Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009

மதமா? மனிதமா?


தமிழ் முழக்கம் சாகுல் அமீது

community உலகம் திகைப்பாய் உற்று நோக்கியது, இந்தியாவை ஒரு கலவர பூமியாய்...

1992 டிசம்பர் 6 அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு நாள். கலவரத்தின் முதல் விதை ஊன்றப்பட்ட நாள். அதற்கு முன் கண்டிராத கலவர பூமியாக இந்திய தேசம் மாறிப் போன நாள், மத ஒற்றுமையும். மனிதநேயமும் அற்றுப் போன கருப்புநாள்.

1992-93ஆம் ஆண்டுகளில் தொடங்கிய கலவரங்களுக்கு முழுமுதற் காரணம் இன்றைய பிரதம வேட்பாளர் லால்கிஷன் அத்வானி. இவர்தான் 1992வரை நீருபூத்த நெருப்பாகச் சலசலத்துக் கொண்டிருந்த மதக் கலவரங்களுக்கு பாஸ்பரஸ் தூவிய நெருப்பு மனிதர். 1989ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி இந்த தேசத்திற்குக் கிடைத்த சமூகநீதிக் காவலர் மாமனிதர் வி.பி.சிங்சின் நல்லாட்சியை 1990 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதிக்குள் கவிழ்த்து சாதனை படைத்தது அத்வானியின் ரத யாத்திரை. மதவெறி சக்திகள் பதவிக்காக வரலாற்றில் மன்னிக்க முடியாத பல தவறுகளை அன்றுமுதல் இன்று வரை தொடர்ந்து அரங்கேற்றி வந்திருக்கின்றன. மதவாத சக்திகள் அரசியலில் ஊடுருவியதன் விளைவாக வி.பி.சிங் போன்ற நல்ல அரசியல்வாதிகளை இந்தத் தேசம் இழக்க நேரிட்டது.

பாபர் மசூதி இடிப்புக்கு முன் நாட்டில் இன்று நடப்பது போன்ற குண்டுவெடிப்புகளோ மதக் கலவரங்களோ பெரிதாக எங்கும் நடக்கவில்லை என்பது வரலாறு. மாமனிதர் வி.பி.சிங்கின் ஆட்சி தொடர்ந்து அமைதியாக நடக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்குமேயானால் இந்த தேசம் இத்தனை கலவரங்களைச் சந்தித்து இருக்காதோ என்றே நம்பத் தோன்றுகிறது.

உண்மையில் இன்றைக்கு நாட்டில் நடப்பது என்ன? இஸ்லாமிய தீவிரவாத அடையாளத்தை வைத்துக் கொண்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை வேட்டையாடி வந்த இந்து மதத் தீவிரவாதிகள் அதே மனநிலையில் பதவி சுகம் காணத் துடிக்கும் பிஜேபியின் ஆவலை நிறைவேற்றும் குறிக்கோளுடன் நாட்டில் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்திவிட்டு இஸ்லாமியர்களின் மீது பழிசுமத்தி மிக எளிதாகத் தப்பித்துக் கொண்டிருந்தார்கள். அதைத்தான் மாலேகான் குண்டு வெடிப்பிற்குப்பின் மும்பைத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக் காவல்துறை மிகத் துல்லியமாகப் புலன் விசாரணை செய்து கண்டுபிடிக்கத் தொடங்கியது.

இந்த ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் முதலில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் செயல்தான் இது என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹேமந்த் கார்க்கரேயின் தலைமையிலான புலனாய்வுப் படை இது இஸ்லாமியத் தீவிரவாதிகளின் செயல் அல்ல இந்துமதத் தீவிரவாதிகளின் செயல் என்று நாட்டுக்கு அடையாளம் காட்டியது. அதன் விளைவாக இராணுவத் தளபதி கர்னல் சிறீகாந்த் பிரசாத் ப்ரோஹித் முதலில் கைது செய்யப்படுகிறார். அவரிடம் நடந்த தீவிர விசாரணையில் சாத்வி பிரக்யா தாகூர் என்ற பெண் சந்நியாசி, சுவாமி தயானந்த பாண்டே என்கிற ஆண் சாமியார் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி ரமேஷ் சிவாஜி உபாத்தியாயா, இராணுவ அதிகாரி சமீர் குல்கர்னி ஆகியோர் கைது செய்யப்படுகிறார்கள். இதில் தயானந்த் பாண்டே என்கிற சாமியாரின் கைது மிகவும் முக்கியமானது என்று ஹேமந்த் கார்க்கரே குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

இவர்களில் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி ரமேஷ் சிவாஜி உபாத்தியாயா ‘‘அபினவ் பாரத்’’ என்கிற ஓர் இந்துமத இயக்கத்தை நடத்தி வருகிறார். அதில் இராணுவ அதிகாரி சமீர் குல்கர்னி தீவிர ஆர்வம் கொண்ட உறுப்பினர். இந்த இயக்கத்தின் செயல்பாடுகள், இராணுவத்தில் உள்ள இந்துமதச் சிந்தனைகளைக் கொண்ட இளைஞர்களை மூளைச் சலவை செய்வது, நாட்டில் கலவரங்கள் நடப்பதற்கும் அவற்றை இஸ்லாமியர்களின் மீது சுமத்தி இந்த நாட்டில் வாழுகின்ற இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தி எதிர்காலத்தில் இஸ்லாம் மதமே இந்தியாவில் இல்லாத நிலை ஆக்கிவிட வேண்டும் என்று வகுப்பெடுப்பது, ரகசியமாய்ப் பயிற்சிகள் அளிப்பது ஆகியவை. அதுமட்டுமல்ல இந்த அமைப்பின் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது பி.ஜே.பியின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தியில் உள்ள இளைஞர்களுக்கு மத துவேஷத்தை எப்படிச் செயல்படுத்துவது என்று தொடர்ந்து வகுப்பெடுத்து பல இளைஞர்களை அதற்குத் தயார் படுத்துவது. இதனை மும்பைத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் சிறப்பு வழக்குரைஞர் அஜெய் மிஸ்ரா 15.11.2008 அன்று நாசிக் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு 70 உயிர்களைப் பலி கொண்ட இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஓடும் சம்ஜோத்தா விரைவு தொடர்வண்டி குண்டு வெடிப்பில் கர்னல் சிறீகாந்த் பிரசாத் ப்ரோஹித் முக்கிய மூளையாகச் செயல்பட்டு ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகளை பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பின் இளைஞர்களுக்கு வழங்கியுள்ளார் என்ற உண்மையையும் அவரது மடிக்கணினியில் (லேப்டாப்) இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் ஹேமந்த் கார்க்கரே .

மேலும் 2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத் மக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு. 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி ஜும்மா மசூதியில் நடந்த குண்டு வெடிப்புகளிலும் இவர்களுக்கு உள்ள தொடர்புகள் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ப்ரோஹித், ப்ரக்யா தாகூர், தயானந்த் பாண்டே ஆகியோரிடமிருந்து நான்கு மடிக் கணினிகளைக் (லேப்டாப்) கைப்பற்றியுள்ளது காவல்துறை.

இந்த ஆண்டு ஆகஸ்டு 24ஆம் தேதி கான்பூரில் ஒரு வீட்டில் பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் அது வெடித்து இரண்டு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பலியாகிறார்கள். காயங்களுடன் தப்பித்த மற்றவர்களிடம் விசாரித்தபோது 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும், டெல்லி, ஜெய்ப்பூர், பெங்களுர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் எல்லாவற்றிலும் தயானந் பாண்டேதான் முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார் என்ற உண்மைகளைத் தீவிரவாதத் தடுப்புக் காவல் துறையிடம் ஒப்பித்திருக்கிறார்கள். 145 உயிர்களுக்கு மேல் பலிவாங்கியுள்ள இந்தக் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய இவர்களைக் கைது செய்து தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில்தான் பிஜேபி, சிவசேனா, விசுவ இந்து பரிசத், ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகள் இந்தக் கைதுகளைக் கண்டித்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டன. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக் கணினிகளில் உள்ள ஒலி, ஒளி கோப்புகளின் ஆதாரங்களைக் கொண்டு நடந்து முடிந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இவர்களுடைய தொடர்புகளை நிருபித்து உள்ளது ஹேமந்த் கார்க்கரே தலைமையிலான குழு.

இந்த நிலையில்தான் ஹேமந்த் கார்க்கரே பல இந்து தீவிரவாத அமைப்புகளால் மிரட்டப்படுகிறார், கார்க்கரே மிகவும் நேர்மையான அதிகாரி, எந்த மிரட்டல்களுக்கும் சமரசங்களுக்கும் விலை போகாதவர் என்று பெயர் பெற்றவர். துணிவுமிக்கவர். தன்னலமற்றவர் என்று புகழப்பட்டவர். அப்படிப்பட்ட கார்க்கரேயும், அவரது வலதுகரமாக விளங்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவு மூத்த அதிகாரி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜெய் சலாஸ்கர் மற்றும் இரண்டு அய்.பி.எஸ் அதிகாரிகளும் கடந்த மாதம் 26ஆம் தேதி மும்பையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகளால் துல்லியமாகக் குறிவைத்து கொல்லப்பட்டிருகிறார்கள்.

தீவிரவாதிகளின் நோக்கம் இந்தியாவில் கலவரம் செய்து 5000 பேரையாவது கொன்று குவித்து மிகப் பெரிய பிரளயத்தை ஏற்படுத்துவதுதான் என்று ஊடகங்களும் காவல்துறையும் செய்தி தருகிறது. மும்பைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் 24 பேர் என்கிறது காவல்துறை.

9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு ஒருவர் உயிருடன் பிடிபட்ட பின் மீதம் 14 தீவிரவாதிகள் என்ன ஆனார்கள் எங்கே போனார்கள் என்பதும் விடுபடாத கேள்வி. அரசும் காவல்துறையும் இதுவரை அது பற்றி மவுனம் சாதிக்கும் ரகசியம் என்ன? இவ்வளவு பயங்கரக் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் துப்பாக்கிச் சண்டைகள் நடந்து முடிந்த நிலையில் இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி துப்பாக்கிச் சண்டை நடந்த டிரைடண்ட் ஓட்டலுக்குள் எந்த பாதுகாப்பு அதிகாரியையும் துணைக்கு அழைத்துக் கொள்ளாமல், 14 தீவிரவாதிகள் என்ன ஆனார்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் தன்னந்தனியாளாக ஒட்டலுக்குள் சென்று பார்வையிட்டு எந்த சேதாரமும் இல்லாமல் எப்படி வந்தார் என்பதும் சந்தேகத்திற்குரிய கேள்வி.

தீவிரவாதிகளுக்கும், கிரிமினல் குற்றவாளிகளுக்கும் தேர்தலில் நிற்கத் தடையிருக்கும் நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்ரே, குண்டு வெடிப்புகளில் முக்கியக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இராணுவத் தளபதி கர்னல் சிறிகாந்த் பிரசாத் ப்ரோஹித்துக்கு சிவசேனா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க சீட்டு கொடுக்கும் என்று அறிவித்திருப்பது சிவசேனா மீது சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆக 1992 ஆம் ஆண்டுக்குப் பின் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் மதக் கலவரங்கள் அனைத்தும் எந்த நோக்கத்திற்காக இந்த தேசத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதனால் யாருக்கு என்ன லாபம் அதிகமாக கிடைத்திருக்கிறது என்பனவற்றை உற்று நோக்கும் போது அதனால் பலனடைந்தது பிஜேபியும் அதன் பின்புல அமைப்புகளான இந்துத்துவ அமைப்புகளும்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நாட்டில் குண்டு வெடிப்புகள் நிகழும் போதெல்லாம் இஸ்லாமிய சமூகத்தை அடையாளப்படுத்தி வந்ததன் விளைவாக அதுவரை சகோதரத்துவத்துடனும் உறவுமுறைகள் கொண்டாடியும் பழகிவந்த நட்புகள் முறியத் தொடங்கி முஸ்லீம்கள் இந்த நாட்டின் பிற மதத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

எது எப்படியோ நடந்து முடிந்த அனைத்துக் குண்டுவெடிப்பு மதக் கலவர சம்பவங்களும் மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவால் என்பதை எப்போது வெகுமக்கள் சரியாக அடையாளம் கண்டு புரிந்து கொள்கிறார்களோ அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும். அரசியலைக் கேடயமாக வைத்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை நாடு சரியாக அடையாளம் கண்டால்தான் நேர்மையான அரசும் நல்ல அரசியல் தலைவர்களும் நமக்குக் கிடைப்பார்கள் என்பது உறுதி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com