Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
டிசம்பர் 6 : புதிதாய் எழும் குறியீடு
ரவிக்குமார்


டிசம்பர்_6, இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாளாகப் பதிந்துவிட்டது. பாபர் மசூதியை இடித்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்களைப் படுகொலை செய்து இந்துப் பரிவாரங்கள் வரலாற்றின் பக்கங்களை குருதியால் கறைபடுத்திய நாள் அது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட அனைவருமே அந்த நாளை துக்கத்தோடும், ஆத்திரத்தோடும் நினைவு கூர்கிறோம்.

டிசம்பர் - 6 ஆம் நாளை இந்துப் பரிவாரங்கள் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்த நாள் புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாள். லட்சக்கணக்கான மக்களோடு பௌத்தத்தைத் தழுவி இந்துத்துவத்துக்குக் குலைநடுக்கத்தை உண்டாக்கிய அந்த மாமனிதரை நினைவு கூர்வதன் மூலம் ‘‘நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால் ஒரு இந்துவாக சாகமாட்டேன்’’ என்று அவர் செய்த சபதத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் நினைவுபடுத்திக் கொள்ளும் நாள் அது! ‘‘இந்துயிசத்தின் தத்துவத்தை’’ அம்பலப்படுத்திக் காட்டிய அம்பேத்கரின் கொள்கையின் பெயரால் உறுதியேற்கும் நாள் அது! ‘‘இந்தியாவில் சனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் வகுப்புவாதப் பெரும்பான்மையிடம் அதிகாரத்தை கொடுக்கக்கூடாது’’ என்ற அம்பேத்கரின் எச்சரிக்கையை நினைவில் புதுப்பித்துக்கொள்ளும் நாள் அது! அம்பேத்கரை நினைவு கூர்வதே இந்துத்துவத்தை எதிர்ப்பதுதான் என்பதைப் புரிந்து கொண்டது மதவெறிக் கும்பல்.

அதனால்தான் அந்த நாளைத் தேர்ந்தெடுத்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க பாபர் மசூதியைத் தகர்த்ததன்மூலம் டிசம்பர் - 6ஆம் நாளை அமைதியான முறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கடைபிடிக்க முடியாதபடி ஆக்கிவிட்டனர். இப்போது டிசம்பர் - 6 என்பது பதற்றம் நிறைந்த நாளாக மாற்றப்பட்டு விட்டது. அம்பேத்கரின் நினைவு பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

இஸ்லாமியர்களாவது அந்த நாளை துக்க நாளாகக் கடைபிடிக்க முடிகிறதா? தமது இழப்பின் வலியை எண்ணிப்பார்த்து தமது எதிர்காலத்தைத் திட்டமிட முடிகிறதா? அதுவும் இல்லை. எந்த இஸ்லாமிய சமுதாயம் இழப்புக்கும், படுகொலைகளுக்கும் ஆளாக்கப்பட்டதோ அதையே பயங்கரவாத சமூகமாக சித்தரித்து ‘அவர்கள் பதிலடி தரப்போகிறார்கள்’ ‘குண்டு வைக்கப்போகிறார்கள்’ என்று பீதியைக் கிளப்பி அந்த நாளில் இஸ்லாமியர் எவரும் அச்சமின்றி நடமாட முடியாத ஒரு நிலையை இந்துப் பரிவாரங்கள் ஏற்படுத்திவிட்டன.

பாபர் மசூதியை இடிப்பதற்கு டிசம்பர் - 6ஆம் நாளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அம்பேத்கரின் நினைவையும் மறைத்துவிடலாம், இஸ்லாமியர்களையும் கிலி கொள்ளச் செய்து ஒடுக்கிவிடலாம் என்று இந்துத்துவவாதிகள் எண்ணியிருந்தனர்.

முதலில் அந்தத் திட்டம் ஓரளவு பலித்தது என்பதும் உண்மைதான். ஆனால் அது இன்னொரு நன்மையைச் செய்து விட்டது. ஒடுக்கப்பட்ட மக்களும், இஸ்லாமிய மக்களும் ஒன்றுபடுவதற்கு அது வழிவகுத்துவிட்டது.

இந்துத்துவவாதிகளால் புறமொதுக்கப்பட்ட, அன்னியர்களாய் பார்க்கப்பட்ட இஸ்லாமியரும், தலித் மக்களும் தமது இழப்பை, துயரத்தை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொண்டு இப்போது ஓரணியில் திரளுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் அதுதான் நடந்திருக்கிறது.

இந்துப் பரிவாரங்களின் ‘மூலஸ்தானமாகக்’ கருதப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் இன்று அவர்கள் படுதோல்வி கண்டிருக்கிறார்கள். எங்கே பாபர் மசூதி இடிக்கப்பட்டதோ, எந்த மாநிலத்தில் ‘இராமன் கோயில் கட்டுவோம்’ என மதவெறியர்கள் குதியாட்டம் போட்டார்களோ அந்த மாநிலத்தில் இன்று அவர்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில்கூட ‘இராமன் கோயில்’ பிரச்சனையை எழுப்ப முடியாதநிலை. அதை சாத்தியமாக்கியிருப்பது தலித் -இஸ்லாமியர் ஒற்றுமைதான்.

அரசியல் களத்தில் தோல்வி கண்ட மதவெறிக்கும்பல் வழக்கம்போல நீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தில் முகேஷ் சவுகான் என்ற நபர் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் அதை நவம்பர் 18ஆம் நாள் தள்ளுபடி செய்துவிட்டது. தான் ஒரு கட்டடக்கலை நிபுணர் என்றும், பல ஊர்களில் கோயில்களைக் கட்டியிருப்பதாகவும் கூறிக்கொண்ட அந்த நபர் அயோத்தியில் இராமர் கோயில் கட்ட அனுமதி வேண்டும் என நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார்.

‘‘அந்த இடத்தில் பிரச்சனைக்குரிய கட்டடம் ஒன்று இருந்தது. இந்த சமயத்தில் அங்கே கோயில் கட்ட அனுமதிக்க முடியாது’’ என நீதிமன்றம் கூறியுள்ளது. ஏன் அனுமதிக்க முடியாது என்பதற்கான காரணங்களைக் கூறுங்கள் என்று அந்த நபர் கேட்டிருக்-கிறார். அயோத்தி பிரச்சனை தொடர்பாக வேறுபல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதிமன்றம் பதிலளித்தது.

‘‘உங்களுக்கு அனுமதியளித்தால் நாட்டில் வகுப்புக் கலவரங்கள் மூண்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா?’’ என நீதிபதிகள் கேட்டபோது ‘‘இது எதிர்மறையான அணுகுமுறை’’ என அந்த நபர் பதிலளித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் இப்போதைக்கு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும் இந்துப் பரிவாரங்கள் இத்துடன் ஓய்ந்து விடுவார்கள் என நாம் எண்ணக்கூடாது. ஒருபுறம் அணைக்கப்பட்ட நெருப்பை இன்னொரு புறம் மூட்டுவதற்கு அவர்கள் முயற்சிப்பார்கள். அது குறித்து நாம் விழிப்போடு இருக்க வேண்டும். சேதுக் கால்வாய் திட்டத்தை முடக்குவதற்காக அதே இராமன் பெயரைத்தான் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இப்போது நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இதற்காக அவர்கள் பிரச்சாரப் பயணத்தை துவக்கி உள்ளனர். நவம்பர் 20க்கும் டிசம்பர் 10க்கும் இடையே ஐந்தாயிரம் இடங்களில் இந்த யாத்திரை நடத்தப்படுமென விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவின் தொகாடியா கூறியிருக்கிறார். ‘‘சேதுக்கால்வாய் திட்டத்தைத் தொடர்ந்தால் ஒவ்வொரு கிராமமும் அயோத்தியாக மாறும்’’ என்று அவர் பயமுறுத்தி இருக்கிறார்.

இந்துப் பரிவாரங்களின் திட்டத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் அணைக்கப்பட்ட மதவெறி நெருப்பை தமிழ்நாட்டில் பற்ற வைப்பதற்கான சதித்திட்டம்தான் தொகாடியாவின் பேச்சில் வெளிப்படுகிறது. வேறு துருப்புச் சீட்டுகள் கிடைக்காததால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இராமன் பெயரைத்தான் இந்துப் பரிவாரங்கள் நம்பியிருக்கின்றன. தமிழ்நாட்டில் சேதுக்கால்வாய் திட்டத்தை தடுப்பது மட்டுமின்றி அந்தப் பிரச்சனையை முன்வைத்து மற்ற மாநிலங்களிலும் ஓட்டு
வாங்கலாமென அவர்கள் திட்டமிடுகிறார்கள்.

கர்னாடகாவில் ஆட்சியில் அமரலாம் என்ற இந்துத்துவ கனவில் இப்போது மண் விழுந்துவிட்டது. தென் இந்தியாவில் கால் பதிக்க அவர்கள் வெறியோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நினைப்பை முளையிலேயே கருக்க வேண்டியது நமது கடமையாகும். இந்துத்துவத்தை முறியடிக்கும் போராட்டத்தில் முற்போக்கு சக்திகள் எவை என்பதை அடையாளம் கண்டு அவற்றோடு கைகோர்க்கும் அரசியல் முடிவை மதச்சிறுபான்மையினர் எடுக்க வேண்டும். அதன் மூலம்தான் இந்தக்களத்தில் வெற்றியை ஈட்டமுடியும்.

பாபர் மசூதியைத் தகர்க்க டிசம்பர் - 6ஆம் நாளை எந்த நோக்கத்தோடு இந்துத்துவவாதிகள் தேர்ந்தெடுத்தார்களோ அந்த நோக்கத்தை அடியோடு முறியடித்துக் காட்டுவது நம் கடமை. எந்தக் குறியீடுகளை அவர்கள் தகர்க்க நினைத்தார்களோ அவற்றைப் புதிய உள்ளீட்டோடு நாம் முன்வைக்க வேண்டும்.

டிசம்பர் - 6ஆம் நாளை ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - இஸ்லாமிய மக்களின் எழுச்சி நாளாக முன்னெடுப்போம்! இந்து மதவெறியை வேரறுப்போம்!

*கட்டுரையாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com