Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
தமிழீழத்தைச் சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்கவேண்டும்
மாவீரர் தின உரையில் வே.பிரபாகரன்

எனது அன்பார்ந்த மக்களே!

நாம் வாழும் உலகிலே புதிய பூகம்ப மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. உலகமே ஆசியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது. இருபத்தொராம் நூற்றாண்டும் ஆசியாவின் சகாப்தமாக ஆரம்பித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த, எமது கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் சமூக, பொருளாதார, விஞ்ஞானத்துறைகளிலே பெருவளர்ச்சியீட்டி முன்னேறி வருகின்றன.

அண்டவெளி ஆராய்ச்சிகள், சந்திரமண்டல ஆய்வுகள், அணுக்கருப் பரிசோதனைகளெனப் புதிய பாதையிலே பயணிக்கின்றன. மனித சமுதாயம் முன்னெப்போதும் காணாத புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து, இயற்கையின் எண்ணற்ற புதிர்களுக்கு விடைகள் காணவும் தீராத வியாதிகளுக்குத் தீர்வுகள் தேடவும் புதிய பயணத்திலே இறங்கியிருக்கிறது.

அரிய உயிரினங்களையும் தாவர வகைகளையுங்கூடக் காத்து, பூகோள முழுமையையும் பாதுகாக்கின்ற புனித முயற்சியிலே காலடி எடுத்துவைத்திருக்கிறது. ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்துவருகிறது. இதனால், அழகிய இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்கிறது.

பௌத்தம் ஓர் ஆழமான ஆன்மீகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம். இந்தத் தார்மீக நெறியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் சிங்களம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே இனவாத விசத்தினுள் மூழ்கிக்கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமான வன்முறையாகக் கோரத்தாண்டவமாடுகிறது.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை அகன்ற அகிம்சை வழியிலும், ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்டபோதும் சிங்கள உலகிலே சிறிதளவும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புக்கள், எத்தனையோ அழிவுகள், எண்ணற்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்தபோதும் சிங்களத் தேசம் மனந்திருந்தவில்லை. தொடர்ந்தும், அது வன்முறைப் பாதையிலேயே பயணிக்கிறது. அடக்குமுறையாலும் ஆயுதப்பலத்தாலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவே அது விரும்புகிறது. அமைதி முயற்சிகளுக்கு ஆப்புவைத்துவிட்டு, தனது இராணுவ நிகழ்ச்சித் திட்டத்தைத் துணிவுடணும் திமிருடனும் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. இதற்குச் சர்வதேசச் சமூகத்தினது பொருளாதார, இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் ஒருபக்கச்சார்பான தலையீடுகளுந்தான் காரணம்.

எமது பிராந்தியத்திலே உலகப் பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம். இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடிநிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலகநாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது. போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்;த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற கைங்கரியத்தைச் செய்துவருகிறது. சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலகநாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

சிங்கள அரசின் சாதுரியமான, சாணக்கியமான பரப்புரைகளுக்குப் பலியாகி, சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலனாக நின்ற நாடுகளே, எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருக்கின்றன. இதில் வேதனையான, ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்னவென்றால் ஒருகாலத்தில் எம்மைப் போன்று தமது சுதந்திரத்திற்காகப் போராடிய தேசங்களும் எம்மைப் பயங்கரவாதிகளாகப் பட்டஞ் சூட்டியமைதான். இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டிவருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட்சிக்கி, எம்மக்கள் அழிந்துவருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டுவருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை.

எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்துவருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன. எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன. இத்தகைய நடுநிலை தவறிய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் சர்வதேசச் சமூகம்மீது எம்மக்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைகளை மோசமாகப் பாதித்திருப்பதோடு அமைதி முயற்சிகளுக்கும் ஆப்புவைத்திருக்கின்றன.

சமாதானப் பேச்சுக்களிற் பங்குகொண்ட இருதரப்பினரது சமநிலை உறவைப் பாதித்து, அமைதி ஒப்பந்தமும் முறிந்துபோக வழிசெய்திருக்கின்றன. அத்தோடு, இந்நாடுகள் வழங்கிவரும் தாராளப் பொருளாதார இராμவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் சிங்கள இனவாத அரசை மேலும்மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளிவிட்டிருக்கிறன.

இதனால்தான், மகிந்த அரசு அநீதியான, அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை எமது மண்ணிலே துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்துவருகிறது. இராμவப் பலத்தைக் கொண்டு, தமிழரின் சுதந்திர இயக்கத்தை அழித்துவிடலாம் என்ற மமதையில் மகிந்த அரசு சமாதானத்திற்கான கதவுகளை இறுகச்சாத்தியது. தமிழ் மண்ணை ஆக்கிரமித்து, தமிழரை அடக்கியடுக்கி ஆளவேண்டும் என்ற ஆசை என்றுமில்லாதவாறு தீவிரம்பெற்றது. முழு உலகமும் முண்டுகொடுத்துநிற்க, போர்நிறுத்தத்தைக் கவசமாக வைத்து, சமாதானச் வழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மகிந்த அரசு ஆக்கிரமிப்புப் போரை அரங்கேற்றியது.

போர்நிறுத்தத்தைக் கண்காணித்த கண்காணிப்புக்குழு கண்களை மூடிக்கொண்டும் கைகளைக் கட்டிக்கொண்டும் கொழும்பிலே படுத்துறங்கியது. அனுசரணையாளரான நோர்வே நாட்டினர் அலுத்துப்போய் அமைதியாக இருந்தார்கள். எமக்குச் சமாதானம் போதித்த உலக நாடுகள் மௌனித்துப் பேசமறுத்தன.

தடித்த எழுத்து தொடங்கவும் “சமாதானத்திற்கான போர் என்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை” என்றும் “தமிழரின் விடுதலைக்காக, விமோசனத்திற்காக நடாத்தப்படும் போர்” என்றும் சிங்கள அரசு தமிழின அழிப்பை நியாயப்படுத்திப் போரைத் தொடர்கிறது. மகிந்த அரசு தனது முழுப் படைப்பலச் சக்தியையும் அழிவாயுதங்களையும் ஒன்றுதிரட்டி எமது தாயகத்தின் தெற்குப் பிராந்தியம் மீது பெரும் போரைக் கட்டவிழ்த்துவிட்டது.

ஓயாத மழையாகப் பொழிந்த அகோரக் குண்டுவீச்சுக்களாலும் எறிகணைகளாலும் எமது பண்டைய நாகரிகம் புதைந்த வரலாற்றுமண் மயானபூமியாக மாறியது. சரித்திரப் பிரசித்தி பெற்ற தமிழரின் தலைநகரான திருமலை சிதைக்கப்பட்டது. தமிழரின் பண்டைய பண்பாட்டு நகரான மட்டக்களப்பு அகதிகளின் நகரானது. வடக்கில் தமிழரின் கலாச்சார மையமான யாழ்ப்பாணம் வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

மொத்தத்தில், சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போர் தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, தமிழரை அகதிகளாக்கி, தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்து, தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தைக் கொடுத்திருக்கிறது.

எமது தாய்நிலம், ஒருபுறம் சிங்கள இராணுவப் பேயாட்சிக்குட் சிக்கிச்சீரழிய, மறுபுறம் உயர் பாதுகாப்பு வலயங்கள், விசேட பொருளாதார வலயங்கள் என்ற பெயரில் வேகமாகச் சிங்களமயப்படுத்தப்படுகிறது. சிங்கக் கொடிகளை ஏற்றியும் சித்தார்த்தன் சிலைகளை நாட்டியும் வீதிகளுக்குச் சிங்களப் பெயர்களை மாற்றியும் பௌத்த விகாரைகளைக் கட்டியும் சிங்களமயமாக் கல் கடுகதி வேகத்திலே தொடர்கிறது. இதன் உச்சமாக, தமிழீழத்தின் தென் மாநிலம் முழுவதிலும் சிங்களக் குடியேற்றங்கள் காளான்கள் போன்று அசுரவேகத்திலே முளைத்துவருகின்றன.

அநீதியான யுத்தம் ஒன்றை நடத்தி, பொருளாதாரத் தடைகளை விதித்து, போக்குவரத்துச் சுதந்திரத்தை மறுத்து, தமிழரைக் கொன்றுகுவித்து, இலட்சக்கணக்கில் இடம்பெயரவைத்துவிட்டு, தமிழின ஆன்மாவை ஆழமாகப் பாதித்த இந்தச் சோகமான நிகழ்வைச் சிங்களத் தேசம் வெற்றிவிழாவாகக் கொண்டாடி மகிழ்கிறது. தமிழரைப் போரில் வென்றுவிட்டதாகப் பட்டாசு கொழுத்தி, வாணவேடிக்கைகள் காட்டி ஆர்ப்பரிக்கிறது.

கிழக்கு மீதான முற்றுகைவலயம் முற்றுப்பெற்றுவிட்டதாகவும் யாழ்ப்பாணத்தின் கழுத்தைச் சுற்றி முள்வேலியை இறுக்கிவிட்டதாகவும் சிங்கள இராணுவத் தலைமை எண்ணிக்கொண்டது. பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரை, கிழக்குக் கரையோரம் முழுமைக்கும் விலங்கிட்டுவிட்டதாகச் சிங்களப் பேரினவாதம் திமிர்கொண்டது.

எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே, எமது போர்த்திட்டங்களை வகுக்கிறோம். இப்படித்தான் கிழக்கிலும் எமது போர்த்திட்டங்களை வகுத்தோம். தற்காப்புத் தாக்குதல்களை நடாத்தியவாறு தந்திரோபாயமாகப் பின்வாங்கினோம். புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் “ஜெயசிக்குறு சமரிற் கற்றறிந்திருக்கலாம்.

ஆனால், சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது. நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது. இதன் பாரனரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டிவரும். வரலாற்றிலே முதல்தடவையாக எமது கரும்புலி அணியினரும் வான்புலிகளும் கூட்டாக நடாத்திய “ல்லாளன்|| நடவடிக்கை சிங்கள இராணுவப்பூதத்தின் உச்சந்தலையிலே ஆப்பாக இறங்கியிருக்கிறது. இந்த மண்டை அடி சிங்களம் கட்டிய கற்பனைகள் கண்டுவந்த கனவுகள் அத்தனையையும் அடியோடு கலைத்திருக்கிறது.

அநுராதபுர மண்ணில் எம்மினிய வீரர்கள் ஏற்படுத்திய இந்தப் பேரதிர்விலிருந்து சிங்களத் தேசம் இன்னும் மீண்டெழவில்லை. ஈகத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட இந்த வீரர்களின் உயர்ந்த உன்னதமான அர்ப்பணிப்பு சிங்களத் தேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது, தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சியம் என்பதோடு, இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது என்பதுதான் அது.

உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்பி, உலக நாடுகளின் உதவியையும் பேராதரவையும் பெற்றுக்கொள்ளவே மகிந்த அரசு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைத்தது. இதனைக் கடந்த மாவீரர் நினைவுரையில் நான் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன். வருடக்கணக்கிற் காலத்தை இழுத்தடித்து, எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கமுடியாது, இறுதியில் இரண்டு மாத விடுப்பிற் பிரதிநிதிகள் குழுவினர் சென்றிருப்பது இதனையே காட்டிநிற்கிறது.

தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன.

இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று. உலக நாடுகள் தமது சொந்தப் பொருளாதாரக் கேந்திர நலன்களை முன்னெடுக்கின்ற போதும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயக

விழுமியங்களுக்கும் மதிப்புக்கொடுக்கத் தவறுவதில்லை. இந்தப் பிரபஞ்சமும் சரி, மனித வாழ்வியக்கமும் சரி, உலக உறவுகளும் சரி தர்மத்தின் சக்கரத்திலேயே இன்னமும் சுழல்கின்றன. இதனால்தான், விடுதலைக்காகப் போராடிய கிழக்குத்தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேசத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் புதிய தேசங்களாக அடிமை விலங்கை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெற்றன. கொசோவோ போன்ற தேசங்களின் விடுதலைக்காகவும் சர்வதேசம் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டுவருகிறது. இருப்பினும், எமது தேசியப் பிரச்சினையிற் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எம்மக்களுக்குத் திருப்தி தருவனவாக அமையவில்லை.

இந்நாடுகள் மீது எம்மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்துபோயிருக்கிறது. இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கிறது. சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது. அமைதிப் பாதையில் இயங்கிய எமது விடுதலை இயக்கத்தின் இதயத்துடிப்பை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தியிருக்கிறது. எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டி, மறைந்த மாவீரருக்கு ஆண்டுதோறும் விளக்கேற்றும்போது எப்போதும் என்னருகிருந்த எனது அன்புத்தம்பி தமிழ்ச்செல்வனுக்கும் சேர்த்து இம்முறை என்கையால் ஈகச்சுடரேற்றும் நிலைமையைச் சர்வதேசம் உருவாக்கியிருக்கிறது.

உலகத் தமிழினத்தையே கண்ணீரிற் கரைத்து, கலங்கியழவைத்திருக்கிறது. சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான். சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது. சமாதானத்தின் காவலர்களாக வீற்றிருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்தப் பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன. சமாதானத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தார்மீகக் கடமைப்பாடும் இந்த இணைத்தலைமை நாடுகளுக்கு இல்லையென்றால் காலத்திற்குக்காலம் இடத்திற்கிடம் அவர்கள் மாநாடு கூட்டுவதன் அர்த்தம்தான் என்ன?

சிங்கள அரசிற்குச் சீர்வரிசை செய்து, ஆயுத உதவிகள் அளித்து, தமிழரை அழித்துக்கட்டத் துணைபோவதுதான் இந்த நாடுகளின் உள்ளார்ந்த நோக்கமா?

இத்தனை கேள்விகள் இன்று எம்மக்களது மனங்களிலே எழுந்திருக்கின்றன. எனவே, சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இனஅழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என எமது மக்கள் இன்றைய புனிதநாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்.

பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம்.

எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன். அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் என உங்களிடம் நிறைந்துகிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்களுக்கும் உதவிகளுக்கும் இச்சந்தர்ப்பத்திலே எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோன்று வருங்காலத்திலும் நிறைந்த பங்களிப்பை வழங்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com