Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009

கணவாய் வழியாக வந்த சாக்கடை


கவிஞர். பச்சியப்பன்

மனித வாழ்வு உன்னதமாகிட கலை மிக முக்கியப் பங்காற்றுகிறது. சமூகக் கொடியின் முன் தளிராகவே கலை இலக்கியவாதிகள் காலம் தோறும் இருந்து வந்திருக்கின்றனர். கலைச் செயல்பாட்டின் பொறுப்புணர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இவர்களின் சென்னை அக்னி கலைக்குழு ‘வர்ணம்’ என்கிற குறும்படம் சமீபத்தில் தயாரித்திருக்கிறது. படத்தை இயக்கியிருப்பவர் பகத்சிங் கண்ணன். ஒளிப்பதிவு புதுயுகம் நடராசன், படத்தொகுப்பு லெனின், இசை அன்புராஜ், மக்கள் தொலைக்காட்சியில் வந்த ‘சந்தனக்காடு’ தொடரின் உரையாடல் ஆசிரியர் பாலமுரளிவர்மன்தான் இப்படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.

dvd_varnam ஏறத்தாழ பன்னிரண்டு நிமிடப் படம் இது. கதை இதுதான், முனியப்பனும் உடன் ஒருவரும், அடைத்துக் கொண்டிருக்கும் கோயில் சாக்கடையைச் சரி செய்கின்றனர். அந்த நேரத்தில் முனியப்பனின் மகன் தந்தையைத் தேடி வருகிறான். ‘நல்ல படியா பரிட்சையில் பாசாகனும்னு சாமிகிட்ட வேண்டிக்க’ என்று உடனிருப்பவர் சிறுவனிடம் சொல்ல, அவனும் வழிபடச் செல்கிறான். அதைப்பார்த்த அர்ச்சகர் சத்தமிட, தர்மகர்த்தா ‘கோயில் தீட்டுப் பட்டதாகச்’ சொல்லி சிறுவனை அடித்துத் துரத்துகிறார். இது முதல் காட்சி. அடுத்து,
கோயில் அர்ச்சகரைத் தேடி அவரின் வீட்டுக்குத் தர்மகர்த்தாப் போகிறார். வீட்டில் ஏதோ விசேஷம் நடக்கிறது. உறவினர்கள் எல்லாம் வந்திருக்கின்றனர். தர்மகர்த்தா அர்ச்சகரின் வீட்டிற்குள் சென்று அங்கிருக்கிற முதியவர் ஒருவரின் அருகில் அமர்கிறார். அந்த முதியவரோ ஏகத்துக்குக் கூச்சல் எழுப்பிச் சூத்திரன் எப்படி பிராமணன் வீட்டில் நுழையலாம், பிராமணன் அருகில் அமரலாம் என்று திட்டி வெளியேத் துரத்துகிறார். கோயில் அர்ச்சகரும் அதனை ஆமோதித்து வீடு தீட்டுப்பட்டதாகக் கூறி வீட்டைக் கழுவ முடிவெடுக்கிறார். கோயில் தர்மகர்த்தாவிற்குச் சிறுவனின் நினைவு வருகிறது. அந்தச் சிறுவனைப் போல தானும் அவமானப்பட்டு நிற்பதை உணர்ந்து மனம் கலங்கி நிற்கிறார்.

வர்ணம் என்கிற தலைப்பிலேயே படத்தின் அரசியல் கருத்து புரிந்துவிடுகிறது. இடைநிலை சாதியாரிடத்தில் உள்ள சாதி உணர்வை மையமிட்டுஇப்படம் இயங்குகிறது. நாம் நமக்குள் உயர்வு, தாழ்வு பேசிக்கொண்டிருந்தாலும் பார்ப்பனர்கள் நம் அனைவரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். அனைவரையும் தீண்டத்தகாதவர்களாகவே வைத்திருக்கிறார்கள். இது புரியாமல் நமக்குள் உயர்வு தாழ்வு பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதைக் களைந்து நாம் ஒன்று திரள வேண்டும் என்று இப்படம் அவாவுகிறது. அதனால்தான் சிறுவனுக்கு நேர்ந்த அவமானமும், தனக்கு நேர்ந்த அவமானமும் ஒன்றே என்று தர்மகர்த்தாக் கடைசியில் நினைக்கிறார்.

இப்படம் நல்ல சிறுகதைச் செறிவுடன் இயங்குகிறது. பட்டு அங்கவஸ்திரமும், சந்தனப் பொட்டும் மின்ன மிடுக்குடன் நடந்துவரும் கோயில் தர்மகர்த்தா, கூடவே ஆமாம் சாமி போட்டுவரும் கோயில் குருக்கள். குருக்களின் வருணாசிரம தருமம் கோயில் தர்மகர்த்தாவின் பலத்தின் வழியாக நிரூபிக்கப்படுகிறது. உடல்பலம், அதிகார பலம், பொருளாதார பலம் மிக்க கோயில் தர்மகர்த்தா ஊரில் கம்பீரமாக பவனி வருகிறார். அவரிடம் வழியில் பார்ப்பவரெல்லாம் உதவி கேட்கின்றனர். வணக்கம் வைக்கின்றனர். கேட்பவர்களிடம் பார்க்கலாம் என்று சொல்லுகிற அளவிற்குக் கம்பீரம் கூடியிருக்கிறது. அது கோயில் குருக்களின் வீட்டில் ஒரு கிழப் பார்ப்பனனின் அருகில் அமரும் வரை இருக்கிறது. பிறகு அது சடச்சடவெனச் சரிகிறது. நாயினும் கீழாய்த் தனக்காகக் குரல் கொடுக்க ஆளற்றவனாய் மாற்றுகிறது, எல்லாவற்றுக்கும் உயர்வானதாகச் சொல்லப்படும் பார்ப்பனீயம். கதையின் கட்டமைப்பு நன்றாக இருக்கிறது. தர்மகர்த்தா, சிறுவன், முனியப்பனுடன் வேலை பார்க்கிறவர், கிழ பார்ப்பனன் எனப் பாத்திரமேற்று நடித்து இருப்பவர்கள் நன்றாகவே நடித்துள்ளனர். ஒளிப்பதிவுக் கண்ணுக்கு இதமாகவே இருக்கிறது.

‘கோயில்ல கண்டதப் போட்டிருப்பாங்க அதான் அடைச்சிக்கிட்டிருக்கு’ ‘சாமி ஏன் இருட்ல இருக்கு’ ‘எல்லோரும் ஜட்ஜா மாறிட்டா யாருடா டவாலி வேலை பார்க்கிறது’ ‘கோயில் தர்மகர்த்தாவாக இருந்தா நீயும் சூத்திரன்தானே’ என்பன போன்ற சிறு சிறு மின்னல்களை வசனத்தில் பார்க்கலாம். சிறுவன் கல்வி அறிவு பெறுவதைத் திட்டுகிற கோயில் தர்மகர்த்தா வேத அறிவு இல்லாமல் அவமானப்படுகிறார். ஆரம்பத்தில் கோயில் சாக்கடை காட்டப்படுகிறது. இறுதியில் மனச் சாக்கடைப் பற்றிப் பேசி முடிகிறது. ஆட்டோ வீட்டருகே நிற்பதைக் காட்டி வீட்டில் விசேஷம் என்பதைப் புரிய வைப்பது, கருத்த மேகத்திரள்கள் காட்டி பிரச்சனையின் உக்கிரத்தைச் சொல்வது என கேமிரா தன் பணியை அழகாகச் செய்திருக்கிறது. சமூகச் சீர்கேட்டைக் களைய நல்ல முயற்சி இது. படைப்பு நல்ல நோக்கத்திற்காக என்பதால் இதில் இருக்கும் குறைகளை மறக்கலாம். குறிப்பாக இது ‘வேதம் புதிது’ படத்தை நினைவூட்டுவது உட்பட.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com