Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009

அவர் வானமன்று மேகம்!


க. திருநாவுக்கரசு

(தணிகைச்செல்வனின் தேசியமும் மார்க்சியமும் நூல் திறனாய்வு- தொடர்ச்சி)

sky மறுமலர்ச்சி திமுகவைப் பற்றித் தணிகைச் செல்வன் கூறும் விமர்சனங்களை முதலில் பார்ப்போம்.

1) தமிழீழத்திற்குச் சொல்லுகிற தீர்வைத் தமிழகத்திற்குப் பரிந்துரைக்கவில்லை ம.தி.மு.க.
2) மாநில சுயாட்சிக் கோரிக்கையில் கூடத் தமிழ்த் தேசியத்தின் கூறுகளும் காணப்படுகின்றன என்பது மதிமுகவின் கொள்கைப் பட்டியலைப் பார்த்தால் தெரியும்.
3) மதிமுகவை மற்ற திராவிடக் கட்சிகளிலிருந்து பிரித்துக் காட்டிய தனித்தன்மை ஈழ விடுதலை ஆதரவு - விடுதலைப்புலிகள் ஆதரவு.
4) ‘மதிமுக ஒரு தமிழ்த் தேசிய இயக்கமே’ என்ற ஈழத்துத் தமிழறிஞர் கா.சிவத்தம்பியின் மதிப்பீடு.

ஆவணங்களைப் பார்த்து ஆய்வு செய்ததால், இதில் யார்க்கும் சந்தேகமில்லைதான். ஆனால், பார்ப்பதற்கு உருவம் ஒன்றாகவும் உள்ளடக்கம் வேறாகவும் அல்லவா மதிமுக ஆகிவிட்டது.

திடமான கொள்கை ஏடுகளிலே; ஆனால், மனவோட்டம் அப்படியில்லையே மதிமுகவுக்கு. அது ஏன்?

இதோ தணிகைச்செல்வனே அதற்கான காரணங்களைச் சொல்லுகிறார்.


vaico 1) “பார்ப்பனிய பகையழிப்பில்தான் தமிழியத்தின் சிறை விடுப்பும், தமிழினத்தின் தளையறுப்பும் அடங்கியுள்ளன என்ற பெரியாரியத்தைக் கோட்பாட்டாளவில் ஏற்று, செயல்பாட்டளவில் ஏற்காத கட்சியாக மதிமுக மாறி இருக்கலாம் என்பது ஒரு காரணம்.”
2) “ஈழத் தேசியம், தமிழ்த் தேசியம் போன்ற செறிவான புறவய நிலைப்பாடுகளைப் பார்க்கிலும் கருணாநிதி வெறுப்பு - கலாநிதி வெறுப்பு, தயாநிதி வெறுப்பு போன்ற அகவயமான நிலைப்பாடுகளே வைகோவின் அரசியலைச் செலுத்தும் விசையாக மையங்கொண்டு இருக்கலாம். இது இரண்டாம் காரணம்”.
ஆக, மதிமுக அதன் அரசியல் மையத்தை இழந்துவிட்டது. அது உளப்பூர்வமாகக் கொள்கைகளைப் பேசவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

பெரியார் திராவிடர் கழகத்தைப் பற்றிக் கூறும்போது, பெரியாரின் கொள்கையை மிகச் சுருக்கமாக, சூத்திரம் போல, மிக அழகாக, அதே நேரத்தில் ஆழமாகத் தணிகைச்செல்வன் கூறியிருப்பது நயமாக உள்ளது.

பெரியார் கொள்கையைப் பற்றித் தணிகைச்செல்வன் மூன்று அம்சங்களில் தெளிவாகச் சொல்லுகிறார்.

1. பெரியார் பேசியவற்றின் சாரத்தைப் பகுத்துப் பார்த்தால் பெரியாரியம் இரண்டு கால்களின் மீது நிற்பது புலப்படும்.
2. சமூகநீதி ஒரு கால், தனித்தமிழ்நாடு மற்றொரு கால். இரண்டும் வெவ்வேறு அன்று, ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அவரது சமுதாயக் கொள்கைகளைச் சமூகநீதி என்றும், அரசியல் கொள்கையைத் தனித் தமிழ்நாடு என்றும் பிரித்துப் பரிசீலிப்பதே பொருத்தமாயிருக்கும்.
3. பார்ப்பனிய அடிமைத்தளத்திலிருந்து பெறும் சமுதாய விடுதலையின் பெயரே சமூக நீதி. அதன் அரசியல் அடிமைத்தளத்திலிருந்து பெறும் விடுதலையே தனித்தமிழ்நாடு.
இக்கொள்கைகளைக் கொண்டு இயங்குகிறது பெரியார் திராவிடர் கழகம். திராவிட இயக்கக் கட்சிகளில் மொழிவழித் தேசியம் பற்றிய கருத்தியலில் நெருக்கமான நிலை எடுத்து இருக்கும் கட்சி - பெரியார் திராவிடர் கழகம்தான்!
இக்கட்சியின் கொள்கைத் திட்டத்தைப் படித்து உணர்ந்து கொள்ள ஓர் ஆவணம் இல்லையே. பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவரின் உரையிலிருந்து அல்லவா கொள்கையைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது என்று தமது குறையை வெளிப்படுத்தியிருக்கிறார் தணிகைச்செல்வன். நியாயம்தானே!

நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்குத் திராவிட கழகம் பற்றித் தணிகைச்செல்வன் ஆறு பக்கங்கள் எழுதியிருக்கிறார். புரட்சி நடிகர் எம்ஜிஆருக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்கிற கோபம் கலைஞர் மேல் இருந்தது. மேலும் அவர் சுமார் 20 ஆண்டுகள் திமுகவில் இருந்தவர். புரட்சி நடிகர் எம்ஜிஆர் மக்களிடமும், கட்சியிடமும் நம்பிக்கையைப் பெற்று இருந்தவர். அதனால் அவர் கட்சி தொடங்கியவுடன் அது தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. ஆட்சியையும் அமைத்தார். சாகும் வரையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். இதற்கு முழுமுதற்காரணம் திமுக எம்ஜிஆரின் வளர்ச்சிக்குப் பின்புலமாக இருந்ததுதான்.

vijayakanth விஜயகாந்த் அப்படி இல்லை. நடிப்புத் தொழில் குறைந்தவுடன் அரசியலுக்கு வந்து இருக்கிறார். இவருக்கு என்று அரசியல் பின்புலம் இல்லை. இவர் கட்சித் தேர்தலில் ஈடுபட்டபோது இவர் மட்டுமே வெற்றி பெறுவதற்குப் பெரிதும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. விஜயகாந்தின் கட்சி, அமைப்பு, நிருவாகம், அவசரம் எல்லாம் எம்ஜிஆர் கட்சியைப் போலவே இருக்கிறது. எம்ஜிஆரைப் போல தமிழ்நாட்டில் பல நடிகர்கள் முயன்று பார்த்ததைத்தான் விஜயகாந்த் முயற்சி செய்து பார்ப்பதற்கு அரசியல் களத்திற்கு வந்து இருக்கிறார்.

தேர்ந்த அரசியல் கட்சிகளின் ஆவணங்களில் இந்தக் கொள்கையைப் பார்க்க முடியவில்லை, அந்தக் கொள்கையைப் பார்க்க முடியவில்லை என்றும்... ‘அய்யோ இக்கட்சிக்கு’ கொள்கை அறிக்கையே இல்லையே என்றும் வேதனைப்படும் தணிகைச்செல்வன் நடிகர் விஜயகாந்த்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர் வானமன்று, மேகம்!

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கொள்கைத் திட்டம் என்பது என்ன?

“நாம் ஆரியத்தால் வீழ்ந்தோம்,
திராவிடத்தால் எழுந்தோம்,
தமிழியத்தால் வெல்வோம்”
என்பதுதான்! பேரவையின் நோக்கத்தில் திமுக அரசை ஆதரித்தல் என்று அமைப்பின் நோக்கமாகக் கூறப்பட்டுள்ளதைத் தணிகைச்செல்வன் எடுத்துக்காட்டி இருக்கிறார். ஓர் அரசை ஆதரிப்பது திட்டதிலேயே இருப்பது சரியன்று என்பது தணிகைச் செல்வனின் கூற்று. தணிகைச்செல்வனின் கருத்தை நாமும் வழிமொழிகின்றோம். அப்படி இருப்பதானது பேரவை, திமுகவின் துணை அமைப்பாக இருக்க நேரிடும். அதன் தனித்தன்மை என்ன என்பதை மக்களிடம் விளக்க முடியாது. ஆகவே, சுப.வீ. இயலக்கூடியதை இப்போது செய்யட்டும். தமிழ்த்தேச விடுதலையைப் பற்றித் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் வலுப் பெறுகிறபோது தெரிவிக்கட்டும். ஆனால், திமுக அரசு ஆதரவை அமைப்பின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தவிர்த்து, ஆதரவு நிலையைக் கொள்கைச் செயற்பாட்டிற்கு ஏற்ப மேற்கொண்டால் போதுமானதாகும்.

“தேசியமும் மார்க்சியமும்” புத்தகத்தின் ஆறாம் பகுதி தமிழியமும் தேசியமும் பற்றியது. இப்பகுதியில் தமிழரசுக் கழகம், தமிழ்த் தேசியக் கட்சி, நாம் தமிழர் இயக்கம், தமிழர் தேசிய இயக்கம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் தமிழர் இயக்கம் ஆகிய கட்சிகளின் கொள்கைகளைப் பற்றி விவாதித்து இருக்கிறார் தணிகைச்செல்வன்.

தமிழரசுக் கழகம், தமிழ்த் தேசியக் கட்சி, நாம் தமிழர் இயக்கம் ஆகிய கட்சிகள் இப்போது இல்லை. இவற்றில் அதிக காலம் இயங்கிய கட்சி தமிழரசுக் கழகமே.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் அவர் காங்கிரசில் இருக்கிறபோது - காங்கிரசின் உட்கிளையைப் போலத் தொடங்கப்பட்ட கட்சியாகும். தணிகைச்செல்வன் தமிழரசுக் கழகம் பற்றி எழுதியுள்ள பகுதியில் ம.பொ.சி.யைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள இடங்களில் எல்லாம் ம.பொ.சியில் உள்ள ‘ம’, ‘மா’ என்று நெடிலாகவே குறிப்பிடப்பட்டு இருப்பது வியப்பாக இருக்கிறது. மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே அவர் முழுப் பெயர்.

தமிழரசுக் கழகத்தைப் பற்றிச் சுருக்கமாக எழுதியிருந்தாலும் எல்லா அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது. ம.பொ.சி.யைப் பற்றிய அரசியல் சித்திரம் கட்டுரையில் நன்றாகத் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

ம.பொ.சி.யின் தமிழ் முரசுப் பிரகடனம் ‘சுதந்திர இந்தியாவில் சுதந்திரத் தமிழரசை’ வெளிப்படுத்தியது என்பது உண்மையான வெளிப்பாடு அல்ல, திராவிட இயக்கத்திற்கு எதிரான ‘தமிழரசுக் கோட்பாடு’ என்பதைத் தணிகைச்செல்வன் அப்பட்டமாக இந்நூலில் எடுத்து வைத்து இருக்கிறார்.

மேலும் தமிழரசுக் கழகம் தன்னைக் குட்டி திமுகவைப் போலக் காட்டிக் கொண்டு வளர முயற்சி செய்ததைத் தணிகைச்செல்வன் மிக நன்றாகக் கூறி இருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கட்சியைப் பற்றிக் குறிப்பிடும் போது, தணிகைச்செல்வன் ஈவெகி சம்பத்தின் ஆளுமைகளைச் சிறப்பாகவும் நடுவு நிலைமையோடும் குறிப்பிட்டு இருக்கின்றார். ஆனால், ஈவெகி சம்பத் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது நேரு உறுதி மொழி தந்தார். அப்போது குடியரசுத் தலைவரும் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலும் அவ்வுறுதி மொழியை மதிக்கவில்லை என்று தணிகைச்செல்வன் எழுதியிருக்கிறார். உள்துறை அமைச்சராக அப்போது கோவிந்த வல்லப பந்த் இருந்தார். வல்லபாய் படேல் 1950லேயே மரணம் அடைந்துவிட்டார். இந்தப் பிழையை அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
-தொடரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com