நினைத்தபடியும் வேண்டியபடியும் தமிழையும், தமிழரையும் உயர்த்த முடியவில்லை. வளர்ந்த ஏனைய மொழிகளுக்கும், இனங்களுக்கும் இணையாகக் கூடக் கொண்டுவர முடியவில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகும் குறிப்பாகத் திராவிட இயக்க வளர்ச்சிக்குப் பிறகு இவை இரண்டும் சாத்தியமாகிவிடும் என்று நாம் நம்பினோம். ஓரளவு செயல்பட்டோம். ஓரளவு வெற்றியும் பெற்றோம். ஆனால், இவை போதுமானவை அல்ல என்பதை உலகியல் அறிவும், இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தி மொழி எய்திய வளர்ச்சியும், ஐரோப்பிய, சீன, ஜப்பானிய, யூத மொழிகளின் வளர்ச்சியும் நமக்கு அறிவுறுத்துகின்றன.

எனவே, நம்முடைய இலக்கு சாதாரணமானதுதான். ஆனால் அந்த இலக்கை அடைவதில் அசாதாரணங்கள் மண்டிக் கிடக்கின்றன. அரசியலைச் சார்ந்தவை அறுபது விழுக்காடு, சமுதாயம் சார்ந்தவை இருபது விழுக்காடு, பொருளியல் சார்ந்தவை இருபது விழுக்காடு என்று மதிப்பிடலாம். மாற்றம் அனைத்தும் தமிழகத்தில் தமிழரிடையே பொருளியல் மாற்றத்தாலும், பொருளாதார ஏற்றத்தாலும் வந்துவிடும் என்று நம்புதற்கு இல்லை. பொருளாதார ஏற்றம் பெற்ற தமிழர்கள் இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தற்போது கணிசமான அளவு பெருகியிருக்கிறார்கள். அவர்கள் இடையே நாம் எதிர்பார்த்த அளவு தமிழ்ச் சமுதாய உணர்வையும், தமிழ் மொழி உணர்வையும் காண முடியவில்லை. ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தொடர்ந்து வேறு வேறு மொழி மக்களுக்கு அரசியல் அடிமைகளாக இருந்து பழக்கப்பட்டுப் போன தமிழர்கள் இடையே, நிகழ்த்தப் பெறும் அரசியல் மாற்றத்தால் ஏனைய முறையான மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

சமூக மாற்றம் இரண்டினடிப்படையில் நிகழலாம். ஒன்று தலைமை சார்ந்து; இன்னொன்று மக்களைச் சார்ந்து. தலைவர் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதொன்று. மக்கள் எவ்வழித் தலைவர் அவ்வழி என்பது மற்றொன்று. இவ்விரு நெறிகளில் தமிழரைப் பொறுத்து மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதே கடந்த காலப் படிந்து போன வரலாறாக இருக்கிறது. அரசனைக் கடவுளாகவேக் கருதினர் தமிழர். திருவள்ளுவ மேதையே அரசனைக் கடவுளுக்கு (இறைவனுக்கு) நிகராகப் பேசியுள்ளார். எனவே தமிழரைப் பொறுத்து மாற்றங்கள் மேலிருந்துதான் கீழே பரவியாகவேண்டும். இதற்குச் சரியான சாட்சியம் தந்தை பெரியார். தந்தை பெரியார் என்ற ஒற்றை மனிதரின் அயராத உழைப்பாலும், தளராத தியாகத்தாலும், மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தத் தமிழரிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது; கொண்டுவர முடிகிறது. பெரியார் கொண்டு வந்து நிறுத்திய சுயமரியாதை நிலையில் இருந்து மேலும் சற்று உயர்ந்துத் தன்மான நிலைக்குத் தமிழர் வந்தாக வேண்டும்.

மொழி அளவிலும், இன அளவிலும் வந்தாக வேண்டும். இதற்கான முயற்சிகளை நாம் தைப்புத்தாண்டைக் கொண்டாடும் இச்சமயத்தில் திட்டமிட்டு மேற் கொள்ளுதல் வேண்டும்.

வேரில் வெந்நீர் பாய்ச்சாமல் நீர் ஊற்ற வேண்டும்.

தமிழ் உணர்வையும் தமிழர் என்ற இன உணர்வையும் குழந்தைப் பருவத்திலேயே நாம் ஊட்ட வேண்டும். வீடு, மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி என நம் முயற்சித் தொடங்கப்படுதல் வேண்டும். இம்முயற்சியில் நாம் கடந்த கால் நூற்றாண்டாக முற்றும் பின்தங்கிவிட்டதின் விளைவுதான் இன்று நம் கண் முன்னே ஆங்கில சார்புணர்ச்சியாகவும், ஐரோ அமெரிக்கப் பண்பாட்டு மேலுணர்ச்சியாகவும் தழைத்துவிட்டது. எனவே, வருங் காலத்திலாவது இதனைத் தவிர்க்க வீடு, மழலையர்ப் பள்ளி, தொடக்கப்பள்ளி என நம் பணிகள் தொடங்கப்படுதல் வேண்டும். தமிழ் வேரில் வெந்நீர் பாய்ச்சுவதற்கு மறுதலையாக நீர் ஊற்ற வேண்டும்.

பயன்பாட்டு மொழியாக்க வேண்டும்

ஒரு மொழியின் வாழ்வு அதனைப் பயன்படுத்துதல் மூலமே முழுமை எய்த முடியும்; எய்த முடிகிறது. தமிழைப் பொறுத்த அளவிற்குத் தமிழ்நாட்டிலேயே அது முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. இங்கே யூதர்களை ஒத்திட்டு நினைக்கத் தகும். கி.மு. அளவிலேயே தம் பிறந்தகத்திலிருந்து படை எடுத்து வந்து ரோமானியர்களால் அகதிகளாகத் துரத்தப்பட்ட யூதர்கள் உலகின் பலவேறு மூலைகளில் குடியமர்ந்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை இழக்க வேண்டிய கட்டாயச் சூழல் இருந்தது. தாம் குடியேறிய பகுதிகளின் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை ஏற்க வேண்டியிருந்தது; அல்லது ஏற்றது போல நடிக்க வேண்டி இருந்தது. இந்த இக்கட்டுகள் அவர்களைத் தாக்கிய போதும், வழிபாட்டு இடங்களாகிய யூதகோயில்களில் தம் தாய்மொழியாகிய ஹீப்ரு மொழியைப் பயன்படுத்துவதை அவர்கள் ஒரு சிறிதும் கைவிடவில்லை; சமரசம் செய்துகொள்ளவில்லை.

அதன் விளைவாக கி.பி.19ஆம் நூற்றாண்டில் உருமாறிக் கிடந்த ஹீப்ரு மொழிக்கு எழுத்துருவம் கொடுத்துப் புழக்கத்தில் கொண்டு வந்தார்கள். 1948 மே திங்களில் தாயகமான இஸ்ரேல் உருவான அதே நாளில், அதே கணத்தில் புத்துயிர் அளிக்கப்பட்ட ஹீப்ரு மொழிக்கு அனைத்து வாழ்வும் அளித்தார்கள். கடந்த அறுபது ஆண்டு களுக்குள்ளாக ஹீப்ரு மொழி கல்வி மொழியாக, ஆட்சி மொழியாக, நீதி மொழியாக இன்ன பிற தொடர்பு மொழியாக, முழுத் தகுதி எய்திவிட்டது. இது நமக்கு ஒரு பாடம். எனவே தமிழைப் பயன்பாட்டு மொழியாக அனைத்துத் தளங்களிலும் ஆக்குவதற்கான வழியை உடனடியாக நாம் மேற்கொள்ள வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com