Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
பிப்ரவரி 2009

புலிகள் மீதான தடையை நீக்குக
முத்துக்குமாரின் மரண சாசனம்

muthukumar_maranasasanam சனவரி 29 -

தமிழின வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட இன்னொரு நாள்! ஈழத்தமிழ் மக்களுக்காகத் தன் இன்னுயிரையும் ஈந்திட முடிவெடுத்து, அன்று காலை, முத்துக்குமார் என்னும் முப்பது வயது இளைஞன் ஒருவன், சென்னை, சாஸ்திரி பவன் எதிரே தீக்குளித்து மாண்ட நாள் அது.

1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தில், கீழப்பளுவூர் சின்னச்சாமி தொடங்கி எட்டுத் தமிழ் மறவர்கள், தங்கள் தேக்கு மரத் தேகத்தைத் தீக்கு இரையாக்கிய வீர வரலாற்றை நாம் அறிவோம். மீண்டும் 1995 திசம்பரில், பெரம்பலூரில், அப்துல் ரவூப் என்னும் அருந்தமிழ் இளைஞன், ஈழத்தமிழருக்காய்த் தன்னை எரித்துக் கொண்டான். இத்தகைய உயிர்த் தியாகங்கள் ஈடு இணையற்றவை என்ற போதிலும், இவை தொடரக்கூடாது என்பதே நம் விருப்பமும், வேண்டுகோளும்.

வாழ்ந்து போராட வேண்டிய இளைஞர்கள், மாண்டு மடிந்துவிடக் கூடாது . உடன்வாழும் தமிழர்களுக்கு உணர்ச்சியூட்ட மட்டுமே தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார் முத்துக்குமார் என்னும் உண்மை நமக்குப் புரிகிறது. அவர் விருப்பம் ஓரளவு நிறைவேறியும் உள்ளது. இன்று தமிழகத்தில் மீண்டும் ஒரு பேரெழுச்சி, ஈழத்திற்கு ஆதரவாய் எழுந்துள்ளது. அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் முன்பு, ஒரு துண்டறிக்கையை அங்கிருந்தவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். பல்வேறு சிக்கல்கள் குறித்து அந்த அறிக்கை பேசுகிறது.

அரசியல் தலைவர்கள் மீது அவருக்கிருந்துள்ள கோபம் அவ்வறிக்கையில் வெளிப்படுகிறது. அவர் அறிக்கையிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.

உங்கள் (மாணவர்கள்) மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குங்கள். உங்கள் போராட்டத்தைச் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆள்பலம், பணபலம், அதிகார வெறியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள். இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கிப் படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம் என்ற காசி ஆனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள். என் உடலைக் காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்ட்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே, உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியவர்களல்லவா நீங்கள்? எனக்குச் செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள் ?

தமிழீழம் என்பது தமிழீழத்தின் தேவை மட்டுமே அல்ல. அது தமிழகத்தின் தேவையும் கூட. காரணம் இராமேஸ்வரம் மீனவர்கள். உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூடச் சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரத் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்களா? எல்லை தாண்டிப் போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப் படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றால், வெறும் 12 மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் மீனவன் வழிதவறுவது நம்புவது மாதிரி யில்லையாமா ?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதரர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்தித்தான் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்து விடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆகக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் எம் கரத்தைப் பலப்படுத்து வதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாக்கவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக் குரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் தம் குடிமக்களை இனஒதுக்கல் மூலமாகக் கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்தத் தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்து கிறார்கள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப் படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால், நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை ? ஆயுதம் தாங்கிப் போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிவிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளார் எங்கள் திருவள்ளுவர்.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது

இந்தியா உடனடியாகத் தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக் கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்திய அரசு நடத்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூடச் சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும்.

இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டுப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எந்தவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங் களுக்கான வாழ்வாதாரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.