Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
பிப்ரவரி 2009

நாசகாரப் பொருளாதாரம்
பேரா.முனைவர் வே.சிவப்பிரகாசம்

dallor 1776 ஆம் ஆண்டில் பொருளியல் தந்தை என அழைக்கப்படும் ஆங்கில நாட்டைச் சார்ந்த ஆடம் ஸ்மித் என்ற அறிஞர் “நாடுகளின் செல்வம்” (Wealth of nations) என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருளியல் நூலை வெளியிட்டார். இந்நூல் பிற்காலத்தில் தோன்றிய அனைத்துப் பொருளாதார நூல்களுக்கும் அடிப்படையான பொருளாதாரத் தத்துவத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் மிகையாகாது.

பொருளாதாரம் என்பது “செல்வத்தைப் பற்றிய அறிவியல்” (Science of wealth) என்றார். உடனே ஆங்கில நாட்டு எழுத்தாளர்களான ரஸ்கின் (Ruskin), கார்லைல் (Carlyle) போன்றவர்கள் ஆடம் ஸ்மித்தின் பொருளாதார இலக்கணத்தைக் குறை கூறினர். கடுமையாக விமர்சித்தனர். பொருளாதார இயல் செல்வத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பதால், மனிதனைச் சீரழித்துவிடும் என்று எச்சரித்தனர். ஒரு கட்டத்தில் பொரளாதார இயல் “தகப்பனற்ற அறிவியல்” என்றும், “இருண்ட அறிவியல்” என்றும், “சோகமான அறியல்” என்றும் சாடினர், வர்ணித்தனர்.

மனித நலத்திற்கு அடிப்படையானது, பண்டங்களின் உற்பத்தி ஆகும். அடிப்படைத் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு, படிக்கக் கல்வி, போக்குவரத்து வசதி, சுகாதாரம் போன்றவற்றை உற்பத்தி செய்யாமல், மனித நலனை மேம்படுத்த இயலாது. இதைப் பெருக்குவதற்கே அதாவது நாட்டின் செல்வத்தை அதிகரிக்கச் செய்வதற்கே பொருளாதார அறிவியல் தோற்றுவிக்கப்பட்டது என ஆடம் ஸ்மித் கூறினார். அதே நேரத்தில் மூலதனத்திற்கும், உழைப்பிற்கும் போராட்டம் ஏற்பட்டால் உழைபபின் பக்கமே அனைவரும் சார்ந்து செயல்பட வேண்டும் என்று ஆடம் ஸ்மித் உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவாக அறை கூவல் விடுத்துள்ளார்.

இராஜீவ்காந்தி 1991 இல் மறைந்த பின்னர், அவரது நினைவாக இராஜீவ்காந்தி அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற நினைவுச் சொற்பொழிவில் “லண்டன் டைம்ஸ்” பத்திரிகையின் மேனாள் ஆசிரியர் ரீஸ் மாக் என்பவர், “வரலாற்றுத் தொடர் நிகழ்வுகளில் ஆடம் ஸ்மித்தின் பொருளாதாரக் கொள்கைகள் சரியானவை என்று நிரூபணம் ஆகிவிட்டன ; ஆனால் காரல்மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் தோல்வி அடைந்துவிட்டது” என்று கூறினார். இவரது இக்கூற்று உண்மையானதா என்றால், இன்றைய அமெரிக்கப் பொருளாதாரச் சிரழிவு “இல்லை” என்றே பதிலளிக்கிறது.

பானைச் சோற்றுக்கு பருக்கை பதம் என்பதைப போல் அமெசிக்காவின் பணக்கார மாநிலமான கலிபோர்னியாவில் வசித்து வந்த கார்த்திக்ராஜாராம் என்பவர் தனது இளம் மனைவியையும், மூன்று புத்திக்கூர்மையான மகன்களையும், வயதான மாமியாரையும் தூங்கும் போது சுட்டுக்கொன்று விட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கல்நெஞ்சையும் கரையச் செய்யும் சம்பவமாகும். புதிய பொருளாதாரம் அதாவது தடையில்லா சந்தைப் பொருளாதாரத்தின் கொடூர விளைவுதான் இந்த நாசகாரச் சம்பவம் ஆகும்.

அமெரிக்கர்களே தற்கொலை செய்துகொள்ளாத நிலையில் இந்தியத் தொழில் அதிபர் ஒருவர் இப்படித் தற்கொலை செய்ததற்குக் காரணம் செல்வத்தின் மீது இருந்த அளவிட முடியாத பேராசையே தவிர வேறு இல்லை. அதாவது இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் 1986இல் பி.டெக் பட்டம் பெற்று, அமெரிக்கா சென்று, பல கோடி ரூபாய்கள் சம்பாதித்து, நிறுவனம் ஒன்றைத் தோற்றுவித்து, பின்னர் அந்த நிறுவனத்தை 1.3 மில்லியன் டாலருக்கு விற்றுப் பெருத்த வருமானத்தை ஈட்டினார். சொத்தின்மீது இருந்த அடங்காத ஆசையால், அந்தப் பணம் முழுவதையும் மீண்டும் ஊக வணிகத்தில் முதலீடு செய்தார். அந்தோ பரிதாபம் அத்தனை ரூபாயும் அமெரிக்கப் பொருளாதாரச் சுனாமியில் சுக்கு நூறாகி இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்து விட்டது. பணமும் போய்விட்டது, அவருக்கு இருந்த வேலையும் போய்விட்டது. அவர் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கிக்கொண்டார்.

இந்தக் கையறு நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று, அக்கோயிலின் பூசாரியான பட்டாச்சாரியாரைச் சந்தித்துப் பெருமாளின் அருளால் தனது பிரச்சனையைத் தீர்க்க வேண்டினார். பட்டாச்சாரியார், கார்த்திக்ராஜாராமின் அனைத்துத் துன்பத்திற்கும் பெருமாள் விரைவில் தீர்வு காண்பார் என்று உறுதியளித்தார். அதை கார்த்திக்ராஜாராம் மலைபோல் நம்பி மன உறுதியுடன் கடவுள் பக்தியுடன் இருந்தார். காலம் கடந்தது. ஆனால் மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும் தீரவில்லை. பெருமாள் மீது இருந்த கார்த்திக்ராஜாராமின் பக்தியும் நம்பிக்கையும் பொய்த்துப் போய்விட்டன. இறுதியில் குடும்பத்தைச் சார்ந்தவர்களைக் கொன்றுவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொண்டார். இதுதான் அவர் பெருமாள் மீது வைத்திருந்த பக்திக்குக் கிடைத்த பலனாகும். இதுவே புதிய பொருளாதாரம் தந்த வரலாற்றுப் படிப்பினையாகும்.

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி போன்ற ஆரிய சனாதன அமைப்புகள், சோசலிசத்தைச் சூத்திரர்களின் மனப்பாங்கு என்று கூறி முதலாளித்துவப் பொருளாதாரத்தை ஆரிய சனாதன உயர் சாதிகளின் பொருளாதாரத் தத்துவமாகப் போற்றி வருகின்றனர். அதாவது பார்ப்பனீய மதமும் முதலாளித்துவமும் ஒன்றோடொன்று சார்ந்தவையாகும். அதாவது முதலாளித்துவம், ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகளை வேதத்தின்

பேராலும் பல சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் பேராலும் நியாயப்படுத்துக்கின்றனர். இந்நிலையில் சமத்துவத்தை வலியுறுத்தும் சோசலிசப் பொருளாதாரத்தை ஆரிய சனாதனிகள் ஏற்க மறுக்கின்றனர். பார்ப்பனீய இந்து மதம் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். எனவேதான், சோசலிசம் என்பது சூத்திரர்களின் பொருளாதாரக் கோட்பாடாகும் என்று வாதிடுகின்றனர். அதே நேரத்தில் முதலாளித்துவம் என்பது ஆரிய சனாதன இந்து மத அமைப்போடு ஒத்திசைவைப் பெற்றுள்ளதாக பறைசாற்றி வருகின்றனர்.

முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரம் என்பது முழுக்க முழுக்க இலாபக் கண்ணோட்டத்துடன் செயல்படுவதாகும். ஆனால், சோசலிசப் பொருளாதாரம் முழுக்க முழுக்கச் சேவை அல்லது பகிர்வுநீதி மனப்பாங்குடன் செயல்படுவதாகும். ஆரிய சானாதனிகள் தகுதி, திறமை என்று பேசி வருவதால், போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரித்து வருகின்றனர். சோசலிசம் என்பது தகுதி திறமையற்றவர்களின் பொருளாதாரத் தத்துவம் என்று ஆர்.எஸ்.எஸ் போன்ற சனாதான இயக்கங்கள் நக்கலடித்துப் பேசி வருகின்றன.

இப்பொழுது ஒரு முக்கிய வினாவை எழுப்பலாம். அதாவது சோசலிசம் தோற்றுவிட்டது எனறால், முதாலாளித்துவம் வென்றுவிட்டதா? எனற வினாவாகும். இதற்கு முதலாளித்துவப் பொருளதாரம் படுதோல்வி அடைந்துவிட்டது என்பதே ஆணித்தரமான பதிலாகும். சீனாவில் 1978 முதல் இன்று வரை நாட்டு வருமானம் 9 விழுக்காட்டிற்குக் குறையாமல் இருந்து வருகிறது என்பது மிகப் பெரும் சாதனையாகும். ஆனால், அமெரிக்காவில் இன்று வேலையில்லாத் திண்டாட்டம் 9.1 விழுக்காடாக உள்ளது. அது மட்டுமல்ல, அதன் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. அமெரிக்க வங்கிகளை, நிறுவனங்களைக் காப்பாற்ற 700 பில்லியன் டாலர் பொது நிதியிலிருந்து அமெரிக்க அரசாங்கம் எடுத்துத் தர வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம் தலையிடாமல் அமெரிக்கச் சந்தைப் பொருளாதாரம் செயல்பட முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, முதலாளித்துவப் பொருளாதாரம் தோல்வி அடைந்து விட்டது.

அதைப் போல் ஐரோப்பிய வங்கிகளை அரசுடைமையாக்க ஐரோப்பிய் நாடுகள் முனைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசாங்கம் தலையிடத் தேவையில்லை, அதாவது சந்தைப் பொருளாதாரம் தானாகவே செயல்படும் வல்லமை படைத்தது என்ற வலதுசாரி அறிஞர்களின் கூற்று பொய்யாகிவிட்டது.

அமெரிக்க அரசாங்கம், ஐரோப்பிய அரசாங்கம், தனியார் பொருளாதாரத்தில் தலையிடவில்லை என்றால், கார்த்திக்ராஜாராமின் கதிதான் அனைத்து முதலாளித்துவ நாடுகளில் வாழ்பவர்களுக்கும் ஏற்படும் என்பது ஐயமில்லை. இப்பொழுது லண்டன் டைம்ஸ் நாளேடு ஆசிரியரின் கூற்று சரியானதா என்று அமெரிக்கப் பொருளாதாரச் சீரழிவினை முன் நிறுத்தி ஆய்வு செய்து, பதில் கூறத் தலைப்பட்டால், ஆடம் ஸ்மித்தின் முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரம் படுதோல்வி அடைந்துவிட்டது என்பதே நடைமுறை உண்மையாகிவிட்டது.

அதே நேரத்தில் கார்ல்மார்கிசினுடைய பொருளாதாரத் தத்துவம், சீனாவில் சோசலிசப் பொருளாதாரமாக மலர்ந்து வெற்றி பெற்றுள்ளது என்பது, இருண்ட முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பெரும் சவாலைத் தோற்றுவித்துள்ளது. சுயநலம் கொண்ட, இலாபக் கண்ணோட்டம் உள்ள முதலாளித்துவப் பொருளாதாரம் என்றும் வெற்றியடையாது என்பதே வரலாறும் காட்டும் படிப்பினையாகும்.

இப்படிப்பட்ட ஆங்கில அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த படுதோல்வியடைந்த நாசகாரச் சந்தைப் பொருளாதாரத் தத்துவம் இந்தியாவிற்குத் தேவைதானா என்பதே இக்கால கட்டத்தில் நம் முன்னே உள்ள முக்கிய வினாவாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com