Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
பிப்ரவரி 2009

என்னைக் கவர்ந்த புத்தகங்கள் - 3
எங்கெல்ஸின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்
இரா. ஜவஹர்

Jawahar செக்ஸ்!

உடலுறவு!

இந்த வார்த்தையைக் கேட்ட உடனே முற்போக்காளர்களில் பலர் கூட முகம் சுளிக்கிறார்கள்! கற்பு, திருமணம், மண விலக்கு (விவாகரத்து), குடும்பம், பெண்ணியம் ஆகிய விசயங்கள் எல்லாம் காரசாரமான சர்ச்சைக்கு உரியவையாகவே இன்றும் உள்ளன, முற்போக்காளர்கள் மத்தியில் கூட! அப்படி இருக்கும் போது சராசரி மக்களைப் பற்றிக்கேட்கவா வேண்டும்!

இன்றைக்கு உள்ள ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற திருமணமுறை, குடும்பம் என்ற அமைப்பு ஆகியவை எல்லாம் புனிதமானவை, மனித சமுதாயம் தொடங்கிய காலத்திலிருந்து இப்படியே இருந்து வருபவை என்றே மக்கள் நம்புகிறார்கள். இந்த அமைப்புகள் வருங்காலத்திலும் இப்படியே இருக்கும் என்றும், இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இதற்கு மாறாக யாரேனும் பேசினாலோ, செயல்பட்டாலோ அதை ஒழுக்கக்கேடு என்று தூற்றுகிறார்கள்.

நானோ சிறுவயதில் பக்திமானாக இருந்தவன். சீதை, நளாயினி, சாவித்திரி என்று “கற்புக்கரசி”களைப் போற்றி வந்தவன். “கற்புக்கரசன்” என்று அநேகமாக எவனும் இல்லையே என்பது பற்றிச் சிந்திக்காதவன்! இந்தப் பின்னணியில் வளர்ந்து வந்த நான், ஒருமுறை மனிதகுல வரலாறு பற்றிப் படித்தேன். ஒருவருக்கொருவர் மட்டுமான திருமணமுறையோ, குடும்பம் என்ற அமைப்போ தொடக்க காலத்தில் இல்லை என்பது தெரிய வந்தது. யாரும், யாருடனும் உடலுறவு கொள்ளும் நிலை அப்போது இருந்தது என்று படித்த போது அதிர்ச்சி அடைந்தேன். இதைச் செரிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். எனினும் தொடர்ந்து படித்து வந்தேன்.

பிறகு இன்றைய திருமண முறையும், குடும்ப அமைப்பும் எவ்வாறு ஏற்பட்டன என்ற கேள்வி எழுந்தது. “அறிவும், நாகரிகமும், ஒழுக்க உணர்வும் வளர்ந்த பிறகே இந்தத் திருமண முறையும், குடும்பமும் ஏற்பட்டன” என்பது போலப் புரிந்து கொண்டேன். ஆனால் இந்தப் புரிதல் இடிந்தது! அறிவும், நாகரிகமும், ஒழுக்க உணர்வும் வளர்ந்து விட்டது என்றால், இன்றைக்கும் வறுமை, விபச்சாரம், திருட்டு, போர், கொலை... என்பதெல்லாம் நீடிப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை!

இந்தச் சூழ்நிலையில் தான் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற புத்தகம் எனக்குக் கிடைத்தது. படித்தேன். சுத்தமாகப் புரியவில்லை! மீண்டும் மீண்டும் படித்தேன். விவாதித்தேன். கண் பார்வை இல்லாதவருக்குக் கண்பார்வை கிடைத்தது போலப் பளிச்செனத் துலங்கியது வரலாறு! எங்கெல்சுக்கு நன்றி!

எங்கெல்ஸ் ?

“எத்தகைய பகுத்தறிவுத் தீப்பந்தம்

எரிவதை நிறுத்தி விட்டது!

எத்தகைய இதயம்

துடிப்பதை நிறுத்திவிட்டது!”

-எங்கெல்ஸ் இறந்த போது அவரைப் பற்றி லெனின் இந்தக் கவிதையை மேற்கோள் காட்டி எழுதினார். ஜெர்மனியில் ஒரு முதலாளித்துவக் குடும்பத்தில் பிறந்து, பாட்டாளி வர்க்கத்துக்காய்த் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர், எங்கெல்ஸ் என்ற ஃபிரடெரிக் எங்கெல்ஸ். பாட்டாளி வர்க்கம் என்பது துன்பப்படுகிற வர்க்கம் மட்டுமல்ல ; போராடுகிற வர்க்கம் ; சோசலிசத்தை நோக்கி முன்னேறும் வர்க்கம் என்பதை மார்க்சுக்கு முன்பாகவே முதலில் ஆய்ந்து சொன்ன மேதை எங்கெல்ஸ். அவர் தனது 24 ஆவது வயதில் மார்க்சைச் சந்தித்தார். அப்போது மார்க்சுக்கு வயது 26. அன்று முதல் மார்க்சின் மறைவு வரை சுமார் 40 ஆண்டு காலத்துக்கு நீடித்த இவர்களது நட்பு “ காவிய நட்பை விட உள்ளத்தை உருக்கும் ” அன்பு கனிந்த, அறிவார்ந்த நட்பாக விளங்கியது.

மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவரது படைப்புகளும், மார்க்சின் மறைவுவரை இருவரும் கலந்துபேசி உருவாக்கியவையே. எனினும் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் அதிக ஆழமான ஆய்வுகளை மார்க்ஸ் மேற்கொண்டார். தத்துவத்திலும், அறிவியலிலும் அதிக ஆழமான ஆய்வுகளை எங்கெல்ஸ் மேற்கொண்டார். இது, வரலாறு பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வில் எங்கெல்சுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

“ மார்க்சுக்கு அடுத்து எங்கெல்ஸ்தான் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்த மேதை, ஆசிரியர்” என்றார் லெனின். இந்த மேதையின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற புத்தகத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். வரலாறு என்றாலே மன்னர்களின் வரலாறு அல்லது சம்பவங்களின் தொகுப்பு என்ற வகையிலேயே முன்பு எழுதப்பட்டு வந்தது. இதற்கு மாறாக, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதே வரலாறு என்ற அறிவியல் கண்ணோட்டத்தை 1840ஆம் ஆண்டுகளிலேயே மார்க்சும், எங்கெல்சும் உருவாக்கினார்கள்.

பிறகு மானுடவியல் அறிஞர் மார்கன் 1870களில் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை மிக விரிவாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்து ஏறத்தாழ இதே முடிவை வெளிப்படுத்தினார். மார்கன், வரலாற்று ஆய்வாளர் பகோஃபென் உள்ளிட்ட ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளையும், காரல் மார்க்சின் ஆய்வுக் குறிப்புகளையும், தனது சொந்த ஆய்வு முடிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு எங்கெல்ஸ், ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற புத்தகத்தை எழுதினார்.

முதலில் 1854 ஆம் ஆண்டில் இந்தப் புத்தகம் வெளியானது. பின்னர் இதைத் திருத்தி, விரிவுபடுத்தி 1891 ஆம் ஆண்டில் (நான்காம் பதிப்பாக) எங்கெல்ஸ் இதை வெளியிட்டார். எந்த அளவுக்கு விரிந்து பரந்த ஆய்வை எங்கெல்ஸ் மேற்கொண்டார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பாருங்கள். “தென்னிந்தியாவில் தமிழர்கள் மத்தியில் உள்ள ரத்த சம்பந்தமான உறவு முறைக்கான இருநூறுக்கும் மேற்பட்ட சொற்களும், (அமெரிக்காவின்) நியூயார்க் மாநிலத்தில் உள்ள செனீகா இரோகுவாய் மக்கள் மத்தியில் உள்ள உறவுமுறைச் சொற்களும் இன்றும்கூட ஒன்று போலவே உள்ளன” என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்!

இப்போது புத்தகத்தின் சுருக்கத்தைப் பார்ப்போம்:

engelsin மனிதக் குரங்கிலிருந்து (Ape) மனிதராக மாறிய தொடக்க காலத்தில், சிறுசிறு குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்தார்கள். இயற்கையில் கிடைத்த காய்கனிகளைச் சேகரிப்பது, பிறகு மீன்பிடிப்பது, விலங்குகளை வேட்டையாடுவது, உண்பது என்று வாழ்ந்தார்கள். இவற்றுக்குத் தேவையான கல் கருவிகளை உருவாக்கினார்கள். ஆண்கள் பெரும்பாலும் வெளிவேலைகளையும், பெண்கள் பெரும்பாலும் சமைத்தல், குழந்தைகளைப் பராமரித்தல் மற்றும் பல உள்வேலைகளையும் கவனித்தார்கள். வெளிவேலை, உள்வேலை இரண்டுமே சமூகவேலைகள் தான்.

தனிக்குடும்பம் இல்லை. தனி வேலையும் இல்லை. தனிச் சொத்தும் இல்லை. கூட்டுவாழ்க்கை வாழ்ந்தார்கள்.யாருடனும் யாரும் உடலுறவு கொண்டார்கள். எனவே எந்தக் குழந்தைக்கும் தகப்பன் யார் என்பது தெரியாது. தாய் தான் தெரியும். ஆகவே தாய்வழிச் சமூகமாக இது இருந்தது. பெண்களுக்கு உயர்ந்த அந்தஸ்தும் இருந்தது. இது பழங்காலக் கம்யூனிசச் சமுதாயம் என்று குறிப்பிடப்படுகிறது.

காலப்போக்கில் இயற்கைத் தேர்வு (Natural Selection) செயல்பட்டது. இன்னாருடன் தான் உடலுறவு கொள்ளலாம் என்று படிப்படியாகக் கட்டுப்பாடுகள் உருவாயின. இதன்போக்கில் இணைக்குடும்பம் (Pairing Family) என்ற அமைப்பு ஏற்பட்டது. அதாவது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மட்டும்தான் உடலுறவு கொண்டு சேர்ந்து வாழவேண்டும்; அவர்கள் வேறுயாருடனும் உடலுறவு கொள்ளக்கூடாது. எனினும் இந்தத் திருமணக்கட்டு இறுக்கமானது அல்ல; விரும்பினால் பிரிந்து விடலாம்; வேறு ஒருவருடன் சேர்ந்து வாழலாம் என்ற நிலை உருவானது.

ஒருவருக்கு ஒருவர் மட்டும் என்ற இந்த இணைக் குடும்பம் உருவானதற்குப் பொருளாதாரம் காரணம் அல்ல. இயற்கைத்தேர்வு மற்றும் பெண்ணின் விருப்பம் ஆகியவையே காரணம். பின்னர் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிப் போக்கில் தனிச் சொத்து உருவானது. வெளிவேலைகளை ஆண் செய்து வந்ததால் அவனது சொத்தானது. தனது சொத்தைத் தனது வாரிசு தான் பெறவேண்டும் என்பதால் மனைவி வேறுயாருடனும் உறவு கொள்ளவோ, மணவிலக்கு செய்து பிரிந்து போகவோ தடை விதிக்கப்பட்டது. இறுக்கம் இல்லாத நெகிழ்வான இணைக் குடும்பம் என்ற முறை மாற்றப்பட்டது. இறுக்கமான, ஒருவருக்கு ஒருவர் மட்டுமான திருமணமுறை (Monogamy) உருவாக்கப் பட்டது. பெண் அடிமையானாள். தாய்வழிச் சமூகம் மறைந்தது. தந்தை வழிச் சமூகம் ஆனது.

(குடும்பம் என்பதற்கு ஆங்கிலத்தில் Family . இதன் வேர்ச்சொல் லத்தீன் மொழியில் Familus என்பதாகும். Famulus என்றால் ‘வீட்டு அடிமை’ என்று பொருள்!)

எதிர் காலத்தில் கம்யூனிசச் சமூகம் உருவாகும். அதில் தனிச் சொத்துமுறை இருக்காது. அரசு எந்திரம் மறையும். எனவே தனிச் சொத்து முறையின் காரணமாக உருவான, ஒருவருக்கு ஒருவர் மட்டுமான திருமணமுறையும் (Monogamy) மறைந்து விடுமா? மறையாது! ஆதிகாலத்தில் இல்லாத, மத்திய காலத்தில் கருவாகி வளர்ந்து வருகிற, ஒருவரோடு மட்டுமான உடலுறவை அடிப்படையாகக் கொண்ட காதல் (Individual Sex Love) கம்யூனிசச் சமூகத்தில் முழுமை பெறும்!

எது மறையும்? ஆண் ஆதிக்கம் மறையும். திருமணத்தின் விலக்க முடியாத, இறுக்கமான கட்டு மறையும். எது சேரும்? தெரியாது! இதை எதிர்காலத்தில் வரும் புதிய தலைமுறை தானாகவே முடிவு செய்து கொள்ளும்! - இது தான், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற புத்தகத்தின் சுருக்கம்.

இப்போது இதில் உள்ள சில சுவையான பகுதிகளைச் சுருக்கிப் பார்க்கலாம்:

“ ஒருவரோடு மட்டும் உடலுறவு கொள்ளக் கூடிய, கண்டிப்பான, ஒருவருக்கு ஒருவர் மட்டுமான திருமணமுறைதான் தலைசிறந்த நல்ல குணம் என்றால், இதற்கான பரிசைத் தன்னைத்தானே புணர்ந்து கொள்ளும் நாடாப்புழுவுக்குத்தான் அளிக்க வேண்டும்! ”

“ ஆதிகாலத்தில் வரம்பு முறையற்ற உடலுறவு இருந்தது. இதை நாம் ஆராயும் போது விபச்சாரக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு ஆராயும் வரைக்கும் நம்மால் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது.”

“ ஒருவருக்கு ஒருவர் மட்டுமான திருமண முறையில் இருந்து தான், ஒருவரோடு மட்டுமான உடலுறவை அடிப்படையாகக் கொண்ட நவீன காலக் காதல் (Modern Individual Sex Love) உருவாகி வருகிறது. இந்தக் காதலானது ஒழுக்கத்தின் தலைசிறந்த முன்னேற்றமாகும்.”

“ சமூக ரீதியிலான உற்பத்தி வேலையிலிருந்து (தொழில், விவசாயம், சேவை போன்றவை) பெண்கள் விலக்கப்பட்டு உள்ளவரை, வீட்டுவேலையில் முடக்கப்பட்டு உள்ளவரை பெண்விடுதலையோ, ஆண்-பெண் சமத்துவமோ சாத்தியமாகாது.”

அடுத்து நாம் பார்க்கப் போவது, நவீன உலகின் ஈடு இணையற்ற, தலைசிறந்த புரட்சிகரத் தலைவரின் புத்தகத்தைப் பற்றி.

(இன்னும் படிக்கலாம்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com