Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
தேவையா கட்டாயச் சேவை
பாவை


கடந்த சில வாரங்களாகவே செய்தித்தாள்களைப் பார்த்தால் அவற்றில் முக்கியமாக இடம்பெற்றுள்ள செய்தி மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்தான். போராட்டத்திற்குக் காரணம் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஓராண்டு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதுதான்.

இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது கிராமப்புற கட்டாயச் சேவைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவது ஏன்? இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் கிராமப்புற மக்களுக்கு நன்மைதானே? இந்தச் சட்டத்தை மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பது ஏன்? என்றெல்லாம் எண்ணற்ற கேள்விகள் எழுவது இயல்புதான். அந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

இந்தியா முழுவதுமே கிராமப்புறங்களில் மருத்துவசேவை என்பது இதுவரை கானல் நீராகவே இருந்து வருகிறது. கல்லைக்கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்பதைப் போல மருத்துவமனை திறந்திருந்தால் மருத்துவர் இருக்கமாட்டார்... மருத்துவர் இருந்தால் மருந்துகள் இருக்காது என்பதுதான் இன்றைய நிலை. இந்த நிலையைப் போக்க வேண்டுமென்பதற்காகவே ஆண்டுக்கு சுமார் ரூ. 10ஆயிரம் கோடி செலவில் கிராமப்புற மருத்துவ இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதுதான் கிராமப்புற மருத்துவமனைகளெல்லாம் ‘சாரதி இல்லாத தேராக’ செயல்பட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. உதாரணமாக மராட்டிய மாநிலத்தில் உள்ள 6 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1600 நிலையங்களில் ஒரு மருத்துவர் கூட இல்லை. 2000 சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவர்கூட இல்லை. 2000 சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் தான் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மராட்டியம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே இதேநிலைதான் உள்ளது. கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவசேவை வழங்க முடியாது என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும். எனவேதான் மருத்துவம் படிக்கும் மாணவர்களைக் கிராமப்புறங்களில் ஒராண்டுக்கு பணியாற்றவைக்கலாம். இதன் மூலம் அவர்களுக்கு அனுபவமும் கிடைக்கும், அரசுக்கும் குறைந்த செலவில் மருத்துவர்கள் கிடைப்பார்கள்.

இப்படியாக ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடித்துவிடலாம் என மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி இராமதாசு திட்டமிட்டார். இப்புதிய திட்டத்தின்படி ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் 3 தவணைகளாக பணியாற்ற வேண்டும். அதாவது மாவட்ட மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தலா 4 மாதங்கள் சேவையாற்ற வேண்டும். இதற்காக அவர்களுக்கு குறிப்பிட்டதொகை வழங்கப்படும்.

கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவசேவை கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதற்காகக் கடைபிடிக்கப்படும் வழி சரியா என்பதுதான் அனைவர் மனதிலும் எழுந்துள்ள கேள்வி. மருத்துவப்படிப்பு என்பது ஒரு காலத்தில் அனைவருக்கும் கனவாகவும் லட்சியமாகவும் இருந்து வந்தது. மருத்துவம் படித்தால் மற்ற துறைகளைவிட அதிகம் சம்பாதிக்கலாம் என்பதுதான் இதற்குக் காரணம். ஆனால் இப்போதோ நான்கு ஆண்டுகள் மட்டுமே தகவல் தொழில்நுட்ப பொறியியல் படிப்பு படித்தவர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்க, ஐந்தரை ஆண்டு மருத்துவம் படித்தவர்கள் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குதே பெரும்பாடாக உள்ளது.

இந்நிலையில் கிராமப்புற சேவை என்ற பெயரில் இன்னும் ஓராண்டை இழந்துவிட்டால் மேற்படிப்பு படிப்பதும், பணியில் சேர்வதும் மேலும் தாமதமாகுமே என்று மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள கவலையே அவர்களின் எதிர்ப்புக்கு காரணம். கிராமப்புற சேவை செய்ய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஒருபுறமிருக்க மாணவர்களை கிராமப்புற சேவை செய்யவைப்பது சரியா? என்பதுதான் மிகப்பெரிய வினாவாகும்.

கிராமப்புறங்களுக்கு மருத்துவ - மருத்துவ சேவை வழங்க நினைப்பதன் நோக்கமே அங்குள்ளவர்களின் வாழ்நாளை நீட்டிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அப்படியிருக்கும்போது பயிற்சியே இல்லாத மாணவர்களை கிராமப்புறங்களில் மருத்துவர்களாக அமர்த்துவதன்-மூலம் அவர்களால் பெரிதாக எதை சாதித்துவிட முடியும்? பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாத நிலையில் இருக்கும் மாணவர்களைக் கொண்டு ஏதோ கொஞ்சம் சிகிச்சை தரலாமே என்பது அரசின் நோக்கமாக இருந்தால் அது தவறு.

பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்துப் பார்ப்பது, கிராமப்புறங்களில் ‘முறை’ செய்வதற்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம்... கிராமவாசிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஒத்து வராது. “பயிற்சி மாணவர்களால் ஏன் சிகிச்சை அளிக்கமுடியாது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை அளிக்கவில்லையா என பலரும் கேட்கலாம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனுபவம் பெற்ற பேராசிரியர்களின் கட்டுப்பாட்டில்தான் அவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்களின் சிகிச்சையில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் கூட உடனடியாக மூத்த மருத்துவர்களாகிய நாங்கள் தலையிட்டு நிலைமையைச் சமாளிப்போம்.

ஆனால் எந்தவசதியுமே இல்லாத கிராமங்களில் பயிற்சி மருத்துவர்களால் சிக்கலான சூழல்களைச் சமாளிக்க முடியாது. இதையும் மீறி பயிற்சி மாணவர்களை கிராமங்களுக்கு அனுப்பினால் கிராமப்புறங்களில் உள்ளவர்களின் உயிரை அரசு துச்சமாக மதிக்கிறது என்றுதான் கருதவேண்டும்” என்கிறார் தமிழகத்தின் மூன்றாவது பெரிய மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகவியல் பேராசிரியராக இருக்கும் ஒருவர். இன்னும் சில மருத்துவத்துறை வல்லுனர்கள், கிராமப்புறங்களில் மருத்துவ மாணவர்கள் கட்டாய சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கையே தவறு என வாதிடுகின்றனர். “1970ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 80 அரசு மருத்துவக்கல்லூரிகள் மட்டும்தான் இருந்தன.

அவற்றில் ஆண்டுக்கு 10ஆயிரம் பேர் மட்டுமே படித்து மருத்துவர்களாக வெளி-வந்தனர். ஆனால் இன்றோ அரசு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 240ஆகப் பெருகியுள்ளது. இவற்றிலிருந்து ஆண்டுதோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் படித்து வெளியேறுகின்றனர். இவர்கள் தவிர தனியார் மருத்துவக்கல்லூரிகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் மருத்துவர்கள் உருவாகிறார்கள். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் கிராமப்புறங்களில் எந்த அளவு தட்டுப்பாடு நிலவியதோ அதே நிலைதான் இப்போதும் நிலவுகிறது. அரசு நினைத்திருந்தால் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமித்திருக்கமுடியும். ஆனால் அதைச் செய்ய அரசுகள் தவறிவிட்டன. மேலும் இந்தியாவில் மருத்துவம் படிப்போரில் பலர் அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு அமெரிக்கா, லண்டனுக்கு பறக்கின்றனர். அவர்களைத் தடுத்தாலே கிராமப்புற மருத்துவமனைகளுக்கு தேவைக்கும் அதிகமாகவே மருத்துவர்கள் கிடைப்பார்கள். ஆனால் அதையெல்லாம் செய்யாத அரசு, மருத்துவ மாணவர்களின் மடியில் கைவைப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்” என்பது ஓய்வுபெற்ற மருத்துவக்கல்லூரி முதல்வர் ஒருவரின் கருத்து.

அப்படியானால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?... இதற்கு பதில் இது ஒரு பிரச்சனையே இல்லை என்பதுதான். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு மருத்துவசேவை கிடைக்க வேண்டும் என்பதுதான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியின் நோக்கம். அவரின் இந்த உன்னத நோக்கத்தை யாருமே எதிர்க்கவில்லை. தமிழக முதல்வர் கலைஞர் தொடங்கி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவ மாணவர்களும் கிராமப்புற சேவையை ஆதரிக்கவே செய்கின்றனர். ஆனால் இந்தச் சேவையை முடித்தபிறகுதான் சான்றிதழ் வழங்கப்படும் என்றும், ஐந்தரை ஆண்டு மருத்துவப்படிப்பு ஆறரை ஆண்டுகளாக மாற்றப்படும் என்றும் அரசு அறிவித்திருப்பதைத்தான் அனைவருமே எதிர்க்கிறார்கள்.

“கிராமப்புறங்களில் மருத்துவர்களை சேவையாற்றச் செய்வதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. மருத்துவ மாணவர்களை கிராமங்களுக்கு சென்று சேவை செய் என கட்டாயப்படுத்துவதை விட்டுவிட்டு, அவர்களை விரும்பிச்சென்று கிராமங்களில் சேவை செய்யும் நிலையை அரசு உருவாக்கலாம். உதாரணமாக தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வில், கிராமங்களில் ஓராண்டு சேவையாற்றிய மருத்துவர்களுக்கு ஒரு மதிப்பெண்ணும் மலைப்பகுதிகளில் பணிபுரிவோருக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு கிராமங்களில் சேவை செய்வதன் மூலம் மருத்துவர்கள் அதிக பட்சம் 10 மதிப்பெண்கள் பெற முடியும். மருத்துவ மேற்படிப்பு நுழைவுத்தேர்வில் 10 மதிப்பெண் என்பது மிகப்பெரிய விஷயம். தற்போது தமிழக அளவில் மட்டும் இருக்கும் இந்த முறையை அகில இந்திய அளவிலும் நீட்டித்தால் பலரும் போட்டிப் போட்டிக்கொண்டு கிராமப்புறங்களில் சேவை செய்ய வருவார்கள்.

அதுமட்டுமல்ல, கிராமப்புறங்களில் பணியாற்ற கூடுதல் படி வழங்கலாம். இதன்மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பலரும் கிராமப்புற சேவைக்கு முன்வருவார்கள். அப்படி இல்லாவிட்டால் மருத்துவர்களை ஆயுள் முழுவதும் பணியாற்றும் வகையில் பதிவு செய்வதைவிட 10 ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் பதிவு செய்யலாம். அந்த 10 ஆண்டு- களில் ஓராண்டு கண்டிப்பாக கிராமப்புறத்தில் சேவையற்ற வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கலாம். 10 ஆண்டில் ஓராண்டு கிராமப்புற சேவையாற்றவில்லையெனில் அவர்கள் மருத்துவர்களாக பணியாற்றத் தகுதியற்றவர்கள் என அறிவித்துவிடலாம். இப்படிச் செய்தால் மருத்துவம் படித்த அனைவரும் தங்களை நிலைப்படுத்திக் கொண்டபின் கண்டிப்பாக ஓராண்டிற்கு கிராமப்புறங்களில் சேவை செய்வார்கள்” என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் செந்தில் யோசனை தெரிவிக்கிறார்.

அது மட்டுமல்ல, மருத்துவக்கல்லூரி மாணவர்களோ தங்களை நிரந்தர மருத்துவர்களாக நியமித்தால் கிராமப்புறங்களுக்குச் சென்று சேவையாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இப்போதும் ஒன்றும் தலை மூழ்கிவிடவில்லை. இந்த விஷயத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பதுபற்றி மத்திய அரசுக்குப் பரிந்துரை அளிக்க அமைக்கப்பட்ட மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கானகூடுதல் தலைமை இயக்குனர் சாம்பவசிவராவ் தலைமையிலான குழு விரைவில் தமிழகம் வரவிருக்கிறது. அக்குழுவிடம் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் தங்களின் யோசனைகளைத் தெரிவிக்கலாம். அப்படிச் செய்தால் அனைவருக்கும் நன்மையளிக்கும் தீர்வு ஏற்படுவது உறுதி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com