Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு நேர்காணல்
சந்திப்பு: இனியன்


அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்தாய்வு, நலத்திட்டவிழா, கட்சிக்கூட்டம் என சுற்றிச் சுழன்றவண்ணம் இருக்கிறார் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின். திருப்புமுனையை உருவாக்கப்போகும் திருநெல்வேலி இளைஞர் அணி மாநாட்டிற்கு மேடைஅமைப்பதில் தொடங்கி தொண்டர்கள் அணி வகுப்பது வரையினில் அங்குலம் அங்குலமாய் ஆலோசித்து வருகிறார். இத்தனைக்கும் நடுவில் கருஞ்சட்டை தமிழருக்கு நேரம் ஒதுக்கி அவர் நமக்கு அளித்த சிறப்பு நேர்காணல்.

நெல்லை மாநாடு எந்தெந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?

நெல்லை மாநாட்டை - காலத்தையும் இடத்தையும் சரியாகக் கணித்து, கூட்டச் செய்திருக்கிறார் தலைவர் கலைஞர். அந்த மாநாடு இன்னின்ன வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வரிசைப்படுத்திச் சொல்ல முடியாத அளவுக்கு, இனிய பயன் செறிந்தது, எல்லா வகையிலும் ஏற்றம் நிறைந்தது, எனச் சரித்திரம் சான்று பகரும் அளவுக்குப் பெருவெற்றியை ஈட்டித் தரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

திராவிட இயக்கக் கொள்கைகளை, தி.மு.கழக இளைஞர்களிடையே அழுத்தமாகக் கொண்டு செல்ல மாநாடு வழிவகுக்குமா?

இரண்டே நாட்கள் நடைபெறும் ஒரு மாநாட்டின் வாயிலாக இயக்கக் கொள்கைகள் அனைத்தையும் அழுத்தமாகக் கொண்டு செல்வதென்பது இயலாத ஒன்று. இது தொடர்ந்து நடைபெற வேண்டிய காரியமாகும். கழக இளைஞர் அணியினர்க்கு ஏற்கனவே மாவட்டந்தோறும் நடைபெற்ற பாசறைக் கூட்டங்களின் மூலமாக திராவிட இயக்கக் கொள்கைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடெங்கிலும் நாள்தோறும் ஆங்காங்கே நடைபெற்றுவரும் பிரச்சாரக் கூட்டங்கள், ‘முரசொலி’ ஏட்டில் தலைவர் கலைஞர் எழுதும் கடிதங்கள், கழக முன்னணியினர் எழுதும் கட்டுரைகள் ஆகியவற்றின் வாயிலாகவும் கொள்கை விரிவுரைகள் தரப்பட்டு அவை இளைஞர்களைச் சென்றடைகின்றன. நெல்லையிலே நடைபெற உள்ள மாநாட்டின் மூலம் இளைஞர்கள் மத்தியிலே திராவிட இயக்கக் கொள்கைகளைப் பற்றிய விழிப்புணர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்திட முடியும் என எண்ணி எதிர்பார்க்கிறேன்.

‘இளைஞர்களுக்கு வழிவிடுவோம்’ என்று முரசொலியில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் தலைவரின் கடிதங்கள், கட்சிக்குள் வரப்போகும் ஒரு பெரிய மாற்றத்திற்கான முன் அறிவிப்பு என்று ஒரு கருத்து நிலவுகிறதே... அது குறித்து?

‘மாற்றம் என்பதுதான் மாறாத ஒன்று’ என்றார் கார்ல் மார்க்ஸ். ‘புதியன புகுதல்’ என்பது தி.மு.க. போன்ற உயிரோட்டமுள்ள இயக்கத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது. அரை நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றை உடைய தி.மு.க. இன்றைக்கும் வாலிப முறுக்கோடும், மிடுக்கோடும் திகழ்வதற்கு காரணமே இளைஞர்களுக்குத் தொடர்ந்து வழிகள் திறந்திருப்பதுதான்.

இதுவரை இல்லாத அளவிற்கு, மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணிக் கட்சியினரே, ஆளும் கட்சியைக் கடுமையாக விமர்சிக்கின்றனரே... இந்நிலை ஆரோக்கியமானதுதானா?

விமர்சனமும், சுயவிமர்சனமும் வரவேற்கப்பட வேண்டியவை மட்டுமல்ல, தேவையானவையும் கூட. தனி மனிதனுக்கும் சரி - ஓர் இயக்கத்திற்கும் சரி - இவையிரண்டும் வளர்ச்சிக்கு வழிவகுப்பன. ஆனால் ஒன்று, விமர்சனம் ஆரோக்கியமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் அமைந்திடுதல் அவசியம். ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே கொள்கைகள், கோட்பாடுகள் என்றிருக்கும்போது - அப்படிப்பட்ட கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்திடும் போது - விமர்சனம் என்பது தவிர்க்க முடியாதது. எல்லையற்ற விமர்சனம், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற விமர்சனம், எதற்கெடுத்தாலும் விமர்சனம் என்பது தவிர்க்கப்பட வேண்டும். தட்டிக் கேட்பது தவறில்லை வெட்ட முயல்வது விபரீதத்தையே ஏற்படுத்தும்.

முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகியனவற்றில் குறுக்கே அணை கட்டத் திட்டமிடும் அண்டை மாநிலங்களின் போக்கை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகின்றது?

தமிழக அரசு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இந்தியா போன்ற கூட்டாட்சி அமைப்பில், மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளில் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது, விட்டுக் கொடுப்பது, நட்பையும் நாகரிகத்தையும் கடைபிடிப்பது, ஒருதாய் மக்கள் என்ற உணர்வோடு அணுகுமுறைகளை வகுத்துக் கொள்வது என்பது கூட்டாட்சித் த்துவத்திற்கே கூடுதல் லிவையும்

வலிவையும் சேர்க்கும். ஒப்பந்தங்களுக்கு மதிப்பில்லாமல் நடந்து கொள்வது, நீதிமன்றத் தீர்ப்புகளைப் புறக்கணிப்பது போன்றவை வெறுப்பையும், வீண் பகையையும் வளர்த்திடவே உதவும். முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகளில் தமிழக அரசு மாநிலத்தின் உரிமையை எள்முனையளவும் விட்டுத் தராது, உரிமையைக் காத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

சேதுக்கால்வாய்த் திட்டம் தொடர்பாகத் தங்களின் வாக்குமூலத்தை (Affidavit) இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் மத்திய அரசு காலந்தாழ்த்துவது, அத்திட்டத்தின் வேகத்தைப் பின்னடையச் செய்து விடாதா?

சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதியாக இருக்கிறது. நீதிமன்றத்தில் வாக்குமூலத்தைச் சமர்ப்பிப்பதில் மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் நடவடிக்கை எடுத்து வருவதாகவே அறிகிறேன். அப்படி கவனத்தோடும் எச்சரிக்கையோடும் எடுத்துவரும் நடவடிக்கையை நாம் காலம் தாழ்த்துவதாகக் கருதிவிடலாகாது.

காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் குமார் ஆகியோர் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கவலை தருவதாக உள்ளதே..?

இந்தத் தாக்குதல்கள் நிச்சயம் கவலை தருவன என்பதில் இரண்டு கருத்துகள் இருந்திட முடியாது. அதனால்தான். முதலமைச்சர் கலைஞர் அவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளைக் கூட்டி உடனடித் தேவையான உத்தரவுகளை வழங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாகக் கூலிப் படையினர், ரௌடிகள் ஆகியோர்க்கெதிராகக் காவல்துறை நடத்திவரும் வேட்டை நல்ல பலனைக் கொடுத்து வருகிறது என்று நம்புகிறேன். இது ஏதோ இப்போதைக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்றில்லாமல், எப்போதும் இந்தக் கண்காணிப்பும் தீவிரமும் இருந்திட வேண்டும் என்று தமிழ் மாநில நலனில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் விரும்புகிறார்கள்.

அரசியலற்ற குற்றச்சாட்டுகளையும், பழியையும் உங்கள் மீது ஜெயலலிதா சுமத்துவதற்கு என்ன காரணம்?

தி.மு.கழகத்தை மாசுபடுத்தி அழித்தொழிப்பதற்கு ஜெயலலிதா எத்தனையோ யுக்திகளை கடைபிடித்தார். எத்தனையோ ஆயுதங்களை பிரயோகித்தார். தி.மு.கழகத்தின் ஆணி வேரை மட்டுமல்ல, சல்லி வேர்களில் கூட ஒன்றையும் அவரால் ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை. என்மீது ஜெயலலிதா குற்றம் சாற்றுவதற்கும், பழி சுமத்துவதற்கும் காரணம் அவரது வஞ்சக நெஞ்சத்தில் நிறைந்துள்ள பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும்தான்.

‘தடாலடி’ அரசியல் அறிக்கைகள், ஆர்ப்பாட்டமான சவால்களுக்கிடையே உங்களின் மென்மையான அரசியல் அμகுமுறை எதிர்காலத்தில் வெற்றி பெறுமா?

தடாலடி அறிக்கைகளும், ஆர்ப்பாட்டமான சவால்களும் வாணவேடிக்கையின் வர்ணஜாலங்களைப் போன்றவை, கண்சிமிட் டும் நேரத்தில் காற்றில் கரைந்து விடுபவை. ஜனநாயக அரசியலில் மென்மையான அணுகுமுறையே மேன்மையானது என்று நம்புகிறவன் நான். ‘அண்ணா வழியில் அயராதுழைப்போம்’ என்ற முழக்கத்தில் மென்மையான அμகுமுறையும் அடங்கும். தடாலடி, அடாவடி, அதிரடி - எதையும் தலைவர் கலைஞர் எங்களுக்குக் கற்றுத் தரவில்லை.

தலைவரிடம் இருப்பது போன்ற கலை. இலக்கிய ஈடுபாட்டை உங்களிடம் காண முடியவில்லையே ஏன்?

தலைவரோடு என்னை மட்டுமல்ல. யாரையுமே ஒப்பிட முடியாது. தலைவர் ஓர் அஷ்டாவதானி, ஒரு தசாவதானி. கலை இலக்கிய ஈடுபாடு - தலைவரிடம் இருப்பதைப் போன்று என்னிடம் கடலளவு இல்லை என்றாலும் கையளவு உண்டு.

வேலை நியமனத் தடைச் சட்டத்தை அகற்றிய பின், உள்ளாட்சி, ஊரக வளர்ச்சித் துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளனவா?

கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று- வேலை நியமனத் தடைச் சட்டம் அகற்றப்பட்டதற்குப் பறிகு நான் பொறுப்பு வகித்திடும் துறைகளில் மட்டும் மொத்தம் 23 ஆயிரத்து 514 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று பணியாற்றும் நீங்கள், மக்களிடமிருந்தும், கழகத் தோழர்களிடமிருந்தும் பெறும் அனுபவங்களைப் பற்றிக் கூற முடியுமா?

கழகத் தோழர்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும் நான் பெற்றுவரும் அனுபவங்கள் - ஒரு பெரிய நூலாகத் தொகுத்திடும் அளவுக்கு - விரிவானவை, அருமையானவை. அந்த அனுபவங்களைப் பற்றி ஒரே வரியில் கூற வேண்டுமானால், அவை எனக்கு ஆசான்களாகின்றன. அனுதினமும் கற்பதால் எனதறிவு ஆழமாகி விசாலமடைகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com