Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
பிப்ரவரி 2009

கர்நாடகத்தின் கலாச்சாரக் கழுகுகள்
அ. மார்க்ஸ்

mangalore ஜனவரி 24 அன்று மங்களூர் ‘பப்’ ஒன்றில் புகுந்து வன்முறை விளைவித்துப் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்களையும் புரிந்த ஸ்ரீராம் சேனையின் பின்புலம் குறித்து அடுத்தடுத்து வெளிப்படும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

சமீபத்திய தகவல்களின்படி மாலேகான் பயங்கரவாதிகளுடன் கர்நாடக ஸ்ரீராம சேனையின் தலைவர் புரமோத் முத்தாலிக்கிற்குத் தொடர்புள்ளது.மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ள கும்பலின் முக்கிய நபரான கர்னல் சிரிகாந்த் புரோஹித்தை ‘பயங்கரவாத எதிர்ப்புப் படை’ யினர் விசாரித்தபோது, தமது சதிச் செயல்களின் மையமாக முத்தாலிக்கின் பெயரை அவர் உச்சரித்துள்ளார். மேலும் விசாரிப்பதற்காக முத்தாலிக்கைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கர்நாடகக் காவல்துறையைப் பயங்கரவாத எதிர்ப்புப் படை கேட்டுள்ளது.

சென்ற மாத இறுதியில் ‘பப்’பிலும், தனியார் இல்லமொன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த ‘விருந்து’ ஒன்றிலும் புகுந்து வன்முறை விளைவித்த அந்த அமைப்பும், இதன் சகபாடியான பஜ்ரங் தள்ளும் சேர்ந்துதான் மூன்று மாதங்களுக்கு முன்னர் மங்களூர், ஊட்டி, தாவண்கரே முதலான இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களைத் தாக்கினார்கள்; கிறிஸ்தவர்களின் மீது வன்முறை புரிந்தார்கள். மங்களூருக்கு அருகிலுள்ள பச்சநாடி மலையில் கடந்த 60 ஆண்டுகளாக இருந்த கிறிஸ்தவ வணக்கத் தலம் ஒன்றில் புகுந்து மேரிமாதா சிலையைக் களவாடி, சிலுவைப் பாதையிலிருந்த சிலுவைகளை உடைத்து, காவிக்கொடி ஒன்றை நட்டுவிட்டும் வந்தனர். சேனையும் தள்ளும் சேர்ந்து இந்த வன்முறைகளைச் செய்தனர்.

அந்தத் தாக்குதலின் போது மூன்றாவது கூட்டாளி ஒன்றும் அவர்களுக்கிருந்தது. வேறு யாருமல்ல, கர்நாடக காவல்துறைதான் அது. ‘தக்ஷிண கன்னட’ (முன்னாள் தென் கனரா) மாவட்டக் காவல்துறை முழுவதுமே காவித்துறையாக மாறியுள்ளதை மனித உரிமை அமைப்புகள் பலவும் சுட்டிக் காட்டியுள்ளன. உண்மை அறியும் குழுவில் சென்றிருந்த என்னால் இந்தத் தாக்குதல்கள் குறித்து நேரடியான தகவல்களைப் பெற முடிந்தது. சேனையின் அமைப்புகளுடன் சேர்ந்து மஃப்டி போலீசாரும் தம்மைத் தாக்கியதாகக் கிறிஸ்தவர்கள் புலம்பினர். என்.சஞ்சீவ் குமார் என்கிற காவல்துறைக் கண்காணிப்பாளர் மிகவும் வெளிப்படையாகத் தன் காவிச் சார்பை வெளிப்படுத்திச் செயல்பட்டுள்ளார். பச்சநாடி மலையில் அத்து மீறி நுழைந்து துவம்சம் செய்தவர்களைக் கைது செய்யாமல், இருவருக்கும் இனி அது சொந்தமில்லை எனச் சொல்லி வணக்கத் தலத்தை மூடியுள்ளனர்.

தாவண்கரேயில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று தாக்கப்பட்டதை ஒட்டி, பாதிக்கப்பட்ட வர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தபோது, “இதுக்கெல்லாம் ஏன் எங்ககிட்ட வர்றீங்க. உங்க ஏசுதான் ஒரு கன்னத்தில் அடிச்சா இன்னொரு கன்னத்தையும் காட்டச் சொல்லியிருக்காரே” என அந்நிலைய அதிகாரி பேசியுள்ளார். இவற்றை எல்லாம் எங்கள் குழுவின் மேற்குச் சரக காவல்துறை ஐ.ஜி யான அ´த் மோசக் பிரசாத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தபோது “விசாரித்து நடவடிக்கை” எடுப்பதாக ரொம்பவும் மெத்தனமாகச் சொன்னதோடு நிறுத்திக் கொண்டார். கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்தால் தாக்கியவர்களைக் காட்டிலும் தாக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக இருந்தது. கேட்டால் “அவர்கள் தடையை மீறினார்கள். காவல்துறை மீது கல் வீசினார்கள்” என்று பதில் வந்தது. கட்டாய மதமாற்றம் செய்வதால்தான் கிறிஸ்தவர்களைத் தாக்குகிறோம் எனச் சொல்கிறார்களே, அப்படி ஏதும் புகார்கள் உங்களுக்கு வந்துள்ளதா என நாங்கள் கேட்ட போது “இல்லை” என ஒத்துக் கொண்டார் பிரசாத்.

அதே கும்பல்தான் இன்று ‘பப்’ பில் புகுந்து பெண்களைத் தாக்கியுள்ளது. ஆபாசமாகப் பேசியுள்ளனர். ஆடைகளை உரிந்துள்ளனர். கேட்டால் “ஆண்களும் பெண்களும் சேர்ந்து குடிப்பது பாரதியப் பண்பாடு அல்ல” என்கிறார்கள். ஆண்கள் குடிக்கலாமாம். பெண்கள் குடிக்கக் கூடாதாம். வேத காலத்துப் பெண்கள் குடித்ததில்லையா? அவ்வையும் அதியமானும் நெல்லிக் கனியை மட்டுமா பகிர்ந்து கொண்டார்கள். “கொஞ்சம் கள் என்றால் அப்படியே என்னிடம் தந்துவிடுவான். நிறைய இருந்தால் இருவரும் சேர்ந்து குடிப்போம்” என் அவ்வை மகிழ்ந்து சொல்லவில்லையா? ஒருவேளை இதெல்லாம் இவர்கள் கூறுகிற பாரதிய கலாச்சாரத்திற்குள் வரவில்லையா ?

குடியின் வரலாறு குறித்து விரிவான ஆய்வுகள் உள்ளன. ஆண்களும் பெண்களும் சேர்ந்து குடிப்பது என்பது ஏதோ மேலைநாட்டு, மேல்தட்டுப் பண்பாடு மட்டுமல்ல. நம்மூர் அடித்தள மக்களின் பண்பாடாகவும் அது இருந்துள்ளது ; இருந்து வருகிறது. குடிப்பதற்கு எதிராகக் கடுமையாகப் பிரச்சாரம் செய்கிற இயக்கங்கள் வேறு எதுவெல்லாம் “கூடாது” எனச் சொல்கிறார்கள் என்று கவனித்துப் பாருங்கள். அதிர்ச்சியாக இருக்கும்.

குடிப்பதை எல்லோரும் ஆதரிக்க வேண்டுமென்பதில்லை. எதிரான கருத்துக்களைக் கூற வேண்டாம் என்பதுமில்லை. ஆனால் ஆண்கள் குடிக்கலாம், பெண்கள் குடிக்கக் கூடாது ; வெளிநாட்டுச் சராயத்தைக் குடிக்கலாம் உள்ளூரில் வடித்த கள்ளைக் குடிக்கக் கூடாது என்றெல்லாம் பேசுவதும், வன்முறையில் இறங்குவதும் என்ன நியாயம்?

இந்த நாடு பல பண்பாடுகளை, பல மொழிகளை, பல இனங்களை, பல சாதிகளைக் கொண்டது. சொல்லப் போனால் இந்தப் பன்மைத்துவம்தான் இந்தியாவின் பெருமை. இதை ஒழித்துக்கட்டி ஒற்றை இந்துப் பண்பாட்டை உருவாக்க முனைவதுதான் இவர்களின் நோக்கம். மற்றவர்களையும், மற்றவர்களின் பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும் சகிக்க இயலாமைதான் பாசிசம்.

தங்களின் வன்முறைகளுக்காக இவர்கள் எந்தக் காலத்திலும் கூச்ச நாச்சம் பட்டதில்லை. அவற்றைப் பீற்றிக் கொள்ளத் தயங்கியதுமில்லை. “மாலேகான் தாக்குதல் ஒரு தொடக்கம்தான். ஏராளமாக (தாக்குதல்களை) எதிர்காலத்திலும் சந்திப்பீர்கள். வீட்டுக்கு வீடு சாத்வி பிரக்யாக்கள் தோன்றுவார்கள். ஒவ்வொரு இந்துப் பெண்ணும் இனி கையில் அகப்பைக்குப் பதிலாக ஆயுதத்தை ஏந்துவார்கள்” என்று, சென்ற ஜனவரி 17 அன்று முத்தாலிக் பேசியது பத்திரிகைகளில் வந்துள்ளது. அகப்பைக்குப் பதிலாக ஆயுதத்தைச் சகித்துக் கொள்ளும் மனம், கோப்பையை எப்படிச் சகித்துக் கொள்ளும் ?

பெண்கள் வேலைக்குப் போகவேண்டும். சம்பாதித்துக் கொண்டு வந்து கொட்ட வேண்டும். ‘ கால் சென்டர்’ களில் இரவு முழுவதும் கண்விழித்திருக்க வேண்டும். ‘துர்கா வாஹினி’ யில் சேர வேண்டும். தலைவர்களுக்குப் ‘போஸ்டர்கள்’ ஒட்டவேண்டும். ‘ஆயுதங்கள்’ ஏந்த வேண்டும். முஸ்லிம், கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும். சாமியாரிணிகள் ஆக வேண்டும்...எல்லாம் செய்யலாம். கையில் கோப்பைகளை ஏந்துவது மட்டும் சகிக்க முடியாது. இதுதான் இந்துவத்தின் ‘லாஜிக்’

உள்ளூரில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் வந்ததாலும், பாராளுமன்றத் தேர்தல்கள் சமீபிப்பதாலும் கிறிஸ்தவர்களின் மீதான தாக்குதலின் போது நடந்து கொண்டது போலன்றி, கர்நாடக அரசு இன்று கொஞ்சம் நடவடிக்கை எடுத்துள்ளது. தனி நபர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும், அமைப்பின் மீது எடுக்க முடியாது என முதலில் அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. எதிர்ப்புகள் வலுப்பட்டதை ஒட்டி இப்போது

எடியூரப்பா இந்த அமைப்பைத் தடை செய்வது பற்றி ‘அமைச்சரவை நண்பர்களுடன்’ கலந்தாலோசிப்பதாகக் கூறியுள்ளார். கூடவே ‘பப்’ கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் எனவும் சொல்லியுள்ளார். இதன் பொருள் என்ன ? அமைப்பைத் தடை செய்வோம். அமைப்பின் கொள்கைகளை நிறைவேற்றுவோம் என்பதா ? அவர்கள் சட்ட விரோதமாகச் செய்ததை நாங்கள் சட்டப் பூர்வமாகச் செய்வோம் என்பதா ?

பாசிசம் இலக்கை மாற்றுவதற்குத் தயங்காது. சிவசேனையை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் தொழிற் சங்கத்தினர். அப்புறம் தமிழர்கள். அப்புறம் முஸ்லிம்கள். இப்போது வட இந்தியர்கள். கர்நாடகப் பாசிசம் தமிழர்கள்/ முஸ்லிம்கள்/ கிறிஸ்தவர்கள்/ ‘பப்’ பண்பாடு பேணுபவர்கள் என்பதாக மாறி மாறி இலக்காக்குவதையும் நாம் கவனிக்கத் தவறலாகாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com