Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009

திருமங்கலம் திமுக விற்கே!


திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீர.இளவரசன் எதிர்பாராமல் மரணமடைந்ததையட்டி, வரும் ஜனவரி 9ஆம் நாள் அங்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. எந்தக் கட்சி அந்த இடத்தை இழந்ததோ, அந்தக் கட்சிக்கே இடைத்தேர்தலில் அந்த இடத்தை வழங்குவதென்பது கூட்டணி மரபு. அந்த அடிப்படையில் மதிமுக தான், அதிமுக கூட்டணியின் சார்பில் அங்கு போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தை அதிமுக விற்கு விட்டுக் கொடுத்துவிட்டதாக வைகோ கூறுகின்றார். உண்மையில் அது பறித்துக் கொள்ளப்பட்டுவிட்டது என்னும் ரகசியத்தை எல்லோரும் அறிவர்.

logo எப்போதும் இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியின் மீதான விமர்சனம் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் நடைமுறையில் மாறிப்போன கூட்டணிகள், அப்போதைய நிகழ்வுகள் ஆகியனவற்றின் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் அமைகின்றன.
பொதுத் தேர்தலுக்கும், இடைத்தேர்தலுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரு தேர்தல் முடிவால் ஆட்சி மாற்றம் உட்பட எந்தவொரு பெரிய மாறுதலும் நேர்ந்து விடாது என்பதால் அதற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இருக்கமுடியாது. இருப்பினும் அம்முடிவு குறித்து அலட்சியமாக இருந்து விடவும் முடியாது.

திருமங்கலத்தில் இருபதிற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் நின்றாலும், திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலேதான் போட்டி நிலவுகிறது என்பது உண்மை. கடந்த தேர்தலில் இதே தொகுதியில் ஏறத்தாழ 19 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற விஜயகாந்தின் தேமுதிக வையும் நாம் கணக்கில் இருந்து முழுவதுமாய்க் கழித்துவிடமுடியாது. இப்போது சரத்குமார் தலைமையில் இயங்கும் அ.இ.ச.மக்கள் கட்சிக்கும் சாதி அடிப்படையில் ஓரளவு வாக்குகள் விழ வாய்ப்பிருக்கிறது. ஆக, அங்கு நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.

திருமங்கலத்திற்கு இருக்கும் இன்னொரு பெரிய சிறப்பு என்னவென்றால், அங்கு பேசியதற்காகத்தான் வைகோவும் அவர் கட்சியைச் சார்ந்தவர்களும், ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் பொடாவில் கைது செய்யப்பட்டனர். ஒன்றரை ஆண்டு காலம் சிறையிலும் இருந்தனர். அன்று சிறையில் இருந்த மதிமுகவினரில் ஒருவர்தான், மறைந்த வீர.இளவரசன். நாகராஜன் என்னும் இன்னொருவர் அதே திருமங்கலத்தைச் சார்ந்தவர். மதிமுக வை விட்டு விலகி இப்போது தேமுதிக வில் இருக்கிறார். ஆகவே வரும் இடைத்தேர்தலில் பொடாவிற்கு ஒரு முக்கிய இடமுண்டு. ஆனால், அந்த ஊரின் பொதுமேடையில் பேசி, அதனால் சிறை சென்ற வைகோவோ அவரது கட்சியினரோ அதுகுறித்து இப்போது பேச முடியாது. பாதிக்கப்பட்டது மதிமுக என்றாலும், அதனைச் சுட்டிக்காட்டிப் பயன்பெறும் வாய்ப்பு திமுகவிற்குத்தான் இருக்கிறது.

விலைவாசி உயர்வையும், மின்வெட்டையும் தங்கள் பக்கத்திற்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள எதிர்க்கட்சிகள் முனையலாம். ஆனால் இப்போது மின்வெட்டு என்பது பெருமளவிற்குக் குறைந்துவிட்டது. விலைவாசி உயர்விற்குத் தமிழக அரசை மட்டும் பொறுப்பாக்க முடியாது. அதே நேரத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில், அரசு மக்களுக்குச் செய்திருக்கும் நன்மைகள் மகத்தானவை. அவற்றைப் பட்டியலிடும் போது, ஒரு சில குறைபாடுகள் பெரிய அழுத்தம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஈழம் என்று பேசினாலே கொடிய குற்றம் என்று கருதப்பட்டு, ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆட்சியும் காலமும் இன்று மாறிவிட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பை, தமிழக அரசு ஆதரிக்கவில்லை என்றாலும், ஈழமக்கள் படும் துயரத்தை எடுத்துச் சொல்லவோ, அவர்களுக்கு ஆதரவு திரட்டவோ எந்தவொரு தடையும் இப்போது இல்லை. ஈழமக்களின் ஞாயமான குரலை தமிழக அரசே எதிரொலிப்பதையும் காண்கின்றோம். அரசே முன்நின்று அவர்களுக்காக நிதி திரட்டிய காட்சியையும் நாம் அறிவோம். ஆகவே தமிழின உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள், திமுக வை வெளிப்படையாக ஆதரிப்பதே சரியான நிலைப்பாடாகும்.

இடைத்தேர்தலில் பெரும் வெற்றி, மேலும் பல நன்மைகளை அரசு செய்வதற்கு ஏற்ற தூண்டுகோலாக அமையும் என்பதால், வரும் ஜனவரி 9ஆம் நாள், திருமங்கலம் தேர்தலில் திமுக வேட்பாளர் லதா அதியமானுக்கு வாக்களித்து அவரை மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com